Friday 11 July 2008

புரிசை தெருக்கூத்துப்பயிற்சிப் பள்ளி






யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாச்சார வரைபடத்தில், தமிழர்களின் பாரம்பரிய அரங்கான தொருக்கூத்தும், புரிசை கிராமமும் குறிப்பிடப்பட்டுள்ளது. புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்தை மூட்டெடுத்துப் பரவலாக்கும் முயற்சியில் தம் வாழ்நாளைச் செலவிட்டவர். அவருடைய நினைவு நாளினை கலைப் பண்பாட்டுத் திருவிழாவாகப் புரிசை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். அத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு கலைத்துறையைச் சேர்ந்தோரும் கலந்துகொண்டு வருகின்றனர். நவீன ஊடகங்களின் பெரு வெடிப்பு, மரபார்ந்த கலைகள் பலவற்றின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து வந்திருக்கின்றது. அச்சிதைவிலிருந்து தெருக்கூத்தும் தப்ப முடியவில்லை. தெருக்கூத்தினை முறையாகக் கற்றுக் கொண்டு, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இளம் கலைஞர்களின் வரவு முற்றிலுமாக இல்லை. எனவே தெருக்கூத்தின் எதிர்காலம் மிகுந்த கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது. தெருக்கூத்து வடிவத்தில் புதிய உள்ளடக்கங்களைப் பெய்து, பரிசோதனை முயற்சிகளைச் செய்வதற்குக் கூட, ஆளில்லை. இந்நிலை மாற, தெருக்கூத்துப் பள்ளி ஒன்று தொடங்க வேண்டும் என்பது மறைந்த புரிசை கண்ணப்பத்தம்பிரான் அவர்களின் கனவு. ஆனால் அவருடைய கனவு, அவர் வாழும் காலத்தில் நிறைவேறவில்லை.
கண்ணப்பத்தம்பிரான் அவர்களின் புதல்வர்கள் கலைமாமணி சம்பந்தத்தம்பிரான், காசித்தம்பிரான் ஆகிய இருவருடைய முயற்சியில் சில மாதங்களுக்கு முன்பு புரிசை கிராமத்தில் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. 2008 ஆம் ஆண்டுப பிப்ரவரி மாதம் முதல் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டன. முதற்பயிற்சிக் குழுவில் 15 மாணவர்கள் கலந்துகொண்டனர். முறையான பயிற்சி புரிசை கிராமத்தில் தொடங்கியபோதும், அக்கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் இருந்து மாணவர்கள் வந்து பங்கேற்கவில்லை. சென்னை, பாண்டிச்சேரி பகுதிகளில் ஏற்கனவே நவீன நாடகத்துறை மற்றும் நாட்டியத்துறையில் ஈடுபட்டு வரும் இளம் கலைஞர்களே இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். ′′கிராம்ப்புற மாணவர மாணவிகளுக்கு தெருக்கூத்தின் மீது இயல்பாகவே ஒரு ஈடுபாடு உண்டு. ஆனால் அவர்கள் அதை முறையாக்க் கற்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அப்படியே நினைத்தாலும் சமூகச் சூழல் அவர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு, கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு மற்றும் அவர்தம் பெற்றோருக்கும் ஒரு உந்துதல் ஏற்படுத்துகிற வகையில் ஒரு தொடக்கமாக சென்னையிலிருந்து சில ஆர்வலர்களுக்குப் பயிற்சியளிக்க முடிவு செய்து அதைச் சிறந்த முறையில் நிறைவு செய்தும் உள்ளோம்.′′ என்கிறார் காசித்தம்பிரான்.

பயிற்சி பெற்ற 15 பேரில் 4 பேர் பெண்கள். இருவர் மூன்றாம் பாலினர்(திருநங்கையர்). புரிசை கண்ணப்பத் தம்பிரான் அவர்களின் பெயரர்களும் பெயர்த்திகளும் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். மூன்றுமாதப் பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி மாணவர்கள் இந்திரஜித் என்னும் தெருக்கூத்தைப் புரிசை கிராமத்தில் அரங்கேற்றினர்.
அரங்கேற்ற விழாவில் தில்லிப் பல்கலைக் கழகத்தின் தற்கால இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத்துறையின் முன்னாள் துறைத்தலைவர் பேராசிரியர் செ.இரவீந்திரன் , கவிஞர்அ.வெண்ணிலா, கவிஞர் ஆரிசன், மூன்றாம் அரங்கு கே.எஸ்.கருணாபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இராமாயணத்தின் யுத்த காண்டத்தில் மிகவும் புகழ்ந்துரைக்கப்படுகின்ற இந்திரஜித், இலங்கை வேந்தன் இராவணனின் புதல்வன். வில்லாளரை விரல்விட்டு எண்ணினால், எழுந்து முதல் நிற்பவன் இந்திரஜித் என்று கம்பன் பாராட்டுவான். புலவர் குழந்தையின் இராவணகாவியத்தில் இந்திரஜித் சித்தரிக்கப்படும் விதம் மிகவும் சுவையானது. அத்தகைய இந்திரஜித் தன் தந்தைக்காகப் போரில் மடியும் கதையினை மிக அருமையான தெருக்கூத்தாக நடத்தினர். மூன்று மணிநேரம் புதிதாகப் பயிற்சி பெற்ற மாணவர்களை வைத்து நடத்தினார்கள் என்பது புலப்படாத வகையில் சிறப்பாக கூத்து அமைந்தது. உச்சத்தில் குரலெடுத்துப் பாடுவதாகட்டும், வியப்பை ஏற்படுத்தும் வகையிலான துரித அடவுகளாகட்டும் நடிகர்கள் சிறப்பாகவே செய்தனர். தெருக்கூத்துக்குச் சம்பந்தமில்லாதவர்களைக் கொண்டு வந்து சம்பந்தப்படுத்திவிட்டதில் சம்பந்தத்திற்குப் பெரும் பங்கு உண்டு. ஆம். பயிற்சி ஆசிரியர் சம்பந்தம் அவர்களின் கடுமையான உழைப்பின் பயனை, அவருடைய மாணவர்கள் நடத்திக்காட்டிய தெருக்கூத்தில் காண முடிந்தது. இலக்குவனாக நடித்த இளைஞருக்குத் தமிழே தெரியாது. கூத்துப் பயிற்சிக்கு வந்த பிறகே, கொஞ்சம் பேசக் கற்றிருக்கிறார். ஆனால் அவருடைய பாடல்களிலாகட்டும், வசனங்களிலாகட்டும் அது வெளிப்படவே இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் எவ்வாறு சரளமாகப் பேசுவாரோ அப்படிப் பேசிப் பாடி நடித்தார். பெண் பாத்திரங்களை ஏற்று நடித்த அஷ்வினி மற்றும் கௌரி இருவருமே மிகச் சிறப்பாகச் செய்தனர். இரவு 11 மணிக்குக் கூத்து நிறைவுற்ற போதிலும் மீண்டும் மக்கள் தொலைக்காட்சிக்கென ஒளிப்பதிவு செய்ய வேண்டியிருந்ததால், சாப்பிடக்கூட நேரமில்லாமல் அடுத்த நான்கு மணிநேரம் அதே இந்திரஜித் கூத்தினை ஆடுவதற்குத் தயாரானார்கள் நடிகர்கள். மூன்று மணிநேரம் ஆடிக் களைத்த களைப்பு அவர்கள் ஒருவரின் முகத்திலும் தென்படவில்லை. பாரம்பரியக் கூத்துக் கலைஞர்களைப் போல விடிய விடியக் கூத்தாடிய அவர்களது உற்சாகம் தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்டப்படவேண்டியது. பல தலைமுறைகளாகத் தங்கள் குடும்பத்தினர் போற்றிப் பாதுகாத்துவரும் கூத்து வடிவத்தைக் கற்றுக் கொண்டு, ஆடியது இனிய அனுபவம் என்று பகிர்ந்து கொண்டனர் அஷ்வினியும் கௌரியும். ′′இவர்கள் தெருக்கூத்தில் ஆடவேண்டும் என்று கூட, நான் எதிர்பார்க்கவில்லை; குறைந்த பட்சம் குழுவை நிர்வகிக்கக்கூடிய நிர்வாகிகளாகவாவது ஆக வேண்டும். அப்போதுதான் எங்களது அடுத்த தலைமுறையும் தெருக்கூத்தைத் தலையில் சுமந்து செல்கிறது என்ற திருப்தி ஏற்படும்...′′ என்றார் கண்ணப்ப சம்பந்தன்.
புரிசை கூத்துக் குழுவினரின் உபசரிப்பும் அன்பும் தோழமையும் பார்வையாளர்களாகச் சென்றிருந்த அனைவரையுமே நெகிழவைத்தது.
கூத்துப் பள்ளிகள் புரிசையில் மட்டுமல்ல, பெருங்கட்டூர் இராஜகோபால் வாத்தியார் அவர்களின் முயற்சியால் காஞ்சிபுரத்தில் கட்டைக்கூத்துப் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் எழுத்தாளர் மு.ஹரிகிருஷ்ணன் வழிகாட்டுதலில் களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை இயங்கி வருகிறது. இவை ஆரோக்கியமான அறிகுறிகள். அடுத்த தலைமுறைக்கு தனது பாரம்பரியமான கலைச்செல்வத்தைக் கையளிக்க முயலும் அக்கறை கொண்ட மனிதர்களின் உன்னதமான செயல்பாடுகள் இவை. மிகவும் தொன்மையான, செவ்வியல் தன்மை மாறாதிருக்கிற புரிசைககூத்து போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை கூத்துப் பயிற்சிப் பள்ளி சாத்தியமாக்கும் என்றே தோன்றுகிறது.

No comments: