Friday 15 October 2010

தெருக்கூத்துக் கற்றுக் கொள்ளப்போனேன்…



‘ஆகாயத்தில் ஆடிய கூத்து…
அது திருக்கூத்து!
அடியார் கணம் ஆடுற கூத்து…
இது தெருக்கூத்து!’
-எங்கள் ஊரில் நடந்த அரிச்சந்திரா மயான காண்டம் நாடகத்தில் பஃபூன் காமிக் பொன்னமராவதி ஆறுமுகம் பாடிய பாடலில்தான் முதன் முதலாக ‘தெருக்கூத்து’ என்ற சொல்லை அறிந்தேன். அப்போது நான் பள்ளிச் சிறுவன். பிறகு பல்கலைக் கழகத்தில் முதுகலை பயின்ற காலத்தில்தான் தெருக்கூத்து என்பது தமிழகத்தின் வடபகுதியில் வழங்கப்படும் முதன்மையான பாரம்பரிய நிகழ்த்து வடிவம் என்பதை அறிந்தேன்.
தமிழகத்தின் தென்பகுதிகளுள் ஒன்றான, வறட்சிக்குப் புகழ்பெற்ற இராமநாதபுரம் மாவட்டம் நான் பிறந்த பகுதி. கண்ணில் ஊறும் தண்ணீர் மண்ணில் ஊறாத மகத்தான பூமி என் பூமி. கருவேலமரங்களின் ஈர்ப்புக்குத் தன் ஈரப்பதத்தைப் பறிகொடுத்துவிட்டு, வறண்ட தன்மையோடேயே சுழலும் பரிதாபமான காற்று என் காற்று. பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கும் என் மண்ணில் தண்ணீர் ஊற்றுத்தான் தகராறு; இசை ஊற்று எக்காலத்திலும் வஞ்சகமில்லாமல் பொங்கிப் பிரவகித்தபடியேதான் இருந்தது என் மண்ணில்.
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடக சங்கீத லயம், காதுகளில் எப்போதுமே ரீங்கரித்தபடியிருக்க, எங்கள் பொழுதுகள் நகர்ந்தன. மணிமுத்து பாகவதர், எம்.ஏ.மஜீத் போன்ற உன்னதமான ராஜபார்ட்டுகள், மூக்கையா தேவர், வரதராஜன் முதலான புகழ் பெற்ற பெட்டிக்காரர்கள் (ஆர்மோனியக் கலைஞர்கள்) ஆகியோர் தங்களின் வளமான இசையினால் எங்கள் மண்ணை வசியப்படுத்தியிருந்தனர். கல்லூரிப்படிப்பு முடியும்வரை எனக்கு சுவாமிகளின் இசைநாடக சங்கீதம் தான் பழக்கம்.
பட்டமேற்படிப்புக்காகச் சென்னை வந்த பிறகு நவீன நாடகர்களின் அறிமுகம் கிடைத்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையில் எனக்கு மூத்த மாணவர்கள் பலர் தெருக்கூத்தைப் பற்றிப் பலவேறு கோணங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தனர். தெருக்கூத்தின் மீது பைத்தியம் கொண்டிருந்த பேராசிரியர் வீ.அரசு ஆசிரியராக இருந்தமையே அதற்குக் காரணம்.
தெருக்கூத்தின் நிகழ்த்துப் பனுவல் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற கோ.பழனி, அப்போது எங்களுக்கு ஆசிரியராக இருந்தார். ஜா.அமைதியரசு, ஸ்டான்லி, செல்வம், திருப்பதி என என் முன்னோடிகள் தெருக்கூத்தில் ஆர்வம் கொண்டிருந்தனர். நாடகத்தில் எனக்குப் பிடிப்பு இருந்த காரணத்தால், அமைதியரசு தான் போகுமிடமெல்லாம் என்னையும் அழைத்துக் கொண்டு போனார்.
அப்போதுதான் அலியான்ஸ் ஃபிரான்ஸேயில் ஒரு தெருக்கூத்துப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. அபிமன்யு கூத்து. நிகழ்த்தியவர்கள் புரிசை கண்ணப்பத் தம்பிரான் குழுவினர். அபிமன்யுவாக ஆடியவர் கண்ணப்ப சம்பந்தன். நான் பார்த்த முதல் தெருக்கூத்து அது. தெருக்கூத்தின் முகவீணை இசை, என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. தமிழ்த்தேசிய இனத்தின் தேசிய அடையாளத்தை அந்த இசையில் காணமுடிந்தது. நீளமான மர பெஞ்சில் முட்டை கிளாஸ் கண்ணாடி போட்டிருந்த பெரியவர் கண்ணப்பத் தம்பிரான் அமர்ந்தபடி தாளம் போட்டுக் கொண்டிருந்தார். பிரமிப்பு விலகாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பிறகு, சென்னையில் எங்கு தெருக்கூத்து நடந்தாலும் சரி, முதல் வரிசையில் இடம்பிடிக்கத் தொடங்கியிருந்தேன். தெருக்கூத்தின் ருசி எனக்குப் பிடித்திருந்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருக்கூத்துப் பார்த்துக்கொண்டு அலைந்துகொண்டிருந்தேன். தெருக்கூத்தின் வசீகரத்தில் கிறங்கிக் கிடந்த அந்தப் பொழுதுகளில் கூட, தெருக்கூத்துக் கற்பது பற்றிக் கற்பனையும் செய்து பார்க்கவில்லை. தெருக்கூத்தைக் கற்பது என்பதெல்லாம் நம்மால் ஆகாத வேலை என்று அப்போது மனதில் பதிந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். எனவே அதைப் பற்றிச் சிந்தித்ததே இல்லை.
எங்களின் மரியாதைக்குரிய பேராசிரியர் மு.ராமசாமி அவர்கள், பெரியவர் கண்ணப்பத் தம்பிரான் அவர்களிடம் கூத்தினைக் கற்று, புரிசை மண்ணில் பகடைத் துயில் கூத்தில் துச்சாதனன் வேடங்கட்டி ஆடியிருக்கிறார். அவருக்கு இருக்கும் திறன் வேறு; ஒப்பிடவே முடியாத தளத்தில் இருக்கிறார் அவர். இன்றுவரையிலும் தமிழ் நவீன அரங்கில் சாதனையாளராகவே அவர் இருக்கிறார். எனவே அவரால் முடிந்தது என்பதற்காக நாமும் ஆசைப்படுவது மிகையாகவே இருக்கும் என்ற எண்ணம் எனக்கு இருந்துவந்தது.
பெரியவர் கண்ணப்பத் தம்பிரான் அவர்கள் இயற்கை எய்திய பிறகு, இனியெல்லாம் தெருக்கூத்துக் கற்பதற்கு யாருக்குமே வாய்ப்புக் கிடைக்காது என்றுதான் நான் கருதியிருந்தேன். பெரியவரின் நினைவு விழாக் கொண்டாட்டங்களையொட்டி, பிறகு புரிசையில் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டபோது, முதலிரு ஆண்டுப் பயிற்சி மாணவர்களின் அரங்கேற்றத்திற்கு வந்து பார்த்துப் பாராட்டிச் சென்றேன். அப்போது இணையத்தில் அவர்களின் ‘இந்திரஜித்’ கூத்து அரங்கேற்றம் பற்றி, ஒரு பதிவையும் எழுதியிருந்தேன்.
மூன்றாமாண்டு பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தபோது, எனது மாணவர்களில் சிலரை அனுப்ப வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். பல்வேறு காரணங்களால் அது இயலாமல் போகவே, நாம் போய்க் கற்றுக் கொண்டால் என்ன? என்று தோன்ற, முடிவெடுத்துத் துணிவுடன் வந்து புரிசை இறங்கினேன்.
என்னோடு பணியாற்றிய, கலை இலக்கியம் ஈடுபாடு, வாசிப்பு என்று கொஞ்சம் ஏமாளியாக இருந்த பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியனை ஏமாற்றி, எனக்குத் துணையாகப் பயிற்சிக்கு அழைத்து வந்துவிட்டேன்.
எங்கள் ஆசிரியர் கண்ணப்ப சம்பந்தன் அவர்கள் அதிகம் பேசுகிறவர் இல்லை. அவரைப் பொறுத்தவரை, ‘செயல், அது ஒன்றே சிறந்த சொல்’.
அடவுகள், குரல் பயிற்சி, இலயப் பயிற்சி, பாடல் பயிற்சி, வசன உச்சரிப்புப் பயிற்சி என, தெருக்கூத்தின் அடிப்படையான பயிற்சிகளை நிறைவு செய்து, அந்த ஆண்டில் என்ன பிரதியை நிகழ்வுக்கு எடுப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
பயிற்சி அடவுகளில் எங்கள் ஆசிரியர் எங்களிடம் கருணை காட்டவில்லை; பிழிந்து எடுத்து விட்டார். கால் வலிக்குப் பல நாட்கள் மருந்து தேட வேண்டியிருந்தது.
தன் தேர்ந்த அனுபவத்தின் வழியாக, தெருக்கூத்துக் கற்பிப்பதற்கு ஒரு முறையியலையும் தெளிவான பாடத்திட்டத்தையும் கொண்டிருந்தார் எங்கள் ஆசிரியர் சம்பந்தன் அவர்கள். எனவே பயிற்சி, அடுத்தடுத்து மிக வேகமாக நகர்ந்தது. ஒன்றின் தொடர்ச்சியாக ஒன்று இருந்தமையால் தெருக்கூத்தைப் பற்றிய புரிதல் கூடியது.
எங்களுடைய சிறு சிறு தவறுகளைப் பொறுமையுடன் மீண்டும் மீண்டும் திருத்தினார். சலிக்காமல் கற்பித்தார். பெருந்தன்மையுடன் ஊக்குவித்தார். நம்பிக்கையளித்தார். சக கூத்தனாய் தோள் கொடுத்தார்.
எங்களின் எல்ல மீறிய அபத்தமான தவறுகளுக்குச் சில வேளைகளில் கண்டிப்புக் காட்டினார். இடுக்கிய கண்களும் விடைத்த மூக்கும் மடித்த நாவுமாய் அவர் பார்த்த கணத்திலேயே சரணாகதி அடைந்துவிடுவோம். ‘அடுத்த தடவை நல்லா பண்றேன்…’ என்று அசடு வழிய, குழைவு காட்டி முன்னால் நிற்போம். அவருக்கே சிரிப்பு வந்துவிடும். சிரிப்பை வாய்க்குள் புதைத்துக் கொண்டு அடுத்த பயிற்சிக்குப் போய்விடுவார். குருவைச் சரண்டைந்தால் குரு கடைத்தேற்றிவிடுவார் என்பது இந்திய மரபின் ஆன்மீக நம்பிக்கை. நாங்கள் அதை முழுமையாய் நம்பினோம்; ஈடுபட்டோம். எங்கள் குருநாதர் சம்பந்தன் அவர்கள் எங்களையும் தன் கருணையினால் கடைத்தேற்றினார்.
பயிற்சியில் எங்களுக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனைகள் வழங்கியவர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணப்ப காசி அண்ணன் அவர்கள். பயிற்சி நடந்த எல்லா நாட்களிலும் தன் உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது, சென்னையிலிருந்து பயணப்பட்டு புரிசை வந்து முழுநாட்களும் எங்களோடேயே இருப்பார். அடவுகளில், பாடலில், நடிப்பில் திருத்தங்கள் சொல்வார். தானும் வந்து ஆடிக்காட்டுவார். நான் நிற்கிற, நடக்கிற ஒயில், சற்று வித்தியாசமாக இருக்கிறதே என்று குழப்பமடைவார். ‘மதுரை இசை நாடக ராஜபார்ட்டுகளின் நடை அண்ணே அது! அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போகாது அது!’ என்று சமாதானம் கூறுவேன்.
பயிற்சி தொடங்கிய இரண்டு வாரங்கள் பிரச்சனையில்லாமல் தான் போனது. மூன்றாவது வாரத்தில் ஆரம்பித்தது பிரச்சினை. புரிசை கிராமத்தைச் சேர்ந்த நான்கு பள்ளிச் சிறுவர்கள் பயிற்சிக்கு வந்தார்கள். எங்களுக்கான சோதனை இப்படிக் குள்ள வடிவத்திலே வந்து சேர்ந்தது.
தாமதமாகப் பயிற்சிக்கு வந்த அந்தச் சிறுவர்கள் முதல் நாளிலேயே அனாயாசமாய் எங்களைத் தாண்டிச் சென்று விட்டனர். அடவுகள், இராகங்கள், பாடல்கள் என எல்லாவற்றையும் எளிதாகக் கற்றுக் கொண்டுவிட்டனர். ஆசிரியர் சொல்லித் தந்ததை எங்களைவிட, உடனடியாகக் கிரகித்துக் கொண்டனர்; பிடித்துக் கொண்டனர்.
‘இந்த சின்னப் பசங்க நல்லா ஆடுறாங்க… பாடவும் செய்றாங்க… தடி மாடு மாதிரி வளர்ந்திருக்கோம். நம்மால முடியலையே…’ என்று நண்பரிடம் புலம்பினேன் நான். அவர், ‘அட அவங்க புரிசை பசங்கப்பா… புரிசையில பிறந்திருந்தா, நாம கூட இப்படித்தான் இருந்திருப்போம்… ராகவத் தம்பிரான், துரைசாமித் தம்பிரான், கண்ணப்பத் தம்பிரான் காலடி பட்ட மண் இல்லையா இந்த மண்… இந்த மண்ணுல இருந்து வருகிற ஈசல் கூட நல்லா ஆடுமேய்யா தெருக்கூத்து…’ என்று குற்றவுணர்விலிருந்து என்னைத் தப்புவித்தார் அவர். இப்படியாகத்தானே எங்கள் தெருக்கூத்துப் பயிற்சி செவ்வனே சென்றது.
மூன்றாமாண்டு பயிற்சிப் பள்ளி மாணவர்களைக் கொண்டு நிகழ்த்த, பயிற்சி எடுக்க என்ன பிரதியை எடுக்கலாம் என்று சம்பந்தன் அண்ணன் அவர்களும் கண்ணப்ப காசி அண்ணன் அவர்களும் ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் ‘அனுமன் தூது’ என்று முடிவாயிற்று. மூன்று அல்லது மூன்றரை மணி நேரமாகப் பிரதியைச் சுருக்கி நிகழ்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
கல்லூரிக் காலத்தில் காரைக்குடி கம்பன் கழகம், சென்னை கம்பன் கழகம் ஆகியவற்றின் போட்டிகளில் பரிசுகள் பல பெற்றிருக்கிறேன். கம்பன் கழகத்தைப் பொறுத்தவரை ஓர் ஆண்டு முதல்பரிசு பெற்றால், பரிசு பெற்றவர் அடுத்த ஆண்டு போட்டியில் கலந்துகொள்ள முடியாது. எனவே இளநிலை படிக்கிறபோது, முதலாமாண்டிலும் மூன்றாமாண்டிலும் என இரண்டு முறை பரிசு பெற்றிருக்கிறேன். பள்ளி நாட்களிலிருந்தே காரைக்குடி கம்பன் கழகத்தின் விழாக்களில் அறிஞர்களின் பேச்சுக் கேட்பது, படிப்பது எனக் கம்பராமாயணத்தில் சற்றுப் பயிற்சி உண்டு. பிறகு ஏற்பட்ட அரசியல் புரிதல், கம்பராமாயணம் பற்றிய சிந்தனையில் மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. தமிழாசிரியனான எனக்குச் சில வாய்ப்புகள் வந்த போதும், கம்பன் கழக மேடைகளில் பேசுவதில்லை என்பதை உறுதிசெய்துகொண்டேன். கம்பனை, காப்பியத்தை, அதன் அரசியல் பின்புலத்தைப் பேச வாய்ப்புக் கிடைத்தால் மட்டுமே பேச வேண்டும் என்பது என் முடிவு. எனவே இராமாயணம் குறித்த என் எதிர்ப்புணர்வுக்குச் சோதனையாக வந்து சேர்ந்தது ஆசிரியர்களின் நிகழ்த்துப் பிரதி முடிவு. ஆனாலும் இது பயிற்சிக் களம். ஆசிரியர் எந்தப் பிரதியை எடுத்தாலும் பங்கேற்க வேண்டியது எனது கடமை என்று திடப்படுத்திக் கொண்டேன்.
அனுமன் தூது கூத்திற்கான பாத்திரங்களைப் பிரித்துக் கொடுத்தபோது, எனக்கு ‘அனுமன்’ பாத்திரத்தை வழங்கினார் ஆசிரியர். தெருக்கூத்தைப் பார்த்த என் மாணவர்கள், ‘வேஷப் பொருத்தம் சூப்பர்…’ என்றார்கள். சிலர், ‘ஐயா.. நீங்க வேஷமே போட்டிருக்க வேண்டாம்; பாத்திரத்துக்கு வேஷம் போடாமலேயே பொருத்தமா இருப்பீங்க… உங்க ஆசிரியரும் பொருத்தமாத்தான் பாத்திரம் கொடுத்திருக்கிறார்…’ என்று கலாய்த்தார்கள்.
பயிற்சி எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. லயப் பயிற்சிக்காகத் தொடக்கத்திலிருந்தே மிருதங்கத்தையும் ஆர்மோனியத்தையும் பயிற்சியில் வைத்திருந்தார் எங்கள் ஆசிரியர். முகவீணை வந்து சேர்ந்த பிறகு எங்கள் குரல் எடுபடவே இல்லை. முகவீணையுடன் இணைந்து பாடுவது எவ்வளவு கடினம் என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன்.
அதிலும் ஒப்பனை செய்து ஒத்திகை பார்த்த நாளில் என் நம்பிக்கையெல்லாம் போய்விட்டது. ஒப்பனைக்காக உடலில் கட்டுக்கள் கட்டிய பிறகு, இதயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு முடிச்சிட்ட மாதிரி, மூச்சு முட்டியது.
காதுக் கட்டை என்ற ஒன்று கட்டினார்கள்… மொத்தமும் குளோஸ். காதுக்கு முன்னதாக நிற்கும்படி கட்டப்படும் ஆபரணம் காதுக்கட்டை. அதைக் கட்டியதும் என் குரல் எனக்கே கேட்கவில்லை. ஒப்பனை செய்துவிட்ட கோபால் அண்ணன் அவர்களைச் சோகத்துடன் பார்த்தேன். என்ன என்றார். சொன்னேன். பரிதாபத்தோடு பார்த்தார். காதுக்கும் காதுக் கட்டைக்குமான இடைவெளியைச் சற்றுத் தளர்த்திச் சிறிது ஆசுவாசப்படுத்தினார்.
அரங்கேற்ற நாளில் சற்றுப் படபடப்பு இருந்தது. புரிசையில் ஆடுகிறோம் என்ற படபடப்பு. அரங்கேற்றத்திற்கே உரிய சிற்சில தவறுகளோடு ஒருவழியாய் ஆடி முடித்தோம். ‘பசங்க நல்லாத்தான் ஆடினாங்க… மோசமில்லை…’ என்ற ஊர்க்காரர்களின் வாழ்த்துதல்களோடு எங்கள் அரங்கேற்றம் நிகழ்ந்தேறியது.
புரிசை அரங்கேற்ற நிகழ்வில் மூன்றரை மணிநேரக் கூத்தில் ஏறத்தாழ மூன்று இடங்களில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. தெருக்கூத்து என்ற வலிய கலை வடிவத்தின் கனதியை நான் உணர்ந்த இடங்கள் அவை.
இரண்டாவது நிகழ்வு, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில். அப்போது சமாளித்துக் கொண்டேன். அரங்கேற்றத்திற்குப் பிறகு சில கூத்து நிகழ்வு நுட்பங்களைக் கற்றுக் கொண்டேன். இந்தக் கட்டுரையை வாசிக்கும் அன்பர்களே… உங்களுக்கு அந்த நுட்பங்களைச் சொல்லித்தர மாட்டேன். கூத்தர்கள் தங்கள் அனுபவத்தால் கற்றுக் கொண்டது அது. நானும் அப்படித்தான் கற்றுக் கொண்டேன். கூத்தைக் கற்றுக் கொள்ளும்போது நீங்களும் அந்த நுட்பங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
என்னோடு அனுமன் தூது தெருக்கூத்தின் ஆடியவர்கள் என்னைவிட சீனியர்கள். பாஸ்கர், பழனி, சம்பத், சரவணன் என அவர்கள் புதிதாய் கற்றுக் கொள்ளப்போன எங்களுக்கு உறுதுணையாய் இருந்தார்கள். கோபால், ராகவன் முதலான கூத்தர்கள் உற்சாகப்படுத்தினார்கள். மணி, ரகுபதி, கேசவன், சீனிவாசன் முதலான இசைக்கலைஞர்கள் தைரியம் அளித்தார்கள்.
லோகநாதன் அண்ணன், டெய்லர் அண்ணன் என்று ஏராளமான உள்ளூர்காரர்கள் அன்போடு உபசரித்தார்கள். ஊரில் போய் இறங்கியதும் ‘எப்போ வந்தே?’ என்று அன்பொழுக விசாரிப்பதற்கு ஆட்கள் இருந்தார்கள். ஊரைவிட்டுப் புறப்படும் தருணத்தில், ‘அடுத்தவாரம் வந்திருங்க அண்ணா…’ என்றார்கள் குழந்தைகள். புரிசை விருந்தினர்களை அப்படி உபசரித்தது.
மூன்றுமாத காலமும் வார இறுதிப் பயணமும் பயிற்சியும் வாழ்வில் மறக்க முடியாத புதிய அனுபவங்களாக மனதில் பதிந்துவிட்டன. நான்கு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, காலை எட்டு மணிக்குப் புரிசையில் இறங்கி, இளவெயிலில் நடந்து, பயிற்சிப்பள்ளி சென்று குளியல் போட்டுவிட்டு, ஆசிரியர் சம்பந்தன் அண்ணன் வீட்டுக்குப் போவோம். வீட்டுக்கு உள்நுழையும்போதே சம்பந்தன் அண்ணனின் துணைவியார் சரஸ்வதி அக்காவின் மலர்ந்த முகமும் சூடான காலை உணவும் எங்களை வரவேற்கும். 12 வார இறுதிகள்… 24 முழு நாட்கள்…
அதியமானுடைய விருந்துபசாரம் பற்றி அவ்வை பின்வருமாறு குறிப்பிடுவார்: ‘ ஒரு நாட் செல்லலம்; இருநாட் செல்லலம்… பல நாள் பயின்று, பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ’ (இந்தத் தமிழ் வாத்தியார்களோட தொல்லை தாங்க முடியலைப்பா… என்று நீங்கள் புலம்புவது காதில் விழுகிறது. இதெல்லாம் பார்த்தா முடியுமா?)
ஆம். அதியமானைப் போலத்தான் சம்பந்தன் அண்ணனும் அவரது துணைவியாரும் குழந்தைகளும். முதல்நாள் போன்றே மூன்று மாதங்களும் உணவளித்து உபசரித்தனர்.
அனுமன், அங்கதன், ஜாம்புவான் ஆகிய மூவரும் அரங்கில் பிரவேசிக்கும் போது, விரித்துப் பிடித்த திரைக்குள்ளிருந்து பாடப்படும் விருத்தம் ஒன்று உண்டு.
‘நெருப்பினை விழியில் தேக்கி…
நீண்ட தென்திசையை நோக்கி
பொருப்பினை அனைய தோளும்
பூரிக்க புவி கலங்க…
விருப்புடன் ராமன் ஆணை
வீறுடன் ஏற்று சீதை
இருப்பிடம் காண ஜாம்புவனோடு
ஏகினான் அனுமனுந்தானே…’
இந்த விருத்தத்தை நான்தான் பாடுவேன். பாடும் ஒவ்வொரு முறையும் தகராறுதான்; இப்போதும் கூட. ஆசிரியர் பார்த்துக் கொண்டிருக்கிறார்…
‘அடுத்தமுறை சரியா பாடிடுறேன் சம்பந்தன் அண்ணே…’

சுபோஜெயம்!

Friday 10 September 2010

தமிழ் அரங்கும் படைப்பாற்றல் பரிமாணங்களும்

ஞா. கோபி, புதுச்சேரி.
தமிழ் அரங்க வரலாற்றில், தமிழ் நவீன நாடகம் தன் முப்பதாவது வயதைத் தாண்டிவிட்டிருக்கிறது. இருப்பினும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி கண்டிருக்கும் தமிழ் நவீன அரங்கம் பற்றி பத்து ஆண்டுகளுக்கு முன் வைத்த கதை ஒன்றிலிருந்து இக்கட்டுரை தொடங்குகிறது.“தினமும் புதுப்புது ஆடை அணிய ஆசை கொண்ட அரசன் அரூப ஆடையென, நிர்வாணியாக வீதியில் உலவியபோது, இந்த ஆடை கண்ணைப் பறிக்கிறது, விநோதமாக உள்ளது, நவீனமாக இருக்கிறது என பலர் போற்றிய நிலையில் ஒரு சிறுவனின் குரல் ‘ஆடையே அணியவில்லை’ என ஒலித்த கதை நவீன நாடகத்தினை பற்றி யோசிக்கும் போது நினைவுக்கு வருகிறது.”(எஸ். ராமகிருஷ்ணன், நாடக வெளி இதழ் 39,பக்-12)என்பதையே சற்றும் தயக்கமின்றி, இன்று தமிழ் அரங்க வல்லுனர்களால் முன் வைக்கப்படும் ‘தமிழ் நவீன அரங்கம்’ என்ற அரசனைப் பார்த்து ‘நீ உன் அளவில் இன்று நம்பிக்கையுடன் அணிந்திருப்பது தற்கால ஆடையே தவிர நவீன ஆடையல்ல!’ என்பதை முற்றிலும் தீர்க்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.ஏனெனில் நவீனம் என்ற சொல்லை தமிழ் அரங்கம் ஆரம்ப காலகட்டத்தில் முன்னெடுத்ததையே முதலில் கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. நவின நாடக முன்னோடியென உலக அளவில் அறியப்பட்ட தமிழ் நாடக ஆசிரியர் இந்திரா பார்த்தசாரதி ‘நவீன நாடகம்’ என்பது பற்றி முன் வைக்கும் கருத்தானது,“நவீன நாடகம் என்ற சொல்லின் மிது எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. சில நாடக வல்லுனர்களும் ஆய்வாளர்களும் சொல்கிறார்கள், காந்தி கிராமத்தில் நடைபெற்ற நாடகப் பயிற்சிப்பட்டறையில் மேடையேற்றப்பட்ட ‘பிணந்தின்னும் சாஸ்திரங்கள்’ தான் முதல் நவின நாடகம் என்று. ஏன் அதற்கு முன் நாடகங்களே இல்லையா? எஸ்.வி. சகஸ்ரநாமம் ‘பாஞ்சாலி சபதம்’, ‘குயில் பாட்டு’ போன்ற நாடகங்களை மேடையேற்றவில்லையா? அந்த காலத்தில் ‘குயில் பாட்டு’ நாடகமாக ஆக்கப்பட்டது என்பது ஒரு அற்புதம்தானே? தி.க.சண்முகம் நாடகம் போட்டது. திராவிட கழகம் சீர்திருத்த நாடகம் போட்டது. இதெல்லாம் அந்தந்த காலத்தில் நவீனம்;. இதுதான் புதிது என்பதை எதிர்ப்பவன் நான். எதற்கும் தொடர்ச்சி இல்லாமல் வளர்ச்சி இல்லை. அதன்படி என் நாடகம் என் காலத்தின் தேவை.”(இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல், 08.10.2009)என்பதாக அமைந்திருப்பதின் வழியே ‘என் காலத்தின் தேவை’ என்ற படைப்புக் கலைஞனின் நம்பிக்கைக் குரலை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அப்படி முன்னெடுக்கும் பட்சத்தில், நவீனம் என்பதே தற்காலத்தின் அடிப்படையில்தான் இருக்கிறது என்பது ஓரளவிற்கேனும் தெளிவு பெறும்.JAVED MALIK எனும் அரங்க விமர்சகர் Makers of Contemporary Indian Theatre எனும் கட்டுரையை not about it but around it என்ற வரியிலிருந்து துவங்குவதைப் போல, இக்கட்டுரையும் தற்கால அரங்கு என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியேத் தீரவேண்டும் என்பதை சொல்லிக் கொண்டிருக்காமல், தற்கால அரங்கு என்ற பார்வையில் பார்த்தோமெனில் தமிழ் அரங்கின் பரிமாணங்களின் அதிர்வுகளையும் தேவைகளையும் பற்றிய புரிதல் கூர்மை பெறும் என்பதையே சொல்ல விழைகிறது. மேலும் இப்படியான பார்வை தமிழ் அரங்கின் அடுத்தக்கட்ட நகர்வுக்கும் வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடன் பின் வருபவை அமைகிறது.தமிழ் அரங்கின் தற்கால நாடகம், நிகழ்வை நோக்கி வருவதென்பது முற்றிலும் பொருளாதார தேவையின் அடிப்படையிலேயே இருக்கிறது. அதாவது தமிழ் அரங்கில் பிரதான பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்ட கூத்துப்பட்டறை, அதற்கு இதுவரை கிடைத்து வந்த ford foundation னின் நிதியுதவி முடக்கப்பட்டுள்ள நிலையின் காரணமாக இன்று திரைப்பட நடிகர்களுக்கான பயிற்சி களமாக மாறி இருப்பதும். அப்படி பயிற்சி பெறுபவர்களின் நிதி உதவியைக் கொண்டு ஆண்டென்றுக்கு ஒரு major production எனும் இடத்திற்கு வந்திருப்பது ஒரு உதாரணம்.அடுத்து தென்னிந்திய நாடக வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய SANGEETH NADAK ACADAMY நாடக ஆசிரியர்கள் ஊக்குவிப்புத் திட்டங்களும் அதன் காரணமாக கிடைத்த குறைந்தபட்ச நிதி உதவிகளும் கூட முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலை. அடுத்ததாக நாடக விழாக்கள். அரசு மற்றம் தனியார் நிறுவனங்களின் நிதி உதவியுடன் நடைபெற்ற தமிழக அளவிலான நாடக விழாக்களின் காரணமாக உருவான பல்வேறு வகைப்பட்ட நாடகங்களின் படைப்பாற்றல் வேகம் குறைந்து, இன்று அத்திப்பூத்தாற்போல் எப்பொழுதாவது நிகழும் நிலையென குறைந்து போயிருக்கிறது. நாடகத்தின் முக்கிய காரணியான நடிகர்கள் தொடர் பயிற்சி செய்வதற்கான இட வசதி கூட பொருளாதார அடிப்படையின் கீழ் இருப்பதால் அக்களனும் தற்போது கேள்விக்குறியுடனே இருக்கிறது. இவற்றையெல்லாம் ஏதேதோ காரணங்களைச் சொல்லி பூசி மொழுகாமல் இதுதான் இன்றைய அரங்கின் நெருக்கடி நிலை என்ற அளவிலிருந்து அடுத்தக் கட்ட நகர்வு நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது.உண்மையில் இந்நெருக்கடி போன்ற நிலை தமிழ் நாடக வரலாற்றில் புதிதல்ல. நவீன நாடகம் தோற்றம் கண்ட காலத்தின்போது சந்தித்த போன்றதே தற்போது உள்ள நிலையும். இருப்பினும் ‘நவீன நாடகம்’ என்ற மாற்று நாடக இயக்கத்தை தமிழகத்தில் வேரூன்ற, அப்போது நாடகக் கலையில் ஏற்பட்ட சிறு புதுமைகளையும், சிந்தனைத் தளங்களையும் கூட இனம் கண்டு அவற்றைப் பல்வேறு விவாதக் களன்களில் வைத்து வளர்த்தெடுத்த முக்கிய காரணியை இங்கு நினைவிற்குக் கொண்டு வரவேண்டியுள்ளது. ஏனெனில் அத்தகைய போக்கில் தற்காலத் தமிழ் அரங்கின் படைப்பாற்றல் பரிமாணங்களைப் பற்றிய ஒளிவு மறைவற்ற உரையாடல்களே தமிழ் அரங்கின் நிலையை உறுதி செய்யும்.தெகார்த் சொன்ன ‘நான் சிந்திக்கிறேன்;எனவே நான் இருக்கிறேன்.’ என்பதைப்போல இன்றையத் தமிழ் நாடகக் கலைஞர்களின் தனித்த அடையாளத்துடன் கூடிய இயக்கமே இன்றைய நாடகங்களின் நிலையைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.அவற்றை உறுதி செய்யும் விதம் நவீன நாடகம் என்ற ஒன்றிலிருந்து கிளைத்த பல மாறுதல்களை முதலில் தொகுக்க வேண்டியுள்ளது. கூத்துப் பட்டறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட நடிகர்கள் ஒரு நேரத்தில் கூத்துப்பட்டறையின் கொள்கை மீதும், அதன் செயல்பாட்டின் மீதும் முரண்பாடு கொண்ட கலைஞர்களாக மாறி ‘மேஜிக் லேண்டன்’, ‘தியேட்டர் லேப்’, ‘மூன்றாம் அரங்கு’ என்பன போன்ற குழுக்களாக மாறி, முன்னனுபவத்தின் வழி பிறந்த தனித்தக் கொள்கைகளுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையில் பயின்ற மாணவர்கள் அங்கிருந்து வெளிவந்து தங்களின் தனித்த படைப்பு வழி தங்களின் இருப்பை வௌ;வேறுத் தளங்களில் நிருபித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இயங்குபவர்களில் வேலு சரவணன்(ஆழி நாடக குழு), முருகபூபதி(மணல் மகுடி நாடக குழு), ட.ரவி(களம் நாடக குழு) முனைவர். காந்திமேரி போன்றவர்களின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கது. மேற்சொன்னதில் வேலு சரவணன், ரவி, காந்திமேரி மூவரும் சிறுவர் அரங்கில் அதிக கவனம் செலுத்துபவர்கள். முருகபூபதி முன்னிருத்தும் நிகழ்த்துனர்கள் செயல்பாட்டு முக்கியத்துவத்தின் காரணமாக தன் குழு நடிகர்களுக்கு ஓவியம், உலக இலக்கியம், உலக திரைப்படங்கள், சடங்குடல் அசைவுகள் போன்ற பல தளங்களை பரிச்சயப்படுத்துவது போன்றவை கவனிக்கத்தக்கது.  புதுச்சேரி நாடகத்துறையில் பயின்றவர்கள் அங்கேயே பயிற்றுனர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் பணிபுரிவது. தேசிய நாடகப் பள்ளியில் பயின்று வந்த சண்முகராஜா, ‘நிகழ் நாடக குழுவின் மூலம் மதுரையில் ஆரோக்கியமான நாடகச்சூழலுக்கான பல இளங்கலைஞர்களை உருவாக்கி வருவது. கல்லூரி அளவிலான கல்விச்சூழலில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் ‘மாற்று நாடக இயக்கம்’ என்ற பெயரடைவுடன் இயங்கிக்கொண்டிருப்பதும், தமிழ் நாடக முன்னோடிகள் பலருடன் பணிபுரிந்த அனுபவத்தில் பார்த்திபராஜா அவ்வியக்கத்தை முன்னெடுத்து கல்வியோடு இணைத்து நாடகங்கள் நிகழ்த்திக் கொண்டிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்கால நாடக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் நாடகக் கலைஞர்களின் குழு மனப்பாண்மையைக் கலையும் விதம், தமிழ் நாடகக் கலைஞர்களை ஒருங்கே சேர்க்கும் முயற்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குமரன் வளவன் போன்றவர்களின் செயல்பாட்டு முக்கியத்துவம் குறிப்பிடப்பட வேண்டியது. வீதி நாடக முயற்சிகள் பல புதிய நாடகக் குழுக்களை தமிழகம் முழுக்க உருவாக்கி இருப்பதும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் மீறி பிரச்சார சாதனமாக தன்னை நிலை நிறுத்தி, காலத்தேவைக்கேற்ற நாடகங்களை தொடர்ந்து பிரசவித்துக் கொண்டிருக்கும் வீதி நாடக குழுக்களின் செயல்பாடுகள் ஆவணப்படுத்த வேண்டியவை. நவீன நாடகத்தின் வளர்ச்சி வேகத்திற்கு முக்கியப் பங்காற்றிய ‘நாடக வெளி’ எனும் அரங்க இதழ் ஆசிரியர் வெளி ரங்கராஜன் நாடக வெளியை தொடர்ந்து நடத்த முடியாமல் போன நிலையிலும் சிறு பத்திரிக்கைகளின் வாயிலாக தொடர்ந்து தற்கால நாடக நிகழ்வுகளைப் பதிவு செய்துக் கொண்டிருப்பது. புதுச்சேரி நாடகப்பள்ளி தனது இருபதாவது ஆண்டைத் தாண்டி இயங்கும் சூழலில் முதன் முறையாக நாடகப்பள்ளியின் சார்பில் உலக அளவிலான நாடக விழாவிற்கும், தேசிய அளவிளான நாடக விழாவிற்கும் பிரளயனின் ‘பாரி படுகளம்’ பங்கேற்று வந்திருப்பதை கவனங்கொள்ள வேண்டும். குறிப்பாகத் தற்கால அரங்கில் உடல் மொழியை முன் வைத்து உருகொண்ட நாடகப்பிரதிகள் குறையத் தொடங்கி, நிகழ்த்துனர்களின் உளவியல் சுதந்திரத்திற்கு முன்னுரிமை தரும் நிகழ்த்துப்பிரதிகளின் வளர்ச்சி நிலை.என்பனவாக சமகால நாடகச் சூழல் பெருமளவில் மாற்றமடைந்திருப்பதை நாம் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில்தான் நவீனம் என்ற பெயருக்குள் மேலும் மேலும் சமகால அரங்க நிகழ்வுகள் போய் ஒடுங்கிப்போவதைத் தடுக்க முடியும்.தென்னிந்திய நாடகங்களில் நாடகப்பிரதி என்பது தொடர் மரபில் இருந்து வரும் சூழல் தமிழ் நாடகத்திற்கு 1980களுக்குப் பிறகு இல்லை என்றே சொல்லலாம். இத்தகைய நிலையை பாரம்பரிய இடைவெளி என்று குறிப்பிட்டாலும் தமிழ் நாடகப் பிரதிகளின் வகைப்பாடுகள் நாடக எழுத்து, நிகழ்வு எனும் தளங்களில் தனித்துவம் வாய்ந்தது என்றே சொல்ல வெண்டும். உதாரணமாக நவீன நாடகத்தைத் தொடர்ந்து பிரேம்-ரமேஷ் போன்றோரால் நாடக எழுத்தில் பின் நவீனத்துலக் கொள்கைகள் பரிசோதிக்கப்பட்டதின் விளைவாக தமிழ் அரங்கில் நவீனம் என்பது அப்போதே கேள்விக்குட்படுத்தப்பட்டதை நாம் மறந்து விடக்கூடாது.அதைத் தொடர்ந்து முருகபூபதியின் பிரதிகள். அதுவரை இருந்த மொழி நடை முற்றிலும் விலக்கப்பட்டு புது மொழியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இப்படியான புதிய பரிசோதனைகளின் விளைவாக அவர்களைத் தொடர்ந்து இயங்கிய புதிய கலைஞர்களிடமிருந்து வேறு பல வடிவங்கள் கிடைத்ததையும், கிடைத்துக் கொண்டிருப்பதையும் அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளி விட முடியாது. குறிப்பாக குழு மனப்பாண்மையின் காரணமாக அந்தந்தக் கால முயற்சிகள் பெரிதாகப் பேசப்படாமல் போயினும், நாடகப்பள்ளி எனும் அளவிலான கலைக்கல்வி கற்கைத் தளங்களில் கூட தற்கால நாடகப்பிரதிகளெல்லாம் சிக்கல் நிறைந்தவை என்று முத்திரை குத்தப்பட்டு பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. நாடகத்திற்கென பயில்வோரிடம் இப்புதிய பிரதிகளின் கட்டமைப்பு மாற்றம், அப்பிரதிகளிலுள்ள நடிகர்களுக்கான புது அனுபவத்தைக் கொடுக்கும் தளங்கள் என்பன போன்ற உரையாடல்களை அங்கிருக்கும் விரிவுரையாளர்களும், பயிற்றுனர்களும் எழுப்பாதது பெறும் கேள்விக்குறியே.நாடகப் பிரதிகளைப் போலவே நடிகர்கள் தங்களின் சுதந்திர வெளிப்பாட்டு உணர்வை தங்களின் தொடர் பயிற்சியின் மூலமும் சமூகப் பார்வையின் மூலமும் நிகழ்விடத்திலேயே பிரதிகளைத் தீர்மானிக்கும் நிலைக்குக் கொண்டு வந்திருப்பதை சமகால நாடக அரங்கின் மிக முக்கிய அதிர்வாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.அதுபோல் ஓவியர்கள் அரங்கப்பொருட்கள் செய்வது, மேடையை வடிவமைப்பது, நாடகத்தை இயக்குவது என்ற நிலைகளைத் தொடர்ந்து ஓவியர்கள் நடிகர்களாகவும் மாறியிருப்பது சமகாலத் தமிழ் அரங்கின் கூடுதல் பலம் எனலாம். ஆறுமுகம் இயக்கத்தில் பேய்த்தேர் மற்றும் சில நாடகங்களும், முருகபூபதியின் அனைத்து நாடகங்களிலும் ஓவியர்கள் நடிகர்களாக வினையாற்றியதன் விளைவு, காட்சிப் படிமங்களின் உடல் கோர்வையால் தமிழ் நாடகம் பல புதிய தளங்களைக் கண்டிருப்பதை படைப்பாற்றல் பரிமாணங்களின் முக்கிய வீச்சு என்று சொன்னால் அது மிகையில்லை. அதற்கு உதாரணமாக ந.முத்துசாமி, முருகபூபதி நாடகங்கள் பற்றிச் சொல்லும் போது “அவருடைய நாடகங்களில் ஓவியர்கள் நடிகர்களாக இருப்பதால் காட்சிகளின் வழி பல அற்புதங்களை நமக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள்.” என்கிறார்.எனவே இப்படி நீண்டு கொண்டேயிருக்கும் பல புதிய செயல்பாடுகளை முறையாக ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் மட்டுமே தமிழ் அரங்கை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும். சில குறைகளையும் முக்கியத்துவப்படுத்தி அவற்றை சரி செய்வது கூட தமிழ் அரங்கின் படைப்பாற்றல் பரிமாணங்களை மேலும் மேலும் விரிவடையச் செய்ய ஏதுவாய் இருக்கும். அதன்படி பார்வையாளர்களை நோக்கிச் செல்ல இன்னும் தமிழ் அரங்கம் தயக்கம் காட்டியபடியே இருப்பது ஒன்றையே முதலில் களையப்படவேண்டியதாகப் படுகிறது.அதாவது நவீன நாடகத்தைப் போல குறிப்பிட்ட பார்வையாளர்களால் மட்டுமே அதன் வடிவத்தையும் வளர்ச்சியையும் தீர்மானிக்க முடியும் என்பதை சமகால அரங்கமும் கைகொள்ளாமல், முற்றிலும் புறந்தள்ள வேண்டும். எங்கு வேண்டுமானாலும் பரிசோதனை முயற்சி வடிவங்களைக் கொண்டு போகலாம் எனும் இயல்பான முடிவுக்கு வர வேண்டும்.ஏனெனில் சமூகத்தின் அங்கமாகிய கலைஞன் தன் அனுபவத்தின் அளவில் புதியவற்றை விரும்பும்போது, இச்சமூகத்தின் ஏனைய முகங்கள் என்ன மறுத்துவிடவா போகிறது?. இந்தக் கேள்விக்கு ஆம் நிச்சயம் மறுக்கும் என்ற பதில் கிடைக்குமானால். படைப்பாக்க அரங்கக் கலைஞன், அதைத் தொடர்ந்த புதுமையைத் தர கடமைப்பட்டவன் என நினைத்து அடுத்தக்கட்ட முயற்சியில் இறங்குவது ஒன்றே தற்கால நாடகத்தை எதிர்கால நாடகமாக்கும் வழி ஆகும். என்பதோடு இக்கட்டுரை தற்காலிகமாக இங்கே நிறுத்தி வைக்கப்படுகிறது.

Thursday 9 September 2010

பிரளயனின் 'கிராமாயணம்' ஒளிக்காட்சி 1



அம்ஷன் குமாருக்கு எதிர் வினை

உயிர்மை செப்டம்பர் 2010 இதழில் அம்ஷன் குமார் எழுதிய 'தமிழர் வாழ தமிழ் போதுமா?' என்ற கட்டுரைக்கான எதிர்வினை.
கி.பார்த்திபராஜா
தமிழ்த்துறை,
தூய நெஞ்சக் கல்லூரி,
திருப்பத்தூர் – 635601
வேலூர் மாவட்டம்.
அலைபேசி: 9094107737
தமிழர் வாழத் தமிழ் போதுமா? என்ற அம்ஷன் குமாரின் கட்டுரை வரலாற்றுப் புரிதலின்றி, தெளிவின்றி பொத்தாம் பொதுவாகச் சில செய்திகளை அள்ளித் தெளித்திருக்கிறது. மொழி வெறிக்கும் மொழிப் பற்றுக்கும் அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமலேயே அம்ஷன் குமார் தனது வாதங்களை அடுக்கிச் செல்கிறார்.
தனித்தமிழ் இயக்கத்தினரின் வடமொழி வெறுப்பையும் ஆங்கில விருப்பையும் மிகச்சரியாகவே சுட்டிக்காட்டும் அம்ஷன் குமார், ‘வடமொழிச் சொற்களைத் தமிழில் கலக்கக்கூடாது என்பது பலரின் வேண்டுகோள்’ என்கிறார். தமிழகத்தில் மிக முக்கியமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு மொழி இயக்கத்தின் செயல்பாட்டை, ‘வேண்டுகோள்’ என்று மொன்னைப்படுத்திப் பார்க்கிறார் அம்ஷன். அவர் குறிப்பிடுவது போல, வடமொழிக் கலப்பினை மறுத்தெழுந்த செயல்பாடு, வேண்டுகோள் அல்ல; அது ஒரு செயலூக்கம் பெற்ற எழுச்சி மிக்க இயக்கம் ஆகும்.
வடமொழியின் செல்லக் குழந்தையாகிய இந்தித் திணிப்பைத் தமிழகம் வீரஞ் செறிந்த போராட்டத்தின் மூலம் முறியடித்த நிகழ்வைப் பேச அம்ஷன் ஏனோ தவிர்த்துவிட்டார். எழுச்சி மிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பிந்தைய நாட்களின் விளைவுகளை, போக்குகளை, காட்டிக் கொடுத்தல்களையும் திராவிடக் கட்சிகளின் இரட்டை வேடங்களையும் இணைத்துப் பேசுவதில் ஒன்றும் தவறில்லை.
வடமொழியினால் தமிழுக்கு அபாயம் எதுவும் இல்லை என்று நல்லிணக்கச் சான்றிதழ் வழங்குகிறார் அம்ஷன். வடமொழியினால் மட்டுமல்ல, எந்த ஒரு மொழியினாலும் தமிழுக்கு அபாயம் இல்லை. இங்கு மொழி ஒரு பிரச்சினையே அல்ல. பிரச்சினை மொழியைக் கையாளுவோரின் ஆதிக்க மனோபாவம் தான். வடமொழியின் தமிழுடனான உறவு என்பது 2500 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆனால் அது தமிழில் புகுந்து தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்துப் பெற்ற வெற்றியின் அடையாளமே, கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளின் உருவாக்கம். எனவே தமிழும் வடமொழியும் எய்தியிருக்கும் பகைப்புலன் ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது. இதை மறைத்துவிட்டு ‘சிவாயநம என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை’ என்று வேதாந்தம் பேசுவது சரியன்று.
தமிழர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கட்டுரை நெடுக நியாயப்படுத்துகிறார் அம்ஷன். ஒரு மொழியைக் கற்றுப் புலமையடைவது வேறு; அம்மொழியைத் தனது வீட்டுமொழியாக, புழங்குமொழியாக, சிந்தனை மொழியாக ஆக்கிக் கொள்வது என்பது வேறு. தமிழர்கள் உலகின் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கட்டும்; பயன்படுத்தட்டும்; புலமை காட்டட்டும். ஆனால் தமிழ்நாட்டில் பேசுமொழியாகவும் கல்விமொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் தமிழே இருக்க வேண்டும். இதிலிருந்து தமிழ் விடுவிக்கப்பட்டால் தமிழ், எப்படி வாழும்?
ஒரு மொழி வாழும்மொழி, இறந்தமொழி என்று எதை அடிப்படையாக வைத்துப் பகுக்கப்படுகிறது? எந்தமொழி மக்களின் பேச்சு வழக்கில் இருக்கிறதோ, அம்மொழியே வாழும்மொழி; பேச்சு வழக்கற்ற மொழி இறந்தமொழி. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், ‘ஆங்கிலத்தில் உரையாடினால் தமிழ் மெல்லச் சாகும் என்று சொல்லுமளவுக்குத் தமிழ் பலவீனமான மொழி அல்ல’ என்று அப்பாவித்தனமாகக் கருத்துரைக்கிறார் அம்ஷன்.
‘நீ அம்மா அப்பா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று அன்பாகக் கூறினால் அக்குழந்தை ஒரே நொடியில் தன்னை மாற்றிக் கொள்ளும்’ என்கிறார் அம்ஷன். மம்மி டாடி என்று அழைப்பது ஏதோ குழந்தையின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்று குருட்டுத் தனமாக எண்ணுகிறார் அம்ஷன். இப்படியே போனால் குழந்தைகளிடம் போய் தமிழில் பேசச் சொல்லிப் பரப்புரை செய்வார் போலிருக்கிறது. குழந்தை ஆங்கிலத்தில் தன் தந்தை தாயை விளிப்பது என்பது, குழந்தையின் விருப்பம் சார்ந்த விடயம் அல்ல. அது சமூகத்தின் போக்கு. சட்டம், ஆட்சி, பொதுப்புத்தி என்ற காரணிகளைத் தப்ப விட்டுவிட்டு, குழந்தைகளின் மேல் பழிபோடுவது அபத்தத்திலும் அபத்தம்.
காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் ஆகியோரது ஆங்கில ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துக்காட்டி, பாரதிக்கு ஏனோ அந்தச் ‘சிறப்பு மிக்க கண்ணோட்டம்’ வாய்க்கவில்லை என்று வருத்தப்படுகிறார் அம்ஷன். தமிழனான பாரதியிடம் தமிழில் பேசாத தமிழர்களைச் சினந்தான் பாரதி. இதிலென்ன தவறு? அதுதானே சரி! எதன்பொருட்டு மகாகவி பாரதியைப் போற்ற வேண்டுமோ, அதன்பொருட்டுச் சினக்கிறார் அம்ஷன். நல்ல வேடிக்கை!
‘ஆங்கிலத்திற்கு எதிராகப் பொதுவெளிகளில் பேசுகிற அனைவரும் ஆங்கிலம் மீது விருப்புக் கொண்டவர்கள்’ என்று குறிப்பிட்டு அந்தப் பட்டியலில் பாரதியையும் இணைக்கிறார் அம்ஷன். பாவம் பாரதி! ‘எழுதுகோலும் தெய்வம்; எழுத்தும் தெய்வம்’ என்று சொன்ன பாரதிக்கு, எண்ணியதையே எழுதிய, எழுதியதையே வாழ்ந்த பாரதிக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.
கண்டுபிடிப்புகள், அதற்கான கலைச் சொற்கள் ஆகியவற்றின் வறுமை தமிழில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அம்ஷன். சிந்தனை வளர்ச்சிக்கும் கண்டுபிடிப்புகளுக்குமான உறவை ஏற்கனவே நிரூபித்திருக்கின்றனர் அறிஞர்கள். தாய்மொழி வழிக் கல்வி, சிந்தனை என்பதற்கும் அறிவியல் கண்டுபிடிப்பு வீச்சுக்கும் தொடர்பு உண்டு என்பதை மிக வசதியாக மறந்துவிட்டு, தலையைச் சுற்றிக் காது தொடச் சொல்கிறார் அம்ஷன். தமிழ்வழிக் கல்வி இல்லாமலேயே சுயமான கண்டுபிடிப்புகளும் கருத்தாக்கங்களும் தமிழர்களால் செய்யப்பட வேண்டும் என்று அம்ஷன் விருப்பம் தெரிவிக்கிறார். மந்திரத்தில் மாங்காய் காய்க்க வேண்டும் என்று நினைக்கிறார் அம்ஷன்.
வெறுங்கையில் திருநீற்றையும் லிங்கத்தையும் எடுக்கும் சாமியார்களைப் பார்த்து வியந்து பரவசப்படும் அதை உண்மை என்று நம்பும் சராசரிகளுக்கும் அம்ஷன் குமார்களுக்கும் வேறுபாடிருப்பதாகத் தோன்றவில்லை.

Wednesday 7 July 2010

தி வே ஹோம் - அஜயன் பாலா


உலக சினிமா (இந்த இதழ் அவள் விகடனில் பிரசுரமாகியுள்ள இக்கட்டுரை முதியோர் சிறப்பிதழுக்காக பிரத்யோகமாக எழுதப்பட்டது.)தனிமை.வாழ்க்கை மனிதனுக்கு இரண்டு பரிசுகளை கொடையாக த்ருகிறதுஅதனை போல இன்பம் நிறைந்த பாடும் இல்லை துன்பம் நிறைந்த பாடும் இல்லை.இளமையில் காதல்வசப்படும்போது உலகமே நம்மை உற்று கவனித்தலும் நமக்குள் நாம் தனிமையில்தான் வாழ்கிறோம். எவரும் நுழையமுடியாத் பொன் வண்ணம் பூசப்பட்ட வேலிகளுடானன மலர்கள் நிறைந்ததொரு கனவுத்தோட்டம் அது. யாரும் இல்லாத அந்த தோட்டத்தில் பட்டாம்பூச்சிகள் நம்மை சுற்றி பறக்கும்.ஆனால் அதே சமயம் முதுமையில் அதே தனிமையில் நம்முள் இருப்பது என்ன ?வெறும் பழைய ஞாபகங்களாக எஞ்சிநிற்கும் சாயம் போன நினைவுகளின் மிச்சம் தான். அதனையும் எத்தனை நாள் தான் புரட்டிக்கொண்டிருப்பதுஒரு கட்டத்தில் அதுவும் இல்லாமலாகி உடல் மண்ணை விரும்ப துவங்கி தானாக குனிய துவங்குகிறபோதுதான் வாழ்க்கை என்பது வெறும் மகிழ்ச்சி மட்டுமல்ல அது உண்மையில் பெரும் சுமை என்பது புரியவரும்...உண்மையில் சூழலில் இருப்பவர்களின் அன்பும் ஆதரவும் அப்போதுதான் முன்னெப்போதையும் விட அதிகமாக தேவைப்படும் .ஆனால் அப்படிப்பட்ட தருணங்களில்தான் ஒரு குழந்தையோ இளைஞனோஅல்லது நடுத்தரவயது கோபக்காரனோ சிடுசிடுக்கும் மருமகளோ வயோதிக மனதை அதிகமாக புறக்கணித்து மிகுந்த மனவேத்னைக்கு ஆளாகுகின்றனர். விரும்பிய உணவு விரும்பிய வாழிடம்,விரும்பிய தொலைக்கட்சி சேனல் எதுவும் அப்போது அவர்கள் தீர்மானத்திலில்லை. இதெல்லாம் நகரத்து முதியவர்களுக்குத்தான் ஆனால் ஒரு கிராமத்தில் வாழும் முதியவர்களுக்கு இந்த ப்ரச்னை கொஞ்சம் குறைவுதான் . சரியான சமயத்தில் அனுபவம் தரும் படிப்பினையை ஊன்று கோலாக பயன்படுத்துகின்ற்னர். எனக்கு தெரிந்த எத்த்னையோ கிராமத்து முதியவர்கள் தள்ளாத வயதிலும் இயற்கை சூழலின் காரணமாகவோ என்னவோ சிறிதளவேணும் நகரத்து முதியவர்களின் ப்ரச்னைகளிலிருந்து தப்பித்து தன்னந்தனியாக மனௌறுதியுடன் வாழ்கின்றனர்அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர்தான் ..தி வே ஹோம் படத்தின் நாயகி பெரும்பாலான படங்களில் நாயகிக்கு வயது 15லிருந்து 25க்குள் இருக்கும் ஆனால் இப்படத்தின் நாயகியான் கிம்- யூல்-பூனுக்கு வயது 77நாயகன் சாங் வூவுக்கு வயசு என்ன தெரியுமா 8சுருக்கமாக சொல்வதனால் வாழ்க்கையின் துவக்கத்தில் இருக்கும் இளம் தளிரான பேரனுக்கும் வாழ்க்கையின் இறுதிவாசலில் எந்நேரமும் விழ காத்திருக்கும் ஒரு பட்டுபோன மரம் போன்ற அவனது பாட்டிக்குமான உறவுதான் கதை பேரனோ கோக் ,பிஸா, கெண்டகி சிக்கன், என வாழும் நகரத்து வார்ப்பு.ஆனால் பாட்டியோ தலைகீழ் கூன்விழுந்த கிழவி. எங்கோ ஒரு மலைக்கிராமத்தில் ஒரு சிறு மண் குடிசையில் தன்னந்தனியாக வசித்து வருபவள்.வாய்பேச முடியாத ஊமை. காதுமட்டும் லெசாக கேட்கும் அவ்வளவுதான் ப்டம் ஒரு நகரபேருந்தில் துவங்குக்கிறது நம் நாயகனான எட்டுவயது சிறுவன் சாங் வூ தன் அம்மாவுடன் பாட்டியின் கீராமம் நோக்கி புறப்பட்டு வருகிறான். சியோலில் தொழில் நடத்தி நஷ்டமாகிப்போன அவனது அம்மா உடனடியாக ஒரு வேலை தேட வேண்டிய நெருக்கடிகாரணமாக மகனை தன் அம்மாவுடன் கிராமத்தில் தங்க வைக்க அழைத்து வருகிறாள் நகரத்து பேருந்தில் குறும்பும் துடுக்குத்தனமும் உற்சாகமுமாக இருக்கும் சாங் வூவின் முகம் அடுத்து ஒரு மலைகிராமத்து பேருந்தில் பயணிக்கும் போது அப்படியே மாறுகிறது. அவனுக்கு அந்த அழுக்கான பேருந்தும் இரைச்சலாக பேசும் கிராமத்து மனிதர்களும் பிடிக்கவில்லை. எரிச்சலடைகிறான் கையிலிருக்கும் வீடியோகேமின் முலமாக அதிகமாக சப்தம் எழுப்பி அவர்களது இரைச்சலுக்கு எதிர்வினை காட்டுகிறான்அது ஒரு கொட்டாம்ப்பட்டி குக்கிராம் எந்தவசதியுமில்லை. துவக்கத்தில் அந்த கிராம வாழ்க்கைக்கு ஒத்து போக முடியாமல் சுணங்கும் சாங் வூ வேறு வழியே இல்லாத காரணத்தால் சகித்துக்கொள்கிறான்மேலும் அந்த நரைத்த தலையுடன் கூடிய கூன் விழுந்த கிழவியுடன் அவனுக்கு பேசவேவிரும்பவில்லை.ஆனால் பாட்டிக்கோ பேரன் மீது அளவற்ற ப்ரியம். அவ்ள் அவனை குழிப்படுத்த என்னென்னவோ செய்தும் சாங்வூவுக்கு அந்த நாட்டுபுற கிழவியிடம் பேச பழக அவனுக்கு விருப்பமில்லை... நாள் முழ்க்க வீடியோகேம்ஸ் விளையாடுவதும் கோக் குடிப்பதுமாக பொழுதைகழிக்கிறான். இப்படியாக இருவரும் சிறுகுடிசைக்குள் வேருவேறு துருவங்களாக வாழும் போது ஒருநாள் இருவரையும் இணைக்க வந்தது ஒரு கரப்பான் பூச்சி . சாங்வூ கரப்பான் பூச்சியை பார்ததும் அலறுகிறான். எழுந்து பாட்டியிடம் அதனை அடித்து கொல்லுமாறு சுவற்றில் ஒடுங்கியபடி கத்துகிறான்.பார்வை சரியில்லாத நிலையிலும் பாட்டி கரப்பானை பிடிக்கிறாள் .அதனை கையோடு கொல்லும்படி நகரத்து சிறுவன் சாங்வூ கத்த கிராமத்து பாட்டியோ அத்னை கொல்லாமல் ஜன்னலை திறந்து வெளியே வீசுகிறாள்...ஒருநாள் வீடியோகேம்சில் பேட்டரி தீர்ந்து போக தன் செவிட்டுபாட்டியிடம் தனக்கு பேட்டரி வாங்கிதா என கத்துகிறான் .ஆனால் பாட்டியோ தன்னிடம் போதிய பணம் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக சைகை செய்கிறாள். இத்னால் வெறுத்து போகும் சாங் வூ பாட்டி கழுவிகொண்டுவந்து வைக்கும் பீங்கான் பாத்திரத்தை காலால் எட்டி உதைத்து உடைக்கிறான் .அவள்து செருப்புகளை எடுத்து ஒளித்துவைக்கிறான்.பாட்டியை திட்டி சுவற்றில் கார்டூன்கள் வரைகிறான் . தூங்கிகொண்டிருக்கும் போது அவள் அணிந்து கொண்டிருக்கும் கொண்டை ஊசியை திருடி எடுத்துக்கொண்டு அத்னை விற்று பேட்டரி வாங்க கடையை தேடி விசாரித்து செல்கிறன்.ஆனால் கடைக்கார பாட்டிக்கு தெரிந்தவர் ஆதலால அவன் தலையில் ஒரு குட்டுவைத்து திருப்பி அனுப்புகிறார்.ஒருநாள் புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கும் சாங்வூவுக்கு கெண்டகி சிக்கன் சாப்பிடும் ஆசை வருகிறது. பாட்டியிடம் தனக்கு கெண்டகி சிக்கன் வாங்கித்தா என கேட்கிறான். ஆனால் அவ்ளுக்கு அது என்னன்வென்று தெரியவில்லைஅவன் சொன்னதை புரிந்துகொண்டு பாட்டி த்லையில் கைவைத்து அசைத்து சேவலை போல பாவனை செய்து அதுவா எனக்கேட்க சாங் வூ உற்சாக மிகுதியால் ஆமாம் என கூவுகிறான் .பாட்டியும் உடனே பை எடுத்துக்கொண்டு கூன் விழுந்த உடலுடன் மலைபாதயில் தடுமாறி வெளியே செல்கிறாள் சிறுவன் சாங்வூவுக்கு பரம குஷி.. எப்படியும் பாட்டி கெண்டகி சிக்கன் வாங்கிவருவாளென ஆனால் பாட்டியோ ஒரு உயிருள்ள கோழியை பேரனுக்காக மழையில் நனைந்தப்டி ஆசையுடன் வாங்கி அவன் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் சமைத்து அவனை எழுப்புகிறாள் கெண்டகி சிக்கனை எதிர்பார்த்திருந்த சாங்வூவுக்கு இது பெரும் அதிர்ச்சி பாட்டிய்யை திட்டி சாப்பிடமறுக்கிறான். பாடி நெஞ்சில்கைவைத்துமுன்றுமுறை சுற்ருகிறாள் .அப்படிசெய்தால் என்னை மன்னித்துவிடு என்பது அர்த்தம் .ஆனாலும் மனம் ஆறாத சாங்வூ பிறகு அப்படியேதூங்கிவிடுகிறான். பின் இரவு எழுந்து வேறுவழியில்லமல் ரகசியமாய் பாட்டிசமைத்த சிக்கனை சாப்பிடுகிறான். ஆனாலும் அவனுக்கு பாட்டி மீதான கோபம் தீரவில்லை..இதனிடையே சாங்வூ அவ்ன் வயதில் கிரமத்து சிறுமியை சந்திகிறான் .முதல் சந்திப்பே முற்றும் கோணல் அவள் விளையாடிக்கொண்டிருந்த வீட்டை இவன் கால் வைத்து தெரியாமல் கலைத்துவிட்டதன் காரணமாக அவள் அவனோடு கோபிக்கிறாள். அவ்ளோடு பழகும் இன்னொரு கிராமத்து சிறுவனை வெறுக்கிறான்.அந்த சிறுவன் ஒருநாள் பள்ளத்தில் நடந்துவரும்போது மாடுஅவனை துரத்துவதாக பொய்ய்யாக கூச்சலிட அவன் ஓடி போய்தடுமாறி கீழே விழுந்து இவன் கைக்கொட்டி சிரிக்கிறான்.அந்த கிராமத்துசிறுவன் ஆற்றாமையுடன் எழுந்து நடந்துசெல்கிறான். மறு நாள் பாட்டி தன் தோட்டத்தில் விளைந்த தர்பூசணி பழங்களை எடுத்துக்கொண்டு சாங்வூடன் சந்தைக்கு பேருந்தில் செல்கிறாள்.பழம் விற்ற பணத்தில் சாங்வூவுக்கு நூடுல்ஸும் ஒரு ஜோடி ஷூக்களும் வாங்கிதருகிறாள் பேருந்தில் ஏறும் போது அங்கு அந்த சிறுமியையும் அவன் தோழன் ஒருவனையும் சந்திக்கிறான். அவர்கள் முன் பாட்டி ஜன்னல்வழியாக கொடுக்கும் அழுக்கு மூட்டையை வாங்க மறுத்து விடுகிறான் .பேருந்தும் புறப்பட்டுவிடுகிறது வீட்டிற்குவந்தவன் வெகுநேரமாகியும் பாட்டிவராததால் பேருந்து நிலையத்தில் அமர்ந்தபடி அவளுக்காக காத்திருக்கிறன் .கடைசி பேருந்தும் வந்து போகிறது பாட்டி வரவில்லை மனம் கலங்குக்கிறான் ,பேரனுக்கு எல்லா காசையும் செலவு செய்துவிட்டமையால் பேருந்துக்கு காசில்லாமல் பாட்டி நடந்தேவருகிறாள் .தொலைவில்பாட்டியை சந்தித்ததும் ஓடிசென்று முன்பு வாங்க மறுத்த மூட்டையை வாங்கிக்கொள்கிறான்.அவ்ன் முன்னே நடக்க பாட்டிஒமெதுவாக பின்னேவருகிறாள்ஒருநாள் அந்த தோழியாகவே வந்து அவனை தன் வீட்டிற்கு விளையாட அழைக்க . சாங்வூவுக்கு தூக்கமே வரவில்லை. மறுநாளேவிளையாட்டு பொருட்களை எடுத்துவைத்தவன் கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கிறான். முடிவெட்டினால் நன்றாயிருக்கும் என பாட்டியிடம் சொல்ல பின் அவளே அவனுக்கு முடிவெட்டுகிறாள்.ஆனால் அவள் முடியை ஒட்ட கத்தரித்துவிட கண்ணாடியை பார்த்த சாங்வூவுக்கு அதிர்ச்சி. பாட்டியை கடுமையாக திட்டிவிடுகிறான் .பாட்டி வழ்க்கம் போல நெஞ்சில்கைவைத்து சுற்ற கோபித்துக்கொண்டு பேசாமல் படுத்துவிடுகிறான்.பாட்டி அவனிடம் ஒரு பொதியை வண்ணகாகிதத்தில் சுற்றி பாக்கெட்டில்வைக்கிறாள் மறுநாள் தலைமேல் ஒருதுண்டை கட்டி சமாளித்த்படி தோழியின் வீட்டுக்கு விளையாடசெல்கிறான். மகிழ்ச்சியுடன் அவன் வீடு திரும்பும் வழ்யில் எதிர்பாராவிதமாக மாடு ஒன்று சாங்வூவை துரத்த பயந்து ஓடிகீழேவிழுகிறன் முன்பு அவனால் கேலிசெய்யப்பட்ட கிராமத்து சிறுவனே இப்போது மாட்டைவிரட்டி சாங்வூவை காப்பாற்றுகிறான். இந்நிகழ்ச்சி சாங்வூவுக்கு தன் குற்ற வுணர்ச்சியை அதிகப்படுத்துகிறது. கீழே விழுந்த சாங்வூ எழுந்திருக்கும் போதுதான் பாக்கெட்டிலிருந்து பாட்டி கொடுத்த பொதி ஒன்று விழுகிறது.அதில் அவனது வீடியோகெம்ஸ் கருவியும் பட்டரிக்காக சில ரூபாய் நோட்டுக்களும் அவ்ள் முடிந்து வைத்திருப்பதை பார்க்கிறான். இத்தனை நல்ல பாட்டியை நம் வேத்னைபடுத்திவிட்டோமே என்ற குற்ற வுணர்ச்சி அவனுள் பொங்கி பெருகுகிறது. இதேநேரத்தில் பட்டி அவனை தேடிவர கண்ணீரவனை மீறி பொங்கிவருகிறது.ஆனால் பாட்டியோஅவன் அடிபட்ட காரணமாக அழுகிறான் என நினைத்து ஆறுதல்படுத்துகிறாள் இப்போது பாட்டி அவனிடம் ஒருகடிதத்தை காண்பிக்கிறாள் அவனை அழைத்துசெல்ல அவன் அம்மா வரப்போவதாக அனுப்பிய கடிதம் .மறுநாள் காலை அவன்புறப்படவேண்டும் .அன்று இரவு பாட்டியிடம் சாங்வூ இனி உடல் நிலைசரியில்லாவிட்டால் த்னக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கும் படிகூறி அதற்காக ஐயாம் சிக், ஐ மிஸ் யூ எனும் இரண்டுவார்த்தைகளை எழுதக்கற்றுதருகிறான் .உனக்குத்தான் போன் பேசமுடியாதே அத்னால்தான் எழுதகற்கும்படி சொல்கிறேன் எனும் சாங்வூ அவள் சிரமப்படுவதை பார்த்து பாட்டி நீஎதையும் எழுதாவிட்டால் கூட பரவாயில்லை வெறும் ஒரு வெள்ளை தாளை எனக்கு அனுப்பிவைத்தால்கூட போதும் உனக்கு உடம்பு சரியில்லை என்பதை தெரிந்து ஓடோடி வந்துவிடுவேன் எனக்கூறிவிட்டு அந்த எழ்ழுவயது சிறுவன் 78வயதுபாட்டியியை பிரியப்போகும் வேத்னை தாளாமல் அழத்துவங்க உடன் பாட்டியின் உடலும் சத்தமில்லாமல் குலுங்குகிறது. அன்று இரவே பாட்டியை திட்டி சுவற்றில் வரைந்த கார்டூன்களை அவனே அழிக்கிறான். .மறுநாள் அவன் அம்மாவருகிறாள் பேருந்து நிறுதத்தில் சாங்வூ அமைதியாக பையுடன் அவன் அம்மாவுடன் இருக்கிறான். உடன் கூன்வளைந்த பாட்டியும் பேருந்து வருகிறது .அம்மா ஏறுகிறாள் தொடர்ந்து ஏறும்சாங்வூ பின் இறங்வந்து பாட்டிக்கு தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொம்மைதாங்கிய அட்டையை பரிசாகதருகிறான் பின் அவன் ஏறிக்கொள்ள பேருந்து புறப்படுகிறது. பெருந்தின் பின்பக்க கண்னாடிவழியாக பாட்டியை பார்க்கும் சாங்வூ அழுதுகொண்டே தன் நெஞ்சில்கைவைத்து சுற்றுகிறான் பாட்டி திரும்பவும் அந்த அடர்ந்த காட்டுபகுதிக்குள் தனியாக கைத்தடியுடன் நடந்து செல்கிறாள்.இத்திரைப்படம் உலகின் அனைத்து பாட்டிமார்களுக்கும் சமர்ப்பணம் எனும் டைட்டில்கார்டுடன் முடிகிறது 2002ல் வெளியான இந்த தென்கொரிய நாட்டு படத்தை இயக்கியவர் லீ ஜியாங் ஹ்யாங் . இவர் ஒரு பெண் இயக்குனர் என்பதுதான் இங்கு குறிப்பிடத்த்க்கது.

ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்? நாடக விமர்சானம்

நாடக இயக்கம் 2010 பிப்ரவரியில் அரங்கேற்றிய நாடகம் இது. இந்நாடகம் குறித்த விரிவான விமர்சனத்தை ஜீலை மாத உயிர் எழுத்து இதழில் எழுதியுள்ளார் திருமிகு மீனா. அவசியம் படியுங்கள். நல்லா பொழுது போகும். ஐயோ பாவம்! நாடகப் பிரதியையே ஒழுங்கா வாசித்துப் புரிஞ்சுக்க முடியலயாம். கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போறானாம். வேறென்ன சொல்ல? அவசியம் படியுங்க! இந்த அரைவேக்காட்டு அறிவுஜீவியின் விமர்சனத்தை.

Saturday 12 June 2010

மாற்று நாடக இயக்கத்தின் கோடை முகாம் 2010





























மாற்று நாடக இயக்கத்தின் எட்டாவது ஆண்டு கோடை ஆளுமை வளர்ச்சி - நாடகப் பயிற்சி முகாம் மே 30 (ஞாயிறு) தொடங்கி ஜூன் 06 (ஞாயிறு) ஆகிய எட்டு நாட்கள் திருப்பத்தூர் தூய நெ ஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. 98 மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர். இவர்களில் 40 பேர் பெண்கள் ஆவர். மாணவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் குழு, பம்மல் சம்பந்தனார் குழு, கண்ணப்பத்தம்பிரான் குழு என அக்குழுக்கள் பெயரிடப் பெற்றிருந்தன. காலை 6.15 மணிக்குத் தொடங்கி இரவு 9.30 வரை பயிற்சிகள் நடந்தன. ஆழி வெங்கடேசன், குமரகுருதாசன், சாமுவேல், கார்த்திகேயன், எழில் குழுவினர், பிரசன்னா ராமசாமி, கருணாபிரசாத், பாலசரவணன், வேலாயுதம், பார்த்திபராஜா ஆகியோர் பயிற்சியளித்தனர்.பாலாவின் இயக்கத்தில், எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'லவ் பண்ணுங்கோ சார்' சிறுகதையைக் கூத்துப்பட்டறை பாஸ்கர் நிகழ்த்தினார். தலித் பெண்ணிய எழுத்தாளர் பாமாவின் 'சாமியாட்டம்' சிறுகதையை விநோதினி நிகழ்த்தினார். பிரசன்னா ராமசாமி இயக்கத்தில் பெண்ணொளி என்ற நாடகத்தைத் திரைக்கலைஞர் ரோகிணி நிகழ்த்தினார். புரியை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் 'அனுமன் தூது' தெருக்கூத்தை நிகழ்த்தினர்.மாணவர்கள் தாங்கள் பயிற்சி முகாமில் கற்றுக் கொண்டவற்றை மேடையேற்ற இனிதே முகாம் நிறைவுற்றது.

Tuesday 23 March 2010

புரிசை கண்ணப்பத்தம்பிரான் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளியின் மாணவர்களின் அரங்கேற்றம்

புரிசை கண்ணப்பத்தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்து மன்றத்தின் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி மூன்றாவது ஆண்டாகத் தெருக்கூத்துப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாண்டு பயிற்சி பெற்ற மாணவர்களைக் கொண்டு, தெருக்கூத்து வாத்தியார் புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களின் நெறியாளுகையில் 'அனுமன் தூது' என்ற கூத்து நிகழ்த்தப்பட இருக்கிறது. ஏப்ரல் 17 ஆம் தேதி சனிக்கிழமை மாலை திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் புரிசை கிராமத்தில் இந்நிகழ்வு அரங்கேற இருப்பதாக மன்றத்தின் செயலாளர் கண்ணப்ப காசி அவர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.கூத்து, நாடக ஆர்வலர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.நீங்களும் வாங்க!

Thursday 18 March 2010

சினம் தொண்டு நிறுவனத்தின் மகளிர் தின விழாவில் 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' நாடகம்.

20.03.2010 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்.விழாவில் பங்கேற்போர்: எழுத்தாளர் பிரபஞ்சன், திரைப்படக் கலைஞர் ரோகிணி, எழுத்தாளர் கே.வி.ஷைலஜா, செல்வி ப்ளோரா .திருவண்ணாமலை நகர் மன்றத் தலைவர் இரா.திருமகன் தொடங்கி வைக்க திருப்பத்தூர் தூய ஞ்சக் கல்லூரியின் மாற்று நாடக இயக்கம் வழங்கும் ஜே.பி.பிரீட்ஸ்லியின் 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' நாடகம் நிகழ இருக்கிறது.அனைவரும் வருக!

Tuesday 16 March 2010

மாற்று நாடக இயக்கத்தின் நாடகப் பயிற்சி முகாம் - 2010

ஏழாவது ஆண்டாக மாற்று நாடக இயக்கம் எமது கல்லூரியில் மாணவர்களுக்கான ஆளுமை வளர்ச்சி, நாடகப்பயிற்சி முகாமை இவ்வாண்டும் நடத்த்த் திட்டமிட்டுள்ளது. மே 30 முதல் ஜூன் 6 வரை எட்டுநாட்கள் நடைபெறும் இந்த முகாம் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் ஆகும்.தமிழகத்தின் மிக முக்கியமான நாடக ஆளுமைகள் வருகை தந்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க உள்ளனர்.

Thursday 11 March 2010

'இன்றும் வாழும் தெருக்கூத்து' நூல் வெளியீடு.

'இன்றும் வாழும் தெருக்கூத்து' நூல் வெளியீடு.நாள்: 14.03.2010 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: மாலை 6 மணி.இடம்: கர்மேல் கிண்டர் கார்டன் பள்ளி, திருவண்ணாமலை.
வெளியிடுபவர்: திரைப்படக் கலைஞர் நாசர்பெறுபவர்: கவிஞர் இளையபாரதிநூல் குறித்து: முனைவர் கி.பார்த்திபராஜா
அனைவரும் வருக!
1980 களில் தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைஞர்களோடு இயக்கம் கண்டு செயல்பட்டவர் பி.ஜே.அமலதாஸ். அவருடைய முயற்சியால் அப்போது 'என்றும் வாழும் தெருக்கூத்து' என்ற நூல் வெளியிடப்பட்டது. இப்போது பல புதிய கட்டுரைகள், படைப்புகளுடன் 'இன்றும் வாழும் தெருக்கூத்து' வெளியிடப்பட்டுள்ளது. நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:1.தெருக்கூத்து ஒரு அறிமுகம்2. தெருக்கூத்தும் சில சிந்தனைகளும் - கவிஞர் சக்தி3. புதிய களரி - அ.அறிவுநம்பி4. தெருக்கூத்தின் வாழ்வும் தாழ்வும் - டாக்டர் முத்துசண்முகன்5. மூலிகைகளும் தெருக்கூத்தும் - ந.முத்துசாமி6. ஏழுமலை ஜமா - பவா.செல்லதுரை7. நேர்காணல் - லட்சுமணன் வாத்தியார்8. கூத்து 'தெரு'க்கூத்தான 'திரு'க்கூத்து - மு.ராமசாமி9. கர்ணமோட்சம் தெருக்கூத்தில் ஒரு பதிவு10. நேர்காணல் - பி.ஜே.அமலதாஸ்11. தெருக்கூத்தின் வாழ்வு நெருக்கடி - ஒரு சக பயணியின் குறிப்புகள்: கி.பார்த்திபராஜா
வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை - 606 601. அலைபேசி: 9444867023, 9443222997.

Friday 26 February 2010

தமிழ் நாடகர்களுக்கு,

வணக்கம். தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டிற்கு வெளியிலுமாக நடைபெறும் நாடக முயற்சிகள் அனைத்தையும் பதிவு செய்ய விரும்புகிறோம். நாடக நிகழ்வைக் காண முடியாவிட்டாலும் நாடகம் குறித்த செய்திகள், புகைப்படங்கள் முதலானவற்றையாவது இந்த இணைய தளம் பார்ப்பவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.எனவே, தமிழ் நாடகர்கள் தங்களின் நாடகச் செயல்பாடுகள் குறித்து எமக்குச் செய்தி அனுப்பித் தருமாறு வேண்டுகிறோம்.

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் நாடக நிகழ்வு.

பிப்ரவரி 27 சனிக்கிழமை, 2010 அன்று மாலை 6 மணிக்குத் திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் மாற்று நாடக இயக்கத்தின் 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' என்ற நாடகம் நிகழ்த்தப்பட இருக்கிறது. நாடக நிகழ்வைக் காண உங்களை அன்புடன் அழைக்கிறோம்.வருக! வருக!!

Monday 22 February 2010

ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்? (நாடகம்)







மாற்று நாடக இயக்கத்தின் புதிய நாடகத் தயாரிப்பான ஜே.பி.பிரீட்ஸ்லி எழுதி, எழுத்தாளர் ஞாநி அவர்களால் தமிழ் வடிவம் பெற்ற 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' என்ற நாடகம் பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நான்கு நாட்கள், மொத்தம் ஐந்து காட்சிகள் அரங்கேறின.ஏராளமான மாணவர்களும் திருப்பத்தூர் நகரப் பொதுமக்களும் இந்நாடகத்தைக் கண்டு களித்தனர்.

Monday 8 February 2010

புதிய நாடகத் தயாரிப்பு

எமது மாற்று நாடக இயக்கத்தின் 2010 ஆம் ஆண்டின் புதிய நாடகத் தயாரிப்பு, ஜே.பி.பிரீட்ஸ்லியின் 'தி இன்ஸ்பெக்டர் கால்ஸ்', எழுத்தாளர் ஞாநியால் 'ஒரு விசாரணை' என்று தமிழில் தழுவப்பட்டு, 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' என்று அரங்கேறுகிறது.பிப்ரவரி 15,16,17 ஆகிய மூன்று நாட்களும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் கரேஞோ அரங்கத்தில் மாலை 6.30 மணிக்கு நிகழ இருக்கிறது. அருகாமையில் இருக்கும் கல்வி நிறுவனங்களிலும் இந்த நாடகம் நிகழ்த்தப் பட இருக்கிறது.

Sunday 10 January 2010

புரிசை தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளியில் வகுப்புகள் தொடக்கம்:2010




புரிசை கண்ணப்பத் தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்து மன்றம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தெருக்கூத்துப் பயிற்சிப்பள்ளியை நடத்தி வருகிறது. கணிசமான ஆண்களும் பெண்களுமாக மாணவர்கள் அப்பள்ளியில் கூத்தினைக் கற்று மேடையாக்கத்தையும் நிறைவு செய்துள்ளனர். இந்த 2010 புத்தாண்டில் பள்ளி, தனது புதிய கூத்துப்பயிற்சியினைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. சனவரி மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் இப்பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாட்களும் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 15 வாரகால பயிற்சிகளுக்குப் பிறகு, மேடையாக்கமும் காண்கிறது. இளைய தலைமுறையினரிடத்தே, நமது பெருமை மிக்க கலையாகிய தெருக்கூத்தை எடுத்துச் செல்லும் இந்த மிக முக்கியமான பணியில் நாமும் உதவலாம். ஆர்வமுடைய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுக்கு நீங்கள் இப்பயிற்சியைப் பரிந்துரை செய்யலாம். கட்டணம் மிகக் குறைவே.புரிசை கிராமம் செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே உள்ளது. ஆர்வமும் அக்கறையும் உடையவர்கள் உடனடியாக கூத்துப் பள்ளியின் தலைவர் திரு காசித் தம்பிரான் அர்களைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: (+91) 044 24742743.
வாருங்கள்! கலை வலு மிக்க தெருக்கூத்தை, நம் பாரம்பரியத் தமிழ் அரங்கை, புதிய உத்வேகத்தோடும் புதிய உள்ளடக்கங்களோடும் ஏந்திச் செல்லக் கிடைக்கும் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்துவோம்..
கி.பார்த்திபராஜா