Friday 15 October 2010

தெருக்கூத்துக் கற்றுக் கொள்ளப்போனேன்…



‘ஆகாயத்தில் ஆடிய கூத்து…
அது திருக்கூத்து!
அடியார் கணம் ஆடுற கூத்து…
இது தெருக்கூத்து!’
-எங்கள் ஊரில் நடந்த அரிச்சந்திரா மயான காண்டம் நாடகத்தில் பஃபூன் காமிக் பொன்னமராவதி ஆறுமுகம் பாடிய பாடலில்தான் முதன் முதலாக ‘தெருக்கூத்து’ என்ற சொல்லை அறிந்தேன். அப்போது நான் பள்ளிச் சிறுவன். பிறகு பல்கலைக் கழகத்தில் முதுகலை பயின்ற காலத்தில்தான் தெருக்கூத்து என்பது தமிழகத்தின் வடபகுதியில் வழங்கப்படும் முதன்மையான பாரம்பரிய நிகழ்த்து வடிவம் என்பதை அறிந்தேன்.
தமிழகத்தின் தென்பகுதிகளுள் ஒன்றான, வறட்சிக்குப் புகழ்பெற்ற இராமநாதபுரம் மாவட்டம் நான் பிறந்த பகுதி. கண்ணில் ஊறும் தண்ணீர் மண்ணில் ஊறாத மகத்தான பூமி என் பூமி. கருவேலமரங்களின் ஈர்ப்புக்குத் தன் ஈரப்பதத்தைப் பறிகொடுத்துவிட்டு, வறண்ட தன்மையோடேயே சுழலும் பரிதாபமான காற்று என் காற்று. பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும் என் மண்ணில் தண்ணீர் ஊற்றுத்தான் தகராறு; இசை ஊற்று எக்காலத்திலும் வஞ்சகமில்லாமல் பொங்கிப் பிரவகித்தபடியேதான் இருந்தது என் மண்ணில்.
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடக சங்கீத லயம், காதுகளில் எப்போதுமே ரீங்கரித்தபடியிருக்க, எங்கள் பொழுதுகள் நகர்ந்தன. மணிமுத்து பாகவதர், எம்.ஏ.மஜீத் போன்ற உன்னதமான ராஜபார்ட்டுகள், மூக்கையா தேவர், வரதராஜன் முதலான புகழ் பெற்ற பெட்டிக்காரர்கள் (ஆர்மோனியக் கலைஞர்கள்) ஆகியோர் தங்களின் வளமான இசையினால் எங்கள் மண்ணை வசியப்படுத்தியிருந்தனர். கல்லூரிப்படிப்பு முடியும்வரை எனக்கு சுவாமிகளின் இசைநாடக சங்கீதம் தான் பழக்கம்.
பட்டமேற்படிப்புக்காகச் சென்னை வந்த பிறகு நவீன நாடகர்களின் அறிமுகம் கிடைத்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையில் எனக்கு மூத்த மாணவர்கள் பலர் தெருக்கூத்தைப் பற்றிப் பலவேறு கோணங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தனர். தெருக்கூத்தின் மீது பைத்தியம் கொண்டிருந்த பேராசிரியர் வீ.அரசு ஆசிரியராக இருந்தமையே அதற்குக் காரணம்.
தெருக்கூத்தின் நிகழ்த்துப் பனுவல் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற கோ.பழனி, அப்போது எங்களுக்கு ஆசிரியராக இருந்தார். ஜா.அமைதியரசு, ஸ்டான்லி, செல்வம், திருப்பதி என என் முன்னோடிகள் தெருக்கூத்தில் ஆர்வம் கொண்டிருந்தனர். நாடகத்தில் எனக்குப் பிடிப்பு இருந்த காரணத்தால், அமைதியரசு தான் போகுமிடமெல்லாம் என்னையும் அழைத்துக் கொண்டு போனார்.
அப்போதுதான் அலியான்ஸ் ஃபிரான்ஸேயில் ஒரு தெருக்கூத்துப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. அபிமன்யு கூத்து. நிகழ்த்தியவர்கள் புரிசை கண்ணப்பத் தம்பிரான் குழுவினர். அபிமன்யுவாக ஆடியவர் கண்ணப்ப சம்பந்தன். நான் பார்த்த முதல் தெருக்கூத்து அது. தெருக்கூத்தின் முகவீணை இசை, என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. தமிழ்த்தேசிய இனத்தின் தேசிய அடையாளத்தை அந்த இசையில் காணமுடிந்தது. நீளமான மர பெஞ்சில் முட்டை கிளாஸ் கண்ணாடி போட்டிருந்த பெரியவர் கண்ணப்பத் தம்பிரான் அமர்ந்தபடி தாளம் போட்டுக் கொண்டிருந்தார். பிரமிப்பு விலகாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பிறகு, சென்னையில் எங்கு தெருக்கூத்து நடந்தாலும் சரி, முதல் வரிசையில் இடம்பிடிக்கத் தொடங்கியிருந்தேன். தெருக்கூத்தின் ருசி எனக்குப் பிடித்திருந்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருக்கூத்துப் பார்த்துக்கொண்டு அலைந்துகொண்டிருந்தேன். தெருக்கூத்தின் வசீகரத்தில் கிறங்கிக் கிடந்த அந்தப் பொழுதுகளில் கூட, தெருக்கூத்துக் கற்பது பற்றிக் கற்பனையும் செய்து பார்க்கவில்லை. தெருக்கூத்தைக் கற்பது என்பதெல்லாம் நம்மால் ஆகாத வேலை என்று அப்போது மனதில் பதிந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். எனவே அதைப் பற்றிச் சிந்தித்ததே இல்லை.
எங்களின் மரியாதைக்குரிய பேராசிரியர் மு.ராமசாமி அவர்கள், பெரியவர் கண்ணப்பத் தம்பிரான் அவர்களிடம் கூத்தினைக் கற்று, புரிசை மண்ணில் பகடைத் துயில் கூத்தில் துச்சாதனன் வேடங்கட்டி ஆடியிருக்கிறார். அவருக்கு இருக்கும் திறன் வேறு; ஒப்பிடவே முடியாத தளத்தில் இருக்கிறார் அவர். இன்றுவரையிலும் தமிழ் நவீன அரங்கில் சாதனையாளராகவே அவர் இருக்கிறார். எனவே அவரால் முடிந்தது என்பதற்காக நாமும் ஆசைப்படுவது மிகையாகவே இருக்கும் என்ற எண்ணம் எனக்கு இருந்துவந்தது.
பெரியவர் கண்ணப்பத் தம்பிரான் அவர்கள் இயற்கை எய்திய பிறகு, இனியெல்லாம் தெருக்கூத்துக் கற்பதற்கு யாருக்குமே வாய்ப்புக் கிடைக்காது என்றுதான் நான் கருதியிருந்தேன். பெரியவரின் நினைவு விழாக் கொண்டாட்டங்களையொட்டி, பிறகு புரிசையில் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டபோது, முதலிரு ஆண்டுப் பயிற்சி மாணவர்களின் அரங்கேற்றத்திற்கு வந்து பார்த்துப் பாராட்டிச் சென்றேன். அப்போது இணையத்தில் அவர்களின் ‘இந்திரஜித்’ கூத்து அரங்கேற்றம் பற்றி, ஒரு பதிவையும் எழுதியிருந்தேன்.
மூன்றாமாண்டு பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தபோது, எனது மாணவர்களில் சிலரை அனுப்ப வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். பல்வேறு காரணங்களால் அது இயலாமல் போகவே, நாம் போய்க் கற்றுக் கொண்டால் என்ன? என்று தோன்ற, முடிவெடுத்துத் துணிவுடன் வந்து புரிசை இறங்கினேன்.
என்னோடு பணியாற்றிய, கலை இலக்கியம் ஈடுபாடு, வாசிப்பு என்று கொஞ்சம் ஏமாளியாக இருந்த பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியனை ஏமாற்றி, எனக்குத் துணையாகப் பயிற்சிக்கு அழைத்து வந்துவிட்டேன்.
எங்கள் ஆசிரியர் கண்ணப்ப சம்பந்தன் அவர்கள் அதிகம் பேசுகிறவர் இல்லை. அவரைப் பொறுத்தவரை, ‘செயல், அது ஒன்றே சிறந்த சொல்’.
அடவுகள், குரல் பயிற்சி, இலயப் பயிற்சி, பாடல் பயிற்சி, வசன உச்சரிப்புப் பயிற்சி என, தெருக்கூத்தின் அடிப்படையான பயிற்சிகளை நிறைவு செய்து, அந்த ஆண்டில் என்ன பிரதியை நிகழ்வுக்கு எடுப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
பயிற்சி அடவுகளில் எங்கள் ஆசிரியர் எங்களிடம் கருணை காட்டவில்லை; பிழிந்து எடுத்து விட்டார். கால் வலிக்குப் பல நாட்கள் மருந்து தேட வேண்டியிருந்தது.
தன் தேர்ந்த அனுபவத்தின் வழியாக, தெருக்கூத்துக் கற்பிப்பதற்கு ஒரு முறையியலையும் தெளிவான பாடத்திட்டத்தையும் கொண்டிருந்தார் எங்கள் ஆசிரியர் சம்பந்தன் அவர்கள். எனவே பயிற்சி, அடுத்தடுத்து மிக வேகமாக நகர்ந்தது. ஒன்றின் தொடர்ச்சியாக ஒன்று இருந்தமையால் தெருக்கூத்தைப் பற்றிய புரிதல் கூடியது.
எங்களுடைய சிறு சிறு தவறுகளைப் பொறுமையுடன் மீண்டும் மீண்டும் திருத்தினார். சலிக்காமல் கற்பித்தார். பெருந்தன்மையுடன் ஊக்குவித்தார். நம்பிக்கையளித்தார். சக கூத்தனாய் தோள் கொடுத்தார்.
எங்களின் எல்ல மீறிய அபத்தமான தவறுகளுக்குச் சில வேளைகளில் கண்டிப்புக் காட்டினார். இடுக்கிய கண்களும் விடைத்த மூக்கும் மடித்த நாவுமாய் அவர் பார்த்த கணத்திலேயே சரணாகதி அடைந்துவிடுவோம். ‘அடுத்த தடவை நல்லா பண்றேன்…’ என்று அசடு வழிய, குழைவு காட்டி முன்னால் நிற்போம். அவருக்கே சிரிப்பு வந்துவிடும். சிரிப்பை வாய்க்குள் புதைத்துக் கொண்டு அடுத்த பயிற்சிக்குப் போய்விடுவார். குருவைச் சரண்டைந்தால் குரு கடைத்தேற்றிவிடுவார் என்பது இந்திய மரபின் ஆன்மீக நம்பிக்கை. நாங்கள் அதை முழுமையாய் நம்பினோம்; ஈடுபட்டோம். எங்கள் குருநாதர் சம்பந்தன் அவர்கள் எங்களையும் தன் கருணையினால் கடைத்தேற்றினார்.
பயிற்சியில் எங்களுக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனைகள் வழங்கியவர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணப்ப காசி அண்ணன் அவர்கள். பயிற்சி நடந்த எல்லா நாட்களிலும் தன் உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது, சென்னையிலிருந்து பயணப்பட்டு புரிசை வந்து முழுநாட்களும் எங்களோடேயே இருப்பார். அடவுகளில், பாடலில், நடிப்பில் திருத்தங்கள் சொல்வார். தானும் வந்து ஆடிக்காட்டுவார். நான் நிற்கிற, நடக்கிற ஒயில், சற்று வித்தியாசமாக இருக்கிறதே என்று குழப்பமடைவார். ‘மதுரை இசை நாடக ராஜபார்ட்டுகளின் நடை அண்ணே அது! அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போகாது அது!’ என்று சமாதானம் கூறுவேன்.
பயிற்சி தொடங்கிய இரண்டு வாரங்கள் பிரச்சனையில்லாமல் தான் போனது. மூன்றாவது வாரத்தில் ஆரம்பித்தது பிரச்சினை. புரிசை கிராமத்தைச் சேர்ந்த நான்கு பள்ளிச் சிறுவர்கள் பயிற்சிக்கு வந்தார்கள். எங்களுக்கான சோதனை இப்படிக் குள்ள வடிவத்திலே வந்து சேர்ந்தது.
தாமதமாகப் பயிற்சிக்கு வந்த அந்தச் சிறுவர்கள் முதல் நாளிலேயே அனாயாசமாய் எங்களைத் தாண்டிச் சென்று விட்டனர். அடவுகள், இராகங்கள், பாடல்கள் என எல்லாவற்றையும் எளிதாகக் கற்றுக் கொண்டுவிட்டனர். ஆசிரியர் சொல்லித் தந்ததை எங்களைவிட, உடனடியாகக் கிரகித்துக் கொண்டனர்; பிடித்துக் கொண்டனர்.
‘இந்த சின்னப் பசங்க நல்லா ஆடுறாங்க… பாடவும் செய்றாங்க… தடி மாடு மாதிரி வளர்ந்திருக்கோம். நம்மால முடியலையே…’ என்று நண்பரிடம் புலம்பினேன் நான். அவர், ‘அட அவங்க புரிசை பசங்கப்பா… புரிசையில பிறந்திருந்தா, நாம கூட இப்படித்தான் இருந்திருப்போம்… ராகவத் தம்பிரான், துரைசாமித் தம்பிரான், கண்ணப்பத் தம்பிரான் காலடி பட்ட மண் இல்லையா இந்த மண்… இந்த மண்ணுல இருந்து வருகிற ஈசல் கூட நல்லா ஆடுமேய்யா தெருக்கூத்து…’ என்று குற்றவுணர்விலிருந்து என்னைத் தப்புவித்தார் அவர். இப்படியாகத்தானே எங்கள் தெருக்கூத்துப் பயிற்சி செவ்வனே சென்றது.
மூன்றாமாண்டு பயிற்சிப் பள்ளி மாணவர்களைக் கொண்டு நிகழ்த்த, பயிற்சி எடுக்க என்ன பிரதியை எடுக்கலாம் என்று சம்பந்தன் அண்ணன் அவர்களும் கண்ணப்ப காசி அண்ணன் அவர்களும் ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் ‘அனுமன் தூது’ என்று முடிவாயிற்று. மூன்று அல்லது மூன்றரை மணி நேரமாகப் பிரதியைச் சுருக்கி நிகழ்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
கல்லூரிக் காலத்தில் காரைக்குடி கம்பன் கழகம், சென்னை கம்பன் கழகம் ஆகியவற்றின் போட்டிகளில் பரிசுகள் பல பெற்றிருக்கிறேன். கம்பன் கழகத்தைப் பொறுத்தவரை ஓர் ஆண்டு முதல்பரிசு பெற்றால், பரிசு பெற்றவர் அடுத்த ஆண்டு போட்டியில் கலந்துகொள்ள முடியாது. எனவே இளநிலை படிக்கிறபோது, முதலாமாண்டிலும் மூன்றாமாண்டிலும் என இரண்டு முறை பரிசு பெற்றிருக்கிறேன். பள்ளி நாட்களிலிருந்தே காரைக்குடி கம்பன் கழகத்தின் விழாக்களில் அறிஞர்களின் பேச்சுக் கேட்பது, படிப்பது எனக் கம்பராமாயணத்தில் சற்றுப் பயிற்சி உண்டு. பிறகு ஏற்பட்ட அரசியல் புரிதல், கம்பராமாயணம் பற்றிய சிந்தனையில் மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. தமிழாசிரியனான எனக்குச் சில வாய்ப்புகள் வந்த போதும், கம்பன் கழக மேடைகளில் பேசுவதில்லை என்பதை உறுதிசெய்துகொண்டேன். கம்பனை, காப்பியத்தை, அதன் அரசியல் பின்புலத்தைப் பேச வாய்ப்புக் கிடைத்தால் மட்டுமே பேச வேண்டும் என்பது என் முடிவு. எனவே இராமாயணம் குறித்த என் எதிர்ப்புணர்வுக்குச் சோதனையாக வந்து சேர்ந்தது ஆசிரியர்களின் நிகழ்த்துப் பிரதி முடிவு. ஆனாலும் இது பயிற்சிக் களம். ஆசிரியர் எந்தப் பிரதியை எடுத்தாலும் பங்கேற்க வேண்டியது எனது கடமை என்று திடப்படுத்திக் கொண்டேன்.
அனுமன் தூது கூத்திற்கான பாத்திரங்களைப் பிரித்துக் கொடுத்தபோது, எனக்கு ‘அனுமன்’ பாத்திரத்தை வழங்கினார் ஆசிரியர். தெருக்கூத்தைப் பார்த்த என் மாணவர்கள், ‘வேஷப் பொருத்தம் சூப்பர்…’ என்றார்கள். சிலர், ‘ஐயா.. நீங்க வேஷமே போட்டிருக்க வேண்டாம்; பாத்திரத்துக்கு வேஷம் போடாமலேயே பொருத்தமா இருப்பீங்க… உங்க ஆசிரியரும் பொருத்தமாத்தான் பாத்திரம் கொடுத்திருக்கிறார்…’ என்று கலாய்த்தார்கள்.
பயிற்சி எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. லயப் பயிற்சிக்காகத் தொடக்கத்திலிருந்தே மிருதங்கத்தையும் ஆர்மோனியத்தையும் பயிற்சியில் வைத்திருந்தார் எங்கள் ஆசிரியர். முகவீணை வந்து சேர்ந்த பிறகு எங்கள் குரல் எடுபடவே இல்லை. முகவீணையுடன் இணைந்து பாடுவது எவ்வளவு கடினம் என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன்.
அதிலும் ஒப்பனை செய்து ஒத்திகை பார்த்த நாளில் என் நம்பிக்கையெல்லாம் போய்விட்டது. ஒப்பனைக்காக உடலில் கட்டுக்கள் கட்டிய பிறகு, இதயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு முடிச்சிட்ட மாதிரி, மூச்சு முட்டியது.
காதுக் கட்டை என்ற ஒன்று கட்டினார்கள்… மொத்தமும் குளோஸ். காதுக்கு முன்னதாக நிற்கும்படி கட்டப்படும் ஆபரணம் காதுக்கட்டை. அதைக் கட்டியதும் என் குரல் எனக்கே கேட்கவில்லை. ஒப்பனை செய்துவிட்ட கோபால் அண்ணன் அவர்களைச் சோகத்துடன் பார்த்தேன். என்ன என்றார். சொன்னேன். பரிதாபத்தோடு பார்த்தார். காதுக்கும் காதுக் கட்டைக்குமான இடைவெளியைச் சற்றுத் தளர்த்திச் சிறிது ஆசுவாசப்படுத்தினார்.
அரங்கேற்ற நாளில் சற்றுப் படபடப்பு இருந்தது. புரிசையில் ஆடுகிறோம் என்ற படபடப்பு. அரங்கேற்றத்திற்கே உரிய சிற்சில தவறுகளோடு ஒருவழியாய் ஆடி முடித்தோம். ‘பசங்க நல்லாத்தான் ஆடினாங்க… மோசமில்லை…’ என்ற ஊர்க்காரர்களின் வாழ்த்துதல்களோடு எங்கள் அரங்கேற்றம் நிகழ்ந்தேறியது.
புரிசை அரங்கேற்ற நிகழ்வில் மூன்றரை மணிநேரக் கூத்தில் ஏறத்தாழ மூன்று இடங்களில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. தெருக்கூத்து என்ற வலிய கலை வடிவத்தின் கனதியை நான் உணர்ந்த இடங்கள் அவை.
இரண்டாவது நிகழ்வு, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில். அப்போது சமாளித்துக் கொண்டேன். அரங்கேற்றத்திற்குப் பிறகு சில கூத்து நிகழ்வு நுட்பங்களைக் கற்றுக் கொண்டேன். இந்தக் கட்டுரையை வாசிக்கும் அன்பர்களே… உங்களுக்கு அந்த நுட்பங்களைச் சொல்லித்தர மாட்டேன். கூத்தர்கள் தங்கள் அனுபவத்தால் கற்றுக் கொண்டது அது. நானும் அப்படித்தான் கற்றுக் கொண்டேன். கூத்தைக் கற்றுக் கொள்ளும்போது நீங்களும் அந்த நுட்பங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
என்னோடு அனுமன் தூது தெருக்கூத்தின் ஆடியவர்கள் என்னைவிட சீனியர்கள். பாஸ்கர், பழனி, சம்பத், சரவணன் என அவர்கள் புதிதாய் கற்றுக் கொள்ளப்போன எங்களுக்கு உறுதுணையாய் இருந்தார்கள். கோபால், ராகவன் முதலான கூத்தர்கள் உற்சாகப்படுத்தினார்கள். மணி, ரகுபதி, கேசவன், சீனிவாசன் முதலான இசைக்கலைஞர்கள் தைரியம் அளித்தார்கள்.
லோகநாதன் அண்ணன், டெய்லர் அண்ணன் என்று ஏராளமான உள்ளூர்காரர்கள் அன்போடு உபசரித்தார்கள். ஊரில் போய் இறங்கியதும் ‘எப்போ வந்தே?’ என்று அன்பொழுக விசாரிப்பதற்கு ஆட்கள் இருந்தார்கள். ஊரைவிட்டுப் புறப்படும் தருணத்தில், ‘அடுத்தவாரம் வந்திருங்க அண்ணா…’ என்றார்கள் குழந்தைகள். புரிசை விருந்தினர்களை அப்படி உபசரித்தது.
மூன்றுமாத காலமும் வார இறுதிப் பயணமும் பயிற்சியும் வாழ்வில் மறக்க முடியாத புதிய அனுபவங்களாக மனதில் பதிந்துவிட்டன. நான்கு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, காலை எட்டு மணிக்குப் புரிசையில் இறங்கி, இளவெயிலில் நடந்து, பயிற்சிப்பள்ளி சென்று குளியல் போட்டுவிட்டு, ஆசிரியர் சம்பந்தன் அண்ணன் வீட்டுக்குப் போவோம். வீட்டுக்கு உள்நுழையும்போதே சம்பந்தன் அண்ணனின் துணைவியார் சரஸ்வதி அக்காவின் மலர்ந்த முகமும் சூடான காலை உணவும் எங்களை வரவேற்கும். 12 வார இறுதிகள்… 24 முழு நாட்கள்…
அதியமானுடைய விருந்துபசாரம் பற்றி அவ்வை பின்வருமாறு குறிப்பிடுவார்: ‘ ஒரு நாட் செல்லலம்; இருநாட் செல்லலம்… பல நாள் பயின்று, பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ’ (இந்தத் தமிழ் வாத்தியார்களோட தொல்லை தாங்க முடியலைப்பா… என்று நீங்கள் புலம்புவது காதில் விழுகிறது. இதெல்லாம் பார்த்தா முடியுமா?)
ஆம். அதியமானைப் போலத்தான் சம்பந்தன் அண்ணனும் அவரது துணைவியாரும் குழந்தைகளும். முதல்நாள் போன்றே மூன்று மாதங்களும் உணவளித்து உபசரித்தனர்.
அனுமன், அங்கதன், ஜாம்புவான் ஆகிய மூவரும் அரங்கில் பிரவேசிக்கும் போது, விரித்துப் பிடித்த திரைக்குள்ளிருந்து பாடப்படும் விருத்தம் ஒன்று உண்டு.
‘நெருப்பினை விழியில் தேக்கி…
நீண்ட தென்திசையை நோக்கி
பொருப்பினை அனைய தோளும்
பூரிக்க புவி கலங்க…
விருப்புடன் ராமன் ஆணை
வீறுடன் ஏற்று சீதை
இருப்பிடம் காண ஜாம்புவனோடு
ஏகினான் அனுமனுந்தானே…’
இந்த விருத்தத்தை நான்தான் பாடுவேன். பாடும் ஒவ்வொரு முறையும் தகராறுதான்; இப்போதும் கூட. ஆசிரியர் பார்த்துக் கொண்டிருக்கிறார்…
‘அடுத்தமுறை சரியா பாடிடுறேன் சம்பந்தன் அண்ணே…’

சுபோஜெயம்!