Wednesday, 19 December 2012

தெருக்கூத்து: தொண்டை மண்டலக் கலை வடிவம்



முனைவர் கி.பார்த்திபராஜா,
கூத்து என்பது தமிழர்களின் தொன்மையான நிகழ்த்து கலை வடிவம் ஆகும். கூத்து பற்றிய பதிவுகள் இரண்டாயிரம் ஆண்டுக்கால இலக்கியப் பரப்பெங்கும் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன. பாணர், பொருநர், விறலியர், வயிரியர் ஆகிய கலைஞர்களோடு கூத்தர்களும் மரபுத் தமிழிலக்கியங்களில் விதந்து பேசப்படுகின்றனர். மலைபடுகடாம் என்ற இலக்கியம் கூத்தராற்றுப்படை என்றே வழங்கப் பெறுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.
கூத்து: வளர்ச்சியும் திரிபும்:
கூத்து வரலாற்றுப்போக்கில் பல்வேறு விதமான வளர்சிதை மாற்றங்களை அடைந்திருக்கின்றது. எனவே தமிழகத்தில் கூத்திலிருந்து கிளைத்த ஏராளமான கூத்துக்கள் இருந்து வருகின்றன. மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் ஊடாட்டங்களையொட்டியே கலை ஊடாட்டங்களும் நிகழ்ந்திருக்கின்றன. எனவே பல்வேறு தேசிய இனங்களின் தனித்த அடையாளமுள்ள நிகழ்த்து கலைகளும் ஒன்றோடொன்று கலந்து, உறவாடி, புதிய ஆக்கங்களாக வெளிப்பட்டிருக்கின்றன. சிற்சில வளர்சிதை மாற்றங்களை அடைந்திருக்கின்றன. இப்பொது விதிக்குத் தமிழர்களின் தொன்மைக் கலையா கூத்து விதிவிலக்காக அமைந்துவிடவில்லை.
இன்றைய கூத்து:
தமிழகத்தின் தொண்டைமண்டலம் என்று வழங்கப்படுகிற வடாற்காடு, தென்னாற்காடு, கிருட்டிணகிரி, தருமபுரி பகுதிகளில் வழங்கும் கூத்து, இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தமிழ்க்கூத்தின் வளர்சிதை வடிவமே ஆகும். இன்றைக்குக் காணக்கிடைக்கும் கூத்தோடு, கேரளத்தின் கதகளியும் கர்நாடகத்தின் யட்சகானமும் பல்வேறு ஒத்திசைவுகளைப் பெற்றிருக்கின்றன. இவை திராவிட என்னும் ஒருங்கமைப்பின் ஒத்திசைவாகவும் இருக்கலாம். தமிழகக் கலைகளில் மராட்டிய, பார்சி நிகழ்த்துக்கலை மரபின் தாக்கமும் இருப்பதைக் காணமுடிகிறது. எவ்வாறாயினும் மேற்குறித்த ஊடாட்டங்கள் கணிசமான அளவில் நிகழ்ந்திருப்பினும் இன்றைய கூத்தினை, மரபார்ந்த தமிழ்க்கூத்தின் தொடர்ச்சி என்று உறுதிபடச் சொல்லலாம்.
இருபாணிகள்:
இன்றைய கூத்து என்பதில் இருவேறு பாணிகள் இருப்பதனை அவதானிக்க முடிகிறது. அதனைத் தெற்கத்தி பாணி, வடக்கத்தி பாணி என்று பகுப்பர் கூத்தர்களும் ஆய்வாளர்களும். அடவு முறைமை, தாள லயம், இராகம், ஒப்பனை முறைமை ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் இப்பகுப்பு முறைமை அமைகிறது. செய்யாறு, வந்தவாசி ஆகிய ஊர்களையொட்டிய வடபகுதியில் வழங்கப்படும் கூத்து, வடக்கத்தி பாணி என்று அழைக்கப்படுகின்றது. அவ்வூர்களுக்குத் தென் பகுதியில் வழங்கப்படும் கூத்து, தெற்கத்தி பாணி என்று கொள்ளப்படுகிறது.
தெருக்கூத்து:
இன்றைய கூத்து வடிவத்திற்கு ஏறத்தாழ 400 வருடப் பழமையினைச் சுட்டுகிறார்கள் கூத்தர்கள். இக்காலகட்டத்துக் கூத்து, ‘தெருக்கூத்து’ என்று அழைக்கப்படுகின்றது. தெருக்கூத்து என்ற பெயரீடு பற்றிய ஏராளமான வாதப்பிரதிவாதங்கள் உள்ளன. தெரு என்பது நிகழ்த்தப்படும் இடத்தைக் குறிக்கிறதா? நிகழ்த்துத் தன்மையைக் குறிக்கிறதா? என்பதான விவாதங்கள் அவை. மேலை நாட்டு ஆய்வாளர்கள் வந்தபிறகு, அவர்களுடைய தலையீட்டில் தெருக்கூத்துக்கு ‘கட்டைக்கூத்து’ என்று நாமகரணம் சூட்டப்படுகிறது. கட்டை கட்டி ஆடும் கூத்து, கட்டை கட்டாமல் ஆடும் கூத்து என்று இரண்டாகப் பகுக்கிறார்கள் ‘கட்டைக்கூத்து கலை வளர்ச்சி முன்னேற்ற சங்க’த்தைத் தோற்றுவித்த ஹென்னா டி புரூயினும் இராஜகோபாலும். தொண்டை மண்டலப் பகுதியிலேயே கூத்து ஒரு வகையாகவும் கட்டை கட்டாமல் நிகழ்த்தப்படும் சமூக நாடகங்கள் ‘நாவல்ஸ்’ என்றும் வழங்கப்படுவதை அவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். தெருக்கூத்தில் கட்டை கட்டாமல் ஆடும் பாத்திரங்களும் உள்ளன. அவ்வாறாயின் கட்டைக்கூத்து என்ற பெயர் எப்படிப் பொருந்தும் என்பது மற்றொரு சாராரின் கருத்து. தெருக்கூத்து என்ற பெயர் இழிவாக இருக்கிறது என்பது முன்னையோர் வாதம். ‘யார் பார்வையில் இழிவாக இருக்கிறது?’ என்று எதிர்க்கேள்வி கேட்கின்றனர் மற்றொரு சாரார். எவ்வாறாயினும் தெருக்கூத்து என்ற பெயர் நீண்டதொரு கால வழக்கில் வருகின்றது என்பதைக் காணமுடிகின்றது.
திரௌபதி அம்மன் கோயில்:
தெருக்கூத்து என்பது பெரும்பாலும் மகாபாரதக் கதைகளையும் அதன் கிளைக்கதைகளையுமே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. தொண்டை மண்டலப் பகுதியின் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாக்களில் பதினெட்டு நாட்கள் நிகழ்த்தப்படுவனவாகவே தெருக்கூத்துக்கள் அமைந்தன. எனவே பெரும்பாலும் விழா நடைபெறும் பதினெட்டு நாட்களும் பதினெட்டு கூத்துக்கள் நிகழ்த்தப்பட்டன. பின்னாட்களில் விழாக்கள் பத்து நாட்களாகவும் எட்டு நாட்களாகவும் சுருங்கியபோது, நாட்களுக்குத் தக கூத்துக்களை நடத்தும் வழக்கம் வந்தது.
ஒவ்வொரு கூத்துக் குழுவுக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கூத்துக்கள் பயிற்சியில் இருக்கின்றன. திரௌபதி அம்மன் திருவிழா நடைபெறும் நாட்களுக்கு ஏற்ப, அவற்றிலிருந்து தெருக்கூத்தை முடிவு செய்து நிகழ்த்துகின்றனர். ஊராரின் விருப்பத்துக்கு ஏற்பக் கூத்துக்களை முடிவு செய்வதும் உண்டு.
கதைசொல்லல்-தெருக்கூத்து:
திரௌபதி அம்மன் கோயில் விழாவில் மகாபாரதக் கதைசொல்லி அல்லது பிரசங்கி பகலில் கோயிலில் மகாபாரதக் கதையினை மிக விரிவாகச் சொல்லி வருவார். அக்கதை சொல்லல் கிராமமக்கள் இரவில் பார்க்கப்போகும் தெருக்கூத்துக்கு முன்னுரையாக-விளக்கவுரையாக அமைந்து வந்தன. எனவே ஒரு கதையினைக் கேட்டல்-நிகழ்த்தல் வழியாகக் காணல் என்ற தொடர்ச்சியான செயல்பாட்டில் பார்வையாளர்கள் இருத்தி வைக்கப்பட்டனர். தெருக்கூத்து போன்ற முழு இரவு ஆடப்படும் கதையை உள்வாங்கிக் கொள்ள வைப்பதில் பல்வேறு அடுக்குச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சடங்குசார் கலையா?:
தெருக்கூத்து முதன்மையாகத் திரௌபதி அம்மன் கோயில் விழாக்களில் நடத்தப்படுகிறது. அரவான் களபலி, அர்ச்சுனன் தபசு, பதினெட்டாம் நாள் போர் முதலான தெருக்கூத்துக்கள் முற்றுலுமாகச் சடங்கியல் நிகழ்வாகவே அமைகின்றன. எனவே தெருக்கூத்தைக் கோயில் சார் கலையாகவும் சடங்குசார் கலையாகவும் கொள்ளலாம். கோயில் சார்ந்து அன்றியும் தெருக்கூத்து நிகழ்த்தப்படுவது உண்டு. இறப்புச் சடங்கின் எட்டாம் நாள் காரியத்தின் போது இரவில் ‘கர்ணமோட்சம் தெருக்கூத்து ஆடப்படுவது உண்டு. இறந்தவரின் ஆத்மா அமைதியடைவதற்காக இக்கூத்து ஆடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறு கோயில் சார்ந்து அன்றியும் சிற்சில நிகழ்வுகள் தெருக்கூத்து நிகழ்த்தலுக்கு அமைகின்றன.
புரிசை எனும் கலை மையம்:
செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே பத்தாவது கிலோமீட்டரில் அமைந்துள்ள ஊர் புரிசை ஆகும். புரிசை கண்ணப்பத் தம்பிரான் குழுவினர் நான்காவது தலைமுறையாகத் தெருக்கூத்தினை ஆடி வருகின்றனர். வீராசாமித் தம்பிரான்தான் புரிசை பரம்பரையின் தெருக்கூத்து மரபை உருவாக்கியவர். ராகவத் தம்பிரான், துரைசாமித் தம்பிரான் ஆகியோர் முதலாம் இரண்டாம் தலைமுறைக் கூத்தர்கள் ஆவர். அதற்குப் பிறகு வந்த கண்ணப்பத் தம்பிரான் மூன்றாம் தலைமுறைக் கூத்தர். இவரே தெருக்கூத்தை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்கு உரியவர். புதிய தெருக்கூத்து உருவாக்கத்திலும் புதிய உடையமைப்பு, இசை, அடவுகள் என்று தெருக்கூத்தைச் செவ்வியல் நிலைக்கு எடுத்துச் சென்றவர். அவருடைய புதல்வர் புரிசை கண்ணப்ப சம்பந்தன் நான்காம் தலைமுறைக் கூத்தர் ஆவார். அவர், தனது தந்தையின் வழிகாட்டுதலின் படி, நவீன நாடகப் பயிலரங்குகள், நாடக உருவாக்கங்கள் ஆகியவற்றில் பங்கேற்றவர்.
தோல் பொம்மலாட்டம் நடத்தி வந்த வீராசாமித் தம்பிரான் பல்வேறு காரணங்களால் தெருக்கூத்து என்னும் வடிவத்திற்கு வந்தார். ‘தோல் பொம்மலாட்டம் கோயில் சடங்கு சாராமல் வெறும் பொழுதுபோக்குக் கலையாக மட்டும் இருந்தது, போதுமான வருமானத்தைத் தராததால் தெருக்கூத்துக்கு வந்தாரா? தெருக்கூத்து திரௌபதி அம்மன் கோயிலைச் சார்ந்து சடங்காக இருப்பதால் கலை நேர்த்தியைக் கொண்டு பல கோயில்களில் சடங்காக நடத்தி அதிக வருமானத்தை ஈட்டாலம் என்ற காரணத்தினால் தெருக்கூத்துக்கு வந்தாரா? இருக்கலாம் என்கிறார் ந.முத்துசாமி.
ஐக்கிய நாடுகள் சபையின் பண்பாட்டு அமைப்பான ‘யுனெஸ்கோ’ தனது உலகக் கலைகளின் வரைபடத்தில் புரிசை கிராமத்தைக் கலைப் பண்பாட்டு மையமெனக் குறிப்பிட்டுள்ளது.
மரபார்ந்த கூத்து:
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்தைப் புணருத்தாரணம் செய்தவராவார். தெருக்கூத்துப் பிரதிகளைத் தொகுப்பது, அவற்றை இசை வல்லாருடன் இணைந்து கற்றுத் தம் கூத்தர்களுக்குப் பயிற்சியளிப்பது, அவற்றைச் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பரவலாக்குவது என்று தெருக்கூத்து சார்ந்த பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்தவர் கண்ணப்பத் தம்பிரான்.
பரிசோதனை முயற்சிகள்:
மகாபாரத உள்ளடக்கம் கொண்ட தெருக்கூத்துக்களும் அன்றிப் புதிய கதைகளை உள்ளடக்கமாகக் கொண்ட தெருக்கூத்துக்களைப் புரிசை கண்ணப்பத் தம்பிரான் அரங்கேற்றினார். இராமாயணத்தின் சில கதைகளை அவர் தெருக்கூத்து ஆசிரியர்களைக் கொண்டு எழுத வைத்து அவற்றைத் தம் கூத்தர்களுக்குப் பயிற்றுவித்து நிகழ்த்தினார். மரபார்ந்த உள்ளடக்கம் மட்டுமின்றி புதிய நாடகக் கதைகளும் அவரால் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டன. மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதம் அவரால் தெருக்கூத்தாக அரங்கேறியது. ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்டோல்ட் பிரெக்ட் எழுதிய ‘தி காகேசியன் சாக் சர்க்கிள் என்னும் நாடகப் பிரதி, தேசிய நாடகப்பள்ளியின் பேராசிரியர் கே.எஸ்.இராஜேந்திரன் நெறியாளுகையில் ‘வெள்ளை வட்டம் தெருக்கூத்தாகத் தயாரிக்கப்பட்டது. இலத்தீன் அமெரிக்கப் படைப்பாளியான நோபல் பரிசுபெற்ற கேப்ரியேல் மார்க்வெஸ் எழுதிய ‘நீண்ட சிறகுடைய வயோதிகன் எனும் சிறுகதை, கண்ணப்பத்தம்பிரான் அவர்களால் தெருக்கூத்தாக வடிவமைக்கப்பட்டு, கொலம்பிய நாடக விழாவில் நிகழ்த்தப்பட்டது. இவ்வாறு தெருக்கூத்தைப் புணருத்தாரணம் செய்யும் குழுவாகவும் மரபுமுறையை மீறாமல் அதன் செவ்வியல் தன்மையைப் பாதுகாத்து நிகழ்த்தும் குழுவாகவும் புரிசை துரைசாமி கண்ணப்பத்தம்பிரான் குழு அமைவது குறிப்பிடத்தக்கது.
பிற குழுக்கள்:
காஞ்சிபுரம், வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை முதலான இடங்களில் உள்ள பிற கூத்துக் குழுக்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்ட கூத்துக்களையே மீண்டும் மீண்டும் அரங்கேற்றுகின்றன. பெருங்கட்டூர் இராஜகோபால் ஆசிரியரின் கூத்துக் குழுவும் அவருடைய தலைமையில் இயங்கும் ‘கட்டைக்கூத்து கலை வளர்ச்சி முன்னேற்ற சங்க’மும் சிற்சில புதிய முயற்சிகளைச் செய்துள்ளது. பெண்கள் விலக்கி வைக்கப்பட்ட தெருக்கூத்தின் நிகழ்த்துவெளியில் பெண்களைக் கொணர்ந்து முழுநீள மகாபாரதத் தெருக்கூத்தை நடத்தியது இக்குழு ஆகும். ஆண்டுதோறும் தமிழகத்தின் கலைவடிவங்கள் மட்டுமின்றிப் பிற கலைவடிவங்களையும் மேடையேற்றி இச்சங்கம் தனது விழாவினைக் கொண்டாடுகிறது. இச்சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் பகுதியைச் சார்ந்த சிறார்களுக்கான கூத்துப் பயிற்சிப் பள்ளி நடத்தப்படுகிறது. இப்பள்ளி தெருக்கூத்து மட்டுமின்றி, ஏனெய பாடங்களையும் கற்பித்து மாணவர்களை முற்றிலும் மாறுபட்ட, மரபார்ந்த கலை மற்றும் இலக்கியங்களின் மீது ஈர்ப்புடையவர்களாக உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த இரு குழுக்களையும் தவிரப் பிற குழுக்கள் தெருக்கூத்தை முற்றிலுமாகத் தொழில்முறை சார்ந்தே இருக்கின்றன. திரௌபதி அம்மன் விழாவைத் தாண்டி இவை பார்வையாளர்களைத் தேட முயற்சிக்கவில்லை.
சவ்வாது மலையின் புதூர்நாடு தெருக்கூத்து, கிருட்டிணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகளின் தெருக்கூத்து முன்சொன்ன தெருக்கூத்து அமைப்பு முறையிலிருந்து மாறுபட்டதாகும். அடவுகள், இராக, லயமுறைமை ஆகியன மாறுபட்டுள்ளன. இப்பகுதிகளில் நிகழ்த்தப்பட்டு வரும் தெருக்கூத்துக்கள் தொன்மைத் தன்மையைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. அவை பிற பகுதித் தெருக்கூத்துக்களைப் போலத் தங்களைப் புணருத்தாரணம் செய்து கொண்டவை அல்ல; மாறாக தெருக்கூத்தின் தொடக்கநிலைத் தன்மையையே பின்பற்றி வருவனவாக உள்ளன. எனவே இப்பகுதித் தெருக்கூத்துக்களில் செவ்வியல் தன்மைக்கு முந்தைய செம்மைப்படாத கூறுகளை மிகுதியும் காணலாம்.
முடிவாக…
தமிழரின் பாரம்பரிய அரங்கான தெருக்கூத்து இன்றைக்கு வழக்கிலிருக்கும் பகுதி தொண்டை மண்டலம் ஆகும். கோயில் சார் கலையாக இருப்பினும் பார்வையாளர்களைக் கவரும் கலை வலு மிக்க நிகழ்த்து கலையாகவும் தெருக்கூத்து திகழ்கிறது. தொலைக்காட்சி, திரைப்படம் முதலான நவீன ஊடகங்களின் தாக்குதலையும் தாண்டி, உயிர்பிழைத்துக் கிடக்கும் பாரம்பரிய அரங்கு என்ற பெருமையும் தெருக்கூத்துக்கு உண்டு. தொண்டை மண்டலத்தின் மிக முக்கியமான கலையாகவும் தெருக்கூத்து திகழ்கிறது.
கருவி நூல்கள்:
1.   அமலதாஸ் பி.ஜே, ‘இன்றும் வாழும் தெருக்கூத்து, வம்சி பதிப்பகம், திருவண்ணாமலை, 2009.
2.   அறிவுநம்பி.அ, ‘தமிழகத்தில் தெருக்கூத்து அமுதன் நூலகம், காரைக்குடி, 1986.
3.   சிவத்தம்பி.கா, ‘பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் குமரன் பதிப்பகம், 2008.
4.   Ramasamy.T, “Tamil Yakshagaanas”, VIZHIKAL, Madurai, 1987.
கட்டியம், இதழ் , தொகுதி 01: எண்:6, விறல் அறக்கட்டளை, தமிழ்நாடு,2003

No comments: