Wednesday, 19 December 2012

மணிமேகலை மறுவாசிப்பும் எஸ்.எம்.ஏ.ராமின் ‘ஆபுத்திரனின் கதை’ நாடகக் கட்டமைப்பும்


முனைவர் கி.பார்த்திபராஜா
துணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தூய நெஞ்சக் கல்லூரி,
திருப்பத்தூர்.
முதலாக…
மரபை மறுவாசிப்புச் செய்வது என்பது நவீன கால அரசியல், கலை இலக்கியச் செயல்பாடு ஆகும். புதிய கோட்பாடுகளின் அறிமுகமும் நவீன விமர்சனச் சிந்தனைகளும் தமிழில் மறுவாசிப்புக்கு அடித்தளம் அமைத்தன எனலாம். புராணங்கள், இதிகாசங்கள், பண்டைய வரலாறு முதலான வாசிப்புகளினூடே மரபிலக்கிய வாசிப்பும் இருபதாம் நூற்றாண்டில் முதன்மை பெறத் தொடங்கியது. மறுவாசிப்பு என்பது விமர்சனக் கட்டுரைகளாக மட்டும் வெளிப்படவில்லை; மாறாக, அனைத்து இலக்கிய வடிவங்களிலும் மறுவாசிப்புகள் வெளிப்பட்டன. அம்மறுவாசிப்புகளின் ஒரு பகுதியாகவே மறுவாசிப்பு நாடகப் பிரதிகள் உற்பத்தியாயின.
மரபிலக்கிய மறுவாசிப்புகள்:
சி.என்.அண்ணாதுரையின் ‘நீதிதேவன் மயக்கம்’, திருவாரூர் தங்கராசுவின் ‘கீமாயணம்’, சே.இராமானுஜத்தின் ‘மௌனக்குறம்’, இன்குலாபின் ‘ஔவை’ முதலானவை மறுவாசிப்பு நாடகங்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
மணிமேகலை மறுவாசிப்புகள்:
இரட்டைக் காப்பியங்களாகக் கொள்ளப்படும் சிலம்பும் மேகலையும் மறுவாசிப்பில் ஏராளமான நாடகப் பிரதிகளாக உருவாக்கம் பெற்றுள்ளன. இந்திரா பார்த்தசாரதியின் ‘புறஞ்சேரி’ குறிப்பிடத்தக்க சிலப்பதிகார மறுவாசிப்புப் பிரதியாகும். அவர் எழுதிய, ‘கொங்கைத் தீ’யும் குறிப்பிடத்தக்கது. சிலப்பதிகாரத்தின் மறுவாசிப்பு நாடகப் பிரதி தமிழில் மட்டுமல்லாது கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷின் ‘மதுரைக்காண்டம்’ கன்னடத்தில் வெளிவந்த சிலப்பதிகாரம் குறித்த நாடகப்பிரதியாகும்.
மணிமேகலை என்ற காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டும் தமிழில் பல நாடகப்பிரதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எஸ்.எம்.ஏ.ராமின் ‘மணிமேகலையின் கண்ணீர்’, இன்குலாபின் ‘மணிமேகலை’, வெளி.ரங்கராஜனின் ‘மேகலை’, பேராசிரியர் சே.இராமானுஜத்தின், ‘மேகலை – ஒரு மேனிப்புனைவு’ ஆகியன அறியப்பட்ட பிரதிகள் ஆகும்.
ஆபுத்திரனின் கதை வாசிப்பு:
மணிமேகலையின் உட்கதையாக இடம்பெறும் ஆபுத்திரனின் கதை நாடகீயத் தன்மை கொண்ட சிறந்த கதை ஆகும். இன்குலாபின் ‘மணிமேகலை’ நாடகத்தில் ஆபுத்திரனின் கதை, காப்பியத்தில் இடம்பெற்றுள்ளதைப் போலவே உபகதையாக வருகிறது. இக்கதையைத் தனி நாடகமாகத் தமிழில் சிலர் எழுதி முயன்றுள்ளனர். அவர்களுள் பேராசிரியர் மு.ராமசாமி குறிப்பிடத்தக்கவர். அவருடைய ‘சாப விமோசனம்’ நாடகத் தொகுப்பில் உள்ள, ‘ஆபுத்திரன்’ குறிப்பிடத்தக்க நாடகப்பிரதி ஆகும். எஸ்.எம்.ஏ.ராம் எழுதிய ‘ஆபுத்திரனின் கதை’ தமிழ் மரபிலக்கிய மறுவாசிப்பு நாடகங்களில் குறிப்பிட்டுப் பேசப்படவேண்டிய பிரதியாகும்.
கதைப்போக்கு:
மணிமேகலை காப்பியத்தில் இடம்பெறும் ஆபுத்திரனின் கதையின் மைய ஓட்டத்தை பெரிதும் மாற்றாமல் தனது ‘ஆபுத்திரனின் கதை’ நாடகத்தைப் படைத்துள்ளார் எஸ்.எம்.ஏ.ராம். ஆனால், ஆபுத்திரனின் புகழ்ப்பெருக்கத்தால் சஞ்சலமடைந்து, மழைபொழிவித்து அட்சய பாத்திரத்திற்குப் பணியில்லாமற் செய்யும் இந்திரனை அவர் அக்கால அரசியல் வாசிப்புக்குத் தக மாற்றி அமைத்துள்ளார். அதாவது, ஆபுத்திரனின் புகழ்பெருக்கத்தால் நெருக்கடிக்கு உள்ளாவோராக மூவேந்தர்களைப் படைத்துள்ளார். அவர்களே ஆபுத்திரனின் அட்சய பாத்திரத்திற்கு வேலையில்லாமற் செய்கின்றனர்.
இந்திரன் என்ற புராணத் தேவன், மூவேந்தர்களாக நாடகத்தில் மாற்றம் பெற்றமை குறித்துப் பின்வருமாறு எழுதுகிறார் எஸ்.எம்.ஏ.ராம்:
‘ஆபுத்திரன் அரசியல் சதிகளால் அழுத்தப்பட்டதாகவே தோன்றுகிறது. அதற்கு சமூகமும் தனது பிரக்ஞை இன்றியே ஒத்துழைத்த்து. மூலக்கதையில் வரும் இந்திரன், எனது கதையில் காரணத்தோடேயே மூவேந்தர்களாகப் பரிணாமம் கொண்டான். சில வரலாற்றாசிரியர்கள், புராணங்களில் வரும் இந்திரனை ஓர் இனக்குழுத் தலைவனாகவே (head of an ethnic group) சித்தரித்திருக்கிறார்கள்’ என்கிறார்.
கதை சொல்லிகள்:
ஆபுத்திரன் கதை மணிமேகலை காப்பியத்துள் வரும் ஓர் உபகதை ஆகும். அக்கதையை நவீன நாடகமாக்கும்போது விவரித்துச் சொல்ல கதைசொல்லிகள் வருவதாக எஸ்.எம்.ஏ.ராம் அமைத்துக் கொள்கிறார். தெருக்கூத்துக் கட்டியக்காரன் போலத் தனியாக அன்றி, அண்ணன் தம்பியாக இருவர் வந்து கதை சொல்லுகின்றனர். அவர்கள் பேசும் முறைமையும் ‘லாவணிக் கலை’யை அடியொட்டியதாக இருக்கிறது. காப்பிய காலத்தையும் நாடகம் நிகழ்த்தப்படும் தற்காலத்தையும் இணைக்கும் பாலமாகவே இக்கதை சொல்லிகள் வருகின்றார்கள். இது நாடகத்திற்கு எந்த அளவிற்குத் துணை செய்யும் என்ற வினாவுக்கு,
‘அவர்கள் (அண்ணன்-தம்பி) உண்மையில், ஒரு நூலிழையில் ஆதிகால அரசியலையும் தற்கால அரசியலையும் இணைத்து, பார்வையாளனுக்கு ஒரு ஒப்பீட்டுத் திறனாய்வைத் தருபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சிற்சில இடங்களில் அதிகப்பிரசங்கிகளாக மாறிவிடுவது உண்மை என்றாலும், அவர்களின் பிரவேசமும், அவர்கள் ராகத்தோடும் தாளத்தோடும் அவ்வப்போது பாடும் ‘லாவணி’ பாணிப் பாடல்களும் நாடகத்துக்கு ஒரு கவித்துவ அழகை ( Lyrical beauty) சேர்க்கும் என்றே நான் எண்ணுகிறேன்’ என்கிறார்.
குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் ஆபுத்திரனின் கதையைச் சொல்லத் தொடங்கும் சகோதரர்கள், பிந்தைய பகுதிகளில் ஆபுத்திரனின் வரலாற்றைக் கனத்த மனத்தோடு தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஆபுத்திரனுக்கு நிகழ்ந்த சோகம் அவர்களை மௌனிகளாக்குகின்றது.
ஆபுத்திரன் என்ற காப்பியகாலத்து நாயகனின் கதையைச்சொல்ல, கதைசொல்லிகள் என்ற உத்தியை நாடகாசிரியர் பயன்படுத்தியிருப்பது, எளிதில் பார்வையாளனை நாடகத்துக்குள் பயணப்பட உதவிகரமாக இருக்கிறது எனலாம்.
உணர்வு நிலைச் சித்தரிப்பு:
ஆபுத்திரனுக்கும் அவனுடைய தந்தைக்குமிடையிலான பிணைப்பு நாடகத்தில் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. யாகத்தில் பலியிடக் கொண்டுவரப்பட்ட பசுவை ஆபுத்திரன் விடுவித்தமைக்காக ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்படுகிறான். பார்ப்பன சமூகத்தின் அமைப்புக்குள் வாழ விரும்புகிற ஆபுத்திரனின் வளர்ப்புத் தந்தை மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளாகித் தானும் ஆபுத்திரனைத் தள்ளி வைப்பதற்குக் கட்டுப்படுகிறார். இந்த உணர்வு நெருக்கடி நாடகத்தில் மிக நுட்பமாகச் சித்தரிக்கப்படுகிறது.
மதுரை நகரத்தை வந்தடைந்த ஆபுத்திரனுக்கும் அங்கிருந்த பிச்சைக்காரர்களுக்குமிடையிலான உறவு, நெகிழ்வுடன் படைக்கப்பட்டிருக்கிறது. பிச்சைக்காரர்கள் ஆபுத்திரனுக்கு உணவளிப்பதும், பிறகு ஆபுத்திரன் பிச்சையெடுத்து, ஏலாத பிச்சைக்காரர்களுக்கு உணவளிப்பதும் அதையொட்டிய அவர்களின் நட்பும் நாடகத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாடகீயம்:
ஆபுத்திரனின் புகழால் பொறாமையடைந்த மூவேந்தர்கள் அவனை மிஞ்சும் நோக்கத்தோடு வந்து சந்திக்கிறார்கள். ஆபுத்திரனுக்கு ஏதாவது கொடையளித்துத் தங்களின் கொடைத்திறனைப் பீற்றிக்கொள்ள நினைக்கின்றனர். ஆனால் ஆபுத்திரன் அவையனைத்தையும் மறுத்துவிடுகிறான். ‘மன்னர்களே… தயவு செய்து மன்னியுங்கள்… உங்கள் அறியாமை, உங்கள் ராஜ்ஜியத்தைக் காட்டிலும் பெரிதாய் இருக்கிறது’ என்கிறான்.
ஆபுத்திரனின் அட்சய பாத்திரத்திற்கு வேலையில்லாமல் செய்யும் பொருட்டு மூவேந்தர் சத்துணவுத் திட்டத்தை அறிவிக்கின்றனர். ஆபுத்திரனிடமிருந்து உணவு பெறுவோர் இல்லாமல் போகின்றனர். ஆபுத்திரன் உணவு பெறுவோரைத் தேடி அலைகிறான். பல்லக்குத் தூக்கிகள், பாணன், விறலி, மீமாம்சகன், சைவன், வைணவன், ஆசீவகன், வைசேஷிகன், பூதவாதி என பலதிறத்தாரையும் அணுகி உணவு பெற்றுக் கொள்ள வேண்டுகிறான். இவர்களை மக்கட் சமூகத்தின் வகைமாதிரிகளாகக் கொண்டு, நாடகாசிரியர் படைத்துள்ளார் எனலாம்.
வைதீகம்Xபௌத்தம்:
நாடகத்தில் வைதீகத்துக்கும் பௌத்தத்திற்குமான கருத்துநிலை முரணை நேரடியாக வைக்காமல் காட்சிப் போக்கில் இயல்பாக அமைத்துள்ளார் நாடகாசிரியர். ஆபுத்திரனைச் சாவகத்தீவு நோக்கிப் பயணிக்க வழிகாட்டுவோராகவே பௌத்த பிக்குகள் நாடகத்தில் படைக்கப்பட்டுள்ளனர். மணிபல்லவத் தீவில் கப்பல் தனியாக விட்டுச் சென்றுவிட, அட்சய பாத்திரத்தைக் கோமுகிப் பொய்கையில் எறிந்துவிட்டு, உண்ணாநிலையிருந்து உயிர் துறக்கிறான் ஆபுத்திரன். மரணத்துக்கு முன் அவன் கையற்றுப் பேசும் வார்த்தைகள், பௌத்த நோக்கினாலானது எனலாம்.
முடிவாக…
மணிமேகலை பற்றிய மறுவாசிப்பில் எஸ்.எம்.ஏ.ராமின் ‘ஆபுத்திரனின் கதை’ குறிப்பிடத்தக்கது ஆகும்.
கதைப்போக்கில் முதன்மையாக மாற்றம் ஏற்படுத்தாமலேயே, சிற்சில மாற்றங்களைப் புனைவதன் மூலம் கதைக்கு ஒரு நம்பகத் தன்மையைக் கொடுக்கிறார் நாடகாசிரியர்.
கதைசொல்லிகள் வாயிலாகப் புராணக்கதையினைச் சமகால வாழ்வுக்கு நெருக்கமாக்குவது புதிய உத்தியாக உள்ளது.
நாடகத்தில் ஆபுத்திரனின் கதை, புதிய நாடககீயக் கூறுகளைக் கொண்டு இயங்குகிறது. அது நாடகத்துக்குக் காட்சி அளவிலான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.
வைதீகத்திற்கும் பௌத்தத்திற்குமான முரணை எளிய முறையில் நாடகம் கையாண்டுள்ளது.
மேற்குறித்த வகையில் எஸ்.எம்.ஏ.ராமின் ‘ஆபுத்திரனின் கதை’ மறுவாசிப்பு ஆக்கங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.



No comments: