முனைவர் கி.பார்த்திபராஜா
துணைப்பேராசிரியர்
தூய நெஞ்சக் கல்லூரி
திருப்பத்தூர் – வே.மா.
திராவிட
இயக்கம் தமிழக அரசியல், சமூக, பண்பாட்டு மறுமலர்ச்சி இயக்கமாகத் தோற்றம் பெற்று நிலை
பெற்ற இயக்கமாகும். தமிழ்ச் சமூகத்தோடு ஊடாடத் தொடங்கிப் பின் தமிழ்ச் சமூகத்தின் தீர்மானகரமான
சக்தியாக வளர்ந்துவிட்ட பார்ப்பனீயத்தை வீழ்த்துவதைத் தன் நோக்கமாகக் கொண்டு எழுந்த
இயக்கம் இதுவாகும். பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையில் தொடங்கி, நீதிக்கட்சியாகக்
கிளைத்து, சுயமரியாதை இயக்கமாக வடிவெடுத்துத் திராவிட இயக்கமாக இறுதிவடிவம் பெற்றது
இவ்வியக்கம்.
திராவிட
இயக்கத்தின் கருத்துநிலை ஆளுமையாக ஈ.வெ.ராமசாமி (இனி.. பெரியார்) இருந்தார். அவருடைய
கருத்துநிலைப் பரப்புநராகவும் இரண்டாம் நிலை ஆளுமையாகவும் இருந்தவர் சி.என்.அண்ணாதுரை
(இனி அண்ணா). திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளில் பகுத்தறிவு நெறி பரப்பல், ஆரிய எதிர்ப்பு,
வருணாசிரம எதிர்ப்பு, ஆரியத்துக்கு முந்தையவற்றை உயர்த்திப் பிடித்தல், விதவை மணம்,
கோவில் நுழைவு முதலான சீர்திருத்தங்கள் முதலானவை முதன்மை பெற்றன. இச்செயல்பாடுகளின்
ஒரு பகுதியாகவே, திராவிடக் கருத்துநிலைகளின் அடிப்படையில் புராண, இதிகாச, இலக்கிய மறுவாசிப்புகள்
நடைபெற்றன. கம்பராமாயணமும், பெரியபுராணமும் பெரியாரின் தாக்குதலுக்கு உள்ளாயின. சிலப்பதிகாரத்தையும்
அவர் விட்டு வைக்கவில்லை. கம்பராமாயணம் அளவுக்கு அவர் சிலப்பதிகாரத்தை விமரிசிப்பதைக்
குறித்து அக்கறை காட்டவில்லையெனினும் சிலப்பதிகாரமும் அவரது தாக்குதல் இலக்கிலிருந்து
தப்பிட அனுமதிக்கவில்லை எனலாம்.
சிலம்பு
பற்றிய பெரியாரின் நோக்கு:
‘சிலப்பதிகாரம்
விபச்சாரத்தில் ஆரம்பித்து, பத்தினித் தனத்தில் வளர்ந்து, முட்டாள் தனத்தில், மூடநம்பிக்கையில்
முடிந்த பொக்கிசமாகும்’ (விடுதலை;செப்.23,1964) என்பது சிலப்பதிகாரம் பற்றிய பெரியாரின்
கருத்தாகும். இலக்கியத்துக்கான அழகியல் மதிப்புக் குறித்து அக்கறைப்பட்டவரல்லர் பெரியார்;
மாறாக, அதன் பயன் மதிப்பைக் குறித்தே கவனம் செலுத்தினார். ஆகவேதான் பகுத்தறிவு, சுயமரியாதை
ஆகியவற்றுக்குப் புறம்பான எதையும் அவர் ஏற்கவில்லை.
அந்த அடிப்படையிலேயே அவர் சிலப்பதிகாரம் உள்ளிட்ட
அனைத்து இலக்கியங்களையும் நோக்கினார்.
‘அரைசியல்
பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்து
வந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகாரத்தின் பாயிரத்தில் இடம்பெற்றுள்ள முப்பெரும் உண்மைகளாகச்
சொல்லப்படுவதுண்டு. பெரியார், சிலப்பதிகாரத்தின் முப்பெரும் உண்மைகள் என்று குறிப்பிடுவது
கருத்தில் கொள்ளத்தக்கது ஆகும்.
‘சிலப்பதிகாரம்
போன ஜென்மம், வருகிற ஜென்மம் என்று தலைவிதியைக் காட்டி மனிதனை எப்படிப்பட்ட இழிவுக்கும்
ஆளாகச் செய்கிறது. பார்ப்பான் சொல்லுகிறபடி, அவன் எது கேட்டாலும், எடைக்கு எடை கொடுக்க
வேண்டும் என்று சொல்லுகிறது. முட்டாள்தனமான கற்பையும் பெண் அடிமையையும் பெருமைப்படுத்துகிறது’
(விடுதலை;ஜூலை 28,1951) என்பார் அவர். அவைதீக சமயத்தைச் – சமணம் – சார்ந்த காப்பியமானாலும்
அதில் பார்ப்பனீயம் செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்பது பெரியாரின் வாசிப்பு ஆகும்.
சிலப்பதிகாரத்திலிடம்பெறும் பாத்திரங்கள்:
சிலப்பதிகாரத்தில்
இடம்பெறும் பல்வேறு பாத்திரங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் விளைவுகளையும் நுட்பமாகத்
திறனாய்வு செய்துள்ளார் பெரியார். சிறு சிறு பாத்திரங்களையும் கூட, திராவிடக் கருத்துநிலையின்
அடிப்படையில் நோக்கியிருக்கிறார். அவரது கருத்துக்கள் வருமாறு:
- மாடலன் என்ற மறையவனின் சூழ்ச்சி வலையில் சிக்கி,
ஆரியத்துக்கும் ஆரிய மடமைக்கும் மண்டியிட்டவன் சேரன் செங்குட்டுவன்.
- மாமுது பார்ப்பான் மறைவழி காட்டத் தீ வலம்
வருவது பார்ப்பனருக்குத் தலைமையிடம் கொடுப்பதாகிறது.
- கோவலனை அரசன் தண்டித்த மாதிரியானது, நம் நாட்டு
இராஜாக்களுக்கே ரொம்பவும் அவமானம் தருவதாகும்.
- கண்ணகி பெருங்கோபம் வந்து நிரபராதிகளான மதுரை
மக்களைச் சுட்டுச் சாம்பலக்கினாள்.
- கோவலன், கண்ணகியின் கணவன் என்பதை அறிந்தும்
அவனோடு கூடும் மாதவியின் செயல் நியாயமானதா? அப்படிப்பட்டவளுக்குக் கண்ணகி பொருள் வசதி
செய்து கொடுக்கலாமா?
- கோவலன் ஒழுக்கமற்றவன்; தாசி ஒழுக்கமற்றவள்;
கண்ணகி மடப்பெண்
இதுவே
சிலப்பதிகாரத்தின் பாத்திரங்கள் பற்றிய பெரியாரின் மதிப்பீடு ஆகும். பார்ப்பனீய எதிப்புணர்வும்
பகுத்தறிவுக்குப் புறம்பானவற்றை எடுத்தெறியும் ஆவேசமும் அவருடைய மதிப்பீட்டில் பொதிந்து
கிடப்பதைக் காண முடிகிறது.
கண்ணகி பற்றிய பகடி:
சிலப்பதிகாரத்தின்
முதன்மைப் பாத்திரங்களில் அதிகமும் பெரியாரால் தாக்குண்டவர் கண்ணகியேயாவார். முட்டாள்
தனத்தைத் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதைத் தொடர்ச்சியாகத் தனது பேச்சிலும்
எழுத்திலும் பகிர்ந்து வந்த பெரியாருக்குக் கண்ணகியின் மீதான எதிர்ப்புணர்வு இயல்பாகவே
அமைகிறது எனலாம். அவ்வடிப்படையிலேயே அவர் கண்ணகியைப் பல்வேறு நிலைகளில் விமரிசிக்கிறார்.
கண்ணகி மதுரையை எரித்தமை பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார் பெரியார்:
‘இந்த
அம்மாளுக்குக் கோபம் வந்ததும் தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ஃன புத்தி? மார்பைக்
கையால் திருகினால் அது வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம்
தவிர வேறு எதிலும், எங்கும் காணக்கிடைக்கவில்லை. அந்தப்படித் திருகிப் பிடிங்கின மார்பு
வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரஸ் இருக்குமா? இந்த மூடநம்பிக்கைக்
கற்பனையானது என்ன பயனைக் கொடுக்கிறது?’ (விடுதலை, ஜூலை 28, 1951) என்கிறார்.
கம்பன்=இளங்கோ:
வால்மீகி
வடமொழியில் எழுதிய இராமாயணம், குற்றங்குறைகளுடைய மனிதனாக இராமனைச் சித்தரிக்க, அவ்விதிகாசத்தைத்
தமிழாக்கிய கம்பன், அவனை அவதார புருஷனாக்கினார் என்பது பெரியாரின் குற்றச்சாட்டு. எனவேதான்
அவர், ‘கம்பன் புளுகும் வான்மீகி வாய்மையும்’ போன்ற ஆய்வுகளுக்கு ஆதாரமாக அமைந்தார்.
பெரியாரின் ‘இராமாயணப் பாத்திரங்கள்’ இவ்வடிப்படையைக் கொண்டதேயாகும். தமிழரை, ஆரியருக்கு
அடிமைப்படுத்தும் எண்ணத்தைக் கொண்டது கம்பராமாயணம் என்பது அவரது கருத்து. அந்த அளவுகோல்களைக்
கொண்டே அவர் இளங்கோவையும் அளந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இளங்கோ, அரச மரபினர்
என்பதையோ, துறவி என்பதையோ, சிலப்பதிகாரம் அவைதீக மரபைச் சார்ந்தது என்பதையோ, மூவேந்தர்களை
ஒன்றுபடுத்தும் நோக்கம் அதாவது தமிழகத்தைப் பிரிவுகளின்றி ஒன்றாகச் சித்தரிக்க வேண்டிய
தமிழ்தேசியச் சிந்தனை சிலம்புக்கு இருப்பதையோ பெரியார் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.
அவை காப்பியத்தின் தீர்மானகரமான பண்புகள் இல்லை என்று அவர் கருதியிருக்கலாம். எனவேதான்
இளங்கோவடிகளின் காப்பியமான சிலப்பதிகாரத்தைக் கடுமையாகச் சாடி வந்தார். பெரியாரின்
கருத்துநிலைப் போராளியாக அறியப்பட்ட அண்ணா, பெரியாரின் சிலப்பதிகாரம் குறித்த மதிப்பீடுகளில்
மாறுபட்டு நிற்கிறார்.
பெரியாரின் சிலப்பதிகார எதிர்ப்புக்கான விளைவு:
பெரியாரின்
செயல்பாடுகள் கெட்டிதட்டிப் போயிருந்த சமூக நிறுவனங்களை எதிர்க்கும் கலகச் செயல்பாடுகளாகவே
அமைந்தன. எனவே அவரால் எதிர்கொள்ளப்பட்ட ஆன்மீக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள்,
தங்களின் பாதுகாப்புக்கு அணிதிரள்வதும் உடன்நிகழ்வாக நிகழ்ந்தேறியது. பெரியாரின் கடவுள்
மறுப்பு, எதிர்நிலையில் ஏராளமா தெருவோரக் கோவில்கள் உருவாகவும் கம்பராமாயண எரிப்புப்
போராட்டம் ஏராளமான கம்பன் கழகங்கள் உருவாகவும் காரணங்களாயின என்பர். அதைப்போலவே பெரியாரின்
சிலப்பதிகார எதிர்ப்புக்கு எதிர்விளைவுகள் தமிழ்ச்சமூகத்தில் விளைந்தே வந்தன எனலாம்.
சிலம்புச்
செல்வர் என்ற அடைமொழியால் அழைக்கப்படும் ம.பொ.சிவஞானம், பெரியாரை அவருடைய சிலப்பதிகார
எதிர்ப்புக்கும் விமரிசிப்புக்கும் கடுமையாகச் சாடினார். தனது ‘தமிழரசு’ ஏட்டில் பெரியாரையும்
அண்ணாவையும் சாடிக் கட்டுரைகள் எழுதினார். ‘இலக்கியத்தின் எதிரிகள்’ என்ற தலைப்பிட்டே
சிறு வெளியீட்டையும் கொணர்ந்தார்.
‘தமிழ்க்காப்பியங்களில்
நல்லெண்ணமும் நம்பிக்கையுமில்லாத ஈ.வெ.ரா.வுக்கு அவற்றைப் பற்றி ஆழ்ந்த அறிவோ, அனுபவ
ஞானமோ இருக்குமென்று எப்படி நம்ப முடியும்? ஆயினும் இலக்கியத்துறையில் எல்லாம் உணர்ந்தவர்போல,
அடிக்கடி அபிப்பிராயம் கூற முற்படுவதும், ‘ஆராய்ச்சி’ என்ற பெயரால் ஆபாசக் கருத்துக்களை
வெளியிடுவதும் ஈ.வெ.ரா.வுக்குத் தொழிலாகிவிட்டது’ (இலக்கியத்தின் எதிரிகள்;1955:15)
என்கிறார் ம.பொ.சி.
கண்ணகி
குறித்த பெரியாரின் கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலடியாக, அவரது தனிப்பட்ட வாழ்க்கை
குறித்தும், குறிப்பாக, பெரியாரின் 72-ஆவது வயதில் அவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து
கொள்ளத் தொடங்கிய 26 வயது மணியம்மையார் குறித்தும் பேசினார் ம.பொ.சி.
‘கண்ணகி
என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்குச் சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி – தன்மானம் இருந்தது
என்று யாராவது ஒப்புக்கொள்ள முடியுமா? என்று கம்பீரமாகக் கேள்வி போடுகிறார் ஈ.வெ.ரா.
உணர்ச்சிக்காக அல்லாமல் உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள்
தான்! ஊரார் பழிக்கும் நிலைமையிலும் உணர்ச்சியற்ற கட்டையாகக் கிழத்தோடு பவனி வரும்
பெண் தன்மானமற்றவள்தான்! இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈ.வெ.ரா. எப்போதோ
– எங்கேயோ சந்தித்துவிட்டார் போலும்! அவளை நினைவில் வைத்துக்கொண்டு கண்ணகியைச் சாடுகிறார்’
(இலக்கியத்தின் எதிரிகள்;1955:26) என்று வம்பளக்கிறார் ம.பொ.சி.
பெரியாரின்
சிலப்பதிகார எதிர்ப்பு, ம.பொ.சிவஞானம் போன்றோரைச் ‘சிலப்பதிகார மகாநாடு’ நடத்தத் தூண்டியது
எனலாம்.
கம்பன் இளங்கோ:
அண்ணா,
திராவிடக் கருத்துநிலையின் அடிப்படைகளைக் கட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர். பெரியாரின்
தொண்டன் என்று தன்னை அழைத்துக் கொண்டபோதும், அவருடைய செயல்பாடுகளிலும் கருத்தியல்களிலும்
குறிப்பிடத்தக்க அளவில் முரணியவர். பெரியார்-மணியம்மையார் திருமணத்தில் முரண்பட்ட குழுவினருக்குத்
தலைமை தாங்கியவர் அண்ணா. ‘கண்ணீரோடு வெளியேறுகிறோம்’ என்று குறிப்பிட்டுத் திராவிடர்
கழகத்திலிருந்து வெளியேறி, 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர். திராவிட
நாடு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டபோது, ‘சூழ்நிலை அப்படியே இருக்கிறது; கோரிக்கையை
மட்டும் கைவிடுகிறோம்’ என்று புதுநெறி(!) காட்டியவர். கடவுள் மறுப்புப் பாரம்பரியத்திலிருந்து
விலகி, ‘ஒருவனே தேவன்’ என்று நெகிழ்வு காட்டியவர்.
அத்தகைய
அண்ணா, கம்பராமாயணம் பற்றிய எதிர்ப்புப் போரில் பெரியாரைப் போலன்றிச் சிலப்பதிகாரத்திற்கு
வலுவான தமிழ் அடையாளம் கற்பித்தார். கம்பராமாயணம் ஆரிய ஆதரவுக் கலை என்றால், சிலப்பதிகாரம்
தமிழர் ஆதரவுக் கலை என்று நிறுவ முயன்றார். அந்த அடிப்படையில் அவர் பெரியாரின் சிலம்பு
குறித்த கருத்துக்களோடு வெளிப்படையாக அறிவிக்காமல் முரண்பட்டார்.
1943
இல் பெரியாரால் முன்மொழியப்பட்ட, ‘கம்பராமாயண எரிப்பு, பெரியபுராண எரிப்பு’ இயக்கத்திற்குக்
கருத்துநிலைப் பரப்புநராக இருந்தார் அண்ணா. சென்னையிலும் பிறகு சேலத்திலும் நடத்தப்பட்ட
‘கம்பராமாயணத்தை எரிக்க வேண்டுமா? வேண்டாவா?’ எனும் தலைப்பிலான விவாத அரங்கில் அண்ணா
கலந்து கொண்டு பெரியாரின் தரப்பு வாதங்களை முன்வைத்தார். சென்னையில் அண்ணாதுரையின்
கருத்தை மறுத்துப் பேசியவர் சொல்லின் செல்வர் என்று புகழ்ந்துரைக்கப்பட்ட ரா.பி.சேதுப்பிள்ளை.
சேலத்தில் மறுப்புரை வழங்கியவர் நாவலர் ச.சோமசுந்தர பாரதியார். மேற்குறித்த இரண்டு
விவாதங்களிலும் அண்ணா, சிலப்பதிகாரத்திற்குத் தரும் இடம் கவனத்தில் கொள்ளத்தக்கது.
கம்பன்
தனது காவியத்தின் நோக்கத்தை வெளிப்படையாகப் பாயிரத்தில் ஏன் குறிப்பிட அஞ்சுகிறார்
என்று வினாவெழுப்புகிறார் அண்ணா. ‘பழந்தமிழ் நூலான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள்,
தமது பாயிரத்தில், தாம் காதை பாடுவது எதற்கு என்பதைக் கூறும்போது, பத்தினியை உலகு புகழ்ந்தேத்தும்,
நீதி தவறிய அரசு கெடும், அவனவனின் செயலின் விளைவு அவனவனைத் தாக்கும் என்ற கருத்துரைகளைக்
கூறவே, நான் இப்பாட்டுடைச் செய்யுளை இயற்றினேன் என்று எழுதினார் தெளிவாக. … ஆண்டவனின் அவதாரம் என்று ஆரியராலும், கம்பராலும்
போற்றப்படும் இராமகாதை பாடுவதற்குக் கம்பர் ஏன் இவ்வளவு சஞ்சலப்படுகிறார்? இதனால் உலகு
பழிக்குமோ என்ற சந்தேகம் ஏன் கொண்டார்? என்று கேட்கிறேன்’ (தீ பரவட்டும்;2005:11) என்கிறார்
அண்ணா.
காப்பிய
நோக்கத்தினை இளங்கோ தெளிவுபடக் கூறியுள்ளாரென்றும் கம்பர் கரந்து ஒளித்துள்ளார் என்றும்
கூறுமிடத்துச் சிலம்புக்கு அண்ணா தரும் ஏற்றம் புலப்படுகிறது. ‘கம்பராமாயணத்தைப் புறந்தள்ளினால்,
தமிழருக்கான இலக்கியமாக எது இருக்கும்?’ என்ற வினாவுக்கு விடையளிக்கும்போது,
‘தனது
இளமை எழில், செல்வம் யாவற்றையும் பரத்தைக்கு ஈந்து, வறியனாகித் திரும்பிடும் கோவலனைக்
கண்ணகி கண்டபோது, தனக்குற்ற இடரெல்லாம் மறந்து கோவலனிடம் கனிமொழி பேசிய அம்மாண்புடன்
காட்டுக்கு வராதே என்றதும் இராமனை நோக்கிச் சீதை பேசும் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்
கற்பின் மாண்புக்குச் சிலப்பதிகாரமிருக்க, கம்பனின் ஆரியக்கதை வேண்டுமா என்று யோசிக்கும்படி
வேண்டுகிறேன்’ (தீ பரவட்டும்;2005:14) என்கிறார் அண்ணா.
‘ஆரியக்
கற்பனைகளைத் தமிழ்க்கலை எனும் நகாசுவேலை செய்த்து, தமிழருக்குக் கம்பன் செய்த கேடு
என்பேன். கண்ணகியிஃ மாண்பைக் கம்பன் சீதையைத் தீட்டுவதிலே காண்கிறோம் என்கிறார் (ரா.பி.சே).
கண்ணகி குறித்த ஏடு இருக்க இது ஏன்? என்று கேட்கிறேன்’ (ப:26) என்றும் மற்றொரு இடத்தில்
குறிப்பிட்டுப் பேசுகிறார் அவர்.
மேற்குறித்த
அண்ணாவின் பேச்சு அவர் கம்பராமாயணத்திற்கு மாற்றாகச் சிலப்பதிகாரத்தைக் கட்டமைக்க முயன்றமையைக்
காட்டுகிறது. தமிழரின் வீரம் பற்றிய விவாதங்களிலும் சிலப்பதிகாரத்தின் சேரன் செங்குட்டுவனின்
இமய வெற்றி விதந்தோதப்படுவதைக் காண முடிகிறது. அண்ணாவின் இயக்கத்தார்களும் கருத்துநிலை
வழித்தோன்றல்களும் இக்கருத்துக்களையே முற்றிலும் தமிழ்ச்சமூகத்தின் முன் பெருமையுடன்
முன்வைத்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
முடிவாக…
ஆரியத்துக்கு
எதிரான செயல்பாடுகளில் ஒன்றாகவே தமிழ் இலக்கியங்களை மறுவாசிப்புச் செய்தலை மேற்கொண்டது
திராவிட இயக்கம்.
சிலப்பதிகாரத்தைப்
பகுத்தறிவுக் கண் கொண்டு நோக்கிய பெரியார், அக்காப்பியத்திலுள்ள மூட நம்பிக்கைகளைக்
கடுமையாகச் சாடினார். பார்ப்பனீயத்தின் நிலைபேற்றிற்குத் துணைபோகும் காப்பியம் என்று
மதிப்பிட்டார்.
சிலம்பின்
கதை, பாத்திரங்கள், விளைவு ஆகிய அனைத்தையும் பயன் என்ற ஒற்றைக் கண்ணாடி கொண்டு பார்த்தார்
பெரியார். இலக்கியங்களின் அழகியல் மதிப்புக் குறித்துப் பெரியார் அக்கறைப்படவில்லை.
சிலப்பதிகாரத்தின்
உருவாக்கச் செய்திகள், பின்புலம், அரசியல், பண்பாட்டு நிலைப்பாடு ஆகியன குறித்த ஆய்வுப்
பூர்வமான முடிவின் அடிப்படையில் பெரியார் எதிர்ப்பில் ஈடுபடவில்லை; பொதுநிலையில் நின்று
சிலப்பதிகாரத்தை எதிர்த்தார். சிலப்பதிகாரத்தின் தமிழ்தேசியச் சார்பு நிலைப்பாட்டையோ,
முரண்பாடுகளையோ அவர் கவனத்தில் எடுக்கவில்லை.
பெரியாரின்
சிலப்பதிகார எதிர்ப்பு ம.பொ.சிவஞானம் போன்றோரை எதிர்நிலையில் தூண்டியது. தனிமனித வசைபாடல்களுக்கும்
காரணமாக அமைந்தது. ‘சிலப்பதிகார மாகாநாடு’ கூட்டப்படவும் காரணமாயிற்று.
அண்ணா
பெரியாரிடமிருந்து முரண்பட்ட இடங்களில் சிலப்பதிகாரத்தின் மீதான மதிப்பீடும் ஒன்றாகும்.
பெரியாரது கம்பராமாயண எதிர்ப்புப் பரப்புரை செய்யும்பொழுதே அதற்கு மாற்றாகச் சிலப்பதிகாரத்தை
அண்ணா முன்வைத்தார். பின்னாளில் பெரியாரிடமிருந்து பல்வேறு கருத்துக்களில் அவர் முரண்பட்டமைக்கான
தொடக்கப்புள்ளியாக இதைக் காணலாம்.
திராவிட
இயக்கத்தின் திறனாய்வுக் கோட்பாடுகளோ, இவ்வாறான எதிரெதிர் முரண்களைக் கொண்டிருக்கிறது என்பதைத் தொகுத்துக் கொள்ளுவது
அதன் பின்னாளைய அரசியல் தடுமாற்றங்களைப் புரிந்துகொள்ள உதவும்.
No comments:
Post a Comment