Friday 25 July 2014

கைப்பொருளும் மெய்ப்பொருளும் : பொருள்வயிற் பிரிதல் அடிப்படையில் ஒரு விவாதம்




முனைவர் கி.பார்த்திபராஜா
                                                                  துணைப்பேராசிரியர்
தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை
தூய நெஞ்சக் கல்லூரி
திருப்பத்தூர்.

முதலாக
மனித குல வரலாற்றில் சொத்துடைமையின் தோற்றத்திலிருந்தே உலகளாவிய அளவில்  பொருளியல் சிந்தனை உருவாக்கம் பெற்றது. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை இனக்குழு வாழ்க்கையின் பங்கீட்டு உண்ணுமுறை, பொருளியல் குவிப்புக்கு இடமளிக்காமலேயே இருந்தது. இனக்குழு வாழ்க்கையின் அழிவும் பேரரசு உருவாக்கத்தின் தோற்றமும் கொடை, புகழ் முதலான விழுமியங்களைக் கட்டி எழுப்பின. கண வாழ்க்கை சிறிது சிறிதாகச் சிதைவுற்றுத் தனிச் சொத்துடைமை வாழ்க்கைஅதாவது குடும்ப வாழ்க்கைதோற்றம் பெற்றது.
பொருள் என்பது இக்காலகட்டத்தில் புதுப்பொருள் பெறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை, தமிழரின் பொருளியல் சிந்தனைகளுக்கு அகன்ற இடம் கொடுத்த இலக்கியப் பரப்பு எனல் பொருத்தமாகும்.
பொருள் என்ற கருத்துருவாக்கத்தோடு புதிய சிந்தனை மரபும் உடைமைக் கருத்தியலும் இணைவு பெறுகின்றன. அருள் பொருள் என்ற எதிர் முரண் கட்டமைக்கப்படும் அதே வேளையில் இரண்டையும் இணைவுபடுத்தும் முயற்சியும், பொருளைத் தேடுவதிலும் பார்க்க, அருளைத் தேடுதலே சிறந்தது என்ற கண்ணோட்டத்தை உருவாக்கும் முயற்சியும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
ஆனாலும் உடைமைச் சமூகம் பொருள் இன்றி இயங்க முடியாது. உற்பத்திவணிகம்நுகர்தல் என்ற அளவில் சமூக அசைவியக்கம் நடைபெற்றாக வேண்டும். சமூகத்தின் பொதுநிலையினர் பொருளின் மீதான ஆசை கொள்வதும் அவ்வாசை மிகுவதும் சமூகத்தின் உடைமை வர்க்கத்தாரைத் தொந்தரவுபடுத்தும் ஒன்றாகும். அதாவது உழைக்கும் வர்க்கத்தார் உடைமையின் மீது ஆசை கொள்வது என்பது ‘உடைமை வர்க்கத்தாரின் இருப்புக்கான சவாலாகும். எனவே பொருள் பற்றிய கட்டுமானங்களையும் விதிகளையும் உடைமை வர்க்கம் உருவாக்கி, அதைப்பரப்பவும் நிலை நிறுத்தவும் முயலும். எளிய குடிகள் பொருள் உற்பத்திவணிகம்நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் உயர்குடி, அவ்வளவுகோலினைத் தங்களுக்கு இட்டுக்கொள்ள விரும்பாது. அவ்வளவுகோல்கள் அவர்களுக்குப் பொருந்தவும் பொருந்தாது. எல்லை அகற்சி, எதிரியின் வளத்தைச் சூறையாடுதல், உற்பத்திக் கட்டுமானங்களை நிர்மாணித்து நிலைத்த குடியினராக மக்களை மாற்றுதல் ஆகியவை உடைமைச் சமூகத்திற்கு அவசியமான ஒன்றாகவே இருக்கிறது.
எனவே பொருளியல் குறித்த சிந்தனையில் ஒரு எதிர் முரணைக் கட்டமைத்து அவற்றுக்கிடையே ஒரு தத்துவார்த்த ஊடாட்டத்தை நிகழ்த்துவதும் அதன்மேல் இலக்கியங்களை உருவாக்குவதும் இலக்கியக் கோட்பாடுகளை உருவாக்குவதும் உடைமைச் சமூகத்தின் இயல்பாகிவிடுகிறது.
பொருள் குறித்த சிந்தனைகள்:
பொருள் நிலையில்லாதது என்றும் எனவே பொருளைத் தேடுவதில் வாழ்க்கையை இழக்க வேண்டாம் என்பதும் அக இலக்கியங்களில் தலைவனைச் செலவழுங்குவிக்க முயற்சிக்கும் தோழி வற்புறுத்திக் கூறுவது ஆகும். தலைவியைத் தேற்ற வரும் தோழி, ‘புகழை விரும்புபவனுடைய பொருள் போல உன் பசலை அழியும்’ (குறுந.143) என்கிறாள். தமக்கென நீண்டகாலம் பொருளைப் பாதுகாத்தலில்லை என்று புறம் (163) பேசுகிறது. ‘உண்டும் தின்றும் இரப்போர்க் கீந்தும் \ மகிழ்க வம்மோ மறப்போ ரோயே…’ (புறம்.384) என்பது பொருளை அழித்துத் தீர வேண்டிய கட்டாயத்தைக் குறிப்பிடுகிறது. அவ்வாறின்றிப் பாதுகாக்கப்படும் பொருள் நிலைத்திருத்தல் இல்லை என்பது பெறப்படும்.
பொருளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தல்:
பொருள் என்பது நிலையில்லாதது என்ற கருத்துருவம் முன்வைக்கப்படும் அதே வேளையில், பொருளின் அவசியமும் வற்புறுத்தப்படுவதைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.
இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள்நன்கு உடையர் ஆயினும், ஈதல்
பொருள்இல் லோர்க்கு அஃது இயை யாதுஆகுதல்
யானும் அறிவென் மன்னே…. ‘ (அகம்.335)
அருள் உள்ளத்தை உடையராயினும் பொருள் இல்லாதார்க்கு ஈதல் இயலாது என்ற உண்மையினை மேற்குறித்த வரிகள் வெளிப்படுத்துகின்றன.
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி’ (குறுந்.63) என்ற குறுந்தொகைப் பாடலும் பொருள் இல்லோர், ஈதலையும் ஈதலால் வரும் இன்பத்தையும் அடைய முடியாது என்று குறிப்பிடுகிறது. எனவே பொருள் என்பது அறத்தையும் இன்பத்தையும் அடையவைக்கும் இணைப்புப் பாலமாக இருக்கிறது என்ற கருத்து வற்புறுத்தப்படுவதைக் காணமுடிகிறது.
பொருளைத் தேடாதவர்க்குப் புகழ், இன்பம், கொடை ஆகிய மூன்றும் இல்லை என்று குறிப்பிடுகிறது ஒரு நற்றிணைப் பாடல் (214). பரத்தை ஒருத்தி, இரவலர்க்கு ஈயாச் செல்வம் புகழாகப் பரவி வெளிப்படாதது போல, என் நலன் வருந்துக’ (அகம்.276) என்று வஞ்சினம் கூறுவதை அகநானூற்றில் காணமுடிகிறது.
எனவே பொருளின் இன்றியமையாமை பல்வேறு நிலைகளில் சங்க இலக்கியங்களில் வற்புறுத்தப்படுவது நோக்கத் தக்கது.
பொருளின் பயன்:
அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் பிறன் கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும்’ (அகம்.155) என்பது பொருளின் தலைமையை வலியுறுத்திச் சொல்லும் குரல் ஆகும்.
அறம்தலைப் பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்’ (அகம்.173) என்ற பாடலில் பொருள் சுற்றத்தாரின் துயர் துடைத்தல் குறிப்பிடப்படுகிறது.
செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு
உறும்இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல்இருந்து அமைவோர்க்கு இல்என்று (அகம்.231) தலைவன் பொருள் தேடிச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. பகைவரின் செருக்கினை அடக்குவது பொருள் என்ற கருத்து இங்குக் கருத்தூன்றி நோக்கத்தக்கது.
இரப்போர் ஏந்துகை நிறைய, புரப்போர் புலம்புஇல் உள்ளமொடு புதுவதந்து உவக்கும் அரும் பொருள் வேட்டம்’ (அகம்.389) என்று இரப்போர்க்கு உதவுதற்குப் பொருள் பயன்படுதலையும், நண்பர்களுக்குச் செல்வம் பெருகவும் தலைவியின் தோள்கள் நல்ல அணிகலன்களைப் பூணவும் (நற்.286) பொருள் உதவும் என்று குறிப்பிடப்படுகிறது. அருள், பகையழித்தல், புணர்ச்சி பெறல் இவை யாவும் பொருளால் பெறலாம் என்று கலித்தொகை (11) குறிப்பிடுகிறது.
எனவே பொருளின் பயன் அறத்தைப் பெறுவது, கொடை, புகழ், புணர்ச்சி ஆகிய இன்பத்தைப் பெறுவது என்பதாக அமைவது சுட்டிக்காட்டப்பட்டுப் பொருள் தேடும் வேட்கை மிகுவிக்கப்படுகிறது.
பொருள் தேடும் நோக்கம்:
பொருள் தேடுவதற்கான நோக்கங்கள் சங்க இலக்கியங்களில் மிகவும் உயர்வாகவே எடுத்துரைக்கப்படுகின்றன. பொருளீட்டும் முயற்சி வெற்றாகப் பொருள் சேகரித்தல், வளம் பெறுதல், தன் குடும்பத்திற்கு ஊட்டமளித்தல் என்ற அளவில் மட்டும் அமைவதன்று என்பதும் அம்முயற்சிக்கு ஒரு சமூகநிலைப்பட்ட பின்னணி வழங்கப்படுவதும் கருதத்தக்கது. அதாவது பொருளீட்டும் முயற்சிக்கு ஒரு பொதுமை நோக்கம் கற்பிக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை பொருளீட்டுவது என்பது இழிவான ஒன்றல்ல; மாறாக சமூகத்தின் பொதுக்கட்டுமானங்களுக்கு உதவுவதாகும்.
எனவே ஒரு வகையான தத்துவ நிலைப்பட்ட நிலையைப் பொருளீட்டும் முயற்சிக்குத் தர இலக்கியங்கள் முயன்றுள்ளமை வெளிப்படுகின்றது.
பிறருக்கு என முயலும் பேரருள் நெஞ்சம்’ (நற்.186) என்று  பொருள் தேடும் உள்ளம் புகழ்ந்துரைக்கப்படுகிறது. பிறருக்கு ஈதல் வேண்டியே பொருள் தேடப்படுகிறது என்றுரைக்கிறது ஓர் அகநானூற்றுப் பாடல்(53). ‘ஈதல் இன்பம் வெஃகி மேவரச் \ செய்பொருள் திறவராகி’ (அகம்.69) என்றும் ஈயாமை இழிவு (கலி.1) என்றும் குறிப்பிடப்படுகிறது.
பொருள் என்பது எல்லாக் காலத்திலும் மதிப்புடையதாக இருப்பினும், அதனை அறம் சார்ந்ததாகக் கூறும் கருத்து சங்க இலக்கியத்தாற் பெறப்படும். ….. பொருளை ஈட்டுதல், செலவு செய்தல் ஆகிய எல்லாச் செயல்களிலும் அற நோக்கமே இருந்ததுஎன்கிறார் கு.வெ.பாலசுப்பிரமணியன் (சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள்:.120).
எனவே சங்கப் பொருளியல் சிந்தனை என்பது அறத்திற்கு உட்பட்ட ஒன்றாகவும் அறம் என்ற கட்டுமானத்தின் மேலேயே உருவாக்கப்படுவதாகவும் சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கத் தத்துவார்த்த அடிப்படையை வழங்குகிறது எனலாம்.
பொருள் திரட்டல்:
வினையே ஆடவர்க்கு உயிரே என்று மரபிலக்கியங்கள் வற்புறுத்தினாலும் உற்பத்தியிலிருந்து அல்லது உடல் உழைப்பிலிருந்து பெண்கள் விலக்கி வைக்கப்பட்டவர்கள் அல்லர். ‘கண்ணுக்குத் தெரியாத உழைப்புஎன்றே அவர்களின் உழைப்பு சமகாலத்தில் பார்க்கப்படுகிறது. ‘பொருளீட்டல்என்ற வினையில் ஈடுபடும் ஆண்களை விட, அதிகமான அளவு உடல் உழைப்பைச் சிந்தும் சமூகப் பிரிவினராகப் பெண்களே இருக்கிறார்கள்.
சங்க காலப் பகுதியில் பெண்கள் எல்லாக் காலங்களையும் போலவே பொருளுற்பத்தி, வாணிகம் முதலான அடிப்படைகளில் பொருளீட்டுபவராகவும் உள்ளனர். உமணப் பெண்டிர் உப்பு விற்றுப் பொருளீட்டியமையை அகநானூறு சுட்டிக் காட்டுகிறது.
நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும்
அவ்வாங்கு உந்தி, அமைத்தோ ளாய்!’ (அகம்.390)
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து,
கொழுமீன் தனியொடு குறுமகள் கொடுக்கும்’ (அகம்.60)
போன்றவை உமணர் பெண்டிர் உப்பு விற்றமைக்குச் சான்றுகள் ஆகும். இவை மட்டுமின்றிச் சங்க இலக்கியப் பரப்பில் விரிவான குறிப்புகள் உள்ளன.
முல்லை நிலப் பெண்கள் பால்வினைப் பயன்கள் விற்றுப் பொருளாதாரப் பயன் எய்தியமை சங்க இலக்கியத்தில் மிகுதியான இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘………………………………… ஆய்மகள்
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர்
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல்
மிகந்தனர் கொடுப்ப…………………’ (புறம்.33)
-எனவே பெண்கள் உப்புவிற்றும் பால்,மோர்,தயிர்,நெய் விற்றும் பொருளீட்டினர் என்பது புலப்படுகிறது.
உணவு சேகரித்தல், வேட்டையாடுதல் என்பதிலிருந்து உணவு உற்பத்தி செய்தல் என்று வளர்ந்தது மிக முக்கியமான பொருளுற்பத்திச் செயல்பாடு ஆகும். இனக்குழு வாழ்க்கையில் பெண்கள் கையில் இருந்த விவசாய உற்பத்தி என்பதும் பிற்காலத்தில் அரசு உருவாக்கக் காலத்தில் புதிய தன்மைகளை எட்டியது. பாசனக் கட்டுமானங்கள், புதிய உற்பத்தி முறைமைகள் என அவை விரிவடைந்தன.
தனிச்சொத்து, குடும்பம் ஆகிய கட்டுமானங்கள் ஆண் தலைமையினை ஏற்றுக் கொள்வதாயின. ஆண்மை பெண்மை என்ற இருமை எதிர்வுகளில்பெருமையும் உரனும் ஆடூஉ மேன’ (தொல். ) என்று பேச வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே பொருள் தேடுதல் உரனுடைய முயற்சியாக முன்வைக்கப்படுவது குறிப்பிடத் தக்கது.
பொருள் தேடுதலில் பெண்கள்:
முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை’ (தொல்.அகம்.34) என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தலைமகன் தன் தலைவியோடு கலத்திலேறிக் கடல் தாண்டிச் செல்வதில்லை என்பது அதன் செய்தி. ஆனால் இதற்குச் சிலர் பொருள் கொள்ளும் முறைமையினை எடுத்துக்காட்டி மறுத்துரைக்கிறார் தி.சு.பாலசுந்தரனார். அதாவது, ‘தலைமகன் தன் தலைவியோடு கலத்திலேறிக் கடல் தாண்டிச் செல்வதில்லை; ஆயினும் காலிலேறி நாட்டிடையே செல்வதுண்டுஎன்று தமக்கு வேண்டிய வகையாய்ப் பொருந்தாப் பொருளுரைத்துப்பொருள் பொருட்டுத் தலைவன் தலைவியோடு செல்லும் வழக்கம் பண்டு நிகழ்தலுண்டுஎன்று உண்மையைத் திரித்துக் கூறுவாருமுளர்’ (பாலசுந்தரனார்.தி.சு; பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கை: .149) என்கிறார். மேற்குறித்த கருத்துக்கு இலக்கியச் சான்று ஏதுமிருப்பதை எடுத்துக்காட்டும் நச்சினார்க்கினியர் அதனைத் திட்டவட்டமாக மறுத்துரைக்கிறார்.
தலைவன் தன் தலைவியையும் உடன் கூட்டிக் கொண்டு தன்னூர் நடந்து செல்வதெல்லாம், அவளுடன் யாறுங் குளனும் படிந்த நீர் விளையாடியும், குன்றும் பொழிலுந் தங்கிப் பூ விளையாடியும் அங்கெல்லாம் காணப்படும் புது மகிழ்ச்சியினை நுகர்ந்துறைதற்கேயா மென்று,
யாறுங் குளனுங் காவும் ஆடிப்
பதியிகந்து நுகர்தலும் உரிய வென்ப’ (தொல்.கற்பு.50)
என்று கற்பியற்கண் ஒரு நூற்பா இயற்றி நிறுத்துகின்றார்என்கிறார் அவர். (.149)
எனவே பொருள் நாடி வேற்று நாட்டிற்குச் செல்லும் தலைமகன் தன் தலைவியையும் உடன் கூட்டிச் செல்லல் பண்டைத் தமிழ் வழக்கன்றென்றே தெற்றென உணரல் வேண்டும் என்பார் அவர். எனவே பெண்கள் பொருள் தேடிப் புலம் பெயர்தலில்லை என்பதோடு, பொருள்தேடிச் செல்லும் தலைவனுடன் சேர்ந்து பயணப்படுதல் இல்லை எனலாம். அவ்வாறு இருப்பின்பொருள் வயிற் பிரிதல்என்ற இலக்கிய உத்தியே பொருளற்றுப் போகும் என்பது பெறப்படுகிறது.
பொருள் தேடுதல் ஆடவர் இயல்பெனல்:
செய்பொருட்கு அகல்வது என்பது ஆடவர் பண்பு; அப்பிரிவை மகளிர் பொறுத்திருத்தல் கடமை என்று பேசுகிறது நற்றிணைப்பாடல் (24) ஒன்று. ‘செயல்படு மனத்தர் செய்பொருட் ககல்வர் ஆடவரதுவதன் பண்பேஎன்கிறது அது. எனவேவினையே ஆடவர்க்கு உயிரேஎன்பதையே பண்டைய இலக்கியங்கள் பல்வேறு வகைகளில் வற்புறுத்துவதைக் காணமுடிகிறது. ‘உத்தியோகம் புருஷ லட்சணம்என்னும் தற்காலச் சொலவடையை நினைவுறுத்திக் கொள்ளலாம்.
பொருள் முயற்சி வகைகளும் பிரிவும்:
உலகத்தில் பொருள் தேடும் வழிகளாயுள்ள தொழில்களெல்லாம் அறிவு முயற்சியும் உடல் முயற்சியும் என இரு வகைப்படும் என்பார் தி.சு.பாலசுந்தரனார் (:155). அறிவு முயற்சி என்பது புலவர், அமைச்சர், கணக்கர் முதலியோர் தங்கள் அறிவுத் திறத்தாலும் புலமைத் திறத்தாலும் பொருளீட்டுவதாகும். உடல்முயற்சி என்பது இவை தவிர்ந்த உற்பத்தி, வாணிகம், போர் முதலியவை ஆகும்.
அறிவு முயற்சிக்கான பிரிவு என்பது திங்கள் நாட் கணக்கிலேயே அமைந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவை குறுகிய கால முயற்சியே ஆகும். ஆனால் உடல் முயற்சி என்பது பெரும்பாலும் திங்கள், பருவ (இருது)க் கணக்கிலேயே இருந்திருக்க வேண்டும்.
பிரிவின் நீட்டம் நிலம்பெயர்ந் துறைவோர்க்
குரிய தன்றே யாண்டுவரை யறுத்தல்’ (இறையனாரகப்பொருள்)
என்று குறிப்பிடப்படுவதும் பிற்கால வழக்கு எனலாம்.
பிரிவுக் காலம்:
தமிழ் மரபில் எடுத்துரைக்கப்பட்ட பிரிவுகள் அறுவகைப்படும்.
அவை, 1. உயர்கல்வி, 2. நாடு காத்தல், 3. போர் புரிதல், 4. பொருளீட்டல், 5. அரசனுக்கு உதவி, 6. பரத்தையர் நிமித்தம் பிரிதல்.
பொருள் வயிற் பிரிதல் என்பது பொருள் வயிற் பிரியும் தலைமகன் ஓராண்டுக்குள் திரும்புவான் என்பது இளம்பூரணர் கருத்தாகும் (190).
எக்காலத்தில் பிரிவு?:
இலக்கணிகளால் அடையாளப்படுத்தப்பட்ட ஆறு பெரும்பொழுதுகளில் பிரிதற்குரிய பொழுது வேனில் பருவமாகும். ‘தலைவன் தலைவியர்க்குட் பிரிவு நிகழ்வதெல்லாம் தலைவன் நாடிடையிட்டுங் காடிடையிட்டும் வெளியே சென்று கருதிய தொழிலை முயன்று முடித்தற்கே யாதலின், அங்ஙனமொரு போர்ச்செயல் முதலான பெருஞ்செயல்களை மேற்கொண்டு முயன்று முடித்தற்கு உரிய காலம் அவற்கு வேனிற் பருவமேயாகும்’ (தி.சு.பாலசுந்தரனார்;159) என்பர். ஏனைய பருவங்களெல்லாம் கருதிய வேலையை முடித்தற்கு மழையாலும் பனியாலும் இடையூறு பயப்பனவாகும்.
உலகத்தில் நிகழும் புற முயற்சிகளெல்லாம் பெரும்பாலும் வேனிற் பருவத்திலேயே நிக்ழ்தலும், கார்ப்பருவத்தே நிறுத்தப்படுதலுங் கண்கூடாகும். எனவே ஒரு செயலையெடுத்து முயன்று ஆற்றவேண்டுந் தலைமகன் அது செய்தற்குரிய வேனிற்பருவத்தே பிரிந்து, அச்செயன் முயற்சி கார்காலந் தொடங்கியவுடன் நிகழமாட்டாமையின் அக்கார்காலத் தொடக்கத்தே அம்முயற்சியை முடித்துக் கொண்டோ அல்லததனை நிறுத்திக் கொண்டோ மீள்வனென்பது நன்கு பெறப்படும்’ (தி.சு.பாலசுந்தரனார்;.159) என்பர்.
ஆகவேதான், ‘நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு…’ (தொல்.அக.9) என்று பாலைத்திணைக்குரிய பெரும்பொழுதைக் குறிப்பிடுகிறது தொல்காப்பியம். இருத்தலை உரிப்பொருளாகக் கொண்ட முல்லைத்திணைக்கு, ‘காரும் மாலையும் முல்லை’ (தொல்.அகம்.6) என்கிறது.
பொருள் தேடும் முயற்சிக்கு வறுமை காரணமா?
அக இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தலைவன் வளமை குன்றியவனாகக் காட்டப்பெறவில்லை. ‘நாடு கிழவோன், குன்று கிழவோன்என்று வளமை மிகுந்தவனாகவே சிந்தரிக்கப்படுகிறான். அவ்வாறாயின் அவன் தனது மூதாதையர்களால் சேகரித்து வைக்கப்பட்ட பொருளியல் வளம் உடையவனாகவே தென்படுகிறான்.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இளம்பூரணர், ஒருவனுடைய பொருள் வரவு நெறி என்று நான்கு முறையினைக் குறிப்பிடுகிறார் (217).
1.   தாயத்தான் எய்துவன
2.   ஒருவன் கொடுப்ப ஒருவன் பெறுவன
3.   உழவு முதலிய வினையான் வருவன
4.   பகைவரிடமிருந்து பெறுவன
தாயத்தால் எய்திய பொருளியல் வளத்தை உடையவனாகத் தலைவன் இருப்பின் அவற்றை வைத்து இல்லறத்தை இனிதுற நடத்திச் செல்லாமல் தலைவியைப் பிரிந்து துன்புற்றுப் பொருளீட்டும் முயற்சியில் தலைவன் ஏன் ஈடுபட வேண்டும் என்ற வினாவெழுகிறது.
முன்னோர் தேடி வைத்த பொருளைச் செலவு செய்யாமல், தன் முயற்சியால் பொருள்தேடிச் செலவு செய்தல் குடும்பத் தலைவனுக்கு உரிய கடமையாக இருந்ததுஎன்று தனது ஓவச் செய்தியில் குறிப்பிடுகிறார் மு..
பொருள்வயிற் பிரிதலென்பது நல்குரவு காரணமாகவன்று என்று எடுத்துரைக்கிறார் நக்கீரர். இறையனார் களவியல் உரையில் (36) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
இனிப் பொருள்வயிற் பிரியுமே யெனின் முன்னர்ப் பொருளிலனாயினானாம், ஆகவே எள்ளநர்ப் பணித்தலும் இரந்தோர்க் கீதலும் என்னும் இவையெல்லாம் பொருட்குறைபாடுடையார்க்கு நிகழாமையின் இக்குறைபாடுகளெல்லாம் உடையனாம்; அவை யுடையானது பொருவிறப்பு என்னையோ வென்பது…. பொருட் பிணியென்பது பொருளிலனாய்ப் பிரியுமென்பதன்று, தன் முதுகுரவராற் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொருளெல்லாங் கிடந்ததுமன், அது கொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை யன்றெனத் தனது தாளாற்றலாற் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்வதற்குப் பிரியுமென்பதுஎன்று குறிப்பிடுகிறார்.
எனவே முன்னோர் பொருளைத் துய்த்தல் என்பது தாளாண்மைக்கு அழகாகாததாலும் அம்முன்னோரின் பெருஞ்செல்வம் தன் காலத்தில் தனக்கு உதவியது போலவே வருங்காலத் தனது சந்ததிக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையிலும் பொருத்தமற்றது ஆகும். ‘அம்முன்னோர் பணமென்பது தலைவனுக்குப் பொருள் தேடும் பருவமும் ஆற்றலும் வருந்துணையும் உதவியாய் நிற்றற்குரியதேயன்றி அதற்கு மேலும் அவற்கு அஃது உதவியாறக் கன்றாமாதலாலும் தலைவன் தான் மேற்கொண்ட இல்வாழ்க்கையினை நடத்துதற்குத் தானே முயன்று பொருள் தேடுதலை விரும்பினான்’ (தி.சு.பாலசுந்தரனார்:.154) என்பர்.
திருமணத்துக்குமுன்ஏன்பொருள்தேடவில்லை?
தலைவியைத் தலைவன் வரைந்து கொள்ளுதற்கு முன்னர்ப் பொருள் தேடிச் செல்லுதல் பெருவழக்கில்லை. சிறார் பருவத்திலிருந்து வளர்ந்து இளைஞனாகத் தலைவன் உருமாறிய காலத்திலேயே தலைவியின் மீதான காதல் ஏற்படுகிறது. எனவே அக்காலகட்டத்தில் பொருளைத் தேடுதல் உரிய செயலன்று. தலைவன் திருமணம் செய்து கொள்ளுவதற்கு முன்னர்ப் பொருள் தேடியதுண்டு என்றும் அது தலைவியை வரைதற் பொருட்டே என்றும் தி.சு.பாலசுந்தரனார் குறிப்பிடுவார் (பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கை;.153). திருமணத்திற்கான பொருளைத் தலைவன் ஈட்டினானே தவிர, திருமணத்துக்குப் பிந்தைய குடும்பத்திற்கான பொருளை ஈட்டவில்லை. எனவே தலைவியை அவன் மணம் செய்த பிறகு பொருள் தேடிச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகிறது எனலாம்.
திருமணத்துக்கு முன்னால் பொருள் தேடும் ஆண்மைப் பருவமே அவன் வரப்பெற்றிலனாதலாலும் வரைதலுக்குப் பின்னால் நிகழவிருக்கும் இல்வாழ்க்கையின் பொருட்டு அவன் முன்னமேயே பொருள் தொகுத்துக் கொள்ளுதற்கு இடமில்லை. எனவே திருமணஞ் செய்துகொண்டதன் பின்னர்த்தான் தலைவன் தனது இல்வாழ்க்கைக்கு வேண்டப்படும் பொருளைத் தேடுதற்கு இடம் பெற்றான்என்பர் (:154).
எனவே திருமணத்திற்குப் பிறகே பொருள் தேடும் முயற்சி தீவிரம் பெறுகிறது என்பது கவனத்திற் கொள்ளத் தக்கது.
அறிவித்துப் பிரிதல்:
இறையனார் அகப்பொருள் பிரிதலை அறிவித்துப் பிரிதல், அறிவியாமல் பிரிதல் என்று இருவகையாகப் பகுக்கிறது. ஆனால், தலைவன் தலைவியைப் பிரிதலை அறிவித்துப் பிரிதலே சிறப்பு என்றும் குறிப்பிடுகிறது அது. எனவே தலைவன் தலைவியைப் பொருள்வயிற் பிரியப்போகிறேன் என்று அறிவிப்பதன் காரணமாகவே பிரிவதற்கான சூழலும் இலக்கியத் தளமும் கிடைக்கிறது எனலாம்.
பொருளா? புணர்வா?:
அறத்தையும் பொருளையும், அறத்தையும் இன்பத்தையும் எதிர் முரணாகச் சித்தரிக்கும் மரபு சங்க இலக்கியக்காலத்திலேயே தோற்றம் பெற்றுவிட்டதெனினும் அவற்றை இணைவுபடுத்தும் முயற்சிகளும் அக்காலகட்டத்திலேயே வெளிப்பட்டமையைக் காணமுடிகிறது. மேற்குறித்த எதிர்வு விதந்தோதப்பட்ட இலக்கியக்காலகட்டமாகப் பக்தி இலக்கியங்கள் இருக்கின்றன. பொருள் மற்றும் புணர்வு குறித்த தத்துவ விவாதம் சங்க அக இலக்கிங்களில் பொருள்வயிற் பிரிவின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
புணரின் புணராது பொருளே பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே…’ (நற்.16)
புணர்ச்சி இன்பத்திலீடுபட்டுப் பொருள்வயிற் பிரியாதிருப்பின் பொருள் புணராது என்பதும் பொருள்வயிற் பிரிந்து சென்றால் தலைவியின் புணர்வைப் பெறுதல் இயலாது என்பதுமான முரண் தர்க்கம் நுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளது.
தலைவியைப் பிரிதல் என்பது உலகியலார் வழங்கும் அறநெறியைப் புறக்கணித்ததாகும் என்று நற்றிணையில் (337) தோழி பேசுகிறாள். ஆனாலும் தோழிக்கான எதிர்க்குரலும் அக இலக்கியங்களில் இல்லாமல் இல்லை. ‘அறன் கடைப்படா வாழ்க்கையைப் பொருள் தருவதால் தலைவர் பிரிதல் சரியானதே’ (அகம்.155) என்று தலைவன் கூறியதாகத் தலைவி கூறுவதும் கவனத்திற்குரியது. எனவே பொருள், புணர்வு குறித்த விவாதம் அக இலக்கியப் பொருள் வயிற் பிரிவில் நுட்பமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பொருள் தேடுதலைப் பழித்துரைத்தல்:
பொருளின் இன்றியமையாமை வற்புறுத்தப்படினும் அகவாழ்க்கை அதனை ஏற்றல் எளிதில்லை. எனவே பொருள் தேடும் முயற்சியைப் பழித்தலும் பொருள் தேடும் தலைவனைப் பழித்தலுமான செயல்பாடுகள் எதிர்ப்படவே செய்கின்றன. எனவேதான் பொருள் தேடிச் செல்லும் தலைவனைஅருள் இல்லாதவன்என்றும்இரங்காதவன்என்றும் (அகம் 75) குறிப்பிடுகின்றனர் பெண்டிர். ‘பொருளையே நம்மினும் விரும்பினார் தலைவர்’ (அகம்.53) என்றும் கடிந்துரைக்கின்றனர். கலித்தொகை 13 ஆம் பாடலில்பொருள் தேடுதலை வேண்டா முயற்சி எனக் கூறவந்த தோழியும், தன்னையறியாது, காதலர் வாழ்வுக்குப் பொருள் வேண்டுமென்பதையும், அது செந்நெறியாற் செய்யப்பட வேண்டுமென்பதையும் கூறினாள்’ (கு.வெ.பாலசுப்பிரமணியன்:.120) என்பர்.
அக இலக்கியங்களில் பொருள் தேடும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டன போலத் தோன்றினும் அவை செலவழுங்கலேயன்றிச் செலவு தவிர்தல் இல்லைஎன்பார் கு.வெ.பாலசுப்பிரணியன் (:120-121).
பிரிவின் விளைவுகள்:
பிரிவுச் செய்தி கேட்டுத் தலைவி நடுக்குறுதலும் அதைக்கண்டு தலைவன் நகுதலும் கலித்தொகையில் கூறப்படுகிறது (கலி.13). பிரிவினால் தலைவியின் எழில் கெடும் (அகம்.81), வளை நெகிழும் (நற்.26), மேனி பசப்புறும் (குறுந்.33), கவின் கெடும் (ஐங்.310), நோயுறும் (கலி.2) என்றெல்லாம் பிரிவின் விளைவுகள் குறிப்பிடப்படுகின்றன.
இதன் உச்சமாகசில நாட்களில் திரும்பி வருவதாகச் சொல்லும் தலைவனே, நீ வரும் வரையில் இவள் உயிர் வாழாள் என்பதை நன்கறிந்த பின் செல்க!’ (நற்.19) என்று தோழி குறிப்பிடுவது கவனத்திற்குரியது. ‘இன்னுயிர் தருதலும் ஆற்றுமோ’ (கலி.7) என்றும் குறிப்பிடப்படுகிறது.
தலைவி, தலைவனின் பிரிவை ஏற்றுப் பேசும் புரிந்துணர்வு அம்சங்களும் சங்க இலக்கியப் பாடல்களில் உள (நற்.214). எனவே பொருள்வயிற் பிரிதல் என்பதைப் பழித்தலும் விளைவு கூறலும் தலைவனின் அன்பை மிகுவிக்கவே எனலாம்.
இலக்கியத்தின் தொழிற்பாடு:
பொருளின் இன்றியமையாமை குறித்துப் புறநானூறு முதலான பொது இலக்கிய நூல்களில் போதிக்கப்படும் அறவுரைகளை விட, மேற்குறித்த அக இலக்கியங்களே வாசிப்பாளனின் மனத்தில் நுண்ணிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இலக்கியத்தின் வியத்தகு தொழிற்பாடும் அதுதான். கருத்தியல்களை நிலைநிறுத்த இலக்கியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற மார்க்ஸின் கூற்று இங்கு நினைவுகூரத்தக்கது.
பொருள்வயிற் பிரிதல், செலவழுங்குவித்தல், ஆற்றியிருத்தல் என்பவை யாவுமே பொருளீட்டல் அதற்கான பொது ஏற்புநிலையை உருவாக்குதல் என்ற அடிப்படையிலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளன எனலாம்.
முடிவாக
உடைமைச் சமூகத்தில் ஆண்கள் தலைமையிடம் பெற்றதன் பின்னணியில் பொருள் தேடுதலும் அவற்றுக்கு ஒரு பொதுநிலைப்பட்ட நோக்கத்தை வழங்குவதும் அதற்கான பொதுச் சமூகத்தின் ஏற்பைக் கோருவதுமே பொருள்வயிற் பிரிவு குறித்த இலக்கியச் செயல்பாட்டின் அடிப்படையாகின்றன.
பொருளின் இன்றியமையாமை, நிலையாமை என்ற எதிர் முரண்களும் பொருளினால் விளையும் பயன்கள், இழப்பவை பற்றிய எதிர்வுகளும் நிறுவ விரும்புவது பொருளின் ஏற்பைத்தான்.
கைப்பொருளை மெய்ப்பொருளாக்கும் தத்துவார்த்த முயற்சியில் அக இலக்கியங்கள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன எனலாம்.

முதன்மைச் சான்றாதாரங்கள்:
1.   அகநானூறு
2.   குறுந்தொகை
3.   புறநானூறு
4.  நற்றிணை
5.   கலித்தொகை (அனைத்து நூல்களும் என்.சி.பி.எச் வெளியீடுகள், பதிப்பாசிரியர்கள்: அ.மா.பரிமணம், கு.வெ.பாலசுப்பிரமணியன்; ஏப்.2004)
6.  தொல்காப்பியம் (மர்ரே எஸ்.ராஜம் பதிப்பு)

     துணைமைச் சான்றாதாரங்கள்:
1.   ------------- ‘இறையனார் களவியலுரை; திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்; 1963.
2.   பாலசுப்பிரமணியன் கு.வெ; ‘சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள்; தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்;திசம்பர் 1994.
3.   பாலசுந்தரனார் தி.சு; ‘பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கை; திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்; 1960.
4.  வரதராசனார்.மு; ‘ஓவச் செய்தி; பாரிநிலையம், சென்னை;1980.

No comments: