Saturday, 10 September 2011

இந்திய நாடக அரங்கின் புதிய பாதை: பாதல் சர்க்கார் (1925-2011)

பாதல் சர்க்கார் என்ற இந்தப் பெயர் இந்திய நாடக அரங்கின் மிக முக்கியமான மந்திரச் சொல். நவீன நாடகச் செயல்பாட்டாளர்களில் இவரளவுக்கு இந்தியா முழுவதுமாக அறிமுகமானவர்கள் வேறுயாரும் இருப்பார்களா என்பது ஐயமே! தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது நாடகப்பணி ஆற்றிய பாதல் சர்க்கார், கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் தனது 86 ஆவது வயதில், 2011 மே மாதம் 13 ஆம் நாள் மறைந்தார்.


நவீன காலத்தின் இலக்கியம், திரைப்படம், நாடகம் உள்ளிட்ட கலைகளில் எழுச்சி மிக்க முன்னோடியாகத் திகழும் வங்காளத்தில் பிறந்தவர் பாதல். தமிழக அரங்கச் செயல்பாடு பாதல் சர்க்காரோடு கொண்டிருந்த நெருக்கமும் உறவும் குறிப்பிட்டுப் பேசத்தக்கது.


சுதீந்திர சர்க்கார் என்ற இயற்பெயருடைய பாதல் சர்க்கார், 1925 ஜூலை 15 ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். பாதலின் தந்தையார் ஒரு வரலாற்றுத்துறைப் பேராசிரியர். கல்கத்தாவின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளுள் ஒன்றான பெங்கால் எஞ்சினியரிங் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் பயின்றார் பாதல். கல்கத்தா மெட்ரோபாலிடன் ப்ளானிங் ஆர்கனைஸேஷனில் நகரத் திட்டப் பணியாளராகப் பணிசெய்தார். இங்கிலாந்து, நைஜீரியா ஆகிய நாடுகளிலும் பணிபுரிந்தார்.


பாதல் சர்க்கார் நாடக நடிகனாகத் தன் அரங்க வாழ்வைத் துவங்கினார். கல்கத்தாவிலிருந்த அமெச்சூர் நாடகக் குழுக்களில் நடிகராகவும் நெறியாளுனராகவும் நாடகங்கள் எழுதுபவராகவுமிருந்தார். அக்காலகட்டத்தில் அவர் எழுதிய நாடகங்கள் அனைத்துமே நகைச்சுவை நாடகங்கள். அவை வெற்றிகரமான மேடையற்றத் தயாரிப்புகளாகவும் உருவாக்கப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றன. நம்மூர் கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர், காத்தாடி ராமமூர்த்தி வகையிலான நாடகங்கள் அவை. இந்த வகையறாக்கள் தமிழ்நாட்டில் நாடகக்காரர்களாகப் புகழ்பெற்றிருப்பதைப்போலவே பாதல் சர்க்காரும் வங்கத்தில் மிகப்புகழ் பெற்றார்.


1963 இல் ‘ஏபங் இந்திரஜித்’ நாடகத்தை எழுதினார். அதற்குப் பிறகு அவரது நாடகங்கள் முற்றிலும் புதியதானதொரு பாதையில் நடைபோடத் தொடங்கின. மேடை நாடகமாக இந்நாடகத்தை எழுதி, மேடையேற்றினாலும் பிறகு முற்றிலுமாக மேடை வடிவத்தை மறுதலிக்கும் மாற்று வடிவத்திற்கு நகர்ந்தார். அவரது இடையறாத தேடலும் சோதனை முயற்சியும் அவரைப் புதிய வடிவங்களைக் கண்டடைய வைத்தன.


தமிழ்நாட்டில் பாதல் சர்க்கார் ஏராளமான நாடகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தினார். இன்றைய தமிழ் நவீன நாடகத்தின் மிக முக்கியமான ஆளுமைகள் பாதல் சர்க்காரின் மாணவர்கள். 1980 இல் சோழ மண்டலம் ஓவியர் கிராமத்தில் நடத்தப்பெற்ற பயிற்சிப் பட்டறை தொடங்கிப் பிந்தைய பல ஆண்டுகளில் பாதல் சர்க்கார் நாடகப் பட்டறைகளை நடத்தியிருக்கிறார். வங்காளத்திற்கு அடுத்ததாக மிக அதிகமாக அவருடைய நாடகங்களை நடத்தியது தமிழகம் மட்டுமே. ஞாநி, மு.ராமசாமி முதலாக கிறித்தவ சபைகள் வரை பல்வேறு குழுக்களால் பாதல் சர்க்காரின் நாடகங்கள் மொழிபெயர்ப்பாகவும், தழுவலாகவும் நடத்தப்பெற்றிருக்கின்றன.


பாதல் சர்க்காரின் நாடகத்தை நிகழ்த்துவது மட்டுமல்ல, அவருடைய நாடக நிகழ்த்து முறைமை, செயல்பாடுகள் ஆகியவற்றையும் அப்படியே பிரதியெடுத்த தமிழ் நாடகக் குழுக்களும் உண்டு.


பாதல் சர்க்கார் கல்கத்தாவின் கர்ஸன் பூங்காவில் சனிக்கிழமை தோறும் மாலை வேளைகளில் நாடகம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1975 களில் அவசர நிலை காலகட்டத்திலும் கூட நிகழ்த்தலைத் தொடர்ந்தார். அதே பூங்காவில் உத்பல் தத் நாடக நிகழ்வின் போது காவல்துறையால் நடத்தப்பட்ட வன்முறையில் பிரபீர் தத்தா என்ற வங்களி இளைஞன் அநியாயமாகக் கொல்லப்பட்டான். அதை, ‘அரசாங்கம் எங்களுடைய நாடக இயக்கத்தைத் தீர்த்துக்கட்ட முயற்சித்தது. ஆனால் அதற்குப் பெரும் அளவில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது என்று பின்னாட்களில் நினைவு கூர்ந்தார் பாதல். அந்த நிகழ்வுக்குப் பிறகும்கூட கர்ஸன் பூங்காவில் தொடர்ந்து நாடகங்களை நிகழ்த்தினார் பாதல் சர்க்கார்.


அவசர நிலையின் போது தொடர்ந்து நாடகம் நடத்த பூங்கா கிடைக்காதபோது கல்கத்தாவின் தியாசபிகல் சொசைட்டி வளாகத்தில் நாடகங்களை நடத்தினார் பாதல். ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழு, அவரது பாணியையே பின்பற்றி, சென்னை மெரினா கடற்கரையில் சனிக்கிழமை மாலை வேளைகளில் நாடகங்களை நடத்தியது.


பாதல் சர்க்காரின் நாடகங்களில் பிறகொரு இந்திரஜித் பல்வேறு குழுக்களால் மேடையேற்றப்பட்டது. தேடுங்கள் என்ற நாடகம் ஞாநியால் ‘ஊர்வலம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது. போமா என்ற நாடகம் ‘முனியன் என்று நிகழ்த்தப்பட்டது. மீதி சரித்திரம், ‘பாலு ஏன் தற்கொலை செய்து கொண்டான்? என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது.


பாதல் சர்க்காரின் நாடகக் கோட்பாடு ‘விடுதலை அரங்கு என்றும் பின்னாளில் ‘முற்ற அரங்கு என்றும் அடையாளப்படுத்தப் பட்டது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவை பார்வையாளனை அந்நியப்படுத்தி நிறுத்தும் நிலையிலிருந்து அவனை நடிகனுக்கு அல்லது நாடகத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருவது அவருடைய முயற்சி ஆகும்.


முதல் அரங்கு என்று இந்தியாவின் மரபார்ந்த அரங்கைக் குறிப்பிடுகிறார் பாதல். இரண்டாம் அரங்கு என அவர் குறிப்பிடுவது புரொசீனியம் அரங்கு எனப்படும் படச்சட்ட அரங்கை. மூன்றாம் அரங்கு என அவர் முன்மொழிவது முன்னிரண்டையும் மறுதலித்த மூன்றாம் வகை அரங்கினையே.


மரபு அரங்கின் வடிவம் () மிகவும் அசாதாரணமான பலம் கொண்டது, அதில் பார்வையாளனுக்கும் நிகழ்த்துனருக்குமான உறவு என்பதும் அற்புதமானது என்ற கருத்தைக் கொண்டிருக்கும் பாதல், அவற்றின் உள்ளடக்கத்தின் பொருந்தாமை பற்றி மிக விரிவாகவே பேசியிருக்கிறார். ‘அவற்றின் உள்ளடக்கம் பழமையாக உள்ளது. அல்லலுறும் இன்றைய மனிதர்களின் வாழ்க்கைக்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை. பல சமயங்களில் அது தவறான மதிப்பீடுகளை மக்களுக்குப் புகட்டுகிறது. நடைமுறையை அலசுவதையும் தங்களுடைய உரிமைகளுக்காக எழுந்து நிற்பதையும் செய்வதை விடுத்து பணிந்து போவது, கடவுளர்களைத் தொழுது நிற்பது போன்றவை எனக்குத் தவறாகப்படுகின்றன என்கிறார்.


இரண்டாம் அரங்கான படச்சட்ட அரங்கத்தை முதல் அரங்கத்தோடு ஒப்பிடும்போது, அது உள்ளடக்க அடிப்படையில் முற்போக்கானதாக இருப்பதை பாதல் ஒப்புக்கொள்ளவே செய்கிறார். ஆனால் அது நகர்ப்புறத்துடன் கட்டுண்டிருந்தது என்ற விமர்சனத்தையும் முன்வைக்கிறார். நகர்ப்புறத்திலும் மத்தியதர வர்க்கத்தினருடனும் மேல்தட்டு மக்களுடனும் மட்டுமே இந்நாடகம் உறவு கொண்டிருந்தது என்கிறார். மேற்குறித்த இரண்டு பிரிவினரால் சமூக மாற்றத்தை விளைவிக்க இயலாது எனக்கருதும் பாதல், அதுவே இரண்டாம் அரங்கின் குறைபாடு என்கிறார்.


படச்சட்ட மேடை நாடக வடிவத்தின் மீது பாதல் சர்க்கார் முன்வைக்கும் விமர்சனங்கள் மிக முக்கியமானவை ஆகும்.


இந்நாடகத்தில் பார்வையாளனுக்கும் நடிகனுக்குமிடையேயான இடைவெளி அதிகம். இதில் நடிகனுக்கும் பார்வையாளனுக்குமிடேயேயான உறவு என்பது உயிர்ப்புடையதாக, நெருக்கமுடையதாக அமைந்திருப்பதில்லை.


இரண்டாவதாக, இந்நாடக வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள படிநிலை. அதாவது நடிகன் பார்வையாளனைவிட உயர்ந்த தளத்தில் இருப்பான். பார்வையாளன் நடிகனைவிடத் தாழ்வான பகுதியில் அமர வேண்டும்.


மூன்றாவது இந்நாடக வடிவத்தில் ஒளியமைப்பு. அதாவது நடிப்பிடம் முழுவதும் ஒளியூட்டப்பட்டு, ஒளி வெள்ளத்தில் நடிகன் மிதப்பதும், பார்வையாளர் பகுதி இருள் படர்ந்திருப்பதும். இதில் பார்வையாளர்கள் முன் நடிக்கிறோம் என்ற சிந்தனையின்றி நடிகன் பார்வையாளன் குறித்த பிரக்ஞையின்றி நடிப்பான். பார்வையாளன் ஒளிந்து கொண்டு பார்ப்பதான பாவனையில் இருப்பான். “பார்வையாளர்கள் இல்லையென்று பாசாங்கு செய்துகொண்டே நிகழ்த்துபவர்களும் ஒருவருக்கொருவர் படங்காட்ட வேண்டும். அதேசமயம், பார்வையாளர்களின் நலனுக்காக அவர்கள்தாம் எல்லாம் செய்ய வேண்டியவர்கள். உண்மையில் முன்முற்ற மேடை நாடகத்தின் மிக நல்ல நடிகன் என்பவன் பார்வையாளர்களைப் பற்றிய முழுப் பிரக்ஞையின்றி அவர்களுக்குத் தன்னைப் படங்காட்டிக் கொள்பவன்தான். ஏனெனில் அப்போதுதான் அவனது நடிப்பு ‘இயற்கையாக இருக்கிறதுஎன்று படச்சட்ட நாடக மேடை நடிப்பைக் கடுமையாக விமர்சிக்கிறார் பாதல்.


நாடக மேடையின் அமைப்பும் கூட, நிகழ்த்துனர்களும் பார்வையாளர்களும் சந்திப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதில்லை என்கிறார் அவர். ஒருபுறம் ஒப்பனை அறையும், மேடைக்கதவும் மறுபுறம் காட்சியரங்கின் தாழ்வாரங்களும் டிக்கெட் கொடுக்கும் அறையும் உள்ளன. நிகழ்த்துபவர்கள் பார்வையாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்கே? என்று பாதல் சர்க்கார் வினா எழுப்புகிறார்.


இவ்வாறாக ஏராளமான தடைகள், சிக்கல்கள் இருந்தாலும், இந்திய நகர நாடகம், மேலை நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த முற்ற நாடகத்தை எவ்விதமான கேள்விகளுமின்றி ஏற்றுக் கொண்டிருப்பது ஆச்சரியம் தான் என்கிறார் அவர். இதற்கு என்ன காரணம்? “ஜாத்ரா, தமாஷா, பவாய் மற்றும் சொந்த ஊர்ப் பொழுது போக்குகளிலிருந்து நாடகத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுவது காரணமாக இருக்குமோ? நகர நாடகத்தைத் தொழிலாளர்களிடையே மேட்டிமைத் தனத்தைத் தோற்றுவிக்கும் யோசனையோ? நகரங்களின் காலனியக் குணத்தால் நகர்ப்புறங்களுக்கும் கிராமப் புறங்களுக்குமிடையே உள்ள பிளவில் பிறந்த நகர போலித்தனமோ? என்று கேள்வி எழுப்புகிறார்.


இதற்கு மாற்றாகவே அவர் “முற்ற அரங்கினை உருவாக்கிச் செயல்பட்டிருக்கிறார். அவர் கண்ட இந்திய மரபு அரங்குகளான ஜாத்ரா, தமாஷா, பவாய், நௌடங்கி, கதகளி, ச்சௌ, சில மணிப்புரி நாடகங்கள் ஆகியவை அவருடைய சிந்தனையைக் கிளறியிருக்கின்றன. 1957 இல் லண்டனிலும் 1963 இல் பாரிசிலும் அவர் கண்ட வட்ட வடிவ நாடகங்கள், லண்டனில் ஜோன் லிட்டில்வுட்டின் நாடகங்கள், மாங்கோ தகங்கா தியேட்டரில் யூரிலியுபிமோவிங் தயாரிப்புகள், பிராக்கில் கினோ ஹெர்னி கிளப் தியேட்டர் நாடகங்கள், ஜாரியின் முழுப் பாவனை நாடகங்கள், போலந்தின் ரோக்லாவில் பரிசோதனை முயற்சிகளைச் செய்து கொண்டிருந்த குரோட்டோவ்ஸ்கியின் சில நாடகத் தயாரிப்புகள், ரிச்சர்ட் ஷெக்னர் தயாரிப்புகள் ஆகியவை பாதல் சர்க்காரை முற்றிலும் புதிய திசைக்கு அழைத்துச் சென்றன.


குரோட்டோவ்ஸ்கியின் “நாடகத்தின் வாழ்க்கை” () புத்தகம் இச்சிந்தனை வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்தது என்கிறார் பாதல். பிந்தைய நாட்களின் தான் வந்தடைந்த முற்ற அரங்கு, ஷெக்னரின் சூழலியல் அரங்கிலிருந்தும் குரோட்டோவ்ஸ்கியின் ஏழ்மை அரங்கிலிருந்தும் மாறுபட்டுத் தனித்து விளங்கியது என்கிறார்.


பாதல் சர்க்காரின் அரங்கு எளிதாக எடுத்துச் செல்லப்படக் கூடியது. பொருட்செலவு அதிகம் வைக்காத எளிய தன்மையுடையது. தன்னுடைய நாடகத் தயாரிப்புச் செலவு நூறு ரூபாயைத் தாண்டக் கூடாது என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்தார். காட்சிச் சோடனைகளற்ற வகையிலேயே அவருடைய நாடகங்கள் உருவாக்கப்பட்டன. நாடகத்திற்குக் கட்டணம் வசூலிக்கும் முறையை முற்றிலுமாக மறுதலித்து இலவச அரங்குகளை ஏற்படுத்தினார் அவர். 'நான் செலவு அதிகமற்ற ஒரு நாடக அமைப்பைத் தேடினேன். சிறிதளவு பணம் செலவழியும் என்றுதான் கருதினேன். பின்னால்தான் எனக்குத் தோன்றியது-இங்கு இலவச நாடகம்தான் சரிப்படுமென்று. இவர்களிடம் டிக்கெட் வாங்கக்கூடப் பணம் இல்லை. உண்மையில் இங்கு மட்டுமல்ல, எங்குமே இலவச நாடக அமைப்பு அவசியம்தான். இது மனிதனுடன் மனிதன் தொடர்பு கொள்ளும் செயல். ஒரு மனிதச் செயல் என்கிறார்.


பார்வையாளர்களின் கற்பனையைச் சார்ந்தே நாடகம் நடத்திவிட முடியும் என்பது எளிய நாடக அரங்கின் அடிப்படை ஆகும். இலவச நாடகம் என்பது மாற்றங்களை எளிதில் உள்ளடக்கிய, எடுத்துச் செல்லக்கூடிய, செலவினங்கள் குறைந்த நாடகம் என்பது பாதலின் கருத்து. கல்கத்தாவின் நகர்ப்புறத்தைச் சேர்ந்த பிற நாடகக்குழுக்களைப் போல பாதல் சர்க்காரின் குழு நாடக நுழைவுச்சீட்டுகளை விற்பனை செய்வதில்லை. அரசாங்கத்திடமிருந்தோ வியாபார நிறுவனங்களிடமிருந்தோ உதவித் தொகை கோருவதுமில்லை. ‘அதையெல்லாம் எங்களால் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாது என்கிறார் அவர். ‘கடந்த இருபத்திரெண்டு வருடங்களில் எங்களுடைய (சதாப்தி) நாடகக் குழுவுக்கு மட்டுமல்ல மூன்றாம் தியேட்டரை நடத்தும் பிற நாடகக்குழுக்களுக்கும் (சதக், பதேசேனா, அய்னா போன்றவை) களத்தில் நிற்பது பிரச்சினையாக இல்லை. எங்களுக்குப் பணப் பிரச்சினை கிடையவே கிடையாது என்கிறார்.


இதை ஒரு நாடகக் குழுவின் பொருளாதாரப் பிரச்சினை என்ற நிலையில் மட்டுமின்றி,கோட்பாடு சார்ந்த பிரச்சினையாகவும் அணுகுகிறார் பாதல் சர்க்கார். ‘நாடகம் இலவசமாக இல்லாதபோது பார்வையாளர்-நடிகருக்கிடையேயான உறவு சுதந்திரமானதாக இல்லை. பணம் செலுத்துவதனால் நடிகன் மீது சில உரிமைகளைப் பார்ப்பவர்கள் பெற்றுவிடுகிறார்கள்-நடிகன் கடன் பட்டவனாகிறான் என்கிறார். அதனை ‘வியாபார நிமித்தமான உறவு என்கிறார் அவர். பணத்தைக் கட்டாயமாகக் கேட்டு வாங்கினால், அதற்கு ஈடான ஒன்றை அளித்து உங்களைத் திருப்திப் படுத்தக் கடமைப்பட்டவனாகிறேன் என்கிறார்.


பாதலின் நாடகங்கள் எதன் மீது அக்கறை கொண்டிருக்கிறன? இக்கேள்விக்கு, ‘சமூக மாற்றம்தான் என்று தயக்கமின்றி விடை சொல்கிறார் அவர். ‘நாங்கள் சமூகத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறோம். பார்வையாளர்களிடமிருந்தும் விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். அவர்களுடைய விமர்சனங்களுக்குச் செவி சாய்த்து மாற்றம் கொள்வதால் – தியேட்டரை தொடர்பு கொள்ளுதலுக்கு ஒரு வழியாகப் பயன்படுத்துகிறோம் என்பது அவருடைய கருத்தாகும். எனவே சமூக மாற்றங்களை முன்னெடுக்கும் ஆதாரமாக, கருவியாக இருக்கும் பார்வையாளர்களை நோக்கிச் செல்வதே தம்முடைய நாடகச் செயல்பாடு என்கிறார். வறுமைப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களை நாடிப் போவது அதனால்தான் என்கிறார். ‘சமூக மாற்றம் பற்றிப் பேசாத எந்த நாடகத்தையும் நாங்கள் நடத்த மாட்டோம். அதை நானே எழுதியிருந்தாலும் கூட என்கிறார்.



புதுப் பொருள் கற்பிக்கும் ஸ்பார்டகஸ்

ரோமானியப் பேரரசின் பெருமை மிக்க ஆட்சிக் காலத்தில் விலங்குகளினும் கேவலமாக நடத்தப்பட்ட அடிமைகளிலிருந்து முளைத்து எழுந்தவன் ஸ்பார்டகஸ். கிறித்து பிறப்பதற்கு முந்தைய எழுபத்தோராம் ஆண்டில் ரோமானிய அடிமைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக முதன் முதலில் தலைநிமிர்த்தி, கரம் உயர்த்திக் குரல் கொடுத்தவன் அவன். வாய்திறக்கவும் உரிமையற்றிருந்த அடிமைகளைத் திரட்டிய எழுச்சியின் நாயகனாக வரலாறு அவனை வரவு வைத்திருக்கிறது.


சந்தையில் ஆடு மாடுகளைப் போல விலைக்கு வாங்கப்பட்டு உயிர் போகும் வரை முரட்டுத்தனமாக உழைக்க நிர்பந்திக்கப்பட்ட அடிமைகள் கலகம் செய்த வரலாற்றுக் காலப்பகுதியின் உணர்ச்சிகரமான உந்துசக்தியாக அமைந்த ஸ்பார்டகஸ், ஒரு அடிமை கிளாடியேட்டர். பிரபுக் குலத்தினர், உயர்குடியினர் கூடியுள்ள அரங்கில் ஒரு அடிமை மற்றொரு அடிமையோடு விலங்குகளைப் போல மோதிச் சண்டையிட வேண்டும். தன்னால் அடித்து வீழ்த்தப்பட்ட சக அடிமையைக் குத்திக் கொன்று, தன் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மனிதன், தன் சக மனிதனோடு மோதிச் சண்டையிட்டு மடியும் நிகழ்வைக் குதூகலத்துடன் கரவொலி எழுப்பி மகிழ்ந்தது அன்றைய ரோமானிய பிரபுக் குலம். அப்படிச் சண்டையிடும் அடிமைக்கு கிளாடியேட்டர் என்று பெயர். ஸ்பார்டகஸ் புகழ்பெற்ற கிளாடியேட்டராக இருந்தவன். ஹோவர்ட் ஃபாஸ்ட் ‘ஸ்பார்டகஸ்’ என்ற பெயரில் நாவல் ஒன்றினை எழுதினார்.


இந்நாவலை நாடகமாக்கும் எண்ணம் கொண்டிருந்த வங்க நாடகவியலாளர் பாதல் சர்க்கார் 1972 இல் அப்பணியைச் செய்து முடித்தார். ‘இந்நாவலை நாடகமாக்கும் எண்ணம் பலமுறை வந்ததுண்டு. ஆனால் துணிச்சல் பிறக்கவில்லை’ என்று நாடக நூலின் முன்னுரையில் குறிப்பிட்டெழுதினார் சர்க்கார். படச்சட்ட நாடக மேடையை விட்டு வெளியே வந்து, ‘முற்ற மேடை’ அமைப்பைக் கைக்கொண்டபோது இதற்கான துணிச்சலைப் பெற்றார். பார்வையாளனையும் நிகழ்த்துபவனையும் மிக அருகில் கொண்டு வரும் முற்ற மேடை அமைப்பிலேயே தனது ‘சதாப்தி’ குழுவினரோடு இந்நாடகத்தைத் தயாரித்தார். இருநூறு முறைக்கும் மேலாக இந்நாடகம் அரங்கேறியது. எழுபது பேர் மத்தியிலும் இந்நாடகம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது; ஏழாயிரம் பேர் காணவும் நடிக்கப்பட்டிருக்கிறது.


1989 செப்டம்பரில் திருச்சியில் நடந்த பாதல் சர்க்கார் நாடகவிழாவில் நடத்துவதற்காக பேராசிரியர் மு.ராமசாமியின் வேண்டுகோளின்படி இந்நாடகத்தைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்தார் கோ.ராஜாராம். இந்த இருபத்திரண்டு ஆண்டுகளில் இருமுறை இந்நாடகத்தைத் தயாரித்து நிகழ்த்தியிருக்கிறார் மு.ராமசாமி. அண்மையில் பாதல் சர்க்காரின் மறைவையொட்டி, சென்னை மூன்றாம் அரங்கு நாடகக் குழுவினரின் வேண்டுகோளின்படி மூன்றாவது முறையாகப் புதிய நடிகர்களைக் கொண்டு இந்நாடகத்தை நெறியாளுகை செய்திருக்கிறார் அவர்.


ரோம் சாம்ராஜ்யத்தில் நிகழ்வதாய் இருந்தாலும் நாடகத்தின் தொடக்கத்தில் இந்திய தேசத்தோடும் கதையைத் தொடர்புபடுத்துவான் கதைசொல்லி. அடிமைகளைத் தூண்டிவிட்ட கலகக்காரனான ஸ்பார்டகஸ் கொல்லப்பட்ட பிறகு, அவனைக் குறித்து பிரபுக்குலத்தினர் பேசுவதாக, நினைவு கூர்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது நாடகம்.


‘இந்தப் போராட்டம் எப்ப முடியும் ஸ்பார்டகஸ்?’ என்ற வாரினியாவின் கேள்விக்கு, ‘எல்லா மனிதரும் விடுதலை அடையும் போது. சமத்துவம் அடையும் போது’ என்று விடையிறுக்கிறார்கள் அடிமைகள். கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய அடிமைத் தலைவர்கள் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார்கள். சிலுவையில் அறையப்பட்ட ஃபேர்டாக்ஸ் வலியோடு முணுமுணுத்த கடைசி வார்த்தைகளையே இந்நாடகத்தின் கடைசி வார்த்தைகளாக அமைக்கிறோம் என்பான் நாடகத்தின் கதைசொல்லி. ‘திரும்பி வருவேன். லட்ச லட்சமாய், கோடி கோடியாய்த் திரும்பி வருவேன்’ என்று அடிமைகள் கூறுவதாக நாடகம் முடியும்.


22 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட அண்மைய நாடகத் தயாரிப்பு, ‘முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் பின் இந்த நாடகம், இன்னமும் பேசாப்பொருளாய் புதுப்பொருள் கூறுகிறது’ என்கிறார் மு.ராமசாமி. இந்த நாடகம் இப்படி முடிகிறது: ‘மண்ணிலிருந்து வந்தான் ஸ்பார்டகஸ். அந்த மண் இப்பவும் இருக்கு’. ஈழ விடுதலைப் போரின் பின்னடைவுக்குப் பின், பாரிய அழிவுக்குப் பின் இந்நாடகம் புதிய அர்த்தத்தைக் கற்பிக்கிறது.


‘கதையின் நாயகன் ஸ்பார்டகஸ் அல்ல; அடிமைகள்தான் என்பார் பாதல் சர்க்கார். அதை மிகச் சரியாக உள்வாங்கி, நாடகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் மு.ராமசாமி. இளஞ்சிவப்பு நெற்றிப்பட்டையை அணிந்தவனாக நாடகத்தின் போக்கில் அறிமுகமாகிறான் ஸ்பார்டகஸ். நெற்றிப்பட்டை நடிகர்களிடம் கைமாறி வேறு வேறு ஆட்களிடம் சென்று சேர்கிறது. நடிகர் கூட்டத்தில் வேறு வேறு ஸ்பார்டகஸ்கள் உருவாகிறார்கள்.


கருணாபிரசாத் போன்ற ஓரிரு நடிகர்களைத் தவிர, ஏனைய நடிகர்கள் முற்றிலும் நாடகத்திற்குப் புதியவர்கள். ஆனாலும் உணர்வுப்பூர்வமான வெளிப்பாட்டை நாடகம் கொண்டிருந்தது. நடிகர்களின் உடல்மொழி உருவாக்கத்திலும் காட்சிப்படுத்தலிலும் மு.ராமசாமி தன் ஆளுமையை நிரூபித்திருக்கிறார்.


உணர்வுப்பூர்வமான உள்ளடக்கம், துடிப்புள்ள பிரதி, உயிர்ப்புள்ள நடிகன், வாஞ்சையை அடைகாத்துள்ள வெளிப்பாடு எல்லாமுமாகச் சேர்ந்து அதிர்வைப் பார்வையாளனுக்குக் கடத்த முடியும் என்பதற்கு இந்நாடக நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.


ஸ்பார்டகஸ்














Friday, 6 May 2011

பங்களிப்பை வேண்டி

நாடக சாலை
வழங்கும்
‘நெடும் பயணம்’ (நாடகம்)

நாடகப் பிரதி: கி.பார்த்திபராஜா
நெறியாளுகை: சே.இராமானுஜம்
மொழி: தமிழ்
நேரம்: 60 நிமிடங்கள்

நாடக சாலை:
நாடக சாலை, வடதமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் இயங்கி வரும் கலை இலக்கியச் செயல் களம். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், நாடக ஆர்வலர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 2003 ஆம் ஆண்டிலிருந்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் மாற்று நாடக இயக்கம் என்ற பெயரில் வளாக அரங்கைச் சோதனை முறையில் நடத்தி, 2010 ஆம் ஆண்டில் நாடக சாலை யாக வடிவம் பெற்றிருக்கிறது இக்குழு. மாற்று நாடக இயக்கமாக ஏழு முழுநீள நாடகங்களைத் தயாரித்து அளிக்கை, பயிற்சிப் பட்டறைகள் ஆகியவற்றைச் செய்து, இப்போது நாடக சாலையாக 2011 மார்ச்சில் ஹபீப் தன்வீர் எழுதிய ‘சரண்தாஸ் சோர்’ என்ற நாடகத்தினை மேடையேற்றியிருக்கிறது. திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள், பிற நிறுவனங்களின் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரைத் தொடர்ந்து நாடகம் பார்க்க வரவேற்று இயங்கும் பண்பாட்டு இயக்கமாகவும் நாடக சாலை உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

புதிய நாடக உருவாக்கம்:
நாடக சாலை, தனது இரண்டாவது நாடகத் தயாரிப்பாக, கி.பார்த்திபராஜா எழுதிய ‘நெடும் பயணம்’ என்ற நாடகத்தைத் தயாரித்து வழங்க இருக்கிறது. தேசிய நாடகப் பள்ளி நடத்திய நாடகப் பிரதி உருவாக்கப் பயிற்சிப் பட்டறையில் உருவாக்கப்பட்டு, அவர்களால் சிறந்த பிரதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பிரதிகளுள் ஒன்று இந்நாடகப் பிரதி. தமிழக நவீன நாடக முன்னோடிகளுள் ஒருவரான பேராசிரியர் சே.இராமானுஜம் இந்த நாடகத்தை நெறியாளுகை செய்கிறார். புதுதில்லிப் பல்கலைக்கழகத்தின் மொழிகள் துறையின் மேனாள் தலைவர் செ.இரவீந்திரன் ஒளியமைப்புச் செய்கிறார்.
தொல்குடி, பேரரசு என்ற முரண்பாட்டில் பேரரசுகளின் கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்து போன இனக்குழுக்கள் தங்கள் வாழிடத்தை விட்டு இடம் பெயர்ந்தமை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக வரலாறு. பாரி மன்னனின் பறம்புமலை மூவேந்தர்களின் முற்றுகையிலிருக்கும் போது, அந்நாட்டை விட்டு வெளியேறும் குடிகளில் சிலரும், 21 ஆம் நூற்றாண்டில் சவ்வாது மலையை விட்டு, பெங்களூருவுக்குக் கட்டிடத் தொழிலாளிகளாக இடம்பெயரும் சவ்வாது மலைமக்களில் சிலரும் சந்திக்கும் புள்ளியில் நாடகம் தொடங்குகிறது. இரு மலைக் குழுவினரும் தங்களின் மண்ணைப் பறிகொடுத்த அவலத்தைப் பறிமாறிக் கொள்வதில் தொடங்கி, பல்வேறு சமூகச் சிக்கல்களைப் பேசுவதாக நாடகம் நீளுகிறது. 2011 மே, ஜூன் மாதங்களில் நாடக ஒத்திகை திருப்பத்தூரில் நடைபெற உள்ளது. 20 நடிகர்கள் நாடகத்தில் பங்கேற்க உள்ளனர்.

செலவுத் திட்ட முன்வரைவு:
நாடக உருவாக்கச் செலவுகள்: 60,000.00
நெறியாளுனர் மதிப்பூதியம்: 20,000.00
ஒளி அமைப்பாளர் மதிப்பூதியம்: 10,000.00
மேடை வடிவமைப்பாளர் மதிப்பூதியம்: 10,000.00
ஒத்திகைச் செலவுகள்: 25,000.00
மொத்தம்: 1,25,000.00
முழுக்க முழுக்க நாடக ஆர்வலர்களின் உதவியைக் கொண்டு இந்நாடகம் தயாரிக்கப்படுகிறது. தங்களின் மேலான உதவியை அன்புடன் எதிர்நோக்குகின்றோம்.
நாடகத் தயாரிப்புக்கான பொருட்செலவில் உங்களின் சிறு பங்களிப்பையும் வேண்டி நிற்கிறோம்.

முகவரி: முனைவர் கி.பார்த்திபராஜா,
நாடக சாலை,
25, கான்வென்ட் ரோடு,
இரட்டமலை சீனிவாசன் பேட்டை,
திருப்பத்தூர்-635601
வேலூர் மாவட்டம்.

வங்கிக் கணக்கு எண்: ஸ்டேட் பாங்க், திருப்பத்தூர் கிளை,
30353551248 (கே.பார்த்திபராஜா)

நன்றி!