Wednesday 19 December 2012

கலைச் செல்வங்கள் யாவும் ‘நேர்மையுடன்’ கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!



முனைவர் கி.பார்த்திபராஜா
துணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னியல்)
திருப்பத்தூர் – வே.மா
இலக்கியப் படைப்புகள் குறிப்பிட்ட மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமாகிறது எனில், மொழிபெயர்ப்புகள், பெயர்க்கப்படும் மொழியில் எல்லையை அகட்டுகிறது எனலாம். எனவே இலக்கியப் படைப்பாளனுக்கு அளிக்கப்படும் மரியாதையும் பெறுமானமும் மொழிபெயர்ப்பாளனுக்கும் அளிக்கப்பட வேண்டும். மொழிபெயர்ப்புகளால் பெயர்க்கப்படும் மொழியின் வளம், கருத்து, பண்பாடு, அரசியல், பொருளாதார அமைப்பு என அனைத்திலும் தாக்கத்தைச் செலுத்த முடியும். அவ்வகையில் முக்கியத்துவமுடைய மொழிபெயர்ப்புகள் தமிழில் வெளிவரும் போது அவற்றின் நம்பகத்தன்மை, தரம் ஆகியன பற்றிய பிரச்சினைப்பாடுகள் தோன்றுகின்றன. ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்! கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகளில் நேர்மை என்ற சொல்லைச் செருகித்தான் இனிச் சொல்ல வேண்டுமென்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்புத் துறையின் நம்பகத் தன்மை, தரம், நேர்மை ஆகியன பற்றி விவாதிக்கிறது இக்கட்டுரை.
மொழிபெயர்ப்பின் தொன்மை:
இருமொழியின் ஊடாட்டம் என்பது இரு பண்பாட்டின் ஊடாட்டமேயாகும். அவ்வடிப்படையில் தமிழ்மொழியின் தொன்மைக் காலத்திலிருந்து வடமொழி தொடர்ந்து காலந்தோறும் ஊடாடி வந்திருக்கின்றது. இந்த ஊடாட்டத்தின் உறவும் முரணும் தனித்து விவாதிக்கப்படத்தக்கன. அதன் அரசியல் பின்புலத்தை ஊன்றிக் கவனித்து, விரிவாக ஆராய வேண்டுவது அவசியமும் ஆகும். ஆனால் வடமொழியோடு தமிழ் கொண்ட உறவால், பல ஆக்கப்பூர்வமான மொழிபெயர்ப்புகள் நடந்திருக்கின்றன என்பது கண்கூடு. இலக்கியங்கள், இலக்கணங்கள், கோட்பாடுகள், தத்துவங்கள் எனப் பல மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ‘வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்த’ இருமொழிவாணர்கள் மொழியாக்கங்களில் ஈடுபட்டு வந்தனர் என்பது வெள்ளிடைமலை.
தமிழ் இலக்கியப் பரப்பில், வடமொழியிலிருந்து பெயர்க்கப்பட்ட இலக்கிய மொழிபெயர்ப்புகள் ஒருபக்கமும் அவ்விலக்கியங்களைத் தழுவித் தமிழ்ப்படுத்திய ஆக்கங்கள் ஒரு பக்கமுமாக பெயர்ப்பு முயற்சிகள் தொடர்ந்து வந்துள்ளன. கம்பராமாயணம் ‘தழுவல் இலக்கியத்தின்’ மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

ஆங்கிலேயர் வருகையும் மொழிபெயர்ப்பும்:
ஆங்கிலேயர்களின் வருகை இந்திய மொழிப்பரப்பினையும் தாண்டிய ஏராளமான ஐரோப்பிய மொழியாக்கங்களுக்கு வழிவகுத்தது. ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன் எனப் பல்வேறு மொழிகளின் இலக்கியப் படைப்புகள் தமிழுக்கு வந்து சேர்ந்தன. அதிலும் இந்திய தேசிய விடுதலைக்குப் பிந்தைய பத்தாண்டுகள், உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள்முதன்மை பெற்ற காலம் எனலாம். நோபல் பரிசுகள் உட்பட ஏராளமான பரிசுகளைப் பெற்ற, உலக அளவில் உச்சி முகர்ந்து கொண்டாடப்படுகின்ற, மாபெரும் உலகப் பேரிலக்கியங்கள் என்று விதந்தோதப்படுகின்ற பல்வேறு இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் இக்காலகட்டத்திலேயே நிகழ்ந்தேறின.
‘சர்வதேச இலக்கியச் செல்வங்களை, மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழுக்குக் கொண்டு வந்த அரிய காரியம் 50களிலும் 60களிலும் பல சிறந்த பதிப்பகங்களாலும் உயர்ந்த சிருஷ்டிகர்த்தாக்களாலும் உத்வேகத்துடன் நிகழ்ந்தது’ என்கிறார் விமலாதித்த மாமல்லன் (கல்குதிரை – தஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ்:1991:228).
தமிழ் மொழிபெயர்ப்பின் பொற்காலம்:
ஐம்பதுகள் அறுபதுகளில்தான் ருஷ்ய இலக்கியத்தின் படைப்பு மேதைகளான டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, துர்கனேவ், அந்தோன் செக்காவ் ஆகியோர் தமிழுக்கு வந்தனர். உலக இலக்கியப் படைப்புச் சிற்பிகளான ஷேக்ஸ்பியர், மில்டன், மாபசான், ஓ ஹென்றி முதலான பல்வேறு இலக்கியக் கர்த்தாக்கள் அறிமுகமாயினர்.
ருஷ்யப் பொதுவுடைமை அரசின் ராதுகா மற்றும் முன்னேற்றப் பதிப்பகம் மிகத் தீவிரமாக நூல்களை வெளியிட்ட காலத்தைத் தமிழ் மொழிபெயர்ப்பின் பொற்காலம் என்று குறிப்பிடலாம். ரா.கிருஷ்ணையா, நா.தர்மராஜன், பூ.சோமசுந்தரம் முதலானோரின் மிகச் சிறந்த பங்களிப்பில் ஏராளமான மொழிபெயர்ப்பு நூல்கள் உயர்ந்த அச்சுத் தரத்தில், தரமான தாளில், உலகத்தரமான நூற்கட்டமைப்பில், குறைந்த அளவிலேயான பிழைகளுடன் வெளிவந்தன.
தமிழ் மொழிபெயர்ப்பின் தேக்கமும் வளர்ச்சியும்:
தொன்னூறுகளில் சோவியத் ருஷ்யாவின் சோசலிசக் கட்டுமானச் சிதைவுக்குப் பிந்தைய பத்தாண்டுகளில் (1991-20000 மொழிபெயர்ப்பு தமிழில் கணிசமான அளவில் தேக்கமடைந்திருந்தது எனலாம். ஆனால் இரண்டாயிரமாவது ஆண்டுத் தசாப்தத்தில் (2001-2010) தமிழ் நூல்களுக்கான சந்தை என்பது உலக அளவிலான சந்தையாக மாறியது. ஈழத் தமிழர்களின் அலைந்துழல்வு (diaspora) தமிழ்நூல்களோடு மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் உலகச் சந்தைக்கும் வாய்ப்பளித்தது. ஏராளமான இதழ்கள் தொடங்கப்படவும் பதிப்பகங்கள் தொடங்கப்படவும், இதழ்களே பதிப்பகங்களைத் தொடங்கி நூல்களை வெளியிடவுமான செயல்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. உண்மையில் இக்காலகட்டத்தில் பல்லாண்டுகளாக இயங்கிவந்த பதிப்பகங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, காத்திர இதழ் நிறுவனங்களால் தொடங்கப்பட்ட பதிப்பகங்கள் விற்பனைச் சந்தையில் முன்னேறிச் செல்லத் தொடங்கின. ஆண்டுக்கு நூறு இருநூறு புத்தகங்கள் வெளியிடுவது என அவை பதிப்புலகில் மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தி வருகின்றன. இவ்வளர்ச்சி (?) அல்லது பெருக்கத்தோடு மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளும் வெளியீடுகளும் பெருகி வருகின்றன என்பது நடைமுறையில் காணக்கிடைக்கும் உண்மையாகும்.
மொழிபெயர்ப்புகளின் பெரு வெடிப்பு:
ஆங்கில வழிக் கல்வியின் வீக்கம், தமிங்கிலர்கள் உற்பத்தி, ஆங்கில மோகிகளின் அபரிமிதமான பெருக்கம் ஆகியன, ஆங்கில மொழியில் உலக இலக்கியங்களை வாசிக்கும் வாசகர்களை மிகுதியும் அதிகரித்துவிடவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும். (பார்க்க: காலச்சுவடு செப்.2012 இதழில் வெளிவந்துள்ள சுகுமாரனின் ‘இனி ஒருபோதும் சொல்ல முடியாத தனிக்கதை’ கட்டுரை) எனவே உலக இலக்கியங்களைத் தமிழ் வழியிலேயே படிக்க விரும்புகிற / படிக்க முடிகிற வாசகனுக்கென மொழிபெயர்ப்புகளை உற்பத்தி செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமை பதிப்புச் செம்மல்களுக்கு ஏற்படுகிறது. அவர்களும் அவ்வரலாற்றுக் கடமையைத் தம் சிரமேற்கொண்டு, உலகத்தின் இண்டு இடுக்குகளில் இருக்கும் படைப்பாளிகளைக்கூட அடையாளங்கண்டு தமிழுக்கு இழுத்து வந்தனர். அவர்களின் கரம்பிடித்து இழுத்துவர ஆஸ்தான மொழிபெயர்ப்பாளர்களையும் நியமித்து வேலை வாங்கினர்.
இவ்வாறாகத் தமிழில் ஏராளமான உலகப்புகழ் பெற்ற / பெறாத, பரிசுகள் பெற்ற / பரிசுகள் பெறப்பட்ட படைப்புகள் தமிழ் வாசிப்பு உலகிற்குக் கடைவிரிக்கப்பட்டன. விரிக்கப்பட்ட கடைச்சரக்கின் வியாபார வேகம் பதிப்பாளர்களுக்கு மேலும் உத்வேகத்தைக் கொடுத்தது. எனவே புதிய புதிய எழுத்தாளர்களைத் தேடுவது, மொழிபெயர்ப்பாளர்களுக்கும் திட்டப்பணி (Project) அல்லது தனிமுறைப்பணி (Assignment) வழங்குவது என்று பணிச்சுமை அதிகரித்தன.
தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் மொழிபெயர்ப்புப் படைப்புகள் விற்றுத் தீர்ந்து மறுபதிப்புகள் கண்டன. இவ்வாறான அதிசய நிகழ்வுகளில் தமிழ் படைப்பு / பதிப்பு / வாசக உலகம் வியந்து நின்றது.
இரு பெரும் பிரச்சினைகள்:
பெரு உடைப்பெடுத்துப் பாயும் வெள்ளமெனத் தமிழுக்கு வரும் மொழிபெயர்ப்புகளின் நம்பகத்தன்மை, பிழையின்மை கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. மூலமொழி எழுத்தாளரின் அனுமதி, அல்லது காப்புரிமைத் தொகை பற்றிய சிந்தனைகள் முற்றிலுமாகப் பதிப்பு உலகிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டன.
நம்பகத் தன்மையும் தரமும்:
ஆங்கிலமல்லாத மொழிகளிலிருந்து மிகுதியும் இரண்டாம் நிலை மொழிபெயர்ப்பு நூல்களே தமிழுக்கு வருகின்றன. அதாவது ஸ்பானியமொழி, பிரெஞ்சுமொழி முதலான மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட பனுவல்களையே அடிப்படையாகக் கொண்டு, தமிழுக்குப் பெயர்த்தல் இரண்டாம் நிலை மொழிபெயர்ப்பு எனப்படுகிறது.  மேற்குறித்தவாறு ஆங்கிலத்திலிருந்தே மிகுதியான படைப்புகள் தமிழுக்குப் பெயர்க்கப்படுகின்றன. இவ்வாறு இடையில் இன்னொரு மொழியின் வழியில் பெயர்க்கப்படும் பொழுது, மூலத்தின் தன்மை அப்படியே இரண்டாம் நிலை பெயர்ப்பில் வந்திருக்கிறதா என்பது ஐயத்திற்குரிய வினாவாகும்.
ஏராளமான தகவல் பிழைகள், பிழையான பண்பாட்டுப் புரிதல்களுக்கு வழியமைத்துவிடுகின்றன. எனவே குறிப்பிட்ட இலக்கியப்படைப்பினைத் தமிழ் வாசகர்கள் பிழையாகவே வாசித்துப் புரிந்துகொள்ளும் விபத்தும் நடந்து விடுகின்றது. மொழிபெயர்ப்பைச் செம்மைப்படுத்துவது, மூலத்திற்கு நெருக்கமான பெயர்ப்பாக ஆக்க மீண்டும் மீண்டும் உழைத்துச் சீர்செய்வது ஆகிய பணிகள் மிகப்பெரும்பான்மையான மொழிபெயர்ப்புகளில் நடைபெறுவதே இல்லை. மூலமொழி அறிந்த ஒருவரிடம் பெயர்ப்புப் பனுவலைத் தந்து சரிபார்க்கும் பணியையும் மிகுதியான மொழிபெயர்ப்பாளர்கள்-வெளியீட்டாளர்கள் செய்வதில்லை. மாறாக, அவசரமும் சந்தையில் முந்தும் வேகமுமே அவர்களை வழி நடத்துகின்றன.
தமிழ் வாசகர்களுக்குப் புதியதான சொற்களை, பண்பாட்டு நிகழ்வை விளக்குவதற்குப் பெயர்ப்பாளர்கள் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான விரிவான தேடலும் முயற்சியும் எல்லாப் பெயர்ப்புகளிலும் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது ஐயத்திற்குரிய ஒன்றேயாம். எட்டுத்திக்கிலுமிருந்து தமிழுக்குப் படைப்பிலக்கியங்கள் வருவது என்பது வரவேற்கப்பட வேண்டுவதேயாகும். ஆனால், பிழையான பெயர்ப்புகள் ஆக்கப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தாது என்பதுடன் பிழைப்பெயர்ப்புகள், மூல நூலுக்குத் துரோகம் செய்வனவாகவும் அமைந்துவிடும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
சில படைப்புகளின் மொழிபெயர்ப்புச் சுருக்கங்கள் தமிழில் வெளியிடப்படுகின்றன. ஆனால் அவை பற்றிய முறையான அறிவிப்புகள் இல்லை. மாறாக மூல நூலின் அளவே இவ்வளவுதான் என்பதான மாயத் தோற்றத்தை உருவாக்கிவிட்டு மொழிபெயர்ப்பாளர்கள் மவுனமாகி விடுகின்றனர். இந்தப் பிழை இந்திய மொழிகளிலிருந்து பெயர்க்கப்படும் படைப்புகளுக்கும் திட்டமிட்டே நிகழ்த்தப்படுகிறது.
அனுமதி மற்றும் காப்புரிமை:
ஒரு எழுத்தாளரின் படைப்புகள் மொழிபெயர்க்கப்படுகின்றபோது அவருடைய அல்லது அவருடைய படைப்புகளுக்கு உரிமை பெற்றோரின் அனுமதி பெறுவது அறம் சார்ந்த செயல்பாடாகும். அவ்வனுமதி பெற்று மொழிபெயர்ப்பு உரிமை பெறுவதும் அதற்குரிய காப்புத்தொகையை வழங்குவதும் அவசியமாகும். இந்த அறம் சார்ந்த நடைமுறைகள் தமிழில் மிகுதியும் பின்பற்றப்படுவதில்லை. மிகச்சில பதிப்பகங்களே முறையான அனுமதி மற்றும் காப்புத்தொகை அளிப்பதில் அக்கறை காட்டுகின்றன. சிற்சில பதிப்பகங்கள் மட்டுமே சட்டரீதியான ஒப்பந்தங்களைச் செய்து, முறையான மொழிபெயர்ப்புச் செயல்பாட்டில் ஈடுபடுகின்றன. ஆனால் புற்றீசல் பெயர்ப்புகள் இவற்றையெல்லாம் சட்டைசெய்வதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழில் எழுதும் எழுத்தாளர்களுக்கு உரிய காப்புத்தொகை வழங்குவது என்பதே முழுமையாகத் தமிழ் பதிப்புலகில் நிறைவேறாத நெடுங்கனவாகவே நீண்டிருக்கிறது. இந்நிலையில் முகமறியாத இந்திய, உலகமொழிகளின் படைப்பாளிகளுக்குக் காப்புரிமை வழங்குவது என்பது அடைவதற்குச் சற்று நீண்ட நெடும்பயணம்தான் என்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும்.
முடிவாக…
தமிழில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு நீண்ட நெடிய வரலாறும் மரபும் உள்ளது.வடமொழியிலிருந்து தமிழுக்கு ஏராளமான படைப்புகள் தொடக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இருமொழிகளின் பண்பாட்டு ஊடாட்டமாகவும் மொழிபெயர்ப்புச் செயல்பாடு அமைந்தது.
1950கள் மற்றும் 1960கள் உலக இலக்கியங்கள் மிகுதியும் காத்திரமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட உன்னதமான காலம் ஆகும்.
ருஷ்யாவின் ராதுகா மற்றும் முன்னேற்றப் பதிப்பகங்களின் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் தமிழுக்கு வந்த காலகட்டமே தமிழ் மொழிபெயர்ப்பின் ‘பொற்காலம்’ ஆகும்.
ருஷ்யாவில் சோசலிசக் கட்டுமானத்தின் பின்னடைவுச் சூழலின் பிந்தைய பத்தாண்டுகளில் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் தமிழில் தேக்கமடைந்திருந்தன.
ஈழத்தமிழர்களின் அலைந்துழல்வு தமிழ்நூல்களுக்கு உலகளாவிய சந்தை மதிப்பை வழங்கிற்று; அவற்றில் மொழிபெயர்ப்பும் இலாபமடைந்தது.
மொழிபெயர்ப்பு நூல்கள் ஆங்கிலத்தில் வாசிக்க முடியாத வாசகனை நோக்கி உற்பத்தி செய்யப்பட்டன. தமிழ் வாசகர்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைமையும் அவ்வடிப்படையிலான தேவையும் பின்னுக்குத் தள்ளப்பட்டுச் சந்தை வியாபாரத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு மொழிபெயர்ப்புகள் செய்து குவிக்கப்பெறுகின்றன.
மொழிபெயர்ப்பு நூல்களின் பெருக்கத்தில், அவற்றின் மொழிபெயர்ப்புத் தரம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. மொழியாக்கத்தில் பிழைகள் மலிகின்றன. சுருக்கங்கள் முழுப்படைப்புப் போலவே உலாவருகின்றன.
தமிழுக்குப் பெயர்க்கப்படும் மூலநூல் எழுத்தாளரின் அனுமதி, காப்புரிமை ஆகியவை சீர்செய்யப்படாத வகையிலேயே தமிழ் மொழிபெயர்ப்புத் துறை இயங்குகிறது. சிற்சில பதிப்பகங்களே அவற்றைச் செம்மையுறச் செய்கின்றன.-------------------------------------------------------------------------------------------------------

No comments: