Wednesday, 19 December 2012


பகத்சிங் குறித்த ‘தூக்கிலிடப்பட்டதாலேயே நாங்கள் கொல்லப்படவில்லை’ என்ற அப்பணசாமியின் ஓரங்க நாடகப் பிரதியை வாசித்த போதும் வாசிப்புக்குப் பிந்தைய பல மணிநேரங்களும் உணர்வுப் பூர்வமான மனக்கிளர்ச்சிக்கு ஆளாகியிருந்தேன்.
பகத்சிங் இந்திய தேசிய விடுதலை எழுச்சியின் ஆற்றல் மிக்க அசைவியக்கம். 23 வயதில் தூக்குக் கயிற்றினைப் புன்னகையோடு எதிர்கொண்ட எழுச்சி மிக்க இளைஞர்களின் குறியீடு. ‘இன்று புதிய முறையிலே இப்பூவுலகம் அமைந்திடும்; இன்மை, சிறுமை தீர நம் இளைஞர் உலகம் ஆகிடும்’ என்ற சர்வதேசிய கீதத்தின் வரிகள் அர்த்தப்பூர்வமானவை; நம்பிக்கைக்கு உரியவை என்பதனைத் தொடர்ந்த வரலாறு மெய்ப்பித்தே வருகின்றது. இன்றைய இளைஞர்கள் குறித்த நம்பிக்கை வறட்சி, தொடர்ந்து முன்வைக்கப்படும் சூழலிலும் சித்தரஞ்சன் தாஸ், முத்துக்குமார், இரோம் சர்மிளா என்று சிலர் வாழ்ந்தும் சிலர் மறைந்தும் இளைஞர்கள் மீது நம்பிக்கை படரச் செய்கிறார்கள்.
இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் தூக்குக் கயிற்றைத் துணிச்சலோடு எதிர்கொண்டவர்கள் இருவர். ஒருவர் தமிழ்நாட்டின் தென்பாண்டிச் சீமையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த கட்டபொம்மன். அவன் கொள்ளையனா? வெள்ளையர்களிடம் மண்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தூக்கிலிடப்பட்டானா என்ற வாதப் பிரதிவாதங்களைத் தாண்டி, மரணத்தை அஞ்சாது ஏற்றவன் என்ற அடிப்படையில் பிந்தைய சமூகத்தின் அடையாளமாகி நின்றான். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! ஏகாதிபத்தியம் ஒழிக! புரட்சி ஓங்குக!’ என்று முழக்கமிட்டு மடிந்த பகத்சிங் மற்றொருவன்.
அந்த 23 வயது இளைஞன் ஏராளமான ஆச்சர்யங்களைப் பிந்தைய சமூகத்திற்கு அள்ளித்தந்து மரணித்தான். அஞ்சாமை, போராட்டக் குணம், தியாகம், விரிந்து பரந்த படிப்பு, தொலைநோக்குத் திட்டமிடல் என அந்த இளைஞன் தந்த ஆச்சர்யங்கள் ஏராளம் ஏராளம்.
பகத்சிங்கின் நண்பர்களான யஷ்பாலின் ‘சூறைக்காற்று வீசிய நாட்கள்’ சிவவர்மாவின் எழுத்துக்கள், இரசியப் போலீசின் அறிக்கைகள், பகத்சிங்கின் சிறைக்குறிப்புகள், சுப.வீரபாண்டியனின் ‘பகத்சிங்கும் இந்திய அரசியலும் ஆகியன பகத்சிங் குறித்த ஓரளவு தெளிந்த சித்திரத்தை முன்வைத்துள்ளன எனலாம். ஆனாலும் புரட்சிகர இயக்கங்கள் குறித்த ஆவணங்களும் புரட்சியாளர்கள் குறித்த வரலாறுகளும் முழுமையான அளவில் அல்லது போதுமான அளவில் தமிழில் வந்துவிடவில்லை.
அப்பணசாமி எழுதியுள்ள இந்த நாடகத்தில் பகத்சிங் குறித்த, புரட்சிகர இயக்கம் குறித்த ஏராளமான நுட்பமான செய்திகள் பதிவாகியுள்ளன. இந்த நாடகப் பிரதியை உருவாக்க அவர் ஏராளமான வரலாற்று ஆவணங்களைத் தேடித் தொகுத்திருக்க வேண்டும். அவர் பயன்படுத்தியுள்ள மிகவும் துல்லியமான சான்றுகள் இதனை நமக்கு உணர்த்துகின்றன.
தூக்கு மேடைக்கு அழைக்கப்படும் சில மணி நேரங்களுக்கு முன் தன்னால் எழுதப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகளை இரகசியமாக அடுக்கிபடி பேசத் தொடங்கும் பகத்சிங், நட்புணர்வோடு பார்வையாளர்களிடம் பல்வேறு இரகசியங்களை, மனவோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளுகிறான். ’23 வயதுகூட நிரம்பாத பொடியனுக்கு என்ன அனுபவங்கள் இருந்துவிட முடியும். இல்லையா?’ என்று வினாவெழுப்பும் பகத்சிங்தான் பிறகு, தனது உணர்ச்சிப் பூர்வமான பகிர்வில் காந்தியைவிட பழுத்த அனுபவசாலியாய் வியாபித்து நிற்கிறான்.
சிறை வாழ்க்கையின் இரகசியங்கள், புத்தகங்கள் வாசிப்பு, பஞ்சாபிச் சீக்கியரின் உற்சாகக் குணத்தின் தொடர்ச்சியாய்த் தானிருப்பது, தன் முன்னோர்களின் போராட்டக் குணம், ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று ஏராளமான செய்திகளைப் பேசிக் கொண்டே போகிறான் பகத்சிங். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபிறகு அவ்வடத்திற்குச் செல்லும் சிறுவன் பகத்சிங்கின் காட்சி விவரணனை அதிர்வைப் பார்வையாளனுக்குக் கடத்துகிறது.
காந்தி குறித்தும் காந்திய வழிமுறைகள் குறித்தும் பகத்சிங்கிற்கு இருந்த விமர்சனங்களை அப்பணசாமி நாடகத்தில் மிக அழகாகப் பயன்படுத்தியுள்ளார். அரங்க அமைப்பில் அவர் காட்டும் காட்சிச் சித்திரம் இந்திய தேசிய விடுதலைக் காலத்தில் காந்தி மற்றும் காங்கிரசின் துரோகத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது. ‘ஒரு இராட்டையிலிருந்து வளரும் கயிறு மேலேறி மூன்று தூக்குக் கயிறுகளாகத் தொங்குகின்றன’ என்று அவர் காட்டும் காட்சி அமைப்பு பக்கம் பக்கமான வரலாற்று அரசியல் விமர்சன எழுத்துக்கள் சொல்லிவிட முடியாத ‘துரோக வரலாற்றை’ ஒற்றை வரியில் குறியீடாக்கி விடுகிறது.
‘முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு மனப்பூர்வமான ஆதரவை வாரி வழங்கி காந்தியும் காங்கிரசும் செய்த துரோகத்துக்குக் கிடைத்த பரிசுதான் ஜாலியன் வாலாபாக்’ என்று பேசுகிறான் பகத்சிங். எவ்வளவு அப்பட்டமான உண்மை இது! காந்தி மீதான காத்திரமான விமர்சனத்தைத் தயவுதாட்சண்யமின்றி முன்வைக்கிறான் பகத்சிங். மக்கள் சக்தியினைக் கொச்சைப்படுத்தும் காந்தியின் போக்கை அடையாளப்படுத்துகிறான். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இந்தியத் தரகுமுதலாளியத்தின் முன்கையெடுப்பும் தந்திரங்களும் சமரசங்களும் தோலுரித்துக் காட்டப்பட வேண்டியவை. அவ்வாறு காட்டப்பட்டால்தான் இந்திய தேசிய உருவாக்கமும் நிலைபேறும் யாருக்கு இலாபமளிக்கக் கூடியன என்பதை அடையாளங்காண முடியும். பகத்சிங்கின் வாய்மொழி அதனை வெளிக்காட்டுகிறது.
தனது சக புரட்சியாளர்கள் குறித்த பதிவுகள், இளைஞர்களுக்கான அழைப்பு, அப்பாவின் பாசத்தால் கூசிக் குறுகுதல், உலகின் மீது தான் கொண்ட தீராக் காதல் என்று ஏராளமான விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுகிறான் பகத்சிங்.
‘பசியையும் சித்திரவதைகளையும் வென்று புரட்சியை வெல்பவர்கள் இளைஞர்கள்தான் என்று இப்போதும் உறுதியாக நம்புகிறேன்’ என்கிறான் பகத்சிங். அந்த நம்பிக்கையை நாடகம் வாசிப்பாளர்கள் மனத்திலும் விதைக்கிறது. 80 ஆண்டுகளுக்கு முந்தைய எழுச்சிமிக்க ஒரு இளைஞனின் மனவோட்டத்தைச் சொல்வதாக இருந்தாலும் சமகாலச் சூழலில் புதிய பொருண்மைகளை வழங்குவதாக நாடகம் அமைந்திருக்கிறது.
துடிப்புமிக்க இளைஞனின் மொழி நடையில் இந்நாடகத்தை உருவாக்கியுள்ள அப்பணசாமி பாராட்டுக்குரியவர்.

No comments: