Wednesday 30 January 2013

பாரதிதாசனின் ஆத்திசூடி அறமும் கருத்துநிலையும்
முனைவர் கி.பார்த்திபராஜா
துணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
தூய நெஞ்சக் கல்லூரி
திருப்பத்தூர் – வே.மா.

முதலாக…
தமிழ்ச் சமூகத்தில் அறத்தின் தோற்றமும் நிலைபேறும் விரிந்த வரலாற்றுப் பகுதியில் இடம்பெறுவதாகும். அறம் என்ற ஒன்றே, யாரால், யாருக்காக, எதனால், எப்படி என்று ஏராளமான வினாக்களினூடாகக் காணவேண்டியதாகும். இவை மட்டுமின்றி ஒரு தேசிய இனத்தின் அறக்கருத்துக்களின் கட்டுமானங்களுக்கு வேறு சில அடிப்படைகளும் அமைகின்றன. அவை குறிப்பிட்ட தேசிய இனத்தின் பண்பாட்டுச் சூழல்களைச் சிறப்பாகக் கருதியவை ஆகும். தமிழ்ச் சமூகத்தில் அறம் என்ற கருத்துருவாக்கம் மேற்குறித்த அடிப்படைகளில் ஆராயப்பட வேண்டுவது ஆகும்.
நிலவுகின்ற சமூக அடித்தளமாகிய உற்பத்தி உறவுகளுக்குச் சேவை செய்வனவாகவே இலக்கியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சிறுபான்மை நிலவுகின்ற உற்பத்தி உறவுகளை உடைப்பதற்குக் கட்டியம் கூறுவனவாக அமைகின்றன. இதுவே உலகெங்கும் இலக்கிய உற்பத்தியின் நிலைபேற்றின் மாறுதலின் இலக்கணமாக உள்ளது. தமிழரின் தொன்மை இலக்கியங்களான ‘சங்க இலக்கியங்கள்’ இக்கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறபோது, அவ்விலக்கியங்கள் சுட்டும் அறங்களும் கூர்ந்த அவதானிப்புக்கு உரியவையாகின்றன.
இலக்கியங்களில் அல்லது கலை இலக்கிய வடிவங்களில் நிலவுகிற சமூகத்தின் அறங்கள் பேசப்படும் நிலைமாறி, முழுவதுமே அறத்தை வற்புறுத்தும் இலக்கியங்கள் – அதாவது அற இலக்கியங்கள் – தமிழ்ச் சமூகத்தில் கி.பி இரண்டாம் நூற்றாண்டையொட்டி எழுகின்றன. அவை பிற்காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு என்ற பெயரில் தொகுதிகளாக்கப்படுவதும் அவற்றில் திருக்குறளும் நாலடியாரும் தலைமையிடம் பெறுவதும் கவனிக்கத் தக்கது.
அறத்தை வலியுறுத்தும் தனித்த இலக்கிய உருவாக்கம் என்பது தமிழில் தொடர்ந்து வரும் ஒரு மரபாகவே அடையாளங்காணப்படுகிறது. இடைக்கால நீதி நூல்களும் பிற்கால நீதி நூல்களும் இதனை எடுத்துக்காட்டுகின்றன. பிற்கால நீதி நூல்கள் எனப்படுபவை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை, உலக நீதி, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிவெண்பா, நீதிநெறி விளக்கம், அறநெறிச்சாரம்’ முதலானவை ஆகும்.
பிற்கால நீதி நூல்களைப் பின்பற்றியே அறக்கருத்துக்களை வலியுறுத்தும் இலக்கியங்கள் மறுமலர்ச்சி இலக்கியக் காலத்தில் உற்பத்தியாகின. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பாரதியார் முதலானவர்கள் இவ்வுற்பத்தியாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பாரதியாரின் முதன்மைத் தொழிற்பாடாக அற இலக்கியம் அமையவில்லை எனினும், அவரது ஆத்திசூடி முதலான படைப்புகள் அற இலக்கியத்தின் வன்மையைப் பயன்படுத்திக் கொண்ட புதிய வரவு ஆகும்.
பாரதிக்குத் தாசன் என்று தன்னை அறிவித்துக் கொண்ட பாவேந்தர், தன் குருநாதரை அடியொற்றியே ஆத்தசூடி இயற்றியுள்ளார். அவரது ஆத்திசூடியைக் கொண்டு அவர் உருவாக்க நினைத்த அறக் கோட்பாடுகள் இக்கட்டுரையில் விவாதிக்கப்படுகின்றன.
அறமும் சமூகமும்:
அறநூல்கள் மட்டுமல்ல பொதுவாகவே இலக்கியப் படைப்புகள் நிலவுகின்ற உற்பத்தி உறவுகளைப் பாதுகாக்கவும் அவற்றுக்குச் சேவை செய்யவும் உருவாக்கப்படுவனவேயாகும். பதினெண் கீழ்க்கணக்குத் தொகுதியில் இடம்பெற்றுள்ள அற நூல்களும் கூடத் தமக்குள் மாறுபட்ட அறக் கண்ணோட்டத்தை உடையனவாக உள்ளன. பிற்கால நீதி நூல்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்களை வலியுறுத்துகின்றன. தமிழின் அனைத்து நீதி நூல்களுமே நிலவுகின்ற சமூக அமைப்பைப் பாதுகாக்க உற்பத்தி செய்யப்பட்டவை. பொது ஒழுங்கை வற்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. தேசிய இனத்தால் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட பொது அறங்களை வலியுறுத்துவதோடு ஆளும்வகுப்பின் கருத்தியல்களுக்குத் துணை செய்யும் அறங்களையும் வலியுறுத்துபவை. இந்தப் பொது நியதிகளை மறுப்பது என்பது அற இலக்கிய அமைப்பில் பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’யிலேயே தொடங்குகிறதெனலாம். பாரதி தன் காலத்தியச் சமூகத்தில் நிலவிய பல்வேறு கருத்துப் போக்குகளுக்கு எதிரான அறத்தைத் தனது ஆத்திசூடியில் வலியுறுத்தியிருப்பதைக் காணலாம். எனவேதான் பாரதிதாசன் தனது குருவான பாரதியைப் புதிய அறம் பாட வந்த அறிஞன்’ என்று புகழந்தார். பாரதிதாசன், பாரதியிலிருந்து கிளைத்து எழுந்தாலும் பாரதிக்கு அடுத்த காலகட்டத்தின் விளைபொருள். எனவே பாரதியின் புதிய அறங்களை அவர் வழிமொழிந்தபோதும் பாரதியிலும் பார்க்க முற்போக்காகப் பல அறங்களை வலியுறுத்தியவர் எனலாம்.
ஆத்திசூடி:
‘ஆத்திசூடி’ என்பது காரணப்பெயர் ஆகும். ஔவையாரின் பெயரில் அறியப்படும் ஆத்திசூடியில் உள்ள கடவுள் வாழ்த்துப்பாடலின் முதல் தொடக்கத் தொடர். ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை / ஏத்தித் தொழுவோம் யாமே’ என்று அமைகிறது அக்கடவுள் வாழ்த்து. பிற்கால ஔவையைப் பின்பற்றிப் புதிய ஆத்திசூடி எழுதிய பாரதியார், ஆத்திசூடி அணிந்த சிவனை மட்டுமின்ற மும்மதக் கடவுளர்களை வணங்கித் தொடங்குகிறார். பாரதிதாசனோ, ‘இந்நூல் ஆத்திசூடி போறலின் ஆத்திசூடி என்றடைந்தது பெயரே’ என்கிறார். ஆத்திசூடி, பாயிரம் நீங்கலாக ஓரடிச் செய்யுள்களால் ஆக்கப்பட்டிருக்கும். சிறார் பயிலுவதற்காக உருவாக்கப்படுவது ஆத்திசூடி. அகரவரிசையில் எளிதில் மனனம் செய்யும் அமைப்பில் ஆத்திசூடி உருவாக்கப்பட்டுள்ளது. எதுகை, மோனை முதலிய தொடை அழகுகள் மிளிர ஆத்திசூடி உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பெனலாம். மிகப்பெரிய அற நூல்களின் கருத்துக்களைச் சுருக்கமாகச் சிறார் மனம் கொள்ளும் வகையில் வெளிப்படுத்துவது ஆத்திசூடியில் பண்புகளுள் குறிப்பிடத்தக்கதாகும்.
கடவுள் வாழ்த்து நீங்கலாக 108 ஓரடிச் செய்யுளால் ஆனது ஔவையாரின் ஆத்திசூடி. கடவுள் வாழ்த்துத் தவிர 110 ஓரடிச் செய்யுளால் பாரதியாரின் புதிய ஆத்திசூடி அமைக்கப்பட்டுள்ளது. பாரதிதாசனின் ஆத்திசூடி, பாயிரம் தவிர்த்த 85 ஓரடிச் செய்யுள்களால் ஆக்கப்பட்டுள்ளது.
பாயிரச் செய்திகள்:
பாரதிதாசன் கடவுள் மறுப்புக் கொள்கையினர். ஆதலால் நூலின் முகப்பில் அமையும் கடவுள் வாழ்த்துக்குப் பதிலாகப் பாயிரத்தை அமைக்கின்றார். உலகில் ஒரு தனியாட்சி ஏற்படவேண்டும் என்ற தனது பெருவிருப்பத்தைப் பாயிரத்தில் முன்மொழியும் பாவேந்தர்,
‘நவில் இனப்பற்றும், நாட்டுப்பற்றும் / வையப்பற்றை வளர்க்கும் நோக்கத்தன
இல்லையாயின் இன்றிவ்வுலகில் / தொல்லை அணுகுண்டு, தொகுகொலைக்கருவி
பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை / அகற்றல் எப்படி?’
-என்று உறுதிபடப் பேசுகிறார். இனப்பற்றும் நாட்டுப்பற்றும் உலக மனிதனை உருவாக்குவதற்கு எதிரானவை என்ற பொதுப்புத்தி சார்ந்த கருதுகோளைப் பாரதிதாசன் மறுத்துள்ளமை கவனிக்கத்தக்கது. இனப்பற்றும் நாட்டுப் பற்றும் உலகப்பற்றை வளர்ப்பன என்பதோடு, இப்பற்றுக்கள் இல்லையாயின் அணுகுண்டு உள்ளிட்ட கொலைக்கருவிகள் பெருகும் என்றும் கருத்துரைக்கிறார். ஆத்தி சூடியவன் சிவபெருமான் என்பதனால் தனது நூலுக்கு ஆன்மீகத்தொனி வந்துவிடக்கூடாது என்பதனால் ‘முந்தைய ஆத்திசூடி நூல்கள் போல இருப்பதனால் இதுவும் ஆத்திசூடி என்று பெயர் பெறும்’ என்று வலியுறுத்திக் கூறுகிறார்.
வேதம் மறுத்தல்:
கடவுளையும் அக்கருத்தோடு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் அடித்து நொறுக்குவதைத் தன் வாழ்நாட்கடமையாகக் கொண்டவர் பாரதிதாசன். எனவே சிறாருக்கு எடுத்துரைக்கும் அறக்கருத்துக்களிலும் வேதம் முதலானவற்றை மறுத்துரைக்கிறார். ‘மறை எனல் சூழ்ச்சி’ (68) என்று உரத்துக் குரல் எழுப்புகிறார் பாரதிதாசன். ‘சாதல் இறுதி (25), சீர் பெறல் செயலால் (27),  நூலும் புளுகும் (51), பேயிலை மதமலால் (64), வீடெனல் சாதல் (82)’ என்று பல நிலைகளிலும் வேதக்கருத்தியலையும் கடவுள் கோட்பாட்டைப் பாதுகாக்கும் மத அமைப்புக்களையும் மறுத்துரைக்கிறார். மறுபிறவி, இறந்தபின் ஆன்மா முதலான இந்து மதத்திற்குள் கட்டப்பட்டிருக்கும் நம்பிக்கைகளைத் துணிவுபடச் சிதைக்கிறார் அவர்.
பார்ப்பன எதிர்ப்பு:
‘சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுன்னும் பார்ப்புக்கொரு நீதி சாத்திரம் உரைக்குமென்றால், அது சாத்திரமல்ல சதி என்று உரைப்போம்’ என்று முன்தேர்பிடித்துச் சென்ற பாரதியை அடியொட்டி ஆத்திசூடியில் பேசுகிறார் பாரதிதாசன். பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே என்று பாடிய பாரதியின் வழியில் வந்தவராயினும் பார்ப்பனீயத்துக்கு இந்திய மண்ணில் சவாலாக எழுந்த ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் போர்வாளாகக் கவிதை இயக்கத்தில் களமாடியவர் பாரதிதாசன். ‘பார்ப்புப் பொதுப்பகை (58)’ என்றவர் குறிப்பதையும் ‘நால்வகைப் பிறவி பொய் (47)’ என்று அறைகூவுவதையும் அவரது ஆத்திசூடியில் காணமுடிகின்றது. தான் பிறப்பால் உயர்வு என்று பேசும் பார்ப்பனரையும் அவர் தனது ஆத்திசூடியில் கடிந்துரைக்கின்றார். ‘கீழ்மகன் உயர்வெனும் (16)’ என்று அவர் கூறுவது இங்குக் கருதத்தக்கது.
பொதுவுடைமை வலியுறுத்தல்:
உலகப்பன் பாட்டுப்பாடிய பாரதிதாசன் குழந்தைகளுக்குத் தான் எழுதிய ஆத்திசூடியில் பொதுவுடைமைக் கருத்துக்களை முன்வைக்கத் தவறவில்லை. பொதுவுடைமையை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் பொதுவுடைமைத் தத்துவத்தின் கருத்துநிலை அடிப்படையையும் சில இடங்களில் எடுத்துரைக்கின்றார்.
‘உடமை பொதுவே (5)’ என்று பேசுவதும் ‘மாறுவதியற்கை (69)’ என்றுரைப்பதும் பொதுவுடைமைக் கருத்தின் சார்பு நிலையை வெளிப்படுத்துகின்றது.
ஓருலகக் கோட்பாடு வலியுறுத்தல்:
பொதுவுடைமைவாதிகளின் இலக்கு அரசு அற்ற சமூகமும் ஓருலச் சிந்தனையுமாகும். அதனைத் தனது ஆத்திசூடியில் வழிமொழிகின்றார் பாரதிதாசன். ‘அனைவரும் உறவினர் (1), ஆட்சியைப் பொதுமை செய் (2)’ என்று அவர் குறிப்பிடுகிறார். அதிலும் ஆத்திசூடியின் முதற்செய்யுளிலேயே ‘யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றன் கருத்தை வழிமொழிவது கருத்தில் கொள்ளத்தக்கது.
கைம்மை எதிர்த்தல்:
விதவை மறுமணம் என்ற சிந்தனை வற்புறுத்தப்பட்ட புதுயுகத்தின் நாயகராக விளங்கியவர் பாரதிதாசன். தனது பல்வேறு படைப்புகளில் இதனை வலியுறுத்தியவர். ‘கைம்மை அகற்று (21), வாழாட்கு வாழ்வு சேர் (80)’ என்று அவர் வற்புறுத்துகிறார். ஆத்திசூடி இளஞ்சிறார்களுக்கானது எனினும் சமூகக் கொடுமைகளை எதிர்க்க இளவயதிலேயே தயாரிக்க வேண்டும் என்ற அவரது சிந்தனை வியப்பிற்குரியது.
புதியன ஆக்கும் சிந்தனை:
‘தகப்பன் வீட்டுக் கிணறு என்பதற்காக உப்புநீரைக் குடிக்கும் மூடர்கள்’ என்று தமிழ்ச் சமூகத்தின் புலமை மரபைப் பகடி செய்தவர் பாரதிதாசன். பல புதுமைக் கருத்துக்களின் முன்னோடியாக விளங்கும் அவர் தனது ஆத்திசூடியில் அப்புதுமைகளை வலியுறுத்தத் தவறவில்லை. ‘எழுது புதுநூல் (7), கோனாட்சி வீழ்த்து (23), தளையினைக் களைந்து வாழ் (35), தொன்மை மாற்று (44), பெண்ணொடு ஆண் நிகர் (63)’ என்று பல நிலைகளில் புதுமையினை வற்புறுத்துகின்றார்.
பாரதியும் பாரதிதாசனும்:
பாரதிக்கு அடிமை என்று தன்னை அறிவித்துக் கொண்ட பாரதிதாசன் ஆத்திசூடியில் பாரதியின் இரு செய்யுளை அப்படியே எடுத்துக் கையாண்டுள்ளார். ‘போர்த்தொழில் பழகு (67), மூப்பினுக்கிடங் கொடேல் (73)’ என்ற இரு செய்யுளையும் அப்படியே கையாளும் பாரதிதாசன், பாரதியின் கருத்துக்களுக்கிணையான அல்லது வழிமொழிகின்ற கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். ‘நூலினைப் பகுத்துணர் (நூலும் புளுகும்), தோல்வியில் கலங்கேல் (தோல்வி ஊக்கம் தரும்), ஈகை திறன் (ஈதல் இன்பம்), தொன்மைக்கு அஞ்சேல் (தொன்மை மாற்று), ஒற்றுமை வலிமையாம் (ஒற்றுமை அமைதி)’ முதலான கருத்துக்களை எடுத்தாண்டுள்ளார். (அடைப்புக்குறிக்குள் இருப்பன பாரதிதாசனின் செய்யுட்கள்).
ஔவையும் பாரதிதாசனும்:
‘முனை முகத்து நில்லேல், தையல் சொல் கேளேல்’ முதலான ஔவையின் ஆத்திசூடிக் கருத்துக்களுக்கு முரண்பட்டு நேரெதிர் கருத்துக்களை முன்வைத்தவர் பாரதியார். பாரதிதாசனும் ஔவையின் சிற்சில கருத்துக்களை வழிமொழியவும் சிலவற்றை மறுத்துரைக்கவும் செய்துள்ளார்.
‘போர்த்தொழில் பழகேல்’ என்பதைப் ‘போர்த்தொழில் பழகு (67)’ என்று மறுத்துரைக்கும் பாரதிதாசன், ‘ஔவியம் பேசேல், கெடுப்பது ஒழி’ என்பனவற்றை ஒப்புக்கொண்டு வழிமொழிகின்றார். ‘ஔவியம் பெருநோய்’ என்றும் ‘கெடுநினைவகற்று’ என்றும் பேசுகிறார்.
சிறார் வழக்கங்கள்:
பொதுவாக வலியுறுத்தப்படும் ஈகை போன்றவற்றை எடுத்து மொழியும் பாரதிதாசன் சிறார் ஆளுமையை வடிவமைக்கும் பொது அறங்களையும் எடுத்துரைக்கிறார். சிறாருக்கான அறநூலில் பெரியோருக்கு வலியுறுத்தும் அறங்களை எடுத்துரைப்பினும் சமூகத்தின் தேவைகருதி அவற்றை வெளிப்படப் பேசுகிறார் எனலாம்.
முடிவாக…
-    அறம் வலியுறுத்தும் தனித்த இலக்கிய உருவாக்கம் என்பது தமிழில் தொடர்ந்து வரும் ஒரு மரபு ஆகும்.
-    தமிழின் அனைத்து அற இலக்கியங்களுமே நிலவுகின்ற சமூக அமைப்பைப் பாதுகாக்கவும் அதற்குச் சேவை செய்யவுமே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.
-    பொதுப்புத்தி சார்ந்த கருத்தியல்களை மறுத்து அற இலக்கியம் படைத்தல் என்பது, தமிழ் அற இலக்கிய மரபில் பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’யிலிருந்தே தொடங்குகிறது.
-    பாரதிதாசன், தனது குருநாதராகிய பாரதியின் கருத்துக்களை மிகுதியும் ஒட்டியே தனது ஆத்திசூடி நூலினை வரைந்துள்ளார்.
-    கடவுள் மறுப்பாளராகிய பாரதிதாசன்,  ‘ஆத்திசூடி’ என்ற தனது ஆத்திசூடியில் சிவபெருமானைக் குறிப்பதாக அல்லாமல் இலக்கியத்தைக் குறிப்பதாகக் கொள்ளுகிறார்.
-    வேதம் மறுத்தல், பார்ப்பன எதிர்ப்பு, பொதுவுடைமை வலியுறுத்தல், ஓருலகக் கோட்பாடு, கைம்மை எதிர்த்தல், புதியன ஆக்கல் ஆகியவை இவரது ஆத்திசூடியில் எதிர்ப்படுகின்றன.
-    பாரதியின் கருத்துக்களை அப்படியே எடுத்துக் கையாண்டும் தழுவியும் சில இடங்களில் செய்யுள் படைத்துள்ளார் பாரதிதாசன். ஔவையின் கருத்துக்களையும் அவ்வாறே ஒட்டியும் வெட்டியும் செய்யுள் யாத்துள்ளார்.
-    புதிய அற இலக்கிய உருவாக்கத்தில் பாரதிதாசனின் தனித்துவம் சிறப்பாக அவதானிக்கத் தக்கதாகும். சிறார் இலக்கியத்திலும்கூடச் சமரசம் செய்து கொள்ளாத படைப்பாளி எனப் பாரதிதாசனை அவரது ‘ஆத்திசூடி’ அடையாளங்காட்டுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------