Thursday 24 July 2014

தன்னாட்சிக் கல்லூரிகளின் இளநிலை மொழிப்பாடத்திட்டம் இருப்பும் தேவையும் - கி.பார்த்திபராஜா


தன்னாட்சிக் கல்லூரிகள் பகுதி அளவிலான பல்கலைக் கழகங்களுடன் இணைவு பெற்றிருந்தாலும் சுயசார்புடன் பாடத்திட்டங்களை அமைத்துக் கொள்ளும் அதிகாரம் மிக்கவையாக உள்ளன. தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் அக்கல்லூரியின் கல்விக்குழுவின் முன் வைத்து விவாதத்திற்கு உட்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
மொழிப்பாடம்-2 இளநிலை கலையியல், இளநிலை அறிவியல் பட்டங்களுக்கு நான்கு பருவங்களுக்கும் உரியவையாகின்றன. இளநிலை வணிகவியல், வணிக மேலாண்மை முதலான பட்டங்களுக்கு முதல் இருபருவங்களுக்கு மட்டுமே மொழிப்பாடம் உரியவையாக்கப்பட்டிருக்கின்றன. மேற்குறித்த அமைப்பிலான பாடத்திட்டத்தில் சமமின்மை நிலவுகிறது.
கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் இடம்பெறும் தமிழ்மொழிப்பாடம், பள்ளிகளில் இடம்பெறும் தமிழ்ப்பாடத்தின் தொடர்ச்சியாக அமைவது இல்லை. அதாவது பள்ளிகளின் பாடத்திட்ட அமைப்பும் தன்னாட்சிக் கல்லூரிகளில் இடம்பெறும் பாடத்திட்டத்தின் அமைப்பும் மிகவும் வேறுபட்டுள்ளன. எனவே மாணவர்கள் தமிழ்மொழி கற்பதில் ஒரு தொடர்ச்சியின்மையை எதிர்கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்.
தமிழ்மொழிப்பாடத்திற்கும் தமிழ் இலக்கியப்பாடத்திற்குமான வேறுபாட்டினை அறிந்தவையாகத் தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் இல்லை. பெரும்பாலான கல்லூரிகளின் தமிழ்மொழிப்பாடங்கள் தமிழ் இலக்கியப்பரப்பை அறிமுகப்படுத்தும் பாடங்களாகவே இருக்கின்றன.
மொழித்திறன், இலக்கியத்திறன், திறனாய்வுத்திறன், படைப்புத்திறன் எனப்பல்வேறு வகைகளாகப் பகுக்கப்படும் திறன்களில் மொழித்திறன் பின்னுக்குத் தள்ளப்பட்டுப் பிற திறன்கள் முதன்மை பெறுவதைப் பெரும்பாலான தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் காணமுடிகிறது. எனவே மொழியைக் கையாளும் திறன் குறித்த கவனம் பாடத்திட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
மொழித்திறன் என்ற நோக்கில் அமைக்கப்படும் பாடங்களிலும் அவற்றின் நோக்கம் இலக்கணக்குறிப்புகள் என்ற அளவில் குறுகியிருப்பதைக் காணமுடிகிறது. அதாவது மொழியின் கட்டமைப்புக் குறித்த விதிகளை விளக்கி, அவற்றுக்குரிய எடுத்துக்காட்டுக்களைத் தரும் வழமையான மொழிக்கல்வி அமைப்பு முறையே முதன்மையாக உள்ளது.
பயன்முறை மொழித்திறன் என்ற நோக்கில் பாடத்திட்டங்கள் கவனம் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நடைமுறையில் பயன்படுத்தத்தக்க வகையில் மொழித்திறன் பாடங்கள் எளிதாக்கப்படல் வேண்டும். மாணவர் பயிலும் பட்டப்படிப்புத்துறை சார்ந்த நெருக்கம் மொழித்திறன் பாடங்களில் இணைவுபடுத்தப்படல் வேண்டும். நடைமுறை என்று குறிப்பிடும்போது, தொடர்வண்டி நிலையங்களில் உள்ள முன்பதிவுப் படிவங்கள், வங்கிப் படிவங்கள், அரசு விண்ணப்பங்கள் முதலானவற்றைத் தமிழில் எழுதி நிறைவு செய்யும் பயிற்சி முதலானவை இடம்பெறலாம். தானியங்கிப் பணம் வழங்கும் மையங்கள் (ஏ.டி.எம்) முதலானவற்றில் தமிழில் பயன்படுத்தும் முறைகளைக் கற்பித்தலின் வழியாக மொழித்திறன் பாடத்தை நடைமுறை சார்ந்து மாற்றிட இயலும்.
தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடங்களில் மொழிப்பாடத்தில் இலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. அவை காலவாரியாக வகைக்கு ஒருசிறு பகுதி என்ற அளவில் இடம்பெறுகின்றன. இவற்றின் அமைப்பு முறையில் தமிழின் முதன்மை இலக்கியத் தொகுதிகளிலிருந்து சிறுபகுதியாவது இடம்பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணமும், எவையும் விடுபட்டுவிடக்கூடாது என்ற முனைப்பும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. வகைமாதிரிகள் இடம்பெற்றுள்ளன என்பதைத் தாண்டி, பாடத்திட்டத்தின் நோக்க நிறைவேற்றத்திற்கு இவை எவ்வகையிலும் உதவுவதில்லை.
மொழிப்பாடத்திட்டத்தில் அமைக்கப்படும் மரபிலக்கியங்கள் உண்மையில் பாடத்திட்டம் என்ற நிலையைத் தாண்டி மாணவர்களை வேறு எத்தளத்திற்கும் நகர்த்தாத நிலையே பொதுவாக உள்ளது. மொழிப்பாடத்தில் அமைக்கப்படும் இலக்கியங்கள், மாணவர்களின் கற்கும் ஆர்வத்தைத் தூண்டிட வேண்டும். பாடத்திட்டத்தைப் பின்தொடர்ந்து பிற இலக்கிய வகைமைகளுக்கு அவை இட்டுச்செல்ல வேண்டும். ஆனால் அவ்வாறான தொடர் பயணத்துக்கான வாசல்கள் இன்றைக்கு உள்ள பாடத்திட்டங்களில் இடம்பெறவில்லை. சொல்லப்போனால் பாடத்திட்டங்களில் அமைக்கப்படும் மரபிலக்கியங்களும் அவற்றைக் கற்பிக்கும் முறைமைகளும் வினாத்தாள் அமைப்பு மற்றும் விடையிறுக்கும் நிலைகளும் மாணவர்களுக்குத் ‘தெருமறிச்சான்’களாகவே இருக்கின்றன. தொடர்ந்து கற்கும் ஆர்வத்தினைத் தூண்டுவதில்லை என்பதோடு, மதிப்பெண் என்பதைத் தாண்டிக் குறிப்பிட்ட இலக்கியத்தின்மீது எந்த மரியாதையையும் உருவாக்குவதில்லை. எனவே மரபிலக்கியங்களை அல்லது தமிழின் இலக்கியத் தொகுதிகளை அறிமுகப்படுத்திவிடவேண்டும் என்ற நிலையிலிருந்து இறங்கி, மாணவர்களுக்குக் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் எளிய உரைநடை அமைப்பிலான இலக்கியங்கள் இடம்பெறுவது அவசியமாகிறது.
தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெறும் சமகாலப்படைப்புகள் அல்லது நூல்களைக் குறித்த அளவில் அவற்றின் தரம் பெரும்பாலும் கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள இலக்கிய வரலாறுகள் உண்மையில் ‘இலக்கிய வரலாற்றுணர்வு’டன் எழுதப்பட்டனவா என்ற கேள்வி எழுவது இயல்பாகிறது. ஏனெனில் புற்றீசல்களைப் போல இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் பெருக்கம் நம்மைத் திகைக்க வைக்கிறது. பாடத்திட்டத்தில் இடம்பெறும் இலக்கிய வரலாறுகள் தமக்கு முன்னால் வெளிவந்த நாலைந்து இலக்கிய வரலாறுகளின் கலவைகளாகவே இருக்கின்றன. எனவே ஏராளமான தகவல் பிழைகளுடன் அவை வெளியிடப்பட்டுள்ளன. எனவே இலக்கிய வரலாற்றினை மொழிப்பாட மாணவர்கள் கற்பதின் அவசியம் என்ன என்ற கேள்விக்கு இக்கலவை இலக்கிய வரலாறுகள் பதிலளிப்பதில்லை.
பாடத்திட்டத்தில் இடம்பெறும் சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், நாடகங்கள், பிற நூல்களின் ஆசிரியர்கள் அவர்களின் இலக்கியத் தகுதியால் இடம்பெறுவதைக் காட்டிலும் துறைத்தலைவர்களுக்கு நெருக்கம் என்ற தகுதியால் இடம்பெறுபவர்களாகவே இருக்கின்றனர். சிறுகதைகள், கவிதைகள் முதலான சமகாலப்படைப்புகள் மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் தன்மையுடையனவாக அமைய வேண்டும். தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் மிக முக்கியமான படைப்புகள் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்.
தன்னாட்சிக் கல்லூரிகளின் மொழிப்பாடம் மட்டுமல்ல அனைத்து மொழி, இலக்கியப்பாடங்களுக்குமான கற்பித்தல் வழிகாட்டிக் கையேடு ஒன்று அவசியமாகிறது. ஆசிரியர்களுக்கு அவை பாடத்திட்டத்தை அதன் நோக்கம் கருதிக் கற்பிக்கும் வழிமுறைகளைக் கற்பிக்க வேண்டும். எளிய, ஈர்ப்பை உருவாக்கும் பயிற்சிகள் அவற்றில் இடம்பெற வேண்டும். மிக முக்கியமாக அவை பயன்படுத்த இயலுவதாக அமைவது அவசியம்.
தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்களின் நோக்கங்களாக விழுமியங்கள், பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றைக் கற்பிப்பது என்பனவே அமைகின்றன. மொழி என்ற அடிப்படையை முழுவதுமாக நிறைவு செய்யாத மாணவர்களுக்குமுன் இவ்வகைப்பாடங்கள் தமிழின் கனதியைக் காட்டுவனவாகவே அமைகின்றன. எனவே தமிழைப் பயன்முறைத்தமிழாகக் கற்பிக்கும் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.

No comments: