Thursday 24 July 2014

மருதத் திணை: துறையும் கூற்றும்


                                             முனைவர் கி.பார்த்திபராஜா
உதவிப்பேராசிரியர்
தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை
தூய நெஞ்சக் கல்லூரி
திருப்பத்தூர்- 35601
வேலூர் மாவட்டம்.
அறிமுகம்:
பண்டைய தமிழ் இலக்கியங்கள் திணை சார்ந்த இலக்கியங்களாகத் தொழிற்பட்டுள்ளன. மக்கள் வாழ்வியல் நெறிமுறைகள் சார்ந்த, செல்நெறிகளைத் தழுவியவையாக இலக்கியங்கள் அமைவது பண்டைய இலக்கிய அமைப்பாகும். அவ்வகையில் பண்டைய தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்வியல் நெறிகளைத் தழுவியனவாக அமைகின்றன. திணைக் கோட்பாடுகள் என்பது வெறும் இலக்கியக் கோட்பாடாக மட்டுமின்றிப் பண்டைத் தமிழர்களின் வாழ்க்கையோடு இயைந்தவையாகவும் அமைகின்றன. திணைக்கட்டமைப்பில் மருதத்திணைத் துறையமைப்பும் அவை இலக்கியத்தின் பொருள் விரிவுக்குத் துணை நிற்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது. அதேபோன்று, செய்யுள் அமைப்பில் ஒரு துணைக்கூறாக வரும் கூற்று, மருதத்திணைப் பொருளைச் சிறப்பிக்கும் தன்மையையும் அதன் கட்டமைப்புநெறியையும் எவ்வாறு தொழிற்படுத்துகிறது என்பதும் நோக்கத்தக்கது.
தொல்காப்பியத் திணைமரபு:
தொல்காப்பியம் தமிழ்மொழியின் கட்டமைப்பை, எழுத்து, சொல் அதிகாரங்களில் விளக்குகின்றது. அதேபோது தமிழ் இலக்கியக் கட்டமைப்பைப் பொருளதிகாரத்தில் விவரித்துரைக்கிறது. தொல்காப்பியம் கூறும் பண்டைத் தமிழ் இலக்கியத்தின் பொருள் கோட்பாடு, திணைக்கோட்பாடே ஆகும். எழுத்திலக்கண, சொல்லிலக்கணக் கோட்பாடுகளைத் தொகுத்துச் சொல்லும்போது இருக்கும் அமைப்பொழுங்கு, இலக்கியக் கட்டமைப்பை விளக்கும் பொருளதிகாரத்தில் இல்லை என்று உறுதிபடக் கூறலாம். தொல்காப்பியரின் பொருள் பற்றிய கருத்துருவாக்கங்களை அதாவது திணைக் கோட்பாட்டு அம்சங்களைப் பொருளதிகாரத்தில் பல இடங்களில் கண்டெடுத்துக் கோத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனவே எளிய கோட்பாடாக மட்டும் திணைக்கோட்பாடு அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக, வாழ்வின் பன்மைத்துவம் அமைவதுபோன்றே பல நிலைகளிலும் பல அடுக்குகளிலும் கருத்தை அமைக்கிறது தொல்காப்பியப் பொருளதிகாரம்.
தொல்காப்பியம் முன்வைக்கும் பண்டைய தமிழ்க் கவிதையியல் திணைக்கோட்பாடு என அறியப்படுகிறது (பழனிவேலு.கே:2011:19). தொல்காப்பியக் கவிதையியல் அகத்திணை முதலாக ஒன்பது இயல்களிலும் விரிவாகப் பேசப்படுகிறது. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று அமைக்கப்படும் வரிசைமுறையில் கவிதையியலுக்கு அப்பொருள்களின் முக்கியத்துவம் வற்புறுத்தப்படுகிறது.
‘முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங்காலை’ (தொல்.அகத்.3)
என்ற கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. ‘முறை சிறந்தனவே’ என்பது குறித்து உரையாசிரியர்களிடம் பல்வேறு கருத்து மாறுபாடுகள் நிலவுகிறது. எனினும் அகக் கவிதை மரபின் இயல்புகளைச் சுட்டிக்காட்டும்போது, முதல், கரு, உரி ஆகியனவற்றின் இன்றியமை சுட்டிக்காட்டப்படுவதாகவும் இதனைக் கொள்ளலாம். அதாவது, அகக் கவிதைகளில் பாடுபொருட்களின் அடிப்படையில் முதற்பொருள் சிறந்தது; அதனினும் சிறந்தது உரி; இவை இரண்டினும் சிறந்தது உரி எனும் கருத்து பொருந்துவதாகிறது.
அகக் கவிதைகளில் ஒரு காட்சியை உருவாக்குவதற்கு முதற்பொருளும் கருப்பொருளும் அடிப்படை ஆகின்றன. எனினும் காட்சிகளை விவரிப்பது மட்டும் தமிழ்க்கவிதையின் நோக்கமன்று; அக்காட்சிகளினூடாக ஒரு கருத்தை வெளிப்படுத்துவதே அதன் நோக்கம். அவ்வடிப்படையிலேயே உரிப்பொருள் சிறந்ததாகிறது. சங்க இலக்கியப் பாக்களில் முதல், கரு சுட்டப்படாத அல்லது வெளிப்படாத பாடல்கள் உள்ளன. ஆனால் உரிப்பொருள் இல்லாத பாடல்கள் அமைவதேயில்லை. இந்த அடிப்படைகளிலிருந்துதான் தொல்காப்பியர் குறிப்பிடும் கவிதையியல் எனும் திணைக்கோட்பாடு விளக்கமுறுகிறது.
முதலும் கருவும் ஒரு பாடலுக்கான அடிப்படையாக அமைய, பாடலுக்குள் உறையும் கருத்து உரி ஆகிறது.
‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலை திணைக்குரிப் பொருளே’ (தொல்.அகத். 960)
 நிலம், பொழுது, கருப்பொருட்கள் என்ற அடிப்படையில் முன்வைக்கப்படும் ஒழுக்கம் எனப்படும் உரிப்பொருள் கவிதையின் பண்பைச் சிறப்பிப்பது. துறை மற்றும் கூற்று என்பது உரிப்பொருளினை மேலும் சிறப்பிப்பது ஆகும்.
துறையும் கூற்றும்:
திணைக்குரிய உரிப்பொருளை விவரிப்பது துறை ஆகும். துறையின் நுண்ணிய விளக்கமாக, துறையில் பல விகசிப்புகளைக் காட்டுவதாக அமைவது கூற்று ஆகும். உண்மையில் கூற்று நுட்பங்களே உரிப்பொருள் எனப்படும் கவிதையின் கருத்துப்பொருளை வாசிப்பாளருக்கு நெருக்கமாக்குகின்றது.
கூற்று:
‘சங்க இலக்கிய, தொல்காப்பியக் கவிதையியல் சுட்டும் உரிப்பொருள் தகவல் தொடர்பியலின் செய்தி அல்லது கருத்து ஆகும். இந்தக் கருத்தைக் கவிதையாக்குகின்ற சூழலும் மொழியும் அவற்றின் இணைப்பக் கூற்றுகளாலேயே உண்டாக்கப்படுகின்றன. இதனால் தமிழ்க் கவிதையியல் பற்றிப் பேசும்போது கூற்று எனும் கலைச்சொல் முக்கியமானதாகின்றது’ (பழனிவேலு.கே:2011:26) கூற்று என்பது தமிழ்க்கவிதையியலில் கவிதைப் பண்பை உள்வாங்கிக் கொள்வதற்கான மிக முக்கியமான கூறு ஆகும்.
கூற்று பற்றிய நூற்று ஐம்பத்து மூன்று நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் பயின்று வருகின்றன என்று கருத்துரைக்கிறார் ‘தொல்காப்பியக் கூற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்துள்ள ச.சிவகாமி. கூற்று என்ற சொல் தொல்காப்பியத்தில் பதிமூன்று இடங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆனால் கூற்று என்ற சொல்லின் பதிலியாகப் பல்வேறு சொற்கள் தொல்காப்பியத்துள் பயிலுகின்றன. கிளவி, செப்பு, சொல், உரை, மொழி ஆகியனவற்றையும் உசாதல், உயிர்த்தல், உரைத்தல், எடுத்தல், என்றல், கழறல், கிளத்தல், கூறுதல், சாற்றல், செப்பல், நுதலிய, பெயர்த்தல், மொழிதல், விடுத்தல் எனப் பல சொற்கள் காணப்படுகின்றன என்கிறார் அவர்.
கூற்று எனும் செய்யுளுறுப்பு:
கூற்று என்பது தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்படும் முப்பத்துநான்கு செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகவே முன்வைக்கப்படுகிறது. கூற்று என்பது மொழிதல், அதனோடு தொடர்புடைய கேட்குநர் பற்றிய குறிப்பும் அதில் இடம்பெறுகிறது.
மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ
யாத்த சீரே அடி யாப்பு எனாஅ
மரபே தூக்கே தொடைவகை எனாஅ
நோக்கே பாலே அளவியல் எனாஅ
திணையே கைக்கோள் கூற்று வகை எனாஅக்
கேட்போர் களனே காலவகை எனாஅப்
பயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஅ
முன்னம் பொருளே துறை வகை எனாஅ
மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகையின்
ஆறுதலை யிட்ட அந்நால் ஐந்தும்
அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅப்
பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ
நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே’ (செய்.1)
என்று கவிதையியல் நுட்ப வகைகளை எடுத்துக் கூறும்போது கூற்றினைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
கூற்று முறைமையும் கூற்று நிகழ்த்துநரும்:
தொல்காப்பியர் கவிதையியலில் கூற்று என்பதைனைச் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகக் குறிப்பிடினும் அதனைக் குறித்த விளக்கத்தைப் பல நிலைகளில் விளக்கியுள்ளார். அதாவது கூற்று என்பதென்ன, எவ்வாறு கூற்று அமைய வேண்டும், கூற்று நிகழ்த்துவோர் யாவர்? எவ்வெச் சூழல்களில் எவ்வெவ்வாறு கூற்று நிகழ்த்த வேண்டும் என்பன் போன்ற விளக்கங்களைப் பல இடங்களில் குறித்துச் செல்கிறார்.
கூற்றுக் கோட்பாடு:
களவியல் மற்றும் கற்பியலில் அக இலக்கியங்களின் தலைமை மாந்தர்களின் கூற்று நிகழிடங்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. ஆனால் செய்யுளியலில் கூற்றின் பல அம்சங்கள் விவரித்துரைக்கப்படுகின்றன.
‘பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோடு
அளவியின் மரபின் அறுவகையோரும்
களவிற் கிளவிக் குரியரென்ப’ (செய்.181)
‘பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்
பேணுதரு சிறப்பிற் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரோடு தொகைஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற்குரியவர்’ (செய்.182)
ஊரும் அயலும் சேரியோரும்
நோய்மருங் கறிநரும் தந்தையும் தன்னையும்
கொண்டெடுத்து மொழியப் படுதலல்லது
கூற்றவணின்மை யாப்புறத் தோன்றும்’ (செய்.183)
‘கிழவன் தன்னோடுங் கிழத்தி தன்னோடும்
நற்றாங் கூறன் முற்றத் தோன்றாது’ (செய்.184)
முதலான நூற்பாக்கள் கூற்றுக் கோட்பாடு தொடர்புடையவை.
மருத்தத்திணையில் கூற்று:
திணை வளர்ச்சிநிலையில் குறிஞ்சி முல்லை நெய்தல் மருதம் என்ற வரிசைநிலையைப் பொதுவாகக் கொள்ளுவது மரபு. ஆனால் இவ்வாறு வளர்ச்சியை அடுத்தடுத்த வரிசைமுறையில் புரிந்துகொள்வது என்பது இயக்கவியல் போக்கை மறுதலிப்பதாகும் என்பது கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் கருத்தாகும். சங்கச் சமூகத்தின் பன்மைத்துவம் என்பது ஒருநில நாகரிகத்திலிருந்து இன்னொரு நிலநாகரிகம் வளர்ந்தது என்ற எளிமைக் கோட்பாட்டை மறுத்தே நிற்கிறது. வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருதநிலத்தின் உற்பத்தி முறைமைகளும் உற்பத்திச் செயல்பாடுகளும் உற்பத்தி உறவுகளும் ‘ஊடலும் ஊடல்நிமித்தம்’ என்ற உரிப்பொருளுக்கு இணக்கமாக அமைகின்றன.
அகநானூற்றின் 40 மருதத்திணைப் பாடல்களில் அகமாந்தர்களில் நான்கு பாத்திரங்களே கூற்று நிகழ்த்தும் பாத்திரங்களாக அமைகின்றன. தலைவி, தோழி, தலைவன், பரத்தை ஆகியோர் அப்பாத்திரங்கள்.
தலைவி கூற்று: 9 பாடல்கள்
தோழி கூற்று : 18 பாடல்கள்
தலைவன் கூற்று: 3 பாடல்கள்
பரத்தை கூற்று: 9 பாடல்கள்.
தலைவிக்கு இணையாகப் பரத்தை ஒன்பது பாடல்களைப் பெற்றிருப்பது அகநானூறு மருதத்திணையில்தான். தோழி அகவிலக்கியங்களில் முதன்மைப்பாத்திரம் என்பது அகநானூற்று மருதத்திணைப் பாடல்களில் எண்ணிக்கையாலும் உறுதியாகிறது. தலைவன் கூற்றாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களே கிடைக்கின்றன.
சூழல்கள்:
தலைவி, தோழி, தலைவன், பரத்தை ஆகியோர் கூற்று நிகழ்த்தும் சூழல்கள் மிகவும் இன்றியமையாதவை.
தலைவியின் கூற்று:
தலைவி கற்பியலில் கூற்று நிகழ்த்தும் இடங்கள் சுட்டப்படுவனவற்றுள்,
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு
அகன்ற கிழவனைப் புலம்பு நனிகாட்டி
இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த் தருக்கி
எதிர்பெய்த்து மறுத்து ஈரத்து மருங்கினும்
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி
எங்கையரக்கு உரை என இரத்தற் கண்ணும்
செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும்
காமக்கிழத்தி தன்மகத் தழீஇ
ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும்
சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி
அறம்புரி நெஞ்சமொடு தன்வரவு அறியாமைப்
புறம்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும்
தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால்
அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்
கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது
நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப்
பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும்
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்
காதல் எங்கையர் காணின் நன்று என
மாதர் சான்ற வகையின் கண்ணும்
தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை
மாயப் பரத்தை உள்ளிய வழியும்
தன்வயின் சிறைப்பினும், அவன் வயின் பிரிப்பினும்
இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும்
காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய
தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்
கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை
வடுவறு சிறப்பின் கற்பின் திரியாமைக்
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்
ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக்
கிழவோள் செப்பல் கிழவதென்ப’ (கற்பி:1093)
பரத்தையிடம் சென்று திரும்பும் தலைவன் தன் செயற்பாட்டை மறைக்கிறான். அச்சூழலில் தலைவி பேசுகிறாள் (அகம்.6, 196, 266, 266). பரத்தையிடமிருந்த வந்த தலைவன், ‘யாரையும் அறியேன்’ என்று பொய்யுரைக்கிறான். அவனது பொய்யுரை குறித்து எள்ளி நகையாடிய வண்ணம் தலைவி பேசுகிறாள் (அகம்.16).
மருதத்திணையில் தலைவி, தோழியிடம் பேசும் சூழல்கள் இருவருக்குமான உணர்வு ரீதியிலான நெருக்கத்தை வெளிப்படுத்துபவை. ‘ஊடல் தீர்ந்தது எவ்வாறு?’ என்ற தோழியின் கேள்விக்குத் தலைவி பதிலளிக்கும் பாடல் சுவை மிக்கது (அகம்.26). தலைவனது பரத்தமை நெருக்கம் அறிந்தும் ஊடாமல் இருந்த காரணம் என்ன என்று தோழி கேட்கத் தலைவி விடையிறுக்கும் பாடல் அகம்.236 ஆகும். வாயிலாக வந்த பாணன் குறித்துத் தோழியிடம் கருத்தைப் பகிர்ந்துகொள்கிறார் (அகம்.56). வாயிலாக வந்த தோழியிடம் தலைவி பேசும் இடங்கள் குறிப்பிடத்தக்கவை. வாயில் மறுத்தும் வாயில் நேர்ந்தவிடத்து ஏற்றும் பேசும் பாடல்கள் தலைவி எனும் அகநிலைப் பாத்திரத்தின் நுட்பமான படைப்பை வெளிக்காட்டுவன. அகம்.66 வாயில் வந்த தோழியிடம் தலைவி பேசுவதாகும். வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுக்கிறாள் (அகம். 146). வாயிலாக வந்த விறலிக்குத் தலைவி வாயில் மறுப்பதும் நிகழ்கிறது (அகம்.206).
 தலைவியின் கூற்று நிகழ்த்துவது அகநானூற்றில் தலைவன், தோழி, பாணன், விறலி ஆகிய நால்வரோடும் ஆகும். இப்பாடல்களில் தலைவியின் கூற்று வாயிலாக உறவுநிலைப் படிநிலைகள் வெளிப்படுகிறது.
தோழி கூற்று:
தோழியின் கூற்றிடங்களைப் பட்டியலிடும் தொல்காப்பியக் கற்பியல்,
‘பிழைத்து வந்திருந்த கணவனை நெருங்கி
இழைத்தாங்கு ஆக்கிக் கொடுத்தற் கண்ணும்,
வணக்கியல் மொழியான் வணங்கற் கண்ணும்
புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்
சிறந்த புதல்வனை நேராது புலம்பினும்
மாண் நலம் தா என வகுத்தற் கண்ணும்
பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்
சூள் நயத்திறத்தால் சோர்வு கண்டு அழியினும்
பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து
பெறுதகை இல்லாப் பிழைப்பினும், அவ்வயின்
உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய
கிழவோள் பால் நின்று கெடுத்தற் கண்ணும்,
உணர்புவயின் வாரா ஊடல் உற்றோள் வயின்
உணர்த்தல் வேண்டிய கிழவோன் பால் நின்று
தான் வெகுண்டாக்கிய தகுதிக் கண்ணும்\
அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
எண்மைக் காலத்து இரங்கத் தானும்’ (கற்பு:1097)
தோழி அகநிலைப் பாத்திரங்களுள் மிக இன்றியமையாத பாத்திரம் ஆவாள். பிற அகமாந்தர்களோடு துணிவாக உறவாடும் பாத்திரமாகவும் தலைவன் தலைவியின் உணர்வுநிலை நெருக்கத்தினைத் தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்ட பாத்திரமாகவும் படைக்கப்பட்டுள்ளாள். தோழியே அகநானூற்றின் மருதத்திணைப் பாடல்களில் அதிகமான கூற்றினைப் பெற்ற (18) பாத்திரம் ஆகும். தோழி, தலைவியின் காதற்கொழுநனுடன் பலநிலைகளில் உரையாடல் நிகழ்த்துகிறாள். வாயில்வேண்டி வரும் தலைமகனிடம் வாயில் மறுத்துப் பல இடங்களில் பேசுகிறாள். 46, 96, 116, 176, 226, 246, 256, 296, 306, 326, 346, 386 ஆகிய அகநானூற்று மருதத்திணைப் பாடல்கள் தோழிகூற்றாகவே அமைகின்றன. தலைவனிடம் வாயில் மறுப்பதும் அவற்றின் பல்வேறு நிலைகளும் குறிப்பிடத்தக்கவை.
வரைவுகடாவும் நிலையிலும் தோழி தலைவனிடம் வற்புறுத்திப் பேசுவது உண்டு. அகம்.156 ஆம் பாடல் அவ்வகையில் அமைவது கருத்திற்குரியது. தலைவனின் சூள் பற்றியும் தோழி ஓரிடத்தில் சுட்டிக்காட்டிப் பேசுகிறாள். அகம்.286. தோழி தலைமகளுக்குச் சொல்லியது அகம்.316, 356.
தலைவன் கூற்று:
தொல்காப்பியம் கற்பியலில் தலைவன் கூற்று நிகழ்த்தும் வகைமைகள் முப்பத்து மூன்று இடங்கள் சுட்டப்படுகிறது. அவற்றில்,
‘பயங்கெழு துணையென புல்லிய புல்லாது
உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப்
புல்கென முன்னிய நிறையழி பொழுதின்
மெல்லென் சீறடி புல்லிய இரவினும்
உறலருங் குரைமையின் ஊடல் மிகுத்தோளைப்
பிற பிற பெண்டிரின் பெயர்த்தக் கண்ணும்’ (கற்பு:1092)
புறத்தொழுக்கம் காரணமாக ஊடல் கொண்டு கிடந்தவளைக் கால்களை வருடி ஊடல் நீக்க முயன்றபோதும், நெருங்கமுடியாத அளவு ஊடல் மிகுத்தோளை, அவளுக்கு நெருங்கிய பெண்டிர் வழி ஊடலை நீக்க முயன்ற போதும் தலைவனின் கூற்றுக்கள் அமைவதைக் காணமுடிகிறது.
அகநானூறு மருதத்திணைப் பாடல்களில் தலைவன் கூற்றாக அமைபவை மூன்று பாடல்களேயாம். வாயில் மறுத்த தோழிக்குத் தலைவன் கூறியது (அகம்.86), தலைவன் தன் நெஞ்சிற்கு, அல்ல குறிப்பிட்டு, தோழி பின்னிற்க உரைத்தது (அகம்.126), உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் தன் நெஞ்சிற்கு உரைத்தது (அகம்.136) ஆகியன தலைவன் கூற்றாக அமைவன ஆகும்.
பரத்தை கூற்று:
பரத்தை வாயிலெனவிரு வீற்றுங்
கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயனிலவே (செய்.190)
என்கிறது தொல்காப்பியம். அதாவது பரத்தையும் வாயிலும் கிழத்தியைக் குறித்து உரை நிகழ்த்த வேண்டும் என்று பரத்தையின் கூற்றுக்குள் வரவேண்டிய செய்தியை எடுத்துக்காட்டுகிறது.
காமக்கிழத்தியர் என்னும் பரத்தையர் கூற்று நிகழ்த்தும் இடங்கள் என்று கற்பியல் பட்டியலிட்டுக்காட்டும் இடங்கள் கருத்திற்குரியவை.
‘புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்
இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும்
பல்வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும்
மறையின் வந்த மனையோள் செய்வினை
பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்
காதல் சோர்வில் கடப்பாட்டு ஆண்மையின்
தாய்போல் தழீஇக் கழறியம் மனைவியைக்
காய்வின்று அவன்வயின் பொருத்தற் கண்ணும்
இன்னகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து
பின்னர் வந்த வாயிற் கண்ணும்
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்
மிகைபடக் குறித்த கொள்கைக் கண்ணும்
எண்ணிய பண்ணை என்று இவற்றோடு பிறவும்
கண்ணிய காமக் கிழத்தியர் மேன’ (கற்பு:1097)
என்று குறிப்பிடுகிறது. காதல் சோர்வினாலும், இல்லறக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதாலும் தலைவியைத் தாய்போல் தழுவி, அன்பாகப் பேசி, வெறுத்தலின்றித் தலைவனுடன் இணைக்கும் போதும் காமக்கிழத்தியர் கூற்று நடக்கும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது.
பரத்தை என்னும் பாத்திரம் தலைவனோடும், தனக்குப் பாங்காயினோரிடத்தும், தலைவிக்குப் பாங்காயினோரிடத்தும் கூற்று நிகழ்த்தியிருப்பது அகநானூற்று மருதத்திணைப் பாடல்கள் வழியாக அறிய முடிகிறது. பரத்தை தன் பாங்காயினார் கேட்ப உரைத்தது (அகம்.166, 216), தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது (அகம்.76, 186, 276), காதற்பரத்தை புலந்து தலைவனிடம் உரை நிகழ்த்தியமை (அகம்.376), தலைமகனோடு கூற்று நிகழ்த்தியமை (அகம்.396), நயப்புப் பரத்தை இற்பரத்தையின் பாங்காயினார் கேட்பக் கூறியது (அகம்.336) எனப் பல பேரோடும் பல நிலைகளிலும் கூற்று நிகழ்த்தியமை அறியமுடிகிறது.
ஐங்குறு நூற்றில் மருதத்திணை:
பத்துப் பத்துப் பாடல்கள் என நூறு பாடல்கள் கொண்ட ஐங்குறு நூற்றின் மருதத்திணையில் வேட்கைப் பத்து, வேழப்பத்து, களவன் பத்து, தோழிநுவலர், புலவிப் பத்து, தோழி கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டு, புலவி விராயப் பத்து, எருமைப் பத்து என அப்பகுப்புகள் அமைகின்றன.
தலைவன், தலைவி, தோழி, பரத்தை ஆகிய நால்வரின் குரலும் ஐங்குறுநூற்று மருதத்திணைப் பாடல்களில் எதிரொலிப்பதைக் காணமுடிகிறது.
கலித்தொகையில் கூற்று:
மருதக்கலியில் தலைவன், தலைவி, தோழி, காமக்கிழத்தி ஆகிய நால்வர் மட்டுமின்றிக் குறளும் கூனும், சான்றோரும் கூற்று நிகழ்த்தியிருக்கும் பாடல்கள் உள்ளன. தலைவியின் கூற்றாக மருதக்கலியில் உள்ள பாடல்கள் இருபத்து இரண்டு ஆகும். தலைவனின் கூற்றாக ஒரே ஒரு பாடல்மட்டுமே அமைகின்றது. தோழிக்கும் அவ்வாறே. பிற அக இலக்கியங்களில் அதிகமான பாடல்களைப் பெற்றுள்ள தோழி, மருதக்கலியில் மிகக் குறைவான பாடல் பெற்றிருப்பது ஆய்வுக்கு உரியது. தோழியின் கூற்றாக வரும் தனிப்பாடல் ஒன்றுதானெனினும் பலர் கூற்றாக வரும் சில பாடல்களில் (கலி.82, 83, 87) தோழியில் குரலும் ஒலிப்பதைக் காணமுடிகிறது. தலைவிக்கு அடுத்த நிலையில் அதிகமான கூற்றுக்களைப் பெற்றவள் (எட்டுப் பாடல்கள்) காமக்கிழத்தியேயாவாள். அகம்.68, 69, 71, 72, 74, 78, 90, 91 ஆகிய பாடல்கள் காமக்கிழத்தியின் கூற்றாகவே அமைகின்றன.   
குறுந்தொகையில் கூற்று:
குறுந்தொகையில் நாற்பத்து ஐந்து பாடல்கள் மருதத்திணைப் பாடல்களாக அமைகின்றன. அவற்றில் தோழி 19 பாடல்களையும் தலைவி 20 பாடல்களையும் பரத்தை ஐந்து பாடல்களையும் தலைவன் ஒரே பாடலையும் கூற்று அமைப்பில் பெற்றிருக்கிறார்கள்.
-    காதற்பரத்தை தலைமகள் பாங்காயினார் கேட்ப உரைத்தது\
-    தோழி தலைமகனுக்கு வாயில் மறுத்தது
-    தோழி தலைமகனுக்கு வாயில் நேர்ந்தது
-    உணர்ப்பு வாரா ஊடற்கண் தலைமகன் உரைத்தது
-    தலைவி, தோழியை நோக்கிப் பாணன் கேட்ப உரைத்தது
-    தலைவி, தோழிக்கு அறத்தொடு நின்றது
-    தோழி வரைவு மலிந்தமை குறித்துத் தலைவிக்கு உரைத்தது
-    பிரிவிடை மெலிந்த கிழத்தி, தோழிக்கு உரைத்தது
-    தோழி, தலைவியிடம் வாயில் நேர்ந்தது
-    தலைவி தோழியிடம் பிரிவிடை ஆற்றுவள் என்றது
-    வாயில்களிடம் தலைவி உரைத்தது
-    வரைவு நீட்டித்தவழி தோழி, தலைமகனுக்கு உரைத்தது
-    பாணர்க்குத் தோழி வாயில் மறுத்தது
-    தோழி தன்னுள்ளே பேசியது
-    தலைவி நெஞ்சிடம் பேசியது
-    தலைவி காமம் மிக்க கழிபடர் கிளவி பேசியது
-    தலைவி குறியிடம் பெயர்த்துச் சொன்னது
-    பூப்பெய்திய தலைமகள் உரைத்தது
-    வாயில் வேண்டிய தலைமகனிடம் தோழி கூறியது
என்று பல்வேறு கூற்றுநிலைகள் குறுந்தொகையில் உள்ளன.
காமம் மிக்க கழிபடர் கிளவி:
‘குவி இணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
தொகுசெந் நெற்றிக் கணம்கொள் சேவல்!
நள்ளிருள் யாமத்து இல்எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி,
கடுநவைப் படீஇயரோ, நீயே – நெடுநீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏமஇன் துயில் எடுப்பியோயே’ (மதுரைக் கண்ணனார்: குறுந்.107)
குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளின் ஒள்ளிய பூவைப் போன்ற, தொகுதியாக விளங்கும், சிவந்த கொண்டையை உடைய, கோழிக்கூட்டங்களை வலிந்து கொள்ளும் சேவலே. நெடுங்கால தாமத்தின் பின் புதுவருவாய் போல் வந்த ஊரனாகிய தலைவனோடு தங்கிய, இன்பத்திற்குக் காரணமாகிய இனிய துயிலின்றும் என்னை எழுப்பினை. இருள்செறிந்த இடையிரவின்கண் வீட்டில் உள்ள எலிகளை உண்ணும் பொருட்டுப் பார்த்திருக்கும் காட்டுப்பூனையில் குட்டிக்குப் பலநாள் இட்டு வைத்து உண்ணும் உணவாகி, நீ மிக்க துன்பத்தை அடைவாயாக’ இவ்வாறு பொருள் முற்றித் தலைவன் தன் இல்லம் வந்தவழி, அவனுடன் கூடி மகிழ்ந்த தலைவி, இரவு புலர்ந்தது கண்டு துயருற்றாள். விடியலின் வருகையை உணர்த்திய சேவலைக் கண்டு சினம் கொண்டனள். இயல்பாகக் கூவும் சேவலைக் கண்டு தன்னுடைய இனிய உறக்கத்தை எழுப்பக் கூவியதாக எண்ணி வெகுண்டாள்.
குக்கூ என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்-
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே’ (குறுந்.157)
அள்ளூர் நன்முல்லையாரின் இப்பாடலில், ‘கோழி குக்கூ என்று கூவிற்று. எனது தோளை மணந்த காதலரைப் பிரியச் செய்யும் வாளைப் போல வைகறைப் பொழுது வந்தது. அதனால், என் தூய நெஞ்சம் துட்கென அச்சம் கொள்வதாயிற்று’ என்று தலைவி பேசுவதாக அமைகிறது. வைகறை என்ற சொல்லை, வை கறை எனப் பிரித்து, வைதற்கு உரிய பூப்பு என்று  ஒருள் கொள்கிறார் ரா.ராகவையங்கார். தோளைத் தழுவிய காதலரைப் பிரிக்கின்ற வாள் போன்றதாகலின், பூப்பு வையப்படுவதாயிற்று. தலைவி பூப்புத் தோன்றியமையை மறைபொருளாக, ‘வைகறை வந்தன்று’ எனக் குறித்தாள். வைகறையில் வைதற்கு உரிய கறை வந்தது எனப் பொருள்படுமாறு அத்தொடர் அமைந்துள்ளது.
தோழி வாயில் மறுத்தது:
‘வேம்பின் பைங்காய் என்தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர்; இனியே
பாரிபறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
‘வெய்ய உவர்க்கும்’ என்றனிர்-
ஐய அற்றால் அன்பின் பாலே’ (குறுந்.196) மிளைக்கந்தன்.
வேம்பின் பைங்காய் என்பது, அக்காய் போலக் கைப்புடையனவற்றைக் குறிப்பதாகும். இளமையுடைய தலைவி தரச் சுவைக்கப்படும் பொருள் எதுவாயினும், தலைவற்கு வானுலக அமுதம் போல் தோன்றும். தலைவி பெருமுது பெண்டாய் மூப்பு எய்தியவழி, அவளுடைய செயல்கள் யாவும், தலைவனுக்கு வெறுப்பைத் தருவனவாய் அமையும். வேம்பின் காய் கட்டியாயிற்று எனவும், தெண்ணீர் வெய்தாயிற்று எனவும் தலைவனின் விருப்பு வெறுப்புகளுக்கு ஒவ்வொரு சான்று தரப்பட்டுள்ளது.
வாயில் மறுத்தல்:
‘வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே;
அலரா கின்றால் – பெரும! காவிரிப்
பலர்ஆடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்துகோட்டு யானைச் சேந்தன் தந்தை
அரியல்அம் புகவின் அம்கோட்டு வேட்டை
நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன்,
அழிசி ஆர்க்காடு அன்னஇவள்
பழிதீர் மாண்நலம் தொலைவன கண்டே’ (குறுந்.258) பரணர்.
பெருமானே பலரும் நீராடுதற்கு உரிய, காவிரியில் பெரிய நீர்த்துறையில் உள்ள மருத மரத்தில், உயர்ந்த கொம்பினையுடைய யானைகளைச் சேந்தன் என்பவன் பிணித்தான். அவனுடைய தந்தை அழிசி என்பவன். கள் உணவு காரணமாக, அழகிய கொம்புகளையுடைய யானைகளை வேட்டையாடுகின்ற, தன்னைப் பகைத்தவர்க்கு நரகத் துன்பம் போன்ற துன்பத்தைத் தருகின்ற, ஒள்ளிய வாள் ஏந்திய இளைய வீரர்களின் தலைவன், அவனுடைய ஊராகிய ஆர்க்காடு போன்ற விழவுமேம்பட்ட, பழிதீர் சிறப்புடைய இவளுடைய நலன்கள், இவளை விட்டு நீங்குவன கண்டு, நீ எம் சேரியில், வாரற்க; நின் மாலையை எமக்குத் தாரற்க. நின் செயல் அலர் தூற்றப்படுவதாயிற்று.
பரத்தை கூற்று:
‘கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறி, தம் இல்,
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல,
மேவன செய்யும், தன்புதல்வன் தாய்க்கே’ (குறுந்.8-ஆலங்குடி வங்கனார்)
வயல் அருகில் உள்ள மாமரத்தின் முற்றி வீழ்ந்த இனிய பழத்தைப் பொய்கையிலுள்ள வாளைமீன்கள், கவ்வி உண்பதற்கு இடனாகிய மருதநிலத் தலைவன், எம்முடைய வீட்டில், எம்மை வயப்படுத்துவதற்காகப் பெருமொழிகளைக் கூறிச் சென்று, தம்முடைய வீட்டில், முன் நிற்பவர் கையையும் காலையும் தூக்கும்போது, தானும் தூக்குகின்ற கண்ணாடியுள் தோன்றும் பாவையைப் போல, புதல்வனை ஈன்ற தன்னுடைய மனைவிக்கு அவள் விரும்பிய செயல்களைச் செய்வான்.
தலைவி கூற்று:
அகநானூறு 6 ஆம் எண் மருதத்திணைப் பாடல், பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனுக்குக் கிழத்தி கூறியது. தலைவன் பரத்தையொடு சென்று நீராட்டு அயர்ந்து மீண்டும் தன் இல்லம் திரும்பித் தலைவியைப் பாராட்டுகிறான். தலைவி அவன் பரத்தையுடன் நீராடிய செயலை அறிந்திருந்ததால் அவனுடன் ஊடல் கொண்டு பின்வருமாறு கூறுகிறாள்:
‘அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை
இழை அணி பணைத்தோள், ஐயை தந்தை,
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்
குழைமாண் ஒள் இழை நீ வெய்யாளோடு
வேழ வெண்புனை தழீஇ, பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாங்கு
ஏந்து எழில் ஆகத்துப் பூந்தார் குழைய
நெருநல் ஆடினை புனலே; இன்று வந்து
‘ஆக வனமுலை அரும்பிய சுணங்கின்
மாசு இல் கற்பின் புதல்வன் தாய்’ என
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி எம்
முதுலை எள்ளல்; அஃது அமைகுந் தில்ல!
சுடர்ப்பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர் நாய்,
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
பல்வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
இளமை சென்று தவத் தொல்லஃதே;
இனிமை எவன் செய்வது, பொய்மொழி, எமக்கே? (அகம்.6-பரணர்)
அக இலக்கியங்களின் மருதத்திணைப் பாடல்களில் பல்வேறு வகைப்பட்ட கூறுகளும் கூற்றுகளும் பொருண்மைகளும் சூழல்களும் வெளிப்பாடுகளும் அமைந்த களமாகவே குறுந்தொகை உள்ளது.
நற்றிணையில் கூற்று:
நற்றிணையின் மருத்தத்திணைப் பாடல்களில் தலைவியின் கூற்றாக ஒன்பது பாடல்களும் தலைவனின் கூற்றாக நான்கு பாடல்களும் தோழியின் கூற்றாக பதினைந்து பாடல்களும் பரத்தையின் கூற்றாக 7 பாடல்களும் அமைகின்றன.
அக இலக்கியங்களில் வரும் அனைத்து மாந்தர்களுமே கூற்று நிகழ்த்த உரிமை பெற்றவர்கள் இல்லை. பாடல்களில் அவர்கள் குறிப்பிடப்படினும் உரை நிகழ்த்துவது இல்லை. ஆனால் பல பாத்திரங்கள் கேட்குநராக அமைவது உண்டு. அவ்வகையில் நற்றிணையில் தோழி உழவரிடம் கூறுவதுபோலத் தலைவனிடம் கூறுவது (நற்.60) அமைகின்றது. தோழி பாணன் கேட்பக் குயவனிடம் கூறியது (நற்.200) ஆம் பாடல் ஆகும்.
இவ்வாறு பாத்திரங்கள் கூற்று நிகழ்த்தும் போது நேரடியாகக் கேட்பவர்கள் என்று மட்டுமின்றி, சிறைப்புறமாக உள்ளவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் கூறுவதும் அமைகின்றது. பல வேளைகளில் பாங்காயினார் கேட்க உரைக்கும்முறை உரியவரிடம் அச்செய்தி சென்று சேரும் என்ற நோக்கத்தினை உடையதாக இருக்கிறது.
சில அவதானிப்புகள்:
மருதத்திணையின் உரிப்பொருளைச் சிறப்பிக்க வரும் துறையும் அதன் விரிவாகவும் கவிதைப் பொருளின் பன்மைத்துவத்தை உணர்த்துவதாக வரும் கூற்றுக்களும் பிற திணைப் பாடல்களை ஒப்பிடும்போது பன்மைத்துவம் உடையனவாக அமைகின்றன. அதாவது, கூற்று நிகழ்த்துவோரில் பல குரல்களை மருதத்திணைப் பாடல்களில் கேட்க முடிகிறது. கூற்று நிகழ்த்துவோர் மட்டுமின்றி கேட்குநராகவும் பல பாத்திரங்கள் அமைகின்றன. பிற திணைப்பாடல்களை விட, கேட்பவர்களுக்கு அப்பால் உள்ளவர்களைக் குறித்து உரை நிகழ்த்துவது என்பது மருதத்திணைப் பாடல்களில் அதிகமாக உள்ளது. இது மருதத்திணையின் சிக்கலான உறவுமுறைகளையும் அவற்றுக்கிடையிலான தொடர்பு நிலை முரண்களையும் எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.

3 comments:

semmozhiththamizharam said...

நல்ல கட்டுரை.பாராட்டுக்கள்

semmozhiththamizharam said...

நல்ல கட்டுரை.பாராட்டுக்கள்

யாழ் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வாசித்த ஆழமான பதிவுகளைப் கொண்ட கட்டுரை நன்றி ஐயா