Wednesday 19 December 2012

வானுக்கு இடம்பெயர்ந்த நாடக நட்சத்திரங்கள்



கி.பார்த்திபராஜா
சிற்சில மாதங்களுக்கொருமுறையோ அல்லது வருடத்திற்கொருமுறையோ அழைக்கும் இசைநாடக நண்பர்களின் பெயரைக் கைப்பேசியின் திரையில் காண ஆரம்பித்தவுடனேயே சிறு பதற்றம் தொற்றிக் கொள்கிறது எனக்கு. இந்த அழைப்பு எந்த மாபெரும் கலைஞனின் மரணத்தை அறிவிக்க வருகிறதோ என நெஞ்சம் பதைக்கிறது.
‘பேசி ரொம்ப நாளாச்சு சார்… அதான் பேசுவமேன்னு அடிச்சேன்…’ என்று தொடங்கினால் நிம்மதிப் பெருமூச்சின் கீழ் பதற்றம் தணிகிறது.
கடந்த பதினாறு ஆண்டுகளாக காரைக்குடி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கள், மணப்பாறை, பொன்னமராவதி முதலான ஊர்களிலுள்ள நடிகர் சங்கத்தின் வழியாக இசைநாடகக் கலைஞர்களோடு உறவாடி வருகிறேன்.
1997 இல் காரைக்குடி நாடக நடிகர் சங்கத்திற்குள் அடியெடுத்து வைத்தபோது, நான் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதுகலை முதலாமாண்டு மாணவன். இந்தப் பதினாறு ஆண்டுகளில் எத்தனையெத்தனையோ மாற்றங்கள் நடந்திருக்கின்றன. புதிய நடிகர்கள் கணிசமாகக் கண்ணில் படுகிறார்கள். இசை நாடகத்திற்கான பிரதான இசைக்கருவியான ஆர்மோனியம் காணாமல்போய் ‘கீ போர்டில்’ புகுந்து விளையாடும் பின்பாட்டுக்காரர்களைப் பார்க்க முடிகிறது. இசை நாடகத்தில்… தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல்கள் பாடப்படுவது இன்னும் இன்னும் குறைந்திருக்கிறது. சினிமா இன்னும் அவலட்சணமாய் தன் ஆக்டோபஸ் கால்களால் இசை நாடகத்தைக் கவ்விக் கபளீகரம் செய்துவிட்டிருக்கிறது. நாடகம் பார்க்கப் பார்வையாளர்கள் குறைந்துவிட்டார்கள் என்ற பொதுக் குற்றச்சாட்டைப் பொய்ப்பித்து இரண்டாயிரம் மூவாயிரம் பேர் திறந்த வெளித் திடலில் நாடகக் கொட்டகைக்கு முன் பாய் தலையணைகளுடன் நாடகம் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். காரைக்குடி நடிகர் சங்க முகவரி சொல்லி பஃபூன் அறிமுகப்படுத்தும்போது, முகவரியில் ‘மூத்திர சந்து’ மிகப்பெரிய அடையாளமாக இருந்தது. இப்போது நடிகர் சங்கம் பேருந்து நிலையத்திற்கு மூன்றாவது வீதியில் மிகப்பெரிய கட்டிடமாக, மொசைக் தளத்துடன் பளபளப்பாக நிற்கிறது.
எத்தனையோ சமூக, பண்பாட்டு, பொருளாதார வாழ்வியல் மாற்றங்கள் இப்பதினாறு ஆண்டுகளில் நடைபெற்றுவிட்டன.
இக்காலகட்டத்தில் எத்தனையெத்தனையோ நடிக மணிகள், வனித கலா இரத்தினங்களாகிய மன்னுலக நட்சத்திரங்கள் வானுக்கு ஒளிவீசச் சென்றுவிட்டன.
இசைநாடகம் பற்றிய என்னுடை ஆய்வுக்காலத்தில் தோழனாய்… அண்ணனாய் நெருக்கம் பாராட்டியவர் மிருதங்கக்கலைஞர் புதுக்கோட்டை எஸ்.ஏ.தாஸ். வெற்றிலைச் சிவப்பு வாயுடனும் மிதமான போதை வழியும் உருண்டை விழிகளுடனும் தோழமை கசியப் பேசும் பேச்சு அவருடையது. இசை நாடகம், ஸ்பெஷல் நாடகப் பற்றிப் பல்வேறு நிலைகளில் எனக்கு வழிகாட்டியவர்.
நாற்பது நாட்கள் தொடர்ந்த கள ஆய்வுப்பணிக்குப் பிறகு சென்னை வந்தேன். அடுத்தவாரத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மெரினா வளாகத்தில் உள்ள பட்ட மேற்படிப்பு மாணவர் விடுதிக்கு வந்து சேர்ந்தது தாஸ் அண்ணனின் கடிதம்.  
காரைக்குடி இசை நாடக சங்கம் அப்போது வெளியிட்டிருந்த காலக்கட்டுப்பாடு குறித்த ஒரு துண்டறிக்கையை இணைத்து அனுப்பியிருந்தார். கடிதத்தில், அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தபோது நெஞ்சுக்கு நேராகக் கை குவித்து வணக்கம் தெரிவித்ததாகவும், ஏனோ அந்த கணத்தில் என்னைப் பிடித்துப்போய்விட்டது என்றும் தெரிவித்திருந்தார். காரைக்குடி நாடக நடிகர் சங்கத்தின் குருபூஜை விழாவுக்குத் தலைமை தாங்கிட அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தியபடியிருந்தார். பலநூறு நடிகர்கள் பங்கேற்ற குருபூஜை விழாவுக்கு நான் தலைமையேற்றுப் பேசியபோது முதுகலை இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். பிறகு எட்டாண்டுகளுக்குப் பிறகு, எனது இசைநாடகம் பற்றிய ‘காயாத கானகத்தே…’ நூல் வெளியீட்டுவிழாவுக்கு இசை நாடக நடிகர் அமைப்பாளர் சங்கத்தினுடைய தலைவர் பி.எல்.காந்தி அவர்களுடன் நான் பணிபுரியும் திருப்பத்தூருக்கு வந்து சேர்ந்தார். விழாவில், ‘காயாத கானகத்தே… எனும் இந்த அடையாளப்பாட்டை முக்கால் மணிநேரம் விஸ்தாரமாய்ப்பாடும் லட்சுமிகாந்தன் பற்றி நூலில் இல்லாதது பெரும்குறை’ என்று விமர்சித்துப் பேசினார்.
‘காயாத கானகத்தே…’யில் இசை நாடக நடிகர்கள் பற்றிச் சற்றே வெளிப்படையாகவே எழுதிவிட்டார் என்று வருத்தம் தெரிவித்த நடிகர்களிடம், ‘நீங்க செய்யாத எதைடா அவரு எழுதுனாரு?’ என்று எனக்காகப் பரிந்து பேசியதாகக் கேள்விப்பட்டேன் பிறகு.
தொலைபேசித் தொடர்புகள் இல்லாமல் போய் ஒருவருடத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் காரைக்குடி நடிகர் சங்கத்திற்குப் போன ஒரு சந்தர்ப்பத்தில், அன்பும் கருணையும் வடிவான ஸ்திரீபார்ட் நடிகை திண்டுக்கல் பத்மா அக்காவிடம், ‘தாஸ் அண்ணன் எப்படி இருக்காரு?’ என்று கேட்டேன். எதிர்ச்சுவரை நோக்கிக் கைகாட்டினார். அங்கே தாஸ் அண்ணன் புகைப்படத்தில் சிரித்தபடியிருந்தார் பெரிய சந்தனமாலையைச் சுமந்தபடி.
2011 மே மாதத்தில் திரைக்கலைஞர் ரேவதி அவர்களின் ஒரு ஆவணப்படத்துக்காக மீண்டும் இசை நாடகக் கலைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனது மனங்கவர்ந்த பஃபூன் காமிக் நடிகர் பொன்னமராவதி ஆறுமுகம் அவர்களின் வீட்டுக்குச் சென்று சந்தித்தோம். உட்கார்ந்த இடத்தைவிட்டு நகரமுடியாத நிலையிலிருந்த அவரைச் சந்தித்தபோது, முகம் வெளிறியிருந்தது. இசை நாடக மேடைகளில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆடிப் பாடி நடித்த மாபெரும் கலைஞன் நடமாடக் கொள்ள முடியாமல் அப்படி ஒடுங்கி அமர்ந்திருந்ததைப் பார்த்த போது ஆற்றாமையும் இயலாமையும் மனத்தைப் பிசைந்தது.
இசை நாடக உலகின் அதி உன்னதக் காலத்தின் நடிகர்கள் விடைபெறும் காலம் இது என்று தோன்றியது.
இந்த மாபெரும் கலைஞர்கள் நமது சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை; அரசாங்கத்தால் சரியானபடி கௌரவிக்கப்படவில்லை; அவர்களுடைய நாடக அனுபவங்கள் ஆவணப்படுத்தப்படவில்லை; தெருக்கூத்துக்கலைஞர்களைப் போலன்றி, வலுவான சங்க அமைப்பை இசைநாடக நடிகர்கள் பெற்றிருந்த போதிலும் ஓய்வூதியம் உள்ளிட்ட அவர்களின் உரிமைகள் பெற்றுத்தரப்படவில்லை என ஏராளமான ‘இல்லை’கள் மனத்தில் வரிசையாய் வந்து நின்றன.
எழுத்தாளர்கள், கவிஞர்கள் வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் கூடப் பிற்காலத்தில் போற்றப்பட்டமைக்குத் தமிழ்ச்சமூகத்தில் ஏராளமான முன்னுதாரணங்கள் உள்ளன. நாற்பது கவிதைத்தொகுதிக்குத் திட்டமிட்ட மகாகவி பாரதி,  ‘செத்தபிறகு நிதி திரட்டாதீர்’ என்று கிண்டல் செய்த புதுமைப்பித்தன் எனப் பலரைச் சுட்டிக்காட்ட முடியும். எழுத்துப் பதிவினால் காலஞ்சென்ற பிறகும் கூட, மரியாதை பெற்ற எழுத்தாளர்களை அறிவோம். ஆனால் பார்வையாளர்கள் மனத்தில் மட்டுமே பதிவினை விட்டுச் சென்ற நிகழ்த்துக் கலைஞர்கள் வாழும்போது அங்கீகரிக்கப்படவில்லை என்றால், செத்த பிறகு நிச்சயமாக நினைவுகூரப்படுவது கூட இல்லை.
2011 பயணத்தில்  நான் சந்தித்த மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் புலிக்குறிச்சி பாண்டியன், ஒயிலாட்ட வாத்தியார் கண்ணுச்சாமி தேவர், பொன்னமராவதி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் இன்று இல்லை.
மினர்வா தேவி, வசுந்தரா தேவி, ஷோபனா தேவி என்ற மூன்று சகோதரிகள் இசை நாடகத்தில் இருந்தார்கள். வயதில் இளையவரான ஷோபனா மிகவும் துடிப்பான ஸ்திரீபார்ட் நடிகை. சிவகங்கை மாவட்டம், மேலமாகாணம் என்ற ஊரில் அவர் வள்ளியாக நடித்த, ‘வள்ளி திருமணம்’ நாடகத்தைப் பார்த்தேன். துள்ளலும் துடிப்பும் சுர லயச் சுத்தம் கொண்ட சங்கீதமும், திரைப்பாடல்களுக்கும் பொருந்தும் நெகிழ்வான சாரீரமும் மெலிதாகப் பூசினாற் போன்ற சரீரமும் கொண்டவராகத் தன் வசீகரத்தால் நாடக இரசிகர்களை ஈர்ப்பவராக இருந்தார். அப்போதைய எனது துரதிர்ஷ்டம் நான் கொண்டு போயிருந்த சொத்தைக் காமிராவால் அவரை ஒரு நல்ல படம் கூட எடுக்கமுடியவில்லை. ஆனால், அந்த நாடகம் முழுவதையும் ஒலிப் பதிவு செய்ய முடிந்தது. அவரது குரலையாவது பதிவு செய்ய முடிந்த திருப்தி.
அண்மையில் சகோதரிகளுள் ஒருவரான வசுந்தரா தேவி அவர்களைச் சந்தித்தபோது, ஷோபனா பற்றி விசாரித்தேன். நாடக உலகில் மிகவும் பிரகாசமாய் ஒளிவீசிய அத்தீபம் அணைந்துவிட்டது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஸ்பெஷல் நாடக அமைப்பில் புகழ்பெற்றிருந்த ஷோபனாவின் பதிவு என்னிடம் உள்ள ஒலிநாடா மட்டுமே என்றறிந்தபோது அவமானமாக உணர்ந்தேன். அவர் நடித்த நாடகங்களின் வீடியோ பதிவுகள்கூட ஏதுமில்லை என்பது இனம்புரியாத வெறுமையை உள்ளத்தில் விதைத்தது. அவ்வளவுதானா? கருவேலங்காட்டுக் கரம்பை மண்ணைத் தன் சங்கீத்தால் உயிர்ப்பித்த வனித கலா இரத்தினமான ஷோபனாவின் நினைவுகள் காற்றோடு கலந்துவிட்டனவா? இசை நாடக நடிகையர் பற்றிய டீக்கடைப் பேச்சின் போது, ‘சோபனான்னு ஒரு பொண்ணு இருந்துச்சப்பா… நல்லாப் பாடுமய்யா…’ என்பதோடு ஷோபனா, இசை நாடகப் பார்வையாளர்கள் நினைவுகளில் தோன்றி மறைந்து விடுவாரா? போகிற போக்கில் நினைவு கூரப்பட்டு மறந்து விட வேண்டிய ஆளுமையா ஷோபனாவின் ஆளுமை?
மிக அண்மைக் காலத்தில் தெருக்கூத்துக் கலைஞர்கள் பற்றிய ஆவணங்கள் எண்ணிக்கையளவில் குறைவாக வந்தாலும் முக்கியத்துவம் உடையனவாகின்றன. ரிச்சர்ட் பிராஸ்கா, ஹென்னா டி புரூயின் ஆகியோரது ஆய்வுகள், காஞ்சிபுரம் கட்டைக்கூத்து கலை வளர்ச்சி முன்னேற்ற சங்கத்தின் சில பதிவுகள், புரிசை கண்ணப்பத்தம்பிரான் பற்றிய கட்டுரைத் தொகுப்பு நூல், தவசிக் கருப்புசாமியின் ‘அருங்கூத்து’ நேர்காணல் தொகுப்பு நூல், கோ.பழனியும் சி.முத்துக்கந்தனும் இணைந்து உருவாக்கிய ‘தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம்’ ஆகியவற்றோடு சில ஆவணப்பட, குறும்பட வெளிப்பாடுகளும் நம் கவனத்துக்குரியவை. சில பதிவுகளாவது வருகின்றனவே என்று ஆறுதலளிப்பவை.
நிகழ்த்துக் கலைஞர்களில் வயதிற் பெரியவர்களையாவது முழுவதுமாக ஆவணப்படுத்த வேண்டும். கரகாட்டக் கலைஞர்கள், ஒயிலாட்ட வாத்தியார்கள், குறவன் குறத்தி ஆட்ட அண்ணாவிமார்கள், நையாண்டி மேளக் கலைஞர்கள், கணியான் கூத்துக் கலைஞர்கள், வில்லடிப் பாட்டு வித்தகர்கள், இசைநாடக நடிகர்கள், இசைக் கலைஞர்கள் என இம்மண்ணின் கலை ஊற்றாய்க் கசிந்து கொண்டிருக்கும் இவர்கள் அனைவரும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
மிகவும் முக்கியமானது, ஆவணப்படுத்தப்படும் கலைஞருக்கு இரண்டாண்டுகளுக்கோ அல்லது குறைந்த பட்சம் ஓராண்டுக்கோ முழு ஊதியமும் ஆவணப்படுத்துவோரால் பெற்றுத் தரப்பட வேண்டும். சில நிறுவனங்களின் நிதி நல்கைகளோடு ஆவண முயற்சிகளில் இறங்கும் நண்பர்கள், ஆவணப்படுத்தப்படும் கலைஞர்களுக்கென சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடுவதில்லை. ஏற்கனவே பாடி, ஆடி வாழ்வியல் தேவைகளுக்காக ஓடிக் களைத்த கலைஞர்களை மேலும் சுரண்டுவது அறமல்லவே?
நவீன ஊடகப் பெருக்கத்திற்கு முந்தைய தலைமுறை விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பதிவுகள் ஏதுமற்ற நாட்டார் நிகழ்த்து கலைஞர்கள் நம் கை நழுவிப் போனபிறகு வருந்தி என்ன பயன்?

1 comment:

parthiban said...

அய்யா நான் பி.எச்டி படிக்கும் தெருக்கூத்து கலைஞன் எலிமேடு என் கிராமம், தங்களின் பதிவு மிகவும் நெகிழ்வாக உள்ளது. கலை ஆர்வத்தை மட்டும் மூலதனமாக கொண்டு வாழும் எண்னற்ற கலைஞர்கள் மரணத்தின் போது பரிதாபமான நிலையை அடைகின்றார்கள் என்பது கண்கூடு.உங்களைப் போன்ற நாட்டார் கலை மீது ஆர்வம் கொண்ட ஆளுமைகள் ஒன்றிணைந்து இது போன்ற சிக்கல்களை தீர்க்க ஏன் வழி காண கூடாது? அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு எதாவது செய்ய வழி உண்டா?எங்கள் பகுதியில் அண்ணன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் போன்றவர்களுடன் இணைந்து நல்லதொரு மாற்றத்தை உருவாக்க முயலுங்கள் அய்யா. நாம் ஒன்றுபட்டால் நம் மண்னின் கலையையும் கலைஞர்களையும் பாதுகாக்க முடியும் என நம்புகிறேன். நன்றி அய்யா.