Thursday 24 July 2014

மரி என்கிற ஆட்டுக்குட்டி (நாடகம்) சிறுகதை: பிரபஞ்சன், நாடக வடிவம்: கி.பார்த்திபராஜா


(தலைமையாசிரியர் அறை. எதிரில் ஆசிரியர்கள் அமர்ந்திருக்கிறார்கள். முக்கியமான விஷயம் பற்றிய விவாதம் நடப்பதைப் போல இருக்கிறது சூழல்.)
தலைமை: ‘தமிழ் சார்... அந்த அற்புதமரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கிறேன் சார்....
தமிழ்:     எந்த அற்புதமரி?
ஆசி2: இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தெட்டு அற்புதமரி இருக்காளா சார்? அதான் சார் அந்தப் பத்தாம் வகுப்பு அற்புதமரி...
ஆசி3: என்ன சார் முழிக்கிறீங்க? அதான் சார்... எப்போ பாத்தாலும் சவக்குச் சவக்குன்னு சூயிங்கம் மென்னுக்கிட்டுருக்குமே ஒரு எருமை மாடு...
ஆசி4: இந்தப் பள்ளிக்கூடம், ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்குவிதிகள் எல்லாத்தையும் அலட்சியப்படுத்துறமாதிரி திமிரோடவே பள்ளிக்கூடம் வந்திட்டு திமிரோடவே திரும்பிப்போற ஒரு ஜென்ம ம் சார்...
ஆசி5: சார்... அவ மூஞ்சியப்பார்த்தாவே... ‘நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை.... நீங்களெல்லாம் எனக்கு ப்பூஉஉஉ....ன்னு சொல்றமாதிரி ஒரு முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட சண்டைக்காரி சார்...அவ.
தமிழ்: (யோசித்து...) ம்... இப்போ எனக்கு நினைவுக்கு வருது சார்...
ஆசி2: ம்..... அந்தப் பொண்ணுதான் சார்... அற்புதமரி! (பெயரை உச்சரிக்கும் போதே... ஒரு கேலி தொனி வெளிப்படுகிறது) அவளுக்குத்தான் சீட்டைக் கிழிக்கணும்ங்கிறாரு ஹெச்.எம்.
தமிழ்:     சரிங்க சார்... என்னத்துக்கு சார் டி.சி?
ஹெச்.எம்: என்னத்துக்கா? நீங்க இந்த உலகத்துலதான் இருக்கிறீங்களா? அவ உங்க ஸ்டூடண்ட்தானே தமிழ் சார்?
தமிழ்:     ஆமாமா... அப்ப ப்போ இஷ்டப்பட்டா... ஏதோ எனக்குத் தயவு பண்ணுறமாதிரி கிளாசுக்கு வரும், போகும்.
ஹெச்.எம்: உம் நீங்களே சொல்றீங்க பாருங்க....
(பெரிய வருகைப் பதிவு ரிஜிஸ்டரையும் இரண்டு மூன்று பைல்களையும் தூக்கி தமிழ் சாரின் முன்னால் போடுகிறார் ஹெச்.எம்)
ஹெச்.எம்: பாருங்க... நீங்களே பாருங்க. போன ஆறு மாசத்துல, எண்ணிப் பன்னிரண்டே நாள்தான் ஸ்கூலுக்கு வந்திருக்கா.
தமிழ்: பேரன்ஸ்க்கு இன்பார்ம் பண்ணிருக்கலாமே சார்?
ஹெச்.எம்: வீட்டுக்கும் மாசம் ஒரு கடிதம் எழுதிப் போட்டுக்கிட்டுதான் இருக்கேன் சார். ஒரு பூச்சி, புழு இப்படி எட்டிப்பார்த்து, அந்தக் கடுதாசி போட்ட கம்மனாட்டி யாருன்னு கேட்டுச்சா? ம்கூம். போடா.. நீயுமாச்சு உன் கடுதாசியுமாச்சுன்னு இருக்கா அவ.
தமிழ்: ஏதாச்சும் மெடிக்கல் சர்ட்டிபிகேட்டாவது வாங்கி ஃபைலில சேர்த்திருங்க சார்...
ஹெச்.எம்: வாங்கிச் சேர்த்துக்கலாம். சேர்த்துக்கலாம்...னா அவ ஸ்கூலுக்கு வந்தால்ல தேவலாம்? நம்ம டி.இ.ஓ மாதிரியில்ல ஸ்கூலுக்கு இஸ்டப்பட்டா வர்றா...? வந்தாலும் ஸ்டூடண்ட் மாதிரியா வர்றா? சே..சே..சே... என் வாயால அதை எப்படிச் சொல்றது? ஒரு பிரஞ்சு சைக்கிள்ளே, கன்னுக்குட்டி மேல உட்கார்ந்து வர்ற மாதிரி பாண்ட் போட்டுக்கிட்டு வர்றா.
ஆசி3: பாண்ட்ன்னா... பாண்ட் சார். என்ன மாதிரி பாண்ட்டுங்கிறீங்க? அப்படியே ‘சிக்குன்னு பிடிச்சிக்கிட்டு, போட்டோவுக்குச் சட்டம் போட்ட மாதிரி.
ஆசி4: அத து பட்பட்டுன்னு தெறிச்சிடுமோன்னு நமக்கெல்லாம் பீதியை ஏற்படுத்தற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர்றா.
ஆசி5: சட்டை போடறாளே... டீச்சர்லாம் இருக்காங்க. எனக்கு இங்க சொல்லவே ஒரு மாதிரியா இருக்கு. சட்டை மேல என்னத்துக்கு சார் ரெண்டு பட்டனை அவுத்துவிட்டுட்டு வர்றது?
ஆசி6: அது மேல சீயான் பாம்பு மாதிரி ஒரு செயின். காத்தாடி வால் மாதிரி அது அங்கிட்டும் இங்கிட்டும் வளைஞ்சு வளைஞ்சு ஆடறது.
ஹெச்.எம்: கூட  இத்தினி பசங்க படிக்கிறாங்களேன்னு கொஞ்சமாச்சும் உடம்பிலே வெக்கம் வேணாம்? இந்த இழவெடுத்த ஸ்கூல்ல ஒரு யூனிஃபாம், ஒரு ஒழுங்கு, ஒரு மண்ணாங்கட்டி, ஒரு தெருப்புழுதி ஒன்னும் கெடையாது. எனக்குத் தெரியும் சார்... நீங்க அதையெல்லாம் ரசிச்சிருப்பீங்க!
தமிழ்:     சார்....!
ஹெ.எம்:  அட சும்மா இருங்க சார். நாப்பது வருஷம் இதுல குப்பை கொட்டியாச்சு. ஐ நோ ஹ்யூமன் சைக்காலஜி மிஸ்டர் டமிள்! தமிழ்சார்... எனக்கு மனத த்துவம் தெரியும்பா. உங்களுக்கு என்ன வயசு?
தமிழ்:     இருபத்தொன்பது சார்...!
ஹெச்.எம்: என் சர்வீஸே நாற்பது வருஷம்...!
தமிழ்:     பாண்ட், சட்டை போடக்கூடாதுன்னு விதி ஒன்னும் நம்ம ஸ்கூல்ல இல்லையே சார்...!
ஹெச்.எம்: அதுக்காக? அவுத்துப் போட்டுட்டும் போகலாம்னு விதி இருக்கா என்ன?
ஆசி2: வயசு பதினெட்டு ஆகுது சார் அவளுக்கு. கோட்ட்டிச்சு கோட்ட்டிச்சு இப்பதான் டென்த்துக்கு வந்திருக்கா.
ஆசி3: நம்ம காலத்துல பதினெட்டு வயசுல இடுப்பில ஒண்ணு, தோள்ல ஒண்ணு இருக்கும். போதாக்குறைக்கு மாங்காயைக் கடிச்சிக்கிட்டு இருப்பாளுக.
ஹெச்.எம்: போனவாட்டி, அதான் போன மாசத்திலே ஒரு நாள் போனாப் போவுதுன்னு நம்ம மேல இரக்கப்பட்டு ஸ்கூலுக்கு வந்தாளே...அப்போ, அவ ஒரு நாள்லே, ஆறு மணி நேரத்துக்குள்ளாற, ஹார்ட்லி ஸிக்ஸ் அவர்ஸ் சார், என்ன என்ன பண்ணி இருக்கா தெரியுமா?
தமிழ்: என்ன சார் பண்ணா?
ஆசி4: சார் விடுங்க சார்? எதுக்கு சார் அந்தக் குப்பை எல்லாம்?
ஹெச்.எம்: அட இருங்க சார்.. எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும். (அனைவரிடமும் திரும்பி)
           யாரோ நாலு தடிக்கழுதைகளோட, நீங்கள்ளாம் ரொம்ப கௌரவமா சொல்லிப்பீங்களே பிரண்ட்ஸ் அப்படின்னு.... ஸ்கூல் வாசல்ல சிரிச்சுப் பேசிக்கிட்டு இருந்திருக்கா. நம்ம ஹிஸ்டரி மகாதேவன் இருக்கே... இதோ (சுட்டிக்காட்டி) இது ஒரு அசடு. நம்ம ஸ்கூல் வாசல்லே, நம்ம ஸ்டூடண்ட் இப்படி மிஸ்பிஹேவ் பண்ணறாளேன்னு அவகிட்ட போய்.... (சொல்லிக் கொண்டிருக்கும் போதே... அரங்கின் மற்றொரு பகுதியில் சைக்கிளின் பின் கேரியரில் மரி உட்கார்ந்து கொண்டு நாலைந்து பையன்களோடு பேசிச் சிரித்துக் கொண்டிருக்கிறாள். மகாதேவன் சார் அவளருகில் தயக்கத்துடன் நெருங்குகிறார்)
மகாதேவன்:     இப்படி எல்லாம் பண்ணக்கூடாது அற்புதமரி. உள்ள வா.....
(இங்கே ஹெச்.எம் தொடருகிறார்)
ஹெச்.எம்: ன்னு கூப்பிட்டு இருக்கார். அவள் என்ன சொன்னாள் தெரியுமா?
தமிழ்:     சொல்லுங்க சார்?
(அங்கே காட்சியில் அற்புதமரி)
அற்புதமரி: உங்களுக்குப் பொறாமையா இருக்கா சார்?
(ஹெச்.எம்.தொடருகிறார்)
ஹெச்.எம்: ன்னு கேட்டுட்டா, அந்தப் பசங்க முன்னாலயே. மனுஷன் கண்ணுல ஜலம் விட்டுட்டு எங்கிட்டே சொல்லி அழுதார். ‘ஏன் இப்படிப் பண்ணே அற்புமரி...ன்னு நானே நேர்ல போய்க் கேட்டேன்.
(அற்புதமரி சைக்கிளை எடுத்து அதில் உட்கார்ந்தபடி பேசுகிறாள்)
அற்புதமரி: ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்கிறதுக்குத்தான நீங்க பொறுப்பு. வெளியில நடக்குற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னைக் கட்டுப்படுத்த முடியாது சார்....
(ஆசிரியர்களிடம் ஹெச்.எம் திரும்பி)
ஹெச்.எம்: ன்ன... மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்றா. யாருகிட்ட? இந்த நரசிம்மன் கிட்ட. (தன்னைத் தொட்டுச் சொல்கிறார்)
ஆசி5: என்ன திமிரு பார்த்தீங்களா சார்?
ஹெச்.எம்: இந்த அநியாயம் இத்தோடு போகல. சாயங்காலம் பி.டி மாஸ்டர்கிட்டே சண்டை போட்டுக்கிட்டா.
ஆசி2: ஏன் சார்?
ஹெச்.எம்: அட அவன் எக்ஸர்சைஸ் சொல்லிக் கொடுத்திருக்கான். அவன்...
(காட்சியில் பி.டி மாஸ்டர், அற்புதமரிக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்கிறார். அவள் தவறாகச் செய்ய...)
பி.டி: ‘இப்படிப் பண்ணப்படாது, இப்படி வளையணும்... இந்தமாதிரி கையை வச்சிக்கணும்...
(இங்கு ஹெச்.எம்)
ஹெச்.எம்: ....ன்னு அவளைத் தொட்டுச் சொல்லிக் கொடுத்திருக்கான். தொட்டவன், எசகுபிசகா எங்கயோ தொட்டுட்டான் போலிருக்கு. இவ என்ன கேட்டிருக்கா தெரியுமா?
தமிழ்: என்ன சொல்லியிருப்பா?
(அங்கு அற்புதமரி)
அற்புதமரி: ‘என்னைத் தொட்டுப் பேசாதீங்க சார்...!
தமிழ்:     ....ன்னு சொல்லியிருப்பா.
ஹெச்.எம்: மனுஷ ஜாதின்னா அப்படித்தானே சொல்லியிருக்கணும்? இவள் என்ன சொன்னாள் தெரியுமா?
(அங்கு அற்புதமரி)
அற்புதமரி: ஏன் சார்.. என்னை அங்க இங்க தொடுறீங்க? உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையா?
(இங்கு ஹெச்.எம்)
ஹெச்.எம்: ...ன்னு கேட்டுட்டா. பாவம் நம்ம பி.டி பத்மநாபன். லீவு போட்டுவிட்டுப் போயிட்டான். (தலையை அசைத்துக் கொள்கிறார்)
முடியாதுப்பா... முடியாது. நானும் நாலு பெத்தவன். இந்த ராட்சஸ ஜென்மங்களையெல்லாம் வச்சிக்கிட்டு, இரத்தக் கொதிப்பை வாங்கிக்கிட்டு அல்லாட முடியாதுப்பா. அந்தக் கழுதையைத் தொலைச்சு முழுகிட வேண்டியதுதான்.
தமிழ்:     சார்.. இப்போ போய் டி.சி கொடுத்துட்டா... அவள் எஸ்.எஸ்.எல்.சி எழுத முடியாம ப் போயிடும் சார்... அவ வாழ்க்கையே வீணாப் போயிடும் சார்...!
ஹெச்.எம்: அந்தக் கழுதைக்கே அதைப்பத்திக் கவலை இல்லை. உமக்கெதுக்கு அந்தக் கவலை?
அனைவரும்: ஆமா சார் நமக்கெதுக்கு அந்தக் கவலை?
( அனைவரும் உறைகிறார்கள்....)
தமிழ் மட்டும் எழுகிறார். ஏதோ ஆழ்ந்த சிந்தனையோடு... தனிமொழி.
தமிழ்: ஆசிரியர்களாகிய நமக்கு அந்தக் கவலை இல்லையா?
வகுப்புல ஒரு குழந்தை படிக்கமுடியாம டிஸ்டர்ப் ஆகி... வகுப்பைக் கவனிக்காம இருக்குமே... அப்போ...
ஒருவர்: வகுப்பைக் கவனிக்கலைன்னா... ‘யேய்... கவனி...ன்னு அதட்டணும். அப்புறமும் கவனிக்கலைன்னா....
அனைவரும்:    ஆமா சார்.. நமக்கெதுக்கு அந்தக் கவலை?
தமிழ்:     வகுப்புல ஒரு மாணவன் தூங்கித் தூங்கி விழுறான்....
ஒருவர்:    ஏய்... எழுந்திரு. என் வகுப்புலயே தூங்குறியா? எழுந்திரு. பெஞ்சு மேல ஏறி நில்லு...ன்னு மிரட்டணும். தொடர்ந்து அப்டியே அவன் செஞ்சுக்கிட்டிருந்தான்னா...
அனைவரும்:    ஆமா சார்... நமக்கெதுக்கு அந்தக் கவலை?
தமிழ்:     ஒரு குழந்தை படிப்பில கவனமில்லாம இருக்கு. என்ன கவலையோ என்னவோ? அப்போ..
ஒருவர்: என்ன சார் கவலை இருக்கப்போகுது? சாப்பாட்டுக்கவலையா? சம்பாதிக்கிற கவலையா?
தமிழ்:     சாப்பாட்டுக் கவலையும் சம்பாதிக்கிற கவலையும்தான் கவலையா? வேற கவலை எதுவுமே இருக்காதா?
அனைவரும்:    ஆமா சார்... நமக்கெதுக்கு அந்தக் கவலை?

(அனைவரும் நெருங்கி நிற்க பின்னரங்கம் தமிழ் சாரின் வீடாக மாறுகிறது. லுங்கியும் பனியனும் அணிந்தபடி ஈஸி சேரில் அமர்ந்திருக்கிறார். அவருடைய மனைவி முறத்தில் பருப்பைக் கொட்டித் தூசு தும்புகளை எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கறார்)
தமிழ்: நமக்கெதுக்கு அந்தக் கவலை...ன்னு என்னால இருக்க முடியாது சுமதி. அது என் சுபாவமும் இல்லை. அத்தோட, அந்த மரி...ங்கிற ஆட்டுக்குட்டி, ஒரு சின்னப்பொண்ணு சுமதி. அப்படி என்ன பெரும் பாவங்களைப் பண்ணிட்டா? அப்படியேதான் இருக்கட்டுமே? அதுக்காக அவளைக் கல்லெறிந்து கொல்ல நான் என்ன அப்பழுக்கற்ற யோக்கியன்?
சுமதி: உங்களுக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம்..? நீங்க சொல்றதப் பார்த்தா… அந்தப் பொண்ணு ரொம்ப ராங்கி டைப் மாதிரித் தெரியுது. நீங்க ஏதாவது பேசப்போயி, உங்களையும் தூக்கி எறிஞ்சு பேசிட்டா?
தமிழ்:     சும்மா பேசிப் பார்க்கலாமே? நான் அட்வைஸ்லாம் பண்ணல. சும்மா பார்ப்போம்; பேசலாம்.
சுமதி: நீங்க மனசு சங்கடப்படாதது மாதிரி பார்த்துக்கோங்க.
தமிழ்: இன்னிக்கு ஈவினிங் பீச்சுக்குப் போகும்போது அப்படியே மரியோட வீட்டுக்குப் போறோம்…!
சுமதி: அய்ய்யோ எதுக்கு?
தமிழ்: சும்மா போறோம்… ஓ.கே?
சுமதி:     ஓ.கேங்க.
காட்சி:
(ஒரு வீட்டின் முன் நிற்கிறார்கள்.)
சுமதி: திண்ணை புழுதி படிஞ்சிருக்கு. பெருக்கி சுத்தம் செஞ்சு பல வாரங்கள் ஆகியிருக்கும் போல.
தமிழ்: வீடு திறந்திருக்கு.
சுமதி: ஆமா. கல்யாண வீடுமாதிரி எல்லாமே இறைஞ்சு கெடக்கு… பார்த்தீங்களா?
தமிழ்:     ம்… இரு கூப்பிட்டுப் பார்ப்போம்… ‘மரி… மரி…’
குரல்: யாரு?
(சுருக்கங்கள் விழுந்த உடைகளோடும் கலைந்த தலையும் லுங்கி சட்டையில் வெளிப்படுகிறாள் மரி. தமிழ் சாரைப் பார்த்ததும் ஆச்சர்யம். சுமதியைப் பார்த்ததும் இரட்டை ஆச்சர்யம்)
மரி: வாங்க சார்.. வாங்க. உட்காருங்க.
தமிழ்: நீயும் உட்காரும்மா. அட உட்காரும்மா. தூக்கத்தைக் கலைச்சிட்டேனாம்மா?
மரி: அய்யோ… பரவாயில்லை சார்…. (தலமுடியை ஒதுக்கியபடி) நீங்க எப்படி இங்க?
தமிழ்: சும்மாத்தான். பீச்சுக்குப் போய்க்கிட்டு இருந்தோம். வழியிலேதானே உங்க வீடு. பார்த்த ரொம்ப நாளாச்சேன்னு நுழைஞ்சிட்டோம். அழையாத விருந்தாளி. என்னம்மா? உடம்பு சரியில்லையா?
மரி: தைலம் வாசனை வருதா சார்? லேசாத் தலைவலி. ஏதாச்சும் சாப்பிடறீங்களா மேடம்?
சுமதி: வீட்டிலேயே சாப்பிட்டுத்தான்மா கிளம்பினோம்.
தமிழ்: ஆமா… வீட்டிலே யாரும் இல்லையா?
மரி: வீடா சார் இது? வீடுன்னா அப்பா, அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டார். போயிட்டாருன்னா… செத்துப் போயிடலே. எங்களை விட்டுப் போயிட்டார். அம்மா என்னைச் சுத்தமா விட்டுடலை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம். சமயத்திலே இரண்டு நாளுக்கு ஒருதடவை நாங்க பார்த்துக்கிட்டா அது அதிகம். அதனாலதான் இது வீடான்னேன். எனக்கு ஏதோ லாட்ஜில தங்கற மாதிரி தோணுது…
சுமதி: என்னம்மா நீ… சாப்பாடல்லாம் எப்படிம்மா?
மரி: பெரும்பாலும் பசி எடுக்கறப்போ, எங்க தோணுதோ, அங்க சாப்பிடுவேன். ஓட்டல்லதான். அம்மா வீட்டுல தங்கியிருந்தா ஏதாவது செய்வாங்க. அம்மா சமையலைக் காட்டிலும் ஓட்டலே தேவலை. நல்லாயிருக்காதுன்னு சொல்லலை. அம்மான்னு நெனச்சு சாப்பிட முடியலே. பொண்ணுன்னு நெனச்சு அவங்களும் பண்ணல.
சுமதி: உன் அம்மாதானே அவங்க?
மரி: ஆமாங்க. இப்போ வேற ஒருத்தரோட அவங்க இருக்காங்க. அவரை எனக்குப் பிடிக்கலை. என்னையும் அவருக்குப் பிடிக்கலை. சரி. அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து தீர்க்கிறேன்.
(அமைதி)
தமிழ்: எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைம்மா. மரி… ஸ்கூலுக்கு வந்தா ஒரு மாறுதலா இருக்குமில்லே?
மரி: நான் யாருக்காக சார் படிக்கணும்?
தமிழ்: உனக்காக.
மரி: ப்ச்… (அலட்சியமாய் பாவனை செய்கிறாள்)
(சற்று நேர அமைதிக்குப் பிறகு)
தமிழ்: பீச்சுக்குப் போகலாம். வாயேன்…
மரி: நானா… நானுமா? நான்.. நான் வரட்டுமா சார்?
சுமதி: வா.
மரி: இதோ… ஒரு நிமிஷத்துல வந்துட்டேன் சார்.
(உள்ளே ஓடுகிறாள்)
சுமதி: பாவங்க.
தமிழ்: யாருதான் பாவம் இல்லே? இந்தப் பொண்ணை விட்டுவிட்டு எங்கேயோ இருக்கிற அந்த அம்மா பாவம் இல்லையா? இத்தோட அப்பா பாவம் இல்லையா? எல்லோருமே ஒருவிதத்துல பாவம்தான்.
(உடை மாற்றிக் கொண்டு வருகிறாள் மரி. )
தமிழ்: ஸ்மார்ட்…
மரி: தேங்க்யூ சார்….
(நடந்து போகிறார்கள். நடுவில் தமிழ் சார். ஒருபக்கம் மரி. ஒருபக்கம் சுமதி.)
(கடற்கரை. குழந்தைகளின் விளையாட்டு… பலூன்கள்…. பட்டாணி சுண்டல்… )
பட்டாணி சுண்டல் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.
மரி:காரவடை வாங்கிக் கொடுங்க சார்….
(சாப்பிடுகிறாள்)
மரி: மத்தியானம் சாப்பிடல்லே சார். சோம்பேறித்தனமா இருந்துச்சு. தூங்கிட்டேன்.
சுமதி: இன்னிக்கு ராத்திரி எங்களோடுதான் நீ சாப்பிடறே…
மரி: இருக்கட்டுங்க்கா.
சுமதி: என்ன இருக்கட்டும். நீ வர்ற.
(சுமதியின் விரல்களில் தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டு வருகிறாள்)
சுமதி: சாம்பாரும் கத்தரிக்காய் கறியும்தான். மத்தியானம் வறுத்த நெத்திலிக்  கருவாடு இருக்கு.
மரி: தூள்க்கா… தூள்! இந்தச் சாம்பாரும் நெத்திலிக் கருவாடும் பயங்கரமான காம்பினேஷங்க்கா.