Thursday 24 July 2014

வள்ளுவர் உள்ளம்: பாரதிதாசனார் திருக்குறளுரை


முனைவர் கி.பார்த்திபராஜா
உதவிப்பேராசிரியர்
தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை
தூய நெஞ்சக் கல்லூரி
திருப்பத்தூர்-635601
வேலூர் மாவட்டம்.
முன்னுரை:
‘கடுகைத் துளைத்துக் கடலைப் புரட்டிக் குறுகத் தறித்த குறள் என்னும் திருக்குறளுக்கு உரையெழுதியவர்கள் பற்றிய குறிப்புகளைத் தருகிறது திருவள்ளுவமாலை. தருமர், மணக்குடவர், தாமதத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி, திருமலையார், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் எனப் பதின்மர் திருக்குறளுக்கு உரையெழுதியதாக ஒரு வெண்பா குறிப்பிடுகிறது.
‘குறளுக்கு எளிய உரை, பொழிப்புரை, தெளிவுரை, விருத்தியுரை, உரைநடையில் திருக்குறள், நயவுரை, விளக்கவுரை, மணிவிளக்க உரை என்றாங்குப் பலநூல்கள் எழுந்துள்ளன. இலக்கிய, இலக்கண உரையாசிரிய்ர்கள் குறளை எடுத்தாண்டுப் புத்துரை தோன்ற விளக்கம் தந்துள்ளனர். உரைநடை நூல்களிலும் கட்டுரைகளிலும் திறனாய்வு நூல்களிலும் நாளிதழ், திங்களிதழ்களிலும் அறிஞர் பலர் குறளுக்குப் புதிய நோக்கில் கருத்துரை வழங்கியுள்ளதையும் காண்கின்றோம். சொற்பொழிவுகளுக்கிடையேயும் சிலர் குறளுக்குப் புதிய விளக்கம் அளிக்கின்றனர். இவ்வாறு குறளுக்குப் பல வகையில் உரை வேற்றுமைகள் தோன்றி வளர்ந்து வருகின்றன (சாரங்கபாணி.இரா:1989:1) என்பர்.
பாரதிதாசன் திராவிடக் கருத்துநிலையைத் தன் இலக்கிய வெளிப்பாடுகளில் உயர்த்திப் பிடித்தவர். தந்தை பெரியாரின் கலைஇலக்கியப் பார்வையினைத் தாமும் வரித்துக் கொண்டவர். மூடத்தனம் குறைவாக உள்ள இலக்கியம் என்று தந்தைப் பெரியாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது திருக்குறள். பாரதிதாசன் தன் கவிதை உள்ளிட்ட இலக்கியப்படைப்புகளில் மிகவும் விதந்து போற்றிப் பாராட்டிய இலக்கியம் திருக்குறள் ஆகும். எனவே பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுத வேண்டும் என்று விரும்பினார். திருக்குறளை எழுதிய திருவள்ளுரின் உண்மைக் கருத்துநிலையை எட்டவேண்டும் என்பது அவரது பேரவா. எனவே திருக்குறளுக்கு உரை எழுதும் முயற்சியில் பாரதிதாசன் ஈடுபட்டார் எனலாம்.
உரையாளர் வரிசையில் பாரதிதாசன்:
திருக்குறள் உரைவேற்றுமை என்னும் தலைப்பில் மூன்று தொகுதிகளை வெளியிட்ட முனைவர் இரா.சாரங்கபாணி, உரைநூல்கள் என்று பட்டியலிட்டுக்காட்டும் 50 உரைகளில் பாரதிதாசன் உரை குறிப்பிடப்படவில்லை. 1955-1959 இவற்றுக்கிடைப்பட்ட காலத்தில் பாரதிதாசனின் திருக்குறள் உரை ‘குயில் கிழமை இதழில் வெளியிடப்பட்டிருப்பினும் நூலுருவாக்கம் பெறுவது 1992 இல் தான். டாக்டர் ச.சு.இளங்கோ பாரதிதாசன் திருக்குறள் உரை என்னும் தலைப்பில் அதனைப் பதிப்பித்துள்ளார்.
இருவேறு பதிப்புகள்:
பாரதிதாசன் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுத எண்ணியுள்ளார். அதற்கான அறிவிப்பும் வெளிவந்திருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் திருக்குறள் முழுமைக்குமாகப் பாரதிதாசன் உரை எழுதி முடித்ததாக அறியமுடியவில்லை.
அறத்துப்பால்
பாயிரம்
1.        உலகின் தோற்றம்                 10
2.        வான் சிறப்பு                -      10
3.        நீத்தார் பெருமை            -      10
4.        அறன் வலியுறுத்தல்        -      10
5.        இல்வாழ்க்கை               -      10
6.        வாழ்க்கைத் துணைநலம்    -      10
7.        மக்கட்பேறு                 -      10
8.        அன்புடைமை               -      10
9.        விருந்தோம்பல்             -      03
பொருட்பால்
1.        கொடுங்கோன்மை                02
ஆக மொத்தம் 85 குறள்களுக்குப் பாரதிதாசன் உரைவிளக்கம் தந்துள்ளார். இவ்வுரைகளைத் தொகுத்து நூலாக்கி இருவர் பதிப்பித்திருக்கிறார்கள். ஒருவர் ச.சு.இளங்கோ. மற்றவர் பேராசிரியர் செங்கமலத்தாயார். இவ்விருவருடைய பதிப்பிலும் சிற்சில வேறுபாடுகள், பாடபேதங்கள் உள்ளன.
உரையாசிரியர் பாரதிதாசன்:
பாரதிதாசன் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதும் தன் ஆவலைப் பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய சில நூல்களுக்கே உரை எழுதிப் பதிப்பித்துள்ளார் பாரதிதாசன். அவர் தான் எழுதிய, ‘ஆத்திசூடி, கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா ஆகிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். எனவே திருக்குறளுக்கு உரை எழுதப்புகும் அவரது ஈடுபாடு இயல்பானதேயாம். தமிழ் இலக்கியப்பரப்பின் சிறந்த கவிஞராக விளங்கும் அதே நேரத்தில், மிகச்சிறந்த உரையாசிரியராகவும் பாரதிதாசன் திகழ்கிறார் என்பதற்கு அவர் எழுதிய உரைநூல்கள் சான்று.
உரை அமைப்பு:
திருக்குறளுக்கான உரையைத் தொடங்கும்போது, ‘உரைப்பாயிரம் ஒன்றை அமைத்துள்ளார் பாரதிதாசன். அதில் திருக்குறின் உட்பொருள் குறித்த விளக்கத்தினை அளிக்கிறார்.
‘சீரோங்கி வாழ்ந்த திருவள்ளுவர் இப்பாரோங்கி வாழச் செந்தமிழால் திருக்குறள் என்னும் செய்யுள் செய்யத் திருவுளங் கொண்டார். செய்யுள் என்பது செவ்விய உள்ளம். அஃது நூலுக்காயிற்று. ஆகுபெயர். இனி எப்பொருள் கொண்டு செய்யுள் செய்தார் என்பது கேள்வி. நிலம், நீர், நெருப்பு, உயிர், விசும்பு ஆகியவையும், அவற்றின் பகுதியாகிய உலகம், மக்கள், விலங்கு, பறவை முதலியனவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவையும், அறிவு, முனைப்பு, மனம், ஆதி (மூலப்பகுதி) இறைவன் (பகவன்) ஆகியவையும், அறம், பொருள், இன்பம் ஆகியவையும், அவற்றின் நிலையின்மையும் பிறவுமாக க் கூறப்பட்ட பருப்பொருள் நுண்பொருள் அனைத்தும் பொருள்களே. இப்பொருள்கள் அனைத்தும் அகப்பொருள் புறப்பொருள் என இரும் பெரும் பிரிவாக்கப்படும். செய்யுள் செய்வார் அகப்பொருளையும் புறப்பொருளையும் வைத்தேனும், இவ்விரண்டில் ஒன்றை வைத்தேனும் செய்யுள் செய்வர். அந்நெறியே பற்றி அகம், புறமாகிய இருதிணையையும் வைத்துச் செய்யுள் செய்தருளினார் திருவள்ளுவர் என்பது விடை (இளங்கோ.ச.சு:1992:12) என்கிறார் அவர்.
திருவள்ளுவர் தாம் உரை எழுதிய 10 அதிகாரத்திற்கும் முன்னுரை எழுதியுள்ளார். ஒவ்வொரு திருக்குறளை எடுத்துக்காட்டி, அதற்குக் கீழேயே அக்குறளைப் பிரித்துக் காட்டுகிறார். மொழி மாற்றியமைத்தும் கூறுகிறார். ‘மேற் செய்யுட்களுக்கெல்லாம் சொற்பிரித்தலை மட்டும் குறிக்க, ‘பி என்பதையும், அதனோடு மொழிமாற்றையும் குறிக்க, ‘பி.மா என்பதையும் குறிக்கப்படும் (இளங்கோ.ச.சு:1992:14) என்று எடுத்துரைக்கிறார். அவ்வாறே அவர் உரையெழுதிய அனைத்துக் குறட்பாக்களையும் பிரித்தும் மொழிமாற்றியும் காட்டுகிறார்.
பொருள் என்னும் தலைப்பில் திருக்குறளைச் சொல்லுக்குச் சொல், பொருள் விளக்கம் தரும் முறையினைப் பின்பற்றுகிறார் பாரதிதாசன். அதனைத் தொடர்ந்து, கருத்து என்னும் தலைப்பில் விளக்கமளிக்கிறார்.
நாடகப்பாங்கு:
திருக்குறள் பதம் பிரித்துக்காட்டுதல், மொழிமாற்றுதல், பொருள், கருத்து என்று வரிசை அடிக்கிக்காட்டும் பாரதிதாசன் கருத்துவிளக்கத்திற்குப் புதிய உத்தியைக் கையாண்டுள்ளார். அதாவது, நாடகப்பாங்கில் ஆத்திகன், நாத்திகன், உரையாசிரியர் என்று மூன்று பாத்திரங்கள் குறள் கருத்தைக் குறித்து உரையாடுவதாக அமைத்துள்ளார். வினாவிடைப்பாங்கிலும் கருத்துக்கூறும் பாங்கிலும் அமையும் இப்பகுதி சுவைமிக்கதாகவும் படிப்போரை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது.
‘ஆத்திகன்:    மெய்யுணர்வு என்று நீவிர் சொல்வதெல்லாம் கடவுளை அல்லவா?
உரை ஆசிரியர்: மெய்யுணர்வை ஆத்திகன் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். நாத்திகன் கடவுளின்மைதான் மெய்யுணர்வு என்கிறான். இதுதான் நன்று; இதுதான் நன்று அன்று என்று கருதி அந்நெறியை மேற்கொள்வது மெய்யுணர்வு.
நாத்திகன்:    மெய்யுணர்வை உண்டாக்காத கல்வியும் உளவோ?
உரை ஆசிரியர்:      மிகுதியாய் உண்டு! அவை ஆரியர் நூற்கள். பாரதம், இராமாயணம், புராணங்கள் தமிழர்களால் கற்கத் தகாதவை! பொய்கள் நிறைந்தவை. பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை. தமிழரின் செயலுக்கு ஒத்துவராதவை. எடுத்துக்காட்டு: ஒரு பெண் ஐந்து ஆடவரை மணந்துகொண்டதாகப் பாரதம் பகர்கின்றது. தமிழர் ஒத்துக்கொள்ளலாமா? உலகம் ஒத்துக் கொள்ளுமா?
நாத்திகன்: நன்று! நன்று! (இளங்கோ.ச.சு:1992:22)
-மேற்காட்டிய முறையில் ஒவ்வொரு குறளுக்கும் இறுதியில் ஆத்திகன், நாத்திகன், உரை ஆசிரியர் விவாதம் நாடகப் பாங்கில் அமைக்கப்பட்டுள்ளது. நாடகப்பாங்கிலான இப்புனைவுகள் குறளின் கருத்தை விளக்கும் வகையில் அளவிற் சிறியதாகவோ, பெரியதாகவோ அமைகின்றன. 37 ஆம் குறளுக்கு உரை விளக்கமே மிக நீண்டு அமைவதால், அக்குறளுக்குரிய விளக்கத்தையடுத்து உரையாடல் இடம்பெறவில்லை.
உரையாசிரியர் நடுநிலை:
கடவுள் வாழ்த்து என்று தலைப்பிடப்பட்ட அதிகாரம் முதலான முதல் நான்கு அதிகாரங்களை வள்ளுவர் இயற்றவில்லை என்ற வ.உ.சிதம்பரனாரின் கருத்தைப் பாரதிதாசன் மறுத்தே பேசுகிறார். அதாவது இறைவன், பகவன் முதலான பதங்கள் கடவுளைக் குறிப்பதாக க் கொள்ளப்படும் பொதுநிலைப்போக்கிற்கு மறுப்புக்கூறுதல் அல்லது அமைதி கூறுதல் இயலாத நிலையில் வ.உ.சி, அவற்றை வள்ளுவர் இயற்றவில்லை என்று புறந்தள்ளுகிறார். ஆனால் பாரதிதாசன் அவற்றுக்குச் சாங்கியம் அடிப்படையில் பொருள் விளக்கம் தருவது கருத்தில் கொள்ளத் தக்கது. நாத்திகவாதியாக அறியப்பட்ட, அடையாளப்படுத்திக் கொண்ட பாரதிதாசன், திருக்குறள் உரையில் நாத்திகனைத் தனிப்பாத்திரமாகப் படைத்து, விவாதக்களத்தில் வைத்திருப்பது சுவையளிப்பதாக இருக்கிறது. அதிலும் நாத்திகனின் பக்கம் சாய்ந்துவிடாத விவாதத் தொனியைத் தொடர்ந்து உரையாடலில் தக்கவைத்திருக்கிறார்.
ஆத்திகமா? நாத்திகமா?:
பாரதிதாசன் உரையாடலில் ஆத்திகனையும் நாத்திகனையும் உரை ஆசிரியரோடு உரையாட வைத்து நடுநிலையில் ஆசிரியரைப் பேச வைக்கிறார்.
‘ஆத்திகன்:    திருக்குறளை நாத்திகத்தை நோக்கி இழுத்துக்கொண்டு போகின்றீரா?
உரை ஆசிரியர்:      ஆத்திகத்தை நோக்கி இழுத்துக்கொண்டு போவதும் நாத்திகத்தை நோக்கி இழுத்துக்கொண்டு போவதும் பிழையே. ஏன் எனில் வள்ளுவர் உள்ளம் நாத்திகமும் இல்லை. ஆத்திகமும் இல்லை. அவர்நெறி உண்மை நெறி. வையத்தில் வாழ்வாங்கு வாழும் நெறி (இளங்கோ.ச.சு:1992:22) என்று விவாத த்தை அமைத்திருக்கிறார் பாரதிதாசன். இதில் வள்ளுவரின் நெறி ஆத்திகமும் இல்லை; நாத்திகமும் இல்லை என்று கூறுவது கவனத்திற்குரியது.
நாத்திகரையும் கடிதல்:
ஆத்திகரை உரைவிவாத த்தில் ஆங்காங்கே கடியும் பாரதிதாசன், நாத்திகரையும் கடுமையாக விமர்சித்துப் பேசுகிறார். எனவே நாத்திகம், ஆத்திகம் இரண்டுக்கும் இடையிலான நடுநிலைப்போக்கை முன்னெடுப்பதான ஒரு தோற்றத்தை அமைக்க முயலுகிறார்.
‘நாத்திகன்:    சிவபெருமானை வள்ளுவர் ஆதரித்தார் என்று காட்ட ஆத்திகர் முயல்வது முட்டாள் தனந்தானே?
ஆசிரியர்:     ஆம் ஆம் ஆம். உங்கட்கு அண்ணன்மார் அவர்கள்.
நாத்திகன்:    அப்படியானால் நாங்களும் முட்டாள்கள்தாமோ? கடவுள் உண்டு என்பாரை எதிர்ப்பவர்களாகிய நாங்களுமா முட்டாள்கள்?
ஆசிரியர்:     உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லப்படுவது எது? கடவுள்தானே? எனவே இரு சார்பினரும் கடவுள் எனும் ஒன்றை வைத்துத்தாமே கணக்குப் போடுகின்றார்கள்! (இளங்கோ.ச.சு:1992:38) என்று நாத்திகரையும் கடிவதைக்காணமுடிகிறது.
உரையாசிரியர்களிடமிருந்து மாறுபடல்:
தனக்கு முன் திருக்குறளுக்கு எழுந்த உரைகளைப் பாரதிதாசன் கற்றிருக்கிறார். எனவேதான் தன்னுடைய உரையில் பலரது கருத்துக்களை மேற்கோள் காட்டவும், கருத்துக்கூறவும் மறுக்கவும் முடிந்திருக்கிறது. திருக்குறள் உரையாசிரியர்களின் முக்கியமானவராக க் கருதப்படும் பரிமேலழகர் கருத்துக்கள் குறித்த கடுமையான விமர்சனங்கள் பாரதிதாசனுக்கு இருந்திருக்கிறது. குயில் ஏட்டில் திருக்குறள் விளக்கம் வெளியிடப்போவதாக வந்த அறிவிப்பில் பாரதிதாசன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
-      வள்ளுவர் ஆரியரா? தமிழ்ச்சீரியரா?
-      வள்ளுவரின் பெற்றோர் புலைச்சியும் பார்ப்பன னும் என்னும் விரிப்பது முறையா? சிரிப்பது சரியா?
-      பரிமேலழகர் உரைப்பகுதிகள் அனைத்தும் கொள்ளத்தக்கதா? தள்ளத் தக்கதா?
-      பரிமேலழகரோடு பதின்மர் உரை பகர்ந்திருக்க வேறுரை காண்பது மறமா? அறமா?
-      முன்னோர் வகுத்துள்ள உரைகளனைத்தும் மத த்தையும் தமிழெதிர்ப்புக் கொள்கைகளையும் அடிப்படையாக க் கொண்ட பொய்யுரைகளா? மெய்யுரைகளா?
-      பரிமேலழகர் முத்துரை போதுமா? புத்துரை வேண்டுமா? (இளங்கோ.ச.சு:1992:223)
என்று குறிப்பிட்டுள்ளார். எனவே திருக்குறள் உரை என்னும்போதே பாரதிதாசன் சிந்தையில் பரிமேலழகர் அவர் மனக்கண்ணில் தோன்றுகிறார் எனலாம். எனவே பல இடங்களில் பரிமேலழகர் கருத்தை மறுத்து உரை கூறியுள்ளார்.
கொடுங்கோன்மை அதிகாரத்தில் 10 ஆம் செய்யுளான,
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
என்னும் குறளில் அறுதொழில் என்பதனை விளக்க வரும் பாரதிதாசன், ‘பரிமேலழகர் அறுதொழில் என்பது ஆரிய மறையோதுதல், ஓதுவித்தல், வேட்டல் (கொலை முதலிய வேள்வி)வேட்பித்தல், அறிவு தரல், பிச்சைபுகல் ஆகிய ஆறுதொழில் என்றார். பொருந்துமா? ஆரியர், தீயொழுக்கம் தமிழர்பால் தலைநீட்டத் தொடங்க்க் கண்டருளிய வள்ளுவர் அவற்றை மறுத்துத் தமிழரை தமிழர் நெறியில் நிறுத்த அருளிய திருக்குறளில், ஆரியர் அறுதொழில் இந்நாட்டில் நடவாது ஒழிந்துவிடுமே என்றா அழுவார்? எனவே பரிமேலழகர் கொண்ட பொருள் பொய்ப்பொருள் என விடுக்க (தென்றல்:மலர்2:இதழ்21)
என்று, வள்ளுவரின் உளக்கருத்தைத் திரித்துப் பொருள் கூறுகிறார் பரிமேலழகர் என்பார் பாரதிதாசன். ‘முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல் என்னும் குறளுக்கு விளக்கமளிக்கும்போது, மன்னவன் முறைகோடிச் செய்தால், அதைக் காரணமாக க் கொண்டு முகில் பொழிதலைச் செய்யாதொழியும் என்ற பரிமேலழகர் கருத்தினை எடுத்துக்காட்டி, ‘பரிமேலழகர் கூறிய இப்பொருள் பொருந்துவதன்று என்பதோடு வேள்விக்கு மழை கட்டுப்படுவது என்றுகூறி மக்களை ஏய்க்கும் ஓரினத்தாரின் கொள்கையை வலியுறுத்தவே இவ்வாறு பொருந்தப் பொருள் புகன்றார் (இளங்கோ.ச.சு:1992:7) என்று குறிப்பிடுகிறார். பரிமேலழகர் கொள்கை என்பது பார்ப்பனர்களின் கொள்கையை வலியுறுத்துவதே என்று சுட்டிக்காட்டுகிறார்.

ஒன்றுதலும் முரணுதலும்:
பொதுவாகத் திருக்குறளுக்கு உரைகண்ட உரையாசிரியர்களின் கருத்துக்களை மறுத்துப் புத்துரை கண்ட பாரதிதாசன், சிற்சில சிலவிடங்களில் சமூக வழக்காறுகளை ஏற்றுக்கொண்டும் உரை கண்டிருக்கிறார்.
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
என்னும் குறளுக்கு உரையெழுதும்போது, கண்ணையும் மனத்தையும் கவர்வனவும், மிக்க பயன் விளைப்பனவும் ஆகிய தெய்வம், தன் கணவனைவிட வேறு இல்லை என்று எண்ணும் மனைவி, அக்க்கணவனுக்குப் பயன் மழை (இளங்கோ.ச.சு:1992:122) என்கிறார். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்னும் குறளுக்கு உரையெழுதும்போது, ‘எத்தனை சமையங்கள்! அவையும் ஒன்றினோடொன்று ஒவ்வாதவை. அச்சமயங்கள், மக்களை மேற்கொள்ளப் பணிக்கும் முறைகள் எத்தனை! அவைகளும் ஒன்றினோடொன்று ஒவ்வாதவை. அம்முறைகளை மேற்கொண்டு மக்கள் படும் இன்னல்கள் எத்தனை! மான இழப்பு, மதியிழப்பு, செல்வ இழப்பு, செயலிழப்பு! இத்தனை பாட்டுக்கும், பயனுண்டு எனும் உறுதியேனுமுண்டா? அதுவும் இல்லை. எனினும் மக்கள் தெய்வ உலகத்தில் தெய் வரிசையில் சேர இத்தனையும் பட்டுத்தான் ஆகவேண்டும் என்று நம்புகின்றார்கள்-நம்பச் செய்த தால். ஆசிரியர், மக்கள் மனத்தில் இடம்பெற்றுவிட்ட இந்த நம்பிக்கையை எதிர்க்க எண்ணவில்லை. தெய்வ வரிசையில் தெய்வமாகச் சேர வேண்டியதற்கே வழிசொல்வார் போல், மக்கள் மேற்கொள்ளவேண்டிய முறையை இதோ என்று காட்டினார்! மக்களே! மனையாளோடு கூடி வாழும் முறை தவறாது வாழ்க்கை நடத்துங்கள் என்று கூறி அருளினார். இவ்வாறு ஆசிரியர் கூறியருளியதால், அவர் நல்லதோர் உண்மையை மக்களுக்குக் காட்டினாராயினர். இவ்வாறு ஆசிரியர் கூறியருளியதால், சமயக் கணக்கர் மதிவழியேகுதல் வேண்டாம் என்றும் விழிப்பூட்டியவரானார்(இளங்கோ.ச.சு:1992:118) என்று கூறுவதையும் காணலாம். எனவே தெய்வம் என்ற சொல்லுக்குப் பிற உரையாசிரியர்களின் பொதுநிலைக் கருத்தைப் பாரதிதாசன் ஏற்று உரை கூறுவதையும் காணமுடிகிறது.
சொல்லாய்வு:
திருக்குறளின் பொருளை விளங்கிக் கொள்ளவதற்கு, நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களின் உண்மைப் பொருளை அறிய வேண்டுவது அவசியமாகிறது. இலக்கண விதிகளின் அடிப்படையிலும் பாரதிதாசன் சொற்களைப் பொருள் கொள்ள வேண்டும் முறைமை பற்றிக் குறிப்பிடுகிறார். ‘ஆபயன் குன்றும் என்னும் குறளில் ஆபயன் என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் ‘பசுவின் பயன் என்று பொருள் கொண்டார். ‘அவர் ஆபயன் என்றதை ஆவினது பயன் என ஆறாம் வேற்றுமைத் தொகையாக்க் கொண்டார். அவ்வாறு கொண்டால் ஆப்பயன் என ஒற்று மிகவேண்டும் என்கிறார் பாரதிதாசன். ‘ஆப்பயன் அளிக்கும் கோவலர் என்ற சிலப்பதிகாரத்தில் பயின்றுவரும் தொடரை எடுத்துக்காட்டும் பாரதிதாசன், ‘ஆபயன் என்பது வினைத்தொகைநிலைத் தொடர் என்க. காலங்கரந்த பெயரெச்சம் வினைக்குறை என்பது வினைத்தொகை இலக்கணம். ஆபயன் என்பது ஆனபயன், ஆகின்ற பயன், ஆகும்பயன் என முக்காலத்துக்கும் விரியும். இங்கு ஆனபயன் என்று இறந்த காலத்துக்கு விரிக்க. ஆபயன் (ஆனபயன்) என்றால் அரசன் நல்லபடி ஆண்டுவந்த போது ஆனபயன் என்பது பொருள் (இளங்கோ.ச.சு:1992:4-5) என்று குறிப்பிடுகிறார்.
இதனைப்போன்றே ஏராளமான சொற்களுக்கான சொல்லாய்வில் ஈடுபட்டுள்ளார் பாரதிதாசன். அவற்றைத் தனது திருக்குறள் உரையில் ஆங்காங்கே கூறிச் செல்கிறார். ‘ஆதி, பகவன், கடவுள், தெய்வம், இறைவன், பூசனை, புயல், வாரி, முகில், கொண்டல், வான், கார், மழை, தானம், பாவம், அந்தணர், செவி, த்த்துவம், அடிகள், தண்டம், கரி, குணம் முதலிய சொற்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.
மேற்கோள் கையாளுதல்:
பாரதிதாசனார் தன்னுடைய திருக்குறள் உரையில் ஏராளமான தமிழ்ச்சான்றோர்களின் கருத்துக்களை உரிய இடங்களில் எடுத்தாண்டிருக்கிறார். தாயுமானவர், அருணகிரிநாதர், பட்டினத்தார், சிவஞானபோத உரையாசிரியர் ஆகியோரது பாடல்களும் கருத்துக்களும் உரையில் எடுத்துக்காட்டப்பெற்றுள்ளன.
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, திருவாசகம், திருவாய்மொழி, திருமந்திரம், நீதிநெறிவிளக்கம், நன்னூல், பிங்கலந்தை, பகவத்கீதை முதலான நூல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
முடிவுரை:
பாரதிதாசனின் திருக்குறள் உரை தனித்த நூலாக எழவில்லை. இதழ்களில் குறள்களுக்கு விளக்கமளித்துத் தொடராக எழுதியுள்ளார். மொத்தம் 85 குறள்களுக்கு மட்டுமே உரை எழுதியுள்ளார்.
உரையாக்கத்தில் தன் கருத்தினை வலிந்து திணிக்காமல், முந்தைய உரையாசிரியர்களின் கருத்துக்களைக் கொள்ளும் இடத்தில் கொண்டும், மறுக்கும் இடத்தில் மறுத்தும் உரை எழுதியுள்ளார்.
பரிமேலழகருக்கு மறுப்புரை எழுதுவது பாரதிதாசனின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். எனவே அவருடைய உரையைப் பல இடங்களில் மறுத்தெழுதுகிறார். பரிமேலழகரின் நோக்கம் பார்ப்பனியத்துக்கான கருத்தியல் அடிப்படையை வழங்குவதே என்றுரைக்கின்றார்.
புதிய உத்திகளைப் பயன்படுத்தி, உரையைப் படிக்கச் சுவையுள்ளதாக மாற்றியுள்ளார் பாரதிதாசன். ஆத்திகன், நாத்திகன், உரை ஆசிரியர் உரையாடல் கருத்துரையினை விளக்குவதாகவும் ஐயங்களைத் தெளிவுபடுத்துவதாகவும் அமைவதைக் காணமுடிகிறது.
முந்தைய உரையாசிரியர்களின் கருத்துக்களில் உடன்பட்டும் பாரதிதாசன் எழுதியுள்ளார்.
இலக்கியங்கள், இலக்கியவாணர்களின் கருத்துக்கள் ஆகியனவற்றைத் தமது உரையில் மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
பாரதிதாசனின் திருக்குறள் உரை, ‘வள்ளுவர் உள்ளம் என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. வள்ளுவரின் உண்மை உள்ளத்தை வெளிப்படுத்தல் என்றே தமது உரைமுயற்சியை அவர் சுட்டியுள்ளார். திராவிடக் கருத்துநிலை அடிப்படையில் திருக்குறளை விளக்குதல் அவருடைய முறைமை என்பது புலப்படுகிறது.




No comments: