Wednesday, 19 December 2012

சமூக மனிதனை உருவாக்கும் நாடகப் பயிற்சிகள்



முனைவர் கி.பார்த்திபராஜா
மனிதன் இயல்பாகவே கூட்டாக வாழும் பண்பினை உடையவன். இவ்வண்டத்தின் உயிரினங்களில் பல்வேறு விலங்குகளும் கூடக் கூட்டாக வாழும் இயல்பினை உடையன. ஆனால் மனிதனுடைய கூட்டு வாழ்க்கை, விலங்குகளின் கூட்ட வாழ்க்கையினும் பெரிதும் பண்பில் வேறுபட்டதாக உள்ளது.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு, உலக அளவில் ஏராளமான வாதப் பிரதிவாதங்களோடு அறுதியிட்டு நிறுவப்பட்டுள்ளது. எனவே மனிதனிடம் விலங்கு வாழ்க்கையின் பண்புகளின் மிச்ச சொச்சங்கள் நீக்கமற நிறைந்தே கிடக்கின்றன என்பதனை அவனுடைய செயல்பாடுகள் பல நிரூபிக்கின்றன.
எனவே மனிதனை ஒரு சமூக விலங்கு என்று வரையறுப்போரும் உள்ளனர். குணாம்ச அடிப்படையில் மனிதன் வேறுபடுகிறான் என்பதனை முற்றிலுமாக உளவியல், பண்பியல், செயல்பாட்டியல் அடிப்படையில் மறுப்போரும் உள்ளனர். எடுத்துக்காட்டாக சிரிப்பு என்ற ஒன்று மனிதனிடம் மட்டுமே உண்டு எனும் கருத்தை ஆவேசத்துடன் மறுக்கும் விலங்கின ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். விலங்குகள் சிரிப்பதில்லை என்பது எந்த ஆராய்ச்சியின் முடிவு? என்று அவர்கள் எதிர்வினா எழுப்புகின்றனர். எனவே மனிதன் விலங்குகளிடமிருந்து மாறுபடுவது முற்றிலும் வேறான அம்சங்களிலாகும் எனலாம்.
அதாவது மனிதன் உருவாக்கியுள்ள சமூக நிறுவனங்கள், கட்டுமானங்கள் முற்றிலும் மனித சமூகத்திற்கே உரியவை. அவற்றில் ஒன்றுதான் கூட்டு வாழ்க்கை.
குரங்கிலிருந்து மனிதன் உருவானதன் பரிணாம வளர்ச்சியில் உழைப்பின் இடைநிலைப் பாத்திரம் பற்றி ஏங்கெல்ஸ் விரிவாக எழுதியிருக்கிறார். மனிதனின் கட்டை விரல் உருவாக்கமும் அமைப்பும் செயல்பாடும் ஓயாத உழைப்பின் வாயிலாக விளந்தவை. ‘பறவைகள் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை’ என்ற கிறித்தவ வேதாகமத்தின் வாக்கியத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுதல் நலம். மனிதன் ‘விதைக்கவும் அறுக்கவும் (அதைப் பதுக்கவும்)’ கற்றுக் கொண்டவன். எனவே மனிதனின் உழைப்புதான் இந்த பூமிப்பந்தின் முகவரியை மாற்றியது எனல் நிதர்சனம்.
மனிதனின் உழைப்பே காட்டைத் திருத்தி நாடு சமைத்தது. குடிசைகள், கோபுரங்கள், அணைகள், அரண்மனைகள் என அத்தனையையும் படைத்தன மனிதனின் கைகள். ஆம். கைகள் உழைப்பின் அடையாளம். உலகின் ஏழு அதிசயங்கள் மட்டுமல்ல அத்தனை அதிசயங்களையும் படைத்தவன் மனிதனே.
எனவே உழைப்பும் உழைப்பால் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் தேவையும் மனிதனிடம் பண்பாகவே படிந்துள்ளன. ‘தனிமரம் தோப்பாகாது’ என்ற பழமொழி தனித்துவம் வாய்ந்தது.
மனிதனின் தோற்றம் என்பதே இந்த கூட்டு வாழ்க்கையின் அடித்தளத்திலே அமைந்ததுதான். வரலாற்றில் பன்னெடுங்காலமாக இப்பண்பை மனித சமுதாயம் ஏதோவொரு வகையில் பேணிப் பாதுகாத்தே வந்திருக்கிறது. இந்தக் கூட்டு வாழ்க்கை இல்லையெனில் உற்பத்தி பாதிக்கப்படும்; சமுதாய இயக்கம் ஸ்தம்பித்துவிடும்; சமூகத்தின் மிகப்பெரும் தேக்கமும் நெருக்கடியும் ஏற்பட்டுவிடும். எனவே வர்க்கம் தோன்றுவதற்கு முன்னும் வர்க்கப் பாகுபாடு தோன்றி, எதிரெதிர் வர்க்கங்கள் ஒரே சமூக அமைப்பில் இயைந்து வாழும்போதும் ஏற்படும் உறவுநிலையினை ‘உற்பத்தி உறவுகள்’ என்று வகைப்படுத்திப் பார்த்தார் காரல் மார்க்ஸ்.
உற்பத்தி, உற்பத்தி உறவுகள், உற்பத்தி சாதனங்கள் என காரல் மார்க்ஸ் உருவாக்கிய கருத்துருவங்கள் அனைத்துமே மனித சமூகத்தின் கூட்டு அமைப்பை விளக்குகின்றன. ஒன்றையொன்று வீழ்த்தும் தன்மையைத் தனது வரலாற்றுக் கடமையாகக் கொண்டிருக்கும் எதிரெதிர் வர்க்கங்கள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டம் வரையிலும் ஒரே குடையின் கீழ் இயைந்து வாழ வேண்டியதிருக்கிறது.
வரலாற்றில் ஒரு வர்க்கத்தை வீழ்த்திய மற்றொரு வர்க்கமும் கூட புதிய சமுதாயத்தை நோக்கி நடை பயின்றிருக்கிறது. முந்தைய சமுதாயத்தைவிட அதற்கடுத்த சமுதாயம் முற்போக்கானதாகவே அமைந்திருக்கின்றன. எனவே வரலாற்றில் நடந்த வர்க்கப் போராட்டங்களும் வீழ்ச்சி எழுச்சிகளும் மனித சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவனவேயன்றி வேறல்ல. மனித சமூகத்தின் இந்த வளர்ச்சிக்கட்டத்தையே, ‘ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே’ என்றார் மார்க்ஸ்.
மனிதனின் கூட்டு வாழ்க்கைப் பண்புகளே மனித சமூகத்தை மேலும் மேலும் முன்னெடுத்துச் சென்றிருக்கிறது. விட்டுக்கொடுத்தல், உதவுதல், உழைப்பை மதித்தல், திறனைப் போற்றுதல், தகுதிக்குத் தக மதிப்பளித்தல், அடுத்தவரின் வலியில் வேதனையில் மகிழ்வில் பங்கெடுத்தல் என எடுத்துக்காட்டுக்காகச் சில பண்புகளை முன்மொழியலாம். இவையும் இவை போன்ற இன்னபிற பண்புகளுமே மனித சமூகத்தை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் கட்டுக்கோப்பு மிக்க சமுதாயமாக நிலை நிறுத்தியிருக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
மேற்குறித்த கூட்டு வாழ்க்கையின் இயல்பான மனிதாயப் பண்புகள் நெருக்கடி மிகுந்த நவீன வாழ்க்கையில் சில சிதைவுகளை எதிர்கொண்டு வருகின்றன. இப்பரந்த பூமிப் பந்தின் சிறிய துகள் மனிதன் என்னும் உணர்வு வழக்கொழிந்து வருவதை நடைமுறையில் காணமுடிகிறது. ‘மனிதன் மகத்தானவன்’தான். ஆனால் இப்பூமிப் பந்து, மனிதனுக்கு மட்டுமல்ல இங்குள்ள விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இயற்கைக்கும் கூடச் சொந்தமானது என்னும் உணர்வு அற்று வருகிறது. எனவே மனிதனை மையப்படுத்தி இயற்கையை முற்றிலுமாகச் சுரண்டுவது நடக்கிறது.
தனிமனிதனின்றிச் சமூகமில்லை என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை சமூகமின்றித் தனி மனிதனுமில்லை என்பதாகும். ஆனால் தனிமனிதனை முன்னிறுத்திய தன்வயச் சிந்தனை இக்காலகட்டத்தில் அதிகரித்திருப்பதையும் அதுவே முதன்மையான போக்காக மாறிவருவதையும் பல்வேறு நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
‘மனிதரில் நீயும் ஒரு மனிதன்’ என்றும் ‘மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மனிதனுக்கு அறைகூவல் விடுத்தார். அந்த அறைகூவல் காற்றில் கலந்த பேரோசையாக மாறிவிட்டது. சமூக மனிதத் தன்மை குறைந்து தனிமனிதத் தன்மை அதிகரித்து வருகிறது.
இக்காலகட்டத்தில் மனிதனின் இயல்பான கூட்டு வாழ்க்கைப் பண்புகளையும் தன்மைகளையும் மீட்டெடுக்கும் முயற்சிகளில் நாடகமும் தன்னுடைய பங்களிப்பைச் செய்யமுடியும்; செய்து வருகிறது என்பது நாடகவியலாளர்களின் கருதுகோள்.
நாடகப் பயிற்சிகளை உளவியல் மருத்துவ முறையாகவும் பயன்படுத்தும் நாடகவியலாளர்கள் மேற்குறித்த சமூக மனிதனை உருவாக்கும் அடிப்படையிலும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.
தமிழ் அரங்கச் செயல்பாட்டில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், இளைஞர் குழுக்கள் ஆகியவற்றில் நாடகப் பயிற்சிகளை அளிக்கும் முந்தைய தலைமுறை நாடகவியலாளர்கள் இவ்விடங்களிலும் தங்களின் சொந்த நாடகக் குழுவிடமும் மேற்குறித்த தன்மைகளடங்கிய பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். பேரா.சே.இராமானுஜம், ந.முத்துசாமி, எஸ்.பி.சீனிவாசன் போன்ற முதல் தலைமுறை நவீன நாடகவியலாளர்கள் தங்கள் பயிற்சிகளில் மேற்குறித்த நோக்கினைப் பொதிந்துகொண்டுள்ளனர்.
பேரா.மு.ராமசாமி, இரா.இராசு, கரு.அழ.குணசேகரன், வ.ஆறுமுகம், அ.மங்கை, பிரளயன், பிரசன்னா ராமசாமி  முதலான இரண்டாம் தலைமுறை நாடகவியலாளர்கள் இந்நோக்கிலான பயிற்சிகளை மேலெடுத்துச் செல்கின்றனர்.
சண்முகராஜா, அனீஸ், கே.எஸ்.கருணாபிரசாத், ச.முருகபூபதி, இராசாரவிவர்மா, குமரகுருதாசன், ஏ.வெங்கடேசன், வேலு சரவணன், சுப்பையா, வேலாயுதம், கோபி, ஸ்டெல்லா, கி.பார்த்திபராஜா முதலான இளைய தலைமுறை நாடகவியலாளர்கள் இப்பொருண்மையில் கூடுதலான அக்கறையும் கவனமும் கொண்டுள்ளனர்.
எமது வேறு வேறு பயிற்சி வகுப்புகளில் அளிக்கப்பட்ட பயிற்சிகளில் சில மட்டும் இங்கு விளக்கப்படுகிறது.
நிகழ்வு 1:
      நாடகப் பயிற்சிகளின் பங்கேற்பாளர்கள் 24 பேர், 3 8=24 என்ற எண்ணிக்கையில் மூன்று குழுவாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவும் தாங்களே எளிய நடன அசைவுகளை உருவாக்க வேண்டும். அவற்றைப் பயிற்சி எடுத்துப் பயிற்சியாளருக்கும் பிற குழுக்களுக்கும் முன்பாக நடத்திக் காட்ட வேண்டும். எளிய அசைவுகளாக இருந்தாலும் போதுமானது. ஆனால் குழுவிலுள்ள எல்லோரும் ஒரே மாதிரியாகச் செய்வது மட்டுமே அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.
குழுக்கள் மூன்றும் தங்களுக்கான நடன அசைவை உருவாக்குவது, கருத்துக் கேட்பது, தீர்மானிப்பது, பயிற்சியெடுப்பது என்று தீவிரமாக வேலை செய்தன.
இப்பயிற்சி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பங்கேற்பாளர் ஒருவரை அழைத்து, ‘அடுத்த பயிற்சியில் உங்கள் குழுவோடு நடன அசைவு மேற்கொள்ளுகையில் சரியாகச் செய்துவிட்டு, எல்லோருக்கும் முன்பாக நடத்தும்போது மட்டும் தவறாகவே செய்து விடுங்கள். பயிற்சியாளர் சொல்லும் வரையிலும் என்ன நடந்தாலும் தவறாகவே செய்யுங்கள்’ என்று இரகசியமாகத் தெரிவிக்கப்பட்டது.
மேற்குறித்த மூன்று குழுக்களில் ஒரு குழுவில் இருந்த அப்பங்கேற்பாளர், பயிற்சியாளரால் அறிவிக்கப்பட்ட தவறுகளைச் செய்வதற்கு முன்னோட்டமாகத் தங்கள் குழுவின் பயிற்சியிலேயே சில முன்னேற்பாட்டுத் தவறுகளைச் செய்ய ஆரம்பித்திருந்தார்.
முதல் குழு பார்வையாளர்கள் மத்தியில் மிகச் சரியான நடன அசைவுகளைச் செய்து கரவொலிகளைப் பரிசாகப் பெற்றுப் பெருமிதத்துடன் அமர்ந்தது. இரண்டாம் குழுவில் இருந்தார் ‘தவறு செய்யப் போகிற’ பங்கேற்பாளர். அக்குழு நிகழ்த்துகையில் குறிப்பிட்ட அவர், தப்பும் தவறுமாக நடன அசைவுகளை வெளியிட்டார். சற்றே பதட்டப்பட்டதைப் போலவும் மறந்துவிட்டதைப் போலவும் காட்டிக் கொண்டார். மற்ற குழுக்களின் கேலிச் சிரிப்பையும் பயிற்சியாளரின் முகத்தில் வெளிப்பட்ட அதிருப்தியையும் கண்ட அக்குழுவினர் சற்றே பதட்டமாயினர். பயிற்சியாளர், அக்குழுவின் தவறுகளுக்குக் கடுமையான எதிர்வினையாற்றி, மீண்டுமொருமுறை வாய்ப்புத் தருவதாகவும் இம்முறையாயினும் தவறுகளின்றிக் குழுவினர் நடன அசைவை வெளியிடுமாறும் கூறினார்.
குழுவினர் இரண்டு மூன்று முறை முயற்சித்தும் ‘தவறு செய்த’ நபரைச் சரிசெய்ய முடியவில்லை. இதற்கிடையே சாம,பேத,தான,தண்ட அடிப்படையில் அக்குழுவுக்குள் பிரச்சினைகள் தோன்றிவிட்டன. இறுதியில் பயிற்சியாளர் இத்தவறுகள் செய்யுமாறு குறிப்பிட்ட அந்தப் பங்கேற்பாளரை முன்னரேயே கேட்டுக் கொண்டதை அறிவித்தார். மேற்குறித்த பயிற்சி காணொளி (வீடியோ) பதிவு செய்யப்பெற்றுப் பிறகு பங்கேற்பாளர்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் குழுவினருக்குள் வந்த பிரச்சினைகள், அவர்கள் அதனைக் கையாண்ட விதம், தவறு செய்தவருக்குத் தவறைச் சரி செய்ய உதவியமை, உதவிக் களைத்தமை, எரிச்சலடைந்தமை, தனக்குச் சம்பந்தமில்லாததுபோல் காட்டிக் கொண்டமை, தான் சரி-அவர்தான் தவறு என்பதை வெளிக்காட்ட முயன்றமை, எப்படிச் சொல்லிக் கொடுத்தும் அவரால் சரிசெய்துகொள்ள முடியவில்லை என்று எரிச்சலடைந்து குழுவிலிருந்து விலக முயன்மை, தவறு செய்பவரைக் குழுவிலிருந்து விலக்க முயன்றமை ஆகிய பல்வேறு தன்மைகள் குழுவில் விவாதிக்கப்பட்டது.
மேற்குறித்த தன்மைகளைச் சரி –தவறு என்ற நிலையிலிருந்து அணுகாமல் நிகழ்வுக்கான காரணம், போக்கு, மனோபாவம் என்பது விவாதிக்கப்பட்டது. ஒரு குழுச் செயல்பாட்டின் பல்வேறு பிரச்சினைகள், நிலைகள், போக்குகள் பற்றிய கண்ணோட்டத்தினை இப்பயிற்சியின் வழியாகப் பெற்றதாகப் பங்கேற்பாளர்கள் தங்களது பின்னூட்டத்தில் (பீட்பேக்) பின்னர் குறிப்பிட்டனர்.
நிகழ்வு 2:
பங்கேற்பாளர்கள் 30 பேரையும் வட்டமாக நிறுத்திப் பயிற்சியாளர், குறிப்பிட்ட ஒருவருடைய பெயரைக் குறிப்பிட்டு ஒரு பந்தினைத் தூக்கிப் போட்டார். பந்தைப் பெற்றுக் கொண்டவர் அக்குழுவிலிருக்கும் ஒருவரை அழைத்துப் பந்தைத் தூக்கிப் போட வேண்டும். பெற்றுக்கொண்டவர் இதுவரை பந்தினைப் பெற்றிராத ஒருவரை அழைத்து அளிக்க வேண்டும். இவ்வாறு மாறி மாறிச் சென்று முப்பதாவது நபர் பயிற்சியாளருக்குப் பந்தினை அளிக்க வேண்டும்.
மீண்டும் ஒருமுறை அதே வரிசை முறையில் பந்தை நகர்த்திச் சென்று, பயிற்சியாளர் கையிலிருந்து புறப்பட்டுப் பிறகு மீண்டும் வந்து சேருவதற்கான நேரம் கணக்கிடப்பட்டது. அந்த நேரத்தில் நான்கில் ஒரு பகுதியைக் குறிப்பிட்டு, ‘நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது; இக்குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து என் கைக்கு வந்து சேர வேண்டும். குறிப்பிட்ட நபர்கள் வரிசை முறையில்தான் பந்து கைமாற வேண்டும். ஆனால் வடிவமைப்பில் நீங்கள் விரும்பும் மாற்றத்தைச் செய்து கொள்ளலாம். இந்த நிகழ்வுக்கு ஒரு குழுத்தலைவரை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்’ என்று பயிற்சியாளரால் அறிவிக்கப்பட்டது.
குழுத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல், வரிசைமுறையை மாற்றுதல், பல்வேறு ஆலோசனைகள், மறுப்புகள், விவாதங்கள், குறிப்பிட்ட ஒருவரின் ஆலோசனையை ஏற்றுப் பயிற்சி செய்து இலக்கை எட்ட முடியாமல் ஆலோசனை செய்தவரை ஏசுதல், தன் கருத்தை யாருமே கேட்காமல் மறுக்கிறார்கள் என்று பிடிவாதம் செய்தல், மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், முயற்சி செய்து பார்க்காமலேயே கருத்தை நிராகரித்தல் என்ற பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்தன.
இருவேறு குழுக்களிடம், இலக்கை எட்டியமையில் மகிழ்ச்சி அல்லது எட்டாமையில் இகழ்ச்சி ஆகியவற்றுடன் நிகழ்வு நிறைவடைந்தன.
மேற்குறித்த அனைத்து அம்சங்களும் பதிவு செய்யப்பெற்று விவாதத்திற்கு விடப்பட்டன. குழுச் செயல்பாடு, கருத்துப் பகிர்தல், கருத்து மதிப்பளித்தல், மாற்றுக் கருத்துக்குச் செவி சாய்த்தல், தன் கருத்தை வலியுறுத்தும் முறைமை, ஏற்றுக் கொள்ள வைத்தல் ஆகிய செயல்பாடுகள் சமூகத்தோடு பொருத்தி விவாதிக்கப்பட்டன.
நிகழ்வு 3:
எட்டு நாட்கள் நாடகப் பயிற்சி முகாமில் மூன்றாம் அல்லது நான்காம் நாளில் பங்கேற்பாளர்கள் இருவருக்கிடையே பயிற்சியாளரால் முன்மொழியப்பட்ட, திட்டமிடப்பட்ட தகராறு நிகழ்த்தப்பட்டது. இது திட்டமிடப்பட்டது என்று சண்டையிட்டவர்கள், பயிற்சியாளர்களைத் தவிரப் பங்கேற்பாளர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இச்சண்டையின் போது குழுவினரின் செயல்பாடுகள் பிறகு விவாதத்திற்கு ஏற்கப்பட்டன.
பிரச்சினை என்னவென்று உள்வாங்குதல், சமாதானப்படுத்த முயற்சித்தல், சார்பு நிலை எடுத்தல், தனக்குச் சம்பந்தமில்லை என்று விலகுதல் என்ற பல்வேறு தன்மைகள் விவாதிக்கப்பட்டன. சமூகத்தின் அசைவியக்கத்தை அடையாளப்படுத்தும் விதமாக இந்நிகழ்வு அமைந்தது உணரப்பட்டது.
நிகழ்வு 4:
பங்கேற்பாளர்களுக்கு விழிப்போடிருத்தல் தொடர்பான ஒரு விளையாட்டுத் திட்டமிடப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு ஒரு எண் தரப்பட்டு அவ்வெண்ணை அடுத்தவர் அழைக்கும்போது உடனடியாக வினையாற்ற வேண்டும்; பதில் தர வேண்டும் என்பது விளையாட்டு. இவ்விளையாட்டில் பேச்சுத் திக்கும் மாணவர் ஒருவரும் பங்கேற்றார். பேச்சுத் தடுமாறிய, உளறிய, தாமதித்த பங்கேற்பாளர்கள் விளையாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் பேச்சுத் திக்கும் குறைபாடுடைய குறிப்பிட்ட அந்தப் பங்கேற்பாளர் திக்கித் திக்கிப் பேசிப் பங்கேற்றபோதும் யாரும் அவரை விளையாட்டிலிருந்து வெளியேறச் சொல்லவில்லை. மாறாக, அவர் அழைக்கப்பட்டபோது வினையாற்ற, பதில்தரக் காத்திருந்தனர்.
நாடகப் பயிற்சிகள், குறைபாடுகளுடன் ஒருவரை ஏற்றுக் கொள்வதை, அங்கீகரிப்பதை, உதவுவதை, இரக்கம் மட்டுமே காட்டாமல் இணக்கம் காட்டுவதை உருவாக்குகின்றன.
மேற்குறித்த எடுத்துக்காட்டுகள் நாடகப் பயிற்சி வகுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட பல பயிற்சிகளில் சில துளிகள் மட்டுமே. பயிற்சியாளர்கள் தங்கள் அனுபவங்களிலிருந்தும் கருத்தியலிலிருந்தும் ஏராளமான இவற்றைப் போன்ற பயிற்சிகளை அளித்துவருகின்றனர்.
முடிவாக…
தனி மனிதனின் திறன்களை, உளவியலை, இருப்பை அங்கீகரிக்கும் நாடகப் பயிற்சிகள், மனிதன் என்பவன் இவற்றையும் தாண்டியவன் என்று உரத்துப் பேசுகின்றன. அவன் ஒரு சமூக மனிதன் என்பதை உறுதிபடப் பேசுகின்றன. மனித சமூகத்தின் உயரிய மனிதாயப் பண்புகளை அவன் கைக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. மனிதர்களை உதிரிகளாக்கும் நவீன நெருக்கடி நிலைகளுக்கு எதிராகவே தன்னுடைய செயலியக்கத்தை அமைத்துக் கொண்டுள்ளன.
எனவேதான் இந்நோக்கிலான நாடகப் பயிற்சிகளை வேறும் பயிற்சிகளாக மட்டுமின்றி ஒரு சமூகச் செயல்பாடாகவும் இயக்கமாகவும் அரசியல் செயல்பாடாகவும் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்பயிற்சிகளின் தேவை முன்னெப்போதையும் விட –மனிதன் தனித் தனித்தீவுகளாகும் இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமாகின்றன.

No comments: