Wednesday, 19 December 2012

தொல் அகமரபு மீளுருவாக்கமும் சுகிர்தராணியின் ‘காமத்திப்பூ’வும்



முனைவர் கி.பார்த்திபராஜா,
துணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தூய நெஞ்சக் கல்லூரி,
திருப்பத்தூர் – வே.மா.
முன்னுரை:
தமிழின் மிக நீண்ட கவிதை மரபில் பெண் கவிஞர்களின் கவி மொழி, பொது இலக்கிய மொழியிலிருந்து மாறுபட்டும் தனித்தும் வந்திருப்பதை பனுவல் திறனாய்வு முறை எடுத்துரைக்கின்றது. சங்கக் கவிதை என்று அடையாளப்படுத்தப்படும் கவிதைத் தொகுதிகளில் இதுவரை நாற்பத்தொரு பெண்பாற் புலவர்கள் கண்டுணரப்பட்டுள்ளனர். பாடல்களால் பெயர்பெற்ற புலவர்களுள் – அதாவது பெயர்கள் கண்டுணர முடியாத புலவர்களுள் – எத்தனை பேர் பெண் புலவர்கள் என்பதை இன்னும் ஆய்வுலகம் அறியத்தரவில்லை. எனினும் நாற்பத்தொரு பெண் புலவர்கள் என்ற எண்ணிக்கை ஒட்டுமொத்தப் புலவர்களின் எண்ணிக்கையோடு ஒப்புநோக்கும்போது, சங்க காலத்தில் கல்வியில் பாலின சமத்துவம் என்பது ஒருவாறு பேணப்பட்டிருக்கக் கூடும் என்ற கருத்து வன்மை பெறாவிடினும், கல்வி பரவலாக்கத்தில் பெண்கள் வெளிவட்டத்தில் இருத்தப்படவில்லை என்பது உறுதியாகிறது.
சங்கப் பெண் புலவர்களின் பனுவல்களில் வெளிப்படுத்தப்படும் அக வாழ்வுச் சித்திரம் மிக நுணுக்கமான புள்ளிகளில் ஆண் புலவர்களின் பதிவுகளோடு வேறுபடுவதையும் விலகிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது. காதலை, காமத்தை நுட்ப வெளிகளில் பேசிச் செல்லும் மரபு, பின்பு அற்றுப்போகிறது. ஆண்கள் மட்டுமே கவிதைகளில் காதல் அல்லது காமம் பற்றிய உரையாடல்களை நிகழ்த்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இத்தொடர்ச்சியில் சில அறுபடல்கள் அல்லது விதிவிலக்குகள் ஆண்டாள் போன்றோரால் நிகழ்ந்திருக்கின்றன என்பதையும் இணைத்துக் காண வேண்டும்.
காதல் அல்லது காமம் குறித்து வெளிப்படையான உரையாடல் நிகழ்த்தும் மரபு இற்றுப்போன சூழலில் தமிழில் 1990களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் எழுந்த பெண்ணிய எழுச்சி எழுத்துத்துறைக்குள் புதிய வெளிச்சங்களைக் கொண்டு சேர்த்தது. பெண் கவிஞர்களில் பலர் பொது எழுத்துப்போக்கிலிருந்து முற்றிலுமாக விலகி, பெண்ணுடலை எழுதுதல் என்ற செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கவிதையை அத்தகைய பெண் மனம் சார்ந்த பதிவுகளாக்கும் கவிஞர்களில் சுகிர்தராணி குறிப்பிடத்தக்கவர். அவரது ‘காமத்திப்பூ’ கவிதைத் தொகுதியிலுள்ள கவிதைகள் எங்ஙனம் தமிழ் அகமரபை மீளுருவாக்கம் செய்கின்றன என்பதை இக்கட்டுரை மதிப்பிடுகின்றது.
கவிஞர் சுகிர்தராணி:
‘கைப்பற்றி என் கனவுகேள்’ என்ற கவிதைத்தொகுதியுடன் 2002 இல் எழுத்துக் களத்திற்கு வந்தவர் சுகிர்தராணி. இரண்டாயிரமாவது ஆண்டுகளில் புது வெள்ளமெனத் தமிழ் எழுத்துப் பரப்பில் பாய்ந்து வந்த பெண் படைப்பாளிகளில் சுகிர்தராணியின் வரவு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது எனலாம். பிறகு, 2004 இல் ‘இரவு மிருகம்’, 2006 இல் ‘அவளை மொழிபெயர்த்தல்’, 2010 இல் ‘தீண்டப்படாத முத்தம்’ எனத் தொடர்ச்சியாகத் தனது கவிதைகளை வெளியிட்டுவந்தார். பாலுறுப்பு அல்லது பாலுறவு என்பதை வெளிப்படையாக எழுதும் கவிஞர் என்று அவர் விமர்சிக்கப்பட்டார். தமிழ் எழுத்துப்பரப்பில் பல்வேறு சலனங்களை அவருடைய கவிதைகள் ஏற்படுத்தின. இவ்வகையான எழுதியல் முறைமையை ஒரு பண்பாட்டுப் போராட்டமாக, அரசியல் போராட்டமாகக் கைக்கொண்டிருக்கும் சுகிர்தராணியின் ஐந்தாவது கவிதைத் தொகுப்பு, ‘காமத்திப்பூ’. காமத்தையே ஒரு பூவாக படிமப்படுத்தும் சுகிர்தராணி, தன் கவிதைக்கான துணைமைப் பொருட்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்கக் கவிதையிலிருந்தே பெற்றிருக்கிறார்.
படிமத் தலைப்பு:
‘செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த’ என்ற திப்புதோளாரின் குறுந்தொகை முதல் பாடலில் வரும் ‘குருதிப்பூ’, பல்வேறு தொனிப்பொருள்களைத் தரும் சொல்லாட்சி ஆகும். அவ்வகையிலேயே காமத்தை நோயாகப் பார்க்கும் தற்காலப் பொதுப்புத்தியைக் கலைத்து, அதனைப் பூவாகப் பார்க்கும் தன்மை சுகிர்தராணியிடம் உள்ளது. எனவை தொகுப்பிலிடம்பெற்றுள்ள ‘காமத்திப்பூ’ என்ற கவிதையும் கவிதைத் தலைப்பும் பல்வேறு தொனிப்பொருளை உள்ளடக்கியுள்ளன.
தமிழ்மரபில் சில ஒவ்வாமைகள்:
காமம் என்பது காதல் என்ற பொருளிலேயே பழந்தமிழ் இலக்கியங்களில் பயன்று வந்துள்ளன. ஆண் பெண் இணை விழைச்சு என்பதும்கூட, அறத்திற்கு உட்பட்ட ஒன்றாகவே தமிழ் மரபில் கருத்தப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் காமம் என்ற சொல்கூட இழிவைச் (Stigma) சுமக்கும் சொல்லாயிற்று. அதனால்தான் ‘அறத்துப்பால், பொருட்பாலைத் தொடர்ந்த காமத்துப்பால், பிற்காலத்தில் ‘இன்பத்துப்பால்’ ஆக்கப்பெற்றது. எனவே காமம் என்பது இழிந்த சொல்லாக, செயலாகப் பார்க்கப்பட்டது. காதல்=காமம் என்பது காதல்Xகாமம் என்பதாக எதிர்நிலை முரணாக உருவாக்கப்பட்டது. காமம் மட்டுமல்ல காதலும் கூட இன்றைய சாதியப்படிநிலைச் சமூகத்தில் ஒவ்வாமை (Allergy) ஆகியது.
கவிஞர் சுகிர்தராணி சமகால இவ்வொவ்வாமைச் சமூகத்திற்குள்ளிருந்து மரபார்ந்த பொருளடங்கக் ‘காமம்’ என்ற சொல்லைக் கையாளுகிறார்.
காதலா? காமமா?:
காதல் என்பது உன்னதமானது என்பதும் காமம் என்பது கொச்சையானது அல்லது இழிவானது என்பதும்தான் தமிழ்ச்சமூகத்தின் பொதுப்புத்தியாகும். இம்மதிப்பீட்டைக் கேள்விக்கு உள்ளாக்குகிறார் சுகிர்தராணி. ‘தேங்கிக் கிடக்கும் காதலை/ எப்படி அடைவது / மிதந்து / கொண்டிருக்கும் / காமத்தைப் பருகாமல்’ (ப.11) என்று கேள்வி எழுப்புகிறார். காதலின் நீட்சியாகக் காமத்தைப் பார்க்கும் உடன்மறைச் சிந்தனை இவரது கவிதைகளெங்கும் பரவிக்கிடப்பதை அவதானிக்கலாம். ‘ஒருதுளிக் காதலோ பெருங்கடல் காமமோ / அவற்றின் கரங்களில் / ஒப்புக் கொடுக்கிறேன் என் ஆவியை’ (ப.24) என்று எழுதும்போதும், ‘நெடிய மரத்தில் படரும் மிளகுக்கொடியென / என்மீது நீ படர்கையில் / காதலும் காமமும் / கண்கள் கட்டப்பட்ட நீதிதேவதையின் தராசில் / ஏறி நிற்கின்றன’ (ப.48) என்றெழுதும்போதும் காதலினைக் கிளையாறாகவும் காமத்தினைப் பெரும் ஓசையுடன் எக்காளமிட்டுப்பாயும் காட்டாறாகவும் கொள்வதைக் காணமுடிகின்றது.
காமத்தைக் கொண்டாடுதல்:
காமத்தை இழிநிலைப்படுத்துதலுக்கு எதிரான கலகச் செயல்பாடு அதனைக் கொண்டாடுதல் ஆகும். சுகிர்தராணி கவிதைகளில் காமம் என்பது கழிவிரக்கம் கொள்ளத்தக்கதாகவோ, இழிவானதாகவோ கொள்ளப்படாமல், ஒரு கொண்டாட்டச் செயல்பாடாகவே முன்வைக்கப்படுகின்றது.
‘அவன் மார்பின் அடர்ந்த காடுகள்  / மழை மேகத்தை உண்டு பண்ண / காமத்தின் கூத்தை / ஒற்றை ஆளாய் ஆடி முடிக்கின்றேன்’ (ப.14) என்றும், ‘புயலின் விசையோடு / உனக்குள் பாய்கிறேன் / ஆயிரம் கை கொண்டு / அமிழ்த்திக்கொள்கிறாய் / உன் காமத்தின் ஆழத்தில்’ (ப.21) என்றும் அவர் காமத்தைக் கொண்டாடுகிறார்.
‘எவரையும் தீண்டியிராத பாம்பின் / விஷத்தைப் போல / மெல்லிய காமம் பரவுகிறது’ (ப.30) என்றும் ‘ஒவ்வொரு பருவத்திலும் /பெருந்தீயாய் எரிகின்ற காமத்தினைச் / சிறுசிறு வளையங்களாக்கி விழுங்குகின்றேன்’ (ப.50) என்றும், ‘ஒலிவ மரத்தின் தழைகளால் / அலங்கரிக்கப்பட்ட கூடாரத்தினுள் / நெகிழ்ச்சியான புணர்வைப் பரிசளிக்கின்றேன்’ (ப.50) என்றும் வெளிப்படுகிற சுகிர்தராணியின் கவிதை வரிகளில் காமம் ஒரு கொண்டாட்டப் பொருளாகிவிடுகிறது.
காதலைப் பெண் முன்மொழிதல்:
இலக்கியத்தில் இடம்பெறும் பெண்ணுக்கான இலக்கண வரையறைகளைப் பொருளிலக்கணங்கள் சுட்டுகின்றன. நீதி நூல்கள் ‘பெண்மை சிதறாத’ பெண்ணுக்குரிய இலக்கணங்களை வலியுறுத்துகின்றன. இவ்வரையறைகளை மீறும் பெண்களைக் குறித்த வசவுச் சொற்களும் இழிதகைமையும் மதிப்பீடுகளும் நீதி இலக்கியப் பரப்பெங்கும் சிதறிக் கிடக்கின்றன. காதலனைத் தேடிப் புறப்படப்போவதாய்ச் சொன்ன வெள்ளிவீதியின் கவிதை எச்சங்கள் சுகிர்தராணியின் கவிதைகளில் விரவிக் கிடக்கின்றன.
ஆள் நடமாட்டமற்ற சாலையில் விழுந்து கிடந்த முள் கொத்தொன்றைக் குனிந்து எடுத்துத் தூர வீசும் தலைவனைப் பின்தொடரும் தலைவி, தொடர்ந்து தலைவனின் மென்மைப் பண்புகளைக் கண்ணுறுகிறாள். தரையில் கிடந்த பறவைக் குஞ்சுகளை மீண்டும் கூட்டில் சேர்ப்பித்தல், தன் மீது தவ்விய நாய்க்குட்டிக்கு ரொட்டித் துண்டொன்றைப் போடுதல், சிறு செடியின் கிளையை இதமாக நீவி முத்தமிடுதல் என அவனது செயல்பாடுகளினூடாக அவனைத் தொடரும் தலைவி, ‘சிறகு முளைத்த விதையென / அன்றிலிருந்து அலைந்துகொண்டிருக்கிறது / அவன் மீதான தீராக் காதல்’ (ப.12) என்கிறாள்.
சுகிர்தராணியின் அனைத்துக் கவிதைகளும் காதலுற்ற பெண்ணின் கூற்றாகவே அமைகின்றன. இக்கவிதைகள் தலைவி, தனது தோழிக்கோ, பிறருக்கோ, நெஞ்சுக்கோ உரைப்பனவாக அமையாமல் முகமற்றோரை நோக்கி உரைப்பனவாக உள்ளன.
காதலனைத் தேடிச் செல்லல்:
குறித்த குறியிடத்தில் தலைவியைச் சென்று சந்திப்பது தலைவனின் கடப்பாடு ஆகும். பகற்குறி மற்றும் இரவுக்குறிக்குரிய இடங்கள் இலக்கணிகளால் சுட்டப்பட்டுள்ளன. இவையனைத்திலும் ஆண் முன்கையெடுப்பவனாகவே இருப்பான். அதற்கு உடன்படும் பணியை மட்டுமே தலைவி செய்வாள்.
ஆனால் சுகிர்தராணியின் கவிதைகளில் காதலுக்கான முன்மொழிவை மட்டுமின்றி உடலுறு புணர்ச்சிக்கான முன்மொழிவையும் தலைவியே செய்கிறாள். ‘இரவுக்குறி’ என்ற கவிதையில், தலைவனை அவனுடைய இல்லத்தில் சந்திக்கச் செல்லும் தலைவியின் சித்தரிப்பை விரிவாகக் காட்டுகிறார் சுகிர்தராணி. சரிந்த மலையின் அடிவாரத்தில் நிலவு உறங்கியிருத்தல், கழுத்து நீண்ட பெண்மயில் ஒன்று கற்களையும் முட்டைகளென அடைகாத்தல், இரவின் கறுத்த பாதைகளில் வண்டுகள் மொய்த்துக் கிடத்தல், நீர்த்த நிழலைப்போலத் தொடரும் நரந்தம்பூவின் வாசனை, மெய்யுறு புணர்ச்சியில் நீட்டு களித்துக் கிடந்தமை பற்றிய நினைவுகள் என்று நகர்ந்து தலைவனின் இடத்தை அடைகிறாள் தலைவி.
‘பிரப்பங்கொடி சுற்றிய கால்களை / விடுவித்துக்கொண்டு / காவல்சூழும் அவ்வீட்டை அடைகிறேன் / மேன்மாடத்தில் விளக்கெரிய / பூப்பந்தைச் சாளரத்தில் வீசுகிறேன் / எந்தன் இரவுக்குறி உணர்ந்து / எட்டிப் பார்க்கிறான் அவன்’ (ப.35) என்று தலைவியின் கூற்றாக அமைகிறது இக்கவிதை. இலக்கிய மரபில் இக்கவிதை சுட்டும் காட்சி, இதுவரை காணக்கிடைக்காத காட்சியாகும். கெட்டி தட்டிப்போன தற்காலத் தமிழ் மனத்தினை இக்காட்சி சலனப்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. காதலை, காதலுக்கான முயற்சியை, காமத்தை முன்னெடுக்கும் தன்மை கொண்ட பெண்கள், சுகிர்தராணியின் கதைகளில் உயிர்பெற்று உலவுகிறார்கள். உண்மையில் இப்போதுதான் இத்தலைவியர் தங்கள் விருப்பங்களுக்குத்தக அசைகிறார்கள் என்பது மிகை மதிப்பீடன்று.
கருப்பொருள் சார்ந்த மரபு:
இயற்கை சார்ந்த வாழ்க்கையிலேயே காதலும் இயற்கையாக அமைகின்றது. பிற்காலக் கவிதைப் பண்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் சங்கக் கவிதைகளே இதற்கான சான்றுகள் ஆகும்.
காட்டுக்குருவிகள், பறவைகள், விலங்குகள், மரங்கள், கொடிகள், பூக்கள், ஆற்றோடைகள் என்று இயற்கை சார்ந்த ஏராளமான கருப்பொருள்கள் சுகிர்தராணியின் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன. அவை கவிதையின் பேசுபொருளுக்கு ஓர் எளிமை சார்ந்த கவித்துவத்தையும் நம்பகத்தன்மையையும்   அளிக்கின்றன. காதல் என்னும் அகம் சார்ந்த பொருண்மைக்கும் இக்கருப்பொருள்கள் மரபு சார்ந்த பின்புலத்தை அளிக்கின்றன.
முடிவுரை:
-    காமத்தைப் பூவாகப் படிமப்படுத்தும் புதுமையிலிருந்து புதிய சொற்சேர்க்கைகள், பதங்கள் என புதிய மொழியோடு எழுத்துக்களத்தில் புழங்குகிறார் சுகிர்தராணி.
-    தமிழ்ப் பொதுப்புத்தி, காமம் குறித்த ஒவ்வாமையைக் கொண்டிருக்கிறது. அதனாலேயே அதைப்பற்றிப் பேசுவதை இழிவாகக் கருதுகிறது.
-    காதலை உன்னதப்படுத்துவதையும் காமத்தை இழிவாகப் பார்த்தலையும் சுகிர்தராணியின் கவிதைகள் புறந்தள்ளுகின்றன. மாறாகக் காமத்தை விவாதக்களத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கின்றன.
-    காமம் என்பது கொண்டாடப்பட வேண்டியது என்பதாகவே சுகிர்தராணியின் கவிதை வெளிப்பாடுகள் அமைகின்றன.
-    காதலைப் பெண் முன்மொழிதல், காதலனைப் பின்தொடர்தல், காமத்தை முன்மொழிதல், முயங்கல் எனத் தமிழ்க் கவிதைப்பரப்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்கக் கவிதை மரபின் நீட்சியாகச் செய்கிறார் சுகிர்தராணி.
-    சுகிர்தராணியின் கவிதைகளில் இடம்பெறும் கருப்பொருள்கள் கவிதையை இயற்கை சார்ந்ததாக மாற்றுகின்றன. அது கவிதைக்கு எளிமை சார்ந்த கவித்துவ அழகைக் கொண்டு சேர்க்கின்றன.
-    சுகிர்தராணி தமிழ் அக மரபினை மீளுருவாக்கம் செய்யும் போது சமகாலத்திற்குரியதாக மாற்றிவிடுகிறார். இதுவே அவரைத் தனித்துவம் மிக்க கவிஞராக அடையாளப்படுத்துகிறது எனலாம்.

No comments: