Saturday 1 November 2008

காலத்தின் கலை வடிவம்: நாடகம்






காலத்தின் கலை வடிவம்: நாடகம்

செல்வ.புவியரசு
தமிழில் நாடகம் என்றொரு கலைவடிவம் இருப்பதை எழுத்தாளர்கள் மறந்துவிட்டார்களோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. மிக அரிதாக ஆங்காங்கே நடக்கும் நவீன நாடக முயற்சிகள் தான் ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூவாய் இனித்துக் கொண்டிருக்கிறது.கதை, கவிதை என்று பல வடிவங்களிலும் சோதனைகள் மேற்கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இலக்கிய ஆளுமைகள் ஏன் நாடகத்தை மட்டும் தவிர்த்து விடுகிறார்கள் என்று யோசித்தால் நாடக முயற்சிகளுக்கு வாய்ப்பில்லை என்பதே ஒரு முக்கியமான காரணமாகப் படுகிறது.
தொடர்ந்து ஒத்திகை பார்க்கவோ மீண்டும் மீண்டும் நிகழ்த்தவோ இங்கு யாருக்குமே நேரம் ஒதுக்க முடியாது. காலத்திற்கு ஒவ்வாத எதுவும் அழிந்துவிடுமென்ற இயற்கை விதிகள் நாடகத்திற்கும் பொருந்தக் கூடியதுதான்.
அதற்காக நவீன தொழில்நுட்பங்களையும் கையாளுகிறோம் என்று நாடகத்தின் நடுநடுவே புரொஜக்டரில் படம் காட்டும் அரைவேக்காட்டுத்தனங்களை விட்டொழித்து, நாடகத்தின் நோக்கத்தையும் காலத்திற்கேற்ப மீட்டுருவாக்கும் வழிவகைகளையும் கண்டடைய வேண்டும்.
யாப்பின் துணைக்கொண்டு மனதில் இருத்தப்பட்ட செய்யுள்கள் வரிவடிவாகி கவிதையென பரிணமித்து நூல் வடிவம் கண்டுவிட்டன. இப்படிக் காவியங்கள், நாவல்களாய்... சொல் கதைகள், சிறுகதைகளாய்... நாடகங்கள், திரைப்படங்களாய்... பாடல்கள், ஒலிநாடாக்களாகவும், குறுந்தகடுகளாகவும்...ஆனால் அதே வேளையில் புத்தகங்களும், திரைப்படச் சுருள்களும் விற்பனைப் பண்டங்களையொத்த முறையிலேயே உருவாகி, விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
கலைஞனுக்கும், படைப்புக்குமான உறவு மிகத் துரிதமாக துண்டிக்கப்பட்டு அதன் விற்பனை உரிமை வேறொருவரைச் சென்றடைகிறது.
நிகழ்த்துக் கலைகள் மட்டும் தான் ஒருபோதும் உற்பத்திப் பண்டமாக உருமாற்றம் கொள்வதில்லை. நுழைவுச்சீட்டு வாங்கி திரைப்படம் பார்ப்பதற்கும், நாடகம் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களைக் கவனித்தால் தெரியும்.
திரைப்படம் ஒரு மாற்றமில்லாத பிரதி. ஆனால் நாடகமோ ஒவ்வொரு நிகழ்விலும் புதுப்புதுப் பரிணாமங்களை கண்டடைகிறது.படப்பிடிப்புத் தரமும் அதற்கும் முன்பும் பின்புமான தயாரிப்புகளும் ஒரு பணியிடத்தின் தன்மைகளையேக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தமக்கிடப்பட்ட பணியினைச் செய்து முடித்ததும் ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஒன்றிணைக்கப்பட்ட உழைப்பு பண்டமாக மாறுகிறது. ஆனால் நாடகமோ, சமூகமாக சேர்ந்தியங்கும் மனித இயல்புகளால் வடிவமைக்கப்பட்ட கூட்டுழைப்பின் வடிவம்.ஒவ்வொரு மனிதனையும் தனித்தனி அலகுகளாக்கிக் கொண்டிருக்கும் உலக மயத்தின் முன்பாக, அவனைப் பிறரோடு சேர்ந்தியங்கச் செய்யும் யாதொரு கலையையும் சிரமேற்கொண்டு செழிப்புறச் செய்ய வேண்டியது சமூக அக்கறை கொண்ட எழுத்தாளனின் தவிர்க்க இயலாத கடமை.நாடக நடிகர்கள் திரைப்படத்தை நோக்கி நகர்வது போல எழுத்தாளர்களும் திரைப்பட உலகினுள் நுழைவதற்கு மித மிஞ்சிய ஆர்வம் காட்டுகிறார்கள்.
எழுதப்படும் நாடகப் பிரதிகள் நிகழ்த்துவதற்கு மட்டுமின்றி தனித்து வாசிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன.
நாடகப்பிரதி மட்டுமே தனித்ததொரு இலக்கிய வடிவாக கருதப்படுகிறது-. எனவே எழுத்தாளர்கள் முதலில் வாசிப்பதற்கான பிரதிகளையாவது உருவாக்குவதற்கு முன்வர வேண்டும்.
திரைப்படங்களுக்குக் கதை வசனம், பாடல் எழுத வேண்டுமேன்ற உள்ளார்ந்த அரிப்புகளை நீக்கிக் கொள்ளவும் அல்லது அதற்கான பயிற்சிகளைப் பெறவும் நாடகம் எழுதுவது நல்லதொரு உபயமாக இருக்கும்.