Wednesday 19 December 2012

குதிரை முட்டை: தமிழ் அரங்கச் சூழலில் ஒரு பொன் முட்டை



-கி.பார்த்திபராஜா
இத்தாலி நாட்டில் பிறந்து சமயப் பணிக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்து, பணிநிமித்தம் தமிழ் கற்றுத் தமிழிலேயே தன்னைக் கரைத்துக்கொண்ட வீரமாமுனிவர் என்னும் ஜோசப் பெஸ்கி எழுதிய ‘பரமார்த்த குரு கதைகள்’ குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாகும். அக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன நாடகச் செயல்பாட்டாளர்களான அனீஸ் மற்றும் சண்முகராஜா இருவரும் இணைந்து உருவாக்கிய நாடகப் பிரதி ‘குதிரை முட்டை’.
‘பரமார்த்த குரு கதைகள்’ வீரமாமுனிவரால் தமிழில் எழுதப்பட்டுப் பிறகு இலத்தீனில் அவராலேயே மொழி பெயர்க்கப்பட்டது. இக்கதைகளைத் தனது ‘தமிழ்-இலத்தீன் அகராதி’யின் இரண்டாம் பின்னிணைப்பாகவே முனிவர் முதலில் வெளியிட்டுள்ளார். தமிழக மக்களுக்கு அறிமுகமான கதைகளுடன் தாம் ஒருசில கதைகளைச் சேர்த்து வழங்குவதாகவும் நகைச்சுவை கலந்த இக்கதைகளைப் படிப்பதன் மூலம் பேச்சுத் தமிழைக் களைப்பின்றிக் கற்கலாம் என்று தாம் நம்புவதாகவும் பின்னிணைப்பின் முன்னுரையில் முனிவர் கூறுகின்றார்.
1822 மற்றும் 1861 இல் இலண்டனிலும் 1845,1851, 1859, 1865 ஆகிய ஆண்டுகளில் புதுச்சேரியிலும் 1871 இல் சென்னையிலும் 1877 இல் பங்களூருவிலும்  இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. பிரெஞ்சு, ஜெர்மன், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்நூல் அப்போதே பெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘முனிவரின் நூல்களுள் மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற நூல் இதுவே என்பதில் ஐயமில்லை’ என்பார் அமுதன் அடிகள் (இத்தாலி நாட்டு வித்தகத் தமிழர்;1995:160).
வீரமாமுனிவர் தம் காலத்தில் வாழ்ந்த வைதீக சமயத் துறவிகளை இகழ்வதற்காகவே இந்நூலை எழுதினார் எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். அன்றைய மடத்தலைவர்களின் மடத்தனம் இந்தியத் துணைக்கண்டம் மட்டுமல்லாது வெளிநாட்டுக்காரர்கள் மத்தியிலும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. ‘பிச்சைக்காரர்களும் பாம்புகளும் சாமியார்களும் மண்டிக்கிடப்பதே இந்தியத் துணைக்கண்டம்’ என்பதான பார்வை மேலை நாட்டினருக்கு இருந்தது. பிச்சை எடுத்துண்ணும் சாமியாரிலிருந்து வலுவான மடத்தை அமைத்துக் கொண்டு கோடிக்கணக்கான சொத்துக்களை நிர்வகித்துக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்த சாமியார்கள் வரை யாவரும் இந்நிலப்பரப்பில் ‘சாமி’களாக அறியப்பட்டனர். காவியுடுத்திய சாமிமார்கள் அனைவருமே மடம் கட்டி நிலைபேறுடைய வாழ்க்கை வாழுவதைக் கனவு கண்டனர். தம்மைச் சுற்றிலும் சிஷ்யகோடிகளைச் சம்பாதித்துக் கொண்டு, அருள் பாலித்துக் கொண்டு இருக்கவே விரும்பினர். அத்தகைய சாமிகள், தங்களைக் குருவாக உருமாற்றிக் கொண்டதையும் அவர்கள் தம் சீடர் பரம்பரையையும் இகழ்வதற்கே வீரமாமுனிவர் ‘பரமார்த்த குரு கதைகள்’ எழுதினார் என்போருளர்.
வீரமாமுனிவரின் காலத்திலேயே அதிகார மையமாகச் சைவ மடங்கள் உருவாகி நிலைபெறத் தொடங்கின. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், பொக்கிஷங்கள் ஆகியவை மடங்களுக்குச் சொந்தமாக இருந்தன. மடங்களின் சம்பிரதாயங்கள் மக்களின் நடைமுறை வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறானவை. மடத்தின் தலைமைச் சாமியார் ‘பண்டார சன்னிதி அல்லது ‘குருமகா சன்னிதானம் என்று அழைக்கப்படுவார். குருமகா சன்னிதானங்கள் முற்றும் உணர்ந்தவராகவே இருப்பார். அவர் கற்றுக் கொள்ள எதுவுமே இருக்காது; எல்லாவற்றையுமே அறிந்திருப்பார். அவர், தனது மடத்தின் சிஷ்யர்களுக்காக ஆசிரியர்களை ஏற்பாடு செய்து பாடம் படிப்பிப்பார். ஆசிரியர், சிஷ்யர்களுக்குப் பாடம் நடத்தும்போது குருமகா சன்னிதானமும் தனது ஒடுக்கத்தில் அமர்ந்து கேட்பது உண்டு. குருமகா சன்னிதானத்துக்குப் பாடத்தில் ஏதாவது ஐயம் ஏற்படின், அதனைச் சிஷ்யர் ஒருவரிடம் தெரிவித்து, சிஷ்யரது வாயால் வினவ வைப்பாரேயன்றி, தானே வினவும் வழமை மடத்தில் இல்லை. இது போன்ற ஏராளமான தகவல்களை உ.வே.சாமிநாதையர் தனது ‘என் சரித்திரம் நூலில் குறிப்பிடுவார்.
தனது சமகாலத்தின் மடங்களின் செயல்பாடுகளை அல்லது நடைமுறைகளை விமர்சிக்க விரும்பிய வீரமாமுனிவர் இக்கதைகளை அதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடும்.
இன்னும் சிலர், முனிவர் தம் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்த சபைக் குருக்களை இகழ்வதற்காகவே எழுதினார் என்பர். குருவின் குணாம்சங்கள், சீடர்களின் தன்மை அனைத்தும் அவர்களையே குறிப்பன என்பர்.
எப்படியோ, வீரமாமுனிவர் தமிழ் மண்ணில் வழங்கப்பட்டு வந்த சில கதைகளைத் தாமே கையில் எடுத்துச் சிற்சில மாற்றங்களைச் செய்து நல்லதொரு நகைச்சுவை நூலாக்கியிருக்கிறார்.
பரமார்த்த குருவும் அவருடைய சீடர்கள் மட்டி, மடையன், மூடன், பேதை, மிலேச்சன் ஐவரும் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட சம்பவங்களை மிகவும் நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார் முனிவர். ஆற்றைக்கடக்கப் பட்ட பாடு, குதிரை முட்டை வாங்கிய கதை, வாடகைக்கு மாடு பிடித்த கதை, தூண்டில் போட்டுக் குதிரை பிடித்த கதை, குரு குதிரைச் சவாரி செய்த கதை, குதிரைக்கு வரி கேட்ட கதை, அந்தணன் காலக்கணிதம் கூறிய கதை, குதிரை மேலிருந்து விழுந்த கதை, குருவைப் புதைத்த கதை என பல்வேறு துண்டுகளாக நகைச்சுவைக் கதைகளை வீரமாமுனிவர் படைத்துள்ளார்.
வீரமாமுனிவரின் கதைப் பிரதியினை அடிப்படைப்பிரதியாகக் கொண்டு, தமிழக நாட்டார் கதைகள் சிலவற்றையும் பொருத்தி நாடகப் பிரதியை உருவாக்கியிருக்கின்றனர் ஆசிரியர்கள். பரமார்த்த குரு தனது மடத்தில் பணியாற்றுவதற்கான சீடர்களைத் தேடிச் சென்று கண்டடையும் பகுதி மிகவும் குறிப்பிட்டுப் பேசத் தகுந்தது. கதை நெடுகிலும் வரும் மட்டி, மடையன், மூடன், பேதை, மிலேச்சன் ஆகியோரது பாத்திரத் தன்மைக்கேற்ற நாட்டார் நகைச்சுவைக் கதைகள் மிகச் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை போன்ற இணைப்புகள் இப்பிரதியை முற்றுமுழுதான தமிழ் நாட்டார் பிரதியாக உருவாகிட பெரும் கையளிப்புச் செய்துள்ளன.
நாடக மேடையாக்கத்திலும் குறிப்பிட்டுப் பேசத்தக்க பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன. நாடகத்தின் முதற்காட்சியான பரமார்த்த குரு கனவுக்காட்சி வருவதுரைக்கும் உத்தியைக் கொண்டிருக்கிறது. இந்திய புராண, இதிகாச, இலக்கிய வெளிப்பாடுகளில் வருவதுரைக்கும் உத்தி, மிக முக்கியமான வெளிப்பாட்டு முறைமை ஆகும். இது இலக்கியப்பிரதியின் சுவை கூட்டுவதற்குப் பயன்படுவது உண்டு. அச்சுவை நகைச்சுவையாகவோ, அவலச்சுவையாகவோ அமையலாம்; அதுவேறு. அதேபோன்ற வருவதுரைப்பது, பரமார்த்த குருவின் கனவினூடாக நாடகத்தில் முன்வைக்கப்படுகிறது.
நாடகத்தில் பயன்படுத்தப் பட்டிருந்த நிழல்காட்சிகள் நாடக ஆக்கத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றன. அரங்கிற்கு முன் நிற்கும் நடிகன் காட்சி ரூபமாக வெளிப்படுகிறான். அவனே அரங்கில் பார்வையாளர் பகுதியிலிருந்து மறையும் போது நிழல் ரூபமாக வெளிப்படுகிறான். இந்த மாற்றங்களும் அசைவுகளும் பார்வையாளனின் விழிப்புலனுக்கு விருந்தளிப்பதாக – அதன் காரணமாகவே சோர்வு தட்டாததாக- அமைந்திருந்தன. மராட்டிய மரபிலிருந்து வந்தவர்களே தமிழகத்தின் பாவைக்கூத்து, தோற்பாவைக்கூத்து ஆகிய நிகழ்த்து கலைகளைத் தமிழக நாட்டார் பார்வையாளர்களிடம் சேர்த்தவர்கள். அவர்களின் பாவை உருவாக்கத்திலும் அசைவுகளிலும் குரலிலும் இருக்கும் சத்தான பகுதிகளை நாடகம் அப்படியே உட்கிரகித்துக் கொண்டு பலகீனப்படுத்தாமல் அதே சத்துடன் வெளிப்படுத்தியது.
நாடகத்தின் இசை தனித்துப் பேசத் தக்கது. தெம்மாங்குக் குரலிசை, தவில், நாயனம் உள்ளிட்ட நையாண்டி இசை நாடகத்திற்கு ஒரு தெக்கத்தித் தன்மையை அளிக்கின்றன. நாட்டார் பாடல்களும் சொற்கட்டுகளும் நாடகத்தின் இணைப்பிரதிகளாக அமைந்திருக்கின்றன. நாடகம் முழுவதும் தனித்து ஒலிக்கும் பாடகரின் குரலைப் பின்தொடரும் இசை வலு நாடக நடிகர்களிடம் குறைவாகவே காணப்பட்டது. இது இக்குழுவினரின் பிரச்சினை மட்டுமன்று. தமிழகத்தில் மரபிலிருந்து தாக்கம் பெற்று வரும் நாடக வெளிப்பாடுகள் அனைத்துமே- நடிகர்கள் அனைவருமே எதிர்நோக்கும் பிரச்சினைப்பாடேயாம்.
மேற்கத்திய நடிப்பு முறைமை அல்லது பயிற்சியினூடாக மேடையேறும் தமிழ்நடிகன் உடலைத் தயாரித்திருக்கும் முறைமை அலாதியானது. குரல் பயிற்சியும் கூட வியப்பளிக்க வைப்பதே. ஆனால் இசைக்குக் குறிப்பிடத்தக்க இடமளித்திருக்கும் தமிழ்மரபில் நவீன நாடக நடிகன் பெற்றிருக்கும் இலயம் தொடர்பான பயிற்சிகள் கேள்விக்குரியனவே. உடலில் வெளிப்படும் அபாரமான இலயம் குரலில் வெளிப்படாமல் போவது பல நாடக ஆக்கங்களில் உறுத்தலாக அமைவது உண்டு. குதிரை முட்டை நாடக நடிகர்களும் இச்சிக்கலில் ஆட்பட்டிருந்தமை கண்கூடு.
குதிரை முட்டை நாடகத்தில் பங்கேற்ற நடிகர்களின் உடல்மொழி அலாதியானது; தனித்துக் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியது. மெய்ப்பாடு என்பதன் முழுமையான பொருளை இந்நடிகர்களின் வெளிப்பாடு உணர்த்தியது. கரவின்மை என்பதனை முகபாவனைகளில் மட்டுமின்றி உடல்மொழியிலும் நிலைகளிலும் அசைவுகளிலும் நடிகர்கள் வெளிப்படுத்தியவிதம் சிறப்பானது.
இந்த நாடக அரங்காற்றுகையை இரு இடங்களில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முதல் அரங்காற்றுகை புரிசை கண்ணப்பத் தம்பிரான் நினைவு விழாவில். இரண்டாம் அரங்காற்றுகை காலச்சுவடு ஒருங்கிணைத்த சு.ரா 80 நிகழ்வு கன்னியாகுமரியில். இரு அரங்காற்றுகையிலும் இரு வேறு நடிகர்கள் பரமார்த்த குரு பாத்திரத்தினை ஏற்றிருந்தனர். முதல் அரங்காற்றுகையில் குருவாகப் பங்கேற்றிருந்த முருகனின் நடிப்பும் லாவகமும் நன்றாகவே இருந்தது. ஆனால் இரண்டாம் ஆற்றுகையில் பங்கேற்ற நெய்தல் கிருஷ்ணன் உடல்மொழி முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. முன்னவர் நடிப்பை முறையாகக் கற்றுக்கொண்டு மேடையேறிய நவீன நாடக நடிகர். அதனால் நடிப்பு முறைமைகள் உத்திகள் நுட்பங்கள் ஆகியன அவருடைய நடிப்பில் வெளிப்பட்டன. அவர் மேடையில் பரமார்த்த குருவாக நடித்தார். ஆனால் பின்னவர் நடிப்பை முறையாகக் கற்றவரல்லர். நெய்தல் கிருஷ்ணன் பங்கேற்கும் முதல் நாடகம் இதுவேயாகும். அவருடைய உருவப் பொருத்தம் மிகச் சரியாகப் பாத்திரத்திற்குப் பொருந்தியது என்பது குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டியது. அதிலும் பார்க்க அவரிடமிருந்த நடிப்பைக் கற்றுக்கொள்ளாத கரவின்மை (innocence) பாத்திரத்தின் கரவின்மையுடன் இயல்பாக ஒன்றிக் கரைந்து பாத்திரத்திற்குப் புதுவிதமான சோபையைத் தந்தது. எனவே அவருடைய நடிப்பு வலிந்து பெறப்படாதாக இருந்தது. முறையான நடிப்புப் பயிற்சியினைப் பெற்றிராத நெய்தல் கிருஷ்ணனிடமிருந்து அற்புதமான நடிப்பை வெளிக்கொண்டு வந்த நாடக நெறியாளுனர் சண்முகராஜாவை இதற்காகப் பாராட்டியேயாக வேண்டும்.
அரங்க அமைப்பும் அரங்கப் பொருட்களும் அர்த்தச் செறிவுள்ளதாக இருந்தன. நாடகத்தில் பயன்படுத்தப்படும் சின்னச் சின்ன பொருட்களும் நாடகத்தின் பிரதிக்கும் வெளிப்பாட்டு முறைமைக்கும் அது உருவாக்க முனையும் கொண்டாட்ட மனநிலைக்கும் வலுச்சேர்ப்பனவாக இருந்தன.
தமிழகக் கல்வி முறைகுறித்தும் இன்றைய அறிவார்ந்த விழிப்புக் குறித்தும் வெளிப்படையாகப் பேசாமலேயே பல்வேறு சமகால அர்த்தங்களைக் கற்பிக்கிறது இந்நாடகம். வீரமாமுனிவர் காலத்திய கல்வி முறையிலிருந்து தமிழ்நாடு முற்றிலுமாக மாறிவிடவில்லை என்பது நாடகத்திற்கான அழுத்தமான சமகாலத் தன்மையை அளிக்கிறது.
புதிதாக நாடகம் பார்க்க வரும் தமிழ்ப் பார்வையாளனை வசீகரிக்கும் நாடகத் தயாரிப்புகள் தமிழ்நாட்டில் அருகிவிட்டன. நவீன நாடகங்கள் என்றாலே ‘மண்டை வீங்கிகள் பார்ப்பது என்று சராசரியான பார்வையாளன் ஒதுங்கி விடுகிறான். நாடகம் பார்க்க வரும் பார்வையாளனை விரட்டியடிப்பது நவீன நாடகத்தில் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. பார்வையாளனைத் தக்க வைக்க எந்த முயற்சியும் செய்யாமல் ‘பார்வையாளர்கள் வருவதில்லை என்ற ஒப்பாரி மட்டுமே வைப்பது சாதாரணக் காட்சியாகி விட்டது. அதனாலேயே நவீன நாடகம் குறுங்குழுவுக்கானதாகத் தன் எல்லையைச் சுருக்கிக் கொண்டு விட்டது.
ஆனால் ‘குதிரை முட்டை மேற்குறித்த தன்மையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. புதிதாய் நாடகம் பார்க்க வரும் பார்வையாளனுக்குத் தாராளமாக ‘குதிரை முட்டையைப் பரிந்துரை செய்யலாம். பார்வையாளனை அடுத்த நாடகத்தையும் பார்க்கத் தூண்டும் ஈர்ப்பு இந்நாடகத்தில் இருக்கிறது. அது பாராட்டப்பட வேண்டியது. பார்வையாளர்களை நவீன நாடகம் தேடிச் செல்லவேண்டும் என்பதைத் தனது அரங்கக் கோட்பாடாகவும் செயல்பாடாகவும் கொண்டிருக்கிற சண்முகராஜா, தனது பரிசோதனையில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இறுதியாய் ஒன்று. தமிழ்ச்சூழலில் கொண்டாட்ட மன நிலையில் நாடகம்  பார்த்து வெகுநாளாயிற்று. ‘குதிரை முட்டை நாடகம் முடிவுற்றபோது மனதில் தங்கிய மகிழ்ச்சி வெகுநேரம் வரை அப்படியே தங்கியிருந்தது. அவலம் நிறைந்த வாழ்வில் எப்போதாவது தானே மகிழ்ச்சி பூக்கிறது. அப்படியான அரிதானதொரு தருணத்தை இறுகப் பொத்திய கைகளிலிருந்து நம் கைகளில் நேயத்துடன் அளித்துச் செல்கிறது ‘குதிரை முட்டை.

No comments: