காட்சி:1
(மேடையில் ஒளி பரவும்போது சிறுவர்கள் இருவர் பேசியபடி பள்ளிக்கு
வருகின்றனர். கிராமத்துச் சிறுவர்களெனத் தோற்றமளிக்கின்றனர்.)
சிறுவன் 1: டேய்…
முருகா… உனக்கு ஒன்னு தெரியுமாடா… எங்க கெணத்துல தண்ணி ஊத்து கொறஞ்சி போச்சுடா…
சிறுவன் 2: ஆமாடா…
எங்க கெணத்துலயும்தான்டா…
சிறுவன் 1: அப்டி
என்ன ஆயிருக்கும்?
சிறுவன் 2: தெரியலடா…
சிறுவன் 1: கெணத்தை
ஆழப்படுத்தனும்னு எங்கப்பா சொல்லிக்கிட்டு இருக்குடா...
(பள்ளி மணி ஒலிக்கிறது. நகரத்துச் சிறுவர்கள் மூவர் பேசியபடி
வருகிறார்கள். நடையுடை பாவனைகளில் நகரச் சிறுவர்களைப் பிரதிபலிக்கிறார்கள்.)
அபிஷேக்: டேய்
கார்த்திக் யு நோ… எங்க வீட்ல போர் போட்டாச்சுடா…
கார்த்திக்: வாவ்….
அப்டியா? ஒனக்குத் தெரியுமா… அப்போவே எங்க வீட்ல போர் போட்டாச்சு…
(பேசியபடி வகுப்பறைக்குள் நுழைகின்றனர். நகரத்துச் சிறுவர்கள்,
ஏற்கனவே வந்திருக்கும் கிராமத்துச் சிறுவர்களை வெறுப்புடன் பார்க்கிறார்கள்)
அபிஷேக்: டேய்…
பட்டிக்காட்டுப் பசங்களா… ஏண்டா பர்ஸ்ட் பென்ச்ஞ்ல போய் உட்காருறீங்க…
கார்த்திக்: மூஞ்சியையும்
முகரையையும் பாரு…
அபிஷேக்: யெஸ்.
போய் பின்னால உட்காருங்கடா…
(சிறுமிகள் உள்ளே நுழைகின்றனர். அவர்கள் ஏற்கனவே அமர்ந்திருக்கும்
கிராமத்துச் சிறுமிகளைப் பார்க்கிறார்கள்.)
சிறுமி 1: யேய்…
உங்களுக்கு வேற தனியா சொல்லணுமா? பின்னால போய் உட்காருங்க.
(எழுந்து போகிறார்கள்… ஆசிரியர் உள்ளே வருகிறார்)
எல்லோரும்: குட்
மார்னிங் சார்…
ஆசிரியர்: குட் மார்னிங்… சிட்டௌன். ஆன்சர் யுவர் அட்டெண்டெண்ட்ஸ்…
(கிராமத்துப் பெயர்களுக்குச் சிறுவர்கள் சிரிக்கின்றனர். ஆசிரியர் அதட்டுகிறார்.) நேத்து
சொல்லிக் கொடுத்த பாடத்துல இருந்து கேள்வி கேட்கப் போறேன்… இந்தியாவின் பெஸ்டிவல்ஸ் அதாவது விழாக்கள் யாவை?
(கிராமத்துச் சிறுவன் கை உயர்த்திப் பதில் சொல்ல ஆர்வம் காட்டுகிறான்)
சிறுவன் 1: சார்
நான் சொல்றேன் சார்…
ஆசிரியர்: நீயா…
சரி சொல்லு பார்க்கலாம்…
சிறுவன் 1: தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், மாரியம்மனுக்குக்
கூழ் ஊத்துறது… மாசாணக் கொல்லை… மஞ்சள் நீராட்டு விழா…
ஆசிரியர்: ஆமா… கல்யாணம், கருமாதி, எல்லாத்தையும் சொல்லு…
(கோபத்துடன்) உட்கார்டா… அபிஷேக் நீ சொல்லுப்பா…
அபிஷேக்: தீபாவளி,
விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜா, ஆயுதபூஜா, விஜய தசமி…
ஆசிரியர்: போதும்…
போதும்… நல்லா படிச்சிருக்கேன்னு தெரியுது… குட்.
அபிஷேக்: தேக்யூ
சார்…
ஆசிரியர்: சரி
ரெண்டாவது கொஸ்டீன்… உணவுப்பண்டமான ரைஸ் எங்கிருந்து கிடைக்குது?
நகர.மாணவி: சார்…
100 பீட் ரோட்ல உள்ள ஸ்பென்சர் ல இருந்து கிடைக்குது சார்…
ஆசிரியர்: ஆன்சர்
தப்பு.
நகர.மாணவி2: சார்…
ரைஸ் ‘சூப்பர் மார்க்கெட்’ல இருந்து கிடைக்குது சார்?
ஆசிரியர்: அதில்லப்பா…
இயற்கையாக அரிசி எங்கிருந்து கிடைக்குது?
நகர.மாணவி3: சார்
இயற்கையா மட்டுமில்ல… இலவசமாகூட அரிசி ரேஷன் கடையில இருந்து கிடைக்குது சார்…
(கிராமத்துச் சிறுமி எழுகிறாள்)
கிராம.சிறுமி: சார்…
நான் சொல்றேன் சார்… அரிசி வயலில் பயிரிடப்படும் நெற்பயிரிலிருந்து கிடைக்கிறது சார்…
ஆசிரியர்: குட்…
(பாம்பு ஒன்று உள்ளே நுழைகிறது… கூச்சல், குழப்பம்.
ஆசிரியர் உள்ளிட்ட எல்லோரும் பயந்து ஒதுங்குகிறார்கள். கிராமத்துச் சிறுவன் எட்டிப்
பாம்பைப் பார்க்கிறான்.)
கிராம.சிறுவன் 1: சார்… பயப்படாதீங்க சார்… இது தண்ணி பாம்பு சார்…
பக்கத்துல இருக்க கொளத்துல தண்ணி வற்றிப் போச்சுல்ல சார்.. அதான் எரை தேடி இங்க புகுந்துடுச்சு
சார்…
ஆசிரியர்: பாத்துடா…
கடிச்சிடப் போகுது…
கிராம.சிறுவன் 1: சார்..
இந்தப் பாம்பு விஷம் இல்லாத பாம்பு சார்… கடிச்சா காயம்தான் சார் ஆவும்…
ஆசிரியர்: அந்த கொம்பை எடுத்து அடிச்சுக் கொன்னுடுடா…
கிராம.சிறுவன்1: பாவம் சார்… விஷப்பாம்போ விஷமில்லாத பாம்போ… பாம்புகள
விவசாயிகளோட நண்பன்னு இசொல்லுவாங்க சார்… வயல்ல எலிகள்ளாம் பயிர்கள… நெல்ல நாசம் பண்ணிடும்
சார்… எலிகள் கிட்ட இருந்து விளைச்சல காப்பாத்துறது பாம்புகள்தான் சார்… இதைக் கொல்ல
வேண்டாம் சார்… பிடிச்சி வெளில விட்டுடலாம் சார்…
நகர.சிறுவன்: மனுசங்க குடியிருக்க பகுதிக்குப் பாம்பு வந்தா
சும்மா விடுவாங்களா… அடிச்சுக் கொல்லுடா…
கிராம.சிறுவன் 1: மனுசங்க குடியிருக்கிற பகுதிக்கு பாம்பு வரலடா… நாமதான்
பாம்பு குடியிருக்க பகுதிக்கு வந்துருக்கோம். அதாவது பாம்பு உள்ளிட்ட ஜீவராசிங்க குடியிருக்க
காட்டுப்பகுதியில வீடுகள… கட்டிடங்களக் கட்டி… நாமதான் அதுங்க வீட்டுல குடியிருக்கோம்.
இருடா… பிடிச்சிடலாம்…
(பாம்பைப் பிடித்து ஆசிரியரிடம் காட்டுகிறான். அவர் பயந்து விலகுகிறார்.)
சிறுவன் 1: டேய் அபிஷேக்… சார் தான் பயப்படுறாரு… நீ
வாடா… பாம்பத் தொட்டுப்பாருடா… ஒன்னும் பண்ணாது… நான் பிடிச்சிக்கிறேன். தொட்டுப்பாருடா…
அபிஷேக்: பயமா
இருக்குடா… இது விஷமில்லாத பாம்புன்னு உனக்கு எப்டிடா தெரியும்?
சிறுவன்1: தெரியும் டா… ஒடம்புட கட்டம் கட்டமா இருந்தா
கட்டுவிரியன்… கருப்புல மஞ்சள் கட்டம்போட்டு
மினுமினுன்னு இருந்தா கண்ணாடி விரியன்… மஞ்சளா வேகமா நகர்ந்து போச்சுன்னா அது சாரைப்
பாம்பு… முக்கோணத் தலையோட இருந்துச்சுன்னா பெரும்பாலும் விஷப்பாம்பு… இப்டி பாம்புகளுக்கு
இருக்க சில அம்சங்கள வச்சி கண்டு பிடிச்சிடலாம்டா… ரொம்ப ஈசிடா…
அபிஷேக்: இதெல்லாம்
யாருக்கிட்ட இருந்து, எப்டிடா கத்துக்கிட்ட?
சிறுவன் 1: எங்க கிராமத்து ஆட்களுக்கு எல்லோருக்குமே
இது தெரியும்டா… இது மட்டுமில்ல… இன்னும் நெறய தெரியும்டா…
நகர.சிறுமி: எங்கள உங்க கிராமத்துக்கு அழைச்சிட்டுப்போயி
இந்த மாதிரி விஷயங்கல்லாம் கத்துக்குடுக்கறீங்களாப்பா… ப்ளீஸ்…
கிராம.சிறுமி: ஓ…
தாராளமா…
காட்சி:2
(டிப்டாப்பாக உடையணிந்த நகரத்துக்காரர்கள் கிராமத்துக்குள் நுழைகிறார்கள்…
இறங்கியதும் ஆளுக்கொரு செல்போனைக் காதில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்…)
பெரியம்மா: அய்யோ… யாரு பெத்த புள்ளைங்களோ… பாத்தா நல்ல
செவப்பா… செழிப்பா பணக்கார வூட்டுப் புள்ளிங்க மாதிரித் தெரியுது… அம்புட்டும் பைத்தியம்
புடிச்சு அலையுது போலயே… தானா பேசிக்குது… தானா சிரிச்சிக்குது…
சிறுவன்: அய்யோ…
அம்மா… அவங்க செல் போன்ல பேசிட்டிருக்காங்கம்மா…
பெரியம்மா: அப்டியா…
நான் என்னத்தக் கண்டேன்…?
(சிக்னல் கிடைக்கவில்லை.எல்லோரும் ஹலோ… ஹலோ… என்று கத்திப் பேசி…
பரபரப்படைகிறார்கள். பாட்டுக்கேட்டுக்கொண்டு தலையை ஆட்டிக் கொண்டிருந்த ஒருவனை ஏசுகிறார்கள்)
அவன்: 24 மணி நேரம் செல்போன் சிக்னல் நின்னுபோனா… நம்ம ஆளுங்கள்ள
பாதிபேரு மண்ட வெடிச்சி செத்துப்போவானுங்க.. பாதிப்பேருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு
மெண்டல் ஆயிடுவான்…
கிராம.இளைஞன்: ஏய்… சிக்னல்
கிடைக்கலன்னா போகுதுப்பா… எதுக்கு வந்திருக்கீங்க?
நகர.பெண்: வில்லேஜை
சுத்திப்பார்க்க வந்திருக்கோம்.
நகரப் பெண்கள்: ஹே… சீ தேர்… லுக்கிங் வெரி நைஸ்.. வெரி க்ரீனி
ப்ளேஸ்.. இந்த மரங்கள்ளாம் வெரி ப்யூட்டிஃபுல் இல்ல?
இளைஞன்: என்னது
மரமா? இதெல்லாம் புல்லு
வகையைச் சேர்ந்ததுமா… நெல் பயிருங்க…
பெண்: வாட்
நெயில்லா?
பெரியம்மா: அய்ய…
அதெல்லாம் இல்லம்மா… நெல்லு… நெல்லு… துன்றீங்களே அரிசி… அது வெளையிற பயிர்…
பெண்: வாவ்…
இதுதான் நெல்லு காய்க்கிற மரமா?
சிறுவன்: அடடா… எத்தன தடவ சொல்லுறது…? இதையெல்லாம்
பயிர்னுதான் சொல்லனும்...இப்டி பெரிசா வளர்ந்திருக்கிறது மரம்… இப்டி சின்னதா இருக்கது
செடி… படர்ந்திருப்பது கொடி…
பெண்: ஓ…
ஐ சீ…
இளைஞன்: ஐஸ் வேணுமா…
ஐஸ்காரன் உச்சி வெயிலுக்குத்தான் வருவான். வாங்கித் தாரோம்…
பெண்: ஐ ஃபீல்
வெரி தர்ட்ஸ்டி. ஐ நீட் சம் கோல்ட் வாட்டர்.
இளைஞன்: வாட்டரா…? ஏ செம்பவள்ளி… மண்பானையில இருந்து
ஒரு சொம்பு தண்ணி கொண்டாந்து இவுங்களுக்குக் குடு புள்ள…
பெண்: நோ…
நோ… மினரல் வாட்டர் வேணும்…
பெரியம்மா: அது என்ன எழவோ… அதெல்லாம் இங்க இல்ல… ஒழுங்கா
பானைத் தண்ணியக் குடிங்க. இல்ல… தாகத்துல விக்கிச் செத்துப் போவீங்க…
நகர.ஆண்: இங்க
ஸ்டே பண்றதுக்கு ஹோட்டல் ஏதும் இருக்கா? டீலக்ஸ் ரூம்… ஏ.சி ரூம்…
சிறுவன்: டீலக்ஸ் ரூமா… எங்கூட்ல எங்கக்கா வாசனையா
இருக்கும்னு சந்தைல இருந்து வாங்கிட்டு வந்த லக்ஸ் சோப்புதான் இருக்கு.
நகர.ஆண்: ஏ.சி
ரூம்… ஏ.சி ரூம் வேணும்…
இளைஞன்: ஏ.சி ரூமா…
வாங்க… எங்க ஊரு ஏ.சி ரூமுக்கு கூட்டிட்டுப் போறேன்…
(வேப்பமரத்தடியைக் காட்டி)
இளைஞன்: இந்த வேப்பமரத்தடி பாத்தீங்களா… குளு குளுன்னு
இருக்கு. இதுதான் எங்கூரு ஏ.சி ரூம். இங்க ஒரு கயித்துக் கட்டில போட்டுக்கிட்டு மல்லாந்து
படுத்தா… தூக்கம் சொழட்டிக்கிட்டு வரும்ல…
பெண்: வேண்டாம்…
வேண்டாம்… வேற இடம் பார்க்கலாம்…
(போகிறபோது வழுக்கி விழுகிறார்)
பெண்: ஓ…மை
காட்… பிளட் கமிங்… கால் த டாக்டர்.. கால் த ஆம்புலன்ஸ்…
(கிராமத்து ஆட்கள் சிரிக்கிறார்கள்.)
பெரியம்மா: அடடா…
பிரசவத்துல சிக்கலானாத்தான் எங்கூருக்கு ஆம்புலன்ஸ கூப்பிடுவோம்…
இளைஞன்: அதுவும் புள்ளத்தாச்சிக்கு பிரச்சன ஒடனே வாங்கன்னு
போன் பண்ணுனா… புள்ள பொறந்து பேருவச்ச பொறவுதான் வரும்…
பெரியம்மா: வெலகுங்கப்பா… அந்த வெனப்பூண்டுச் செடியைக்
கசக்கி… சாறை மேல தடவுனா… எப்பேர்ப்பட்ட காயமும் ஒடனே ஆறிப்போயிடும்…
(அருகில் இருக்கும் தழை ஒன்றைப் பறித்துக் கசக்கிக் கட்டுகிறார்கள்.
)
பெரியம்மா: இப்போ
எப்டி இருக்கு?
பெண்: வலி
கொறஞ்சிருக்கு…
இளைஞன்: ம்… எலும்பு
ஒடைஞ்சாவே இந்த எலையை அரைச்சு வச்சுக்கட்டி சரி பண்ணிடலாம்…
மற்.பெண்: யூ
மீன் பிராக்சர்…
இளைஞன்: மீனுக்கு
இல்லம்மா… மனுசனுக்கு…
பெரியம்மா: மனுசனுக்கு வர்ற எல்லா வியாதிக்கும் எங்க கிராமத்து
மருத்துவத்துல மருந்து உண்டு. இப்போதான் விஞ்ஞானம் வளர்ந்துச்சு… நோயும் பெருத்துப்
போச்சு…
காட்சி:3
(பெண்கள் பாடியபடி வருகிறார்கள். கட்டிட வேலை செய்வோர் அவர்கள்.
தலையில் இறுக முக்காடிட்டு முடிச்சிட்டிருக்கின்றனர். கட்டிட வேலைக்கான எளிய தளவாடங்கள்
இருக்கின்றன.)
பெண்1: ம்… கழனி வேலை ரொம்பவும் கொறஞ்சு போச்சு…
உழுறதுக்கு ட்ராக்டரு வந்தப்போ கலப்பைக்கு வேலையில்லாமப் போச்சு… இப்போ… விவசாயமே கொறஞ்சு
போச்சு…
பெண்
2: கட்டட வேலைக்குத்தான் இப்போ மவுசு...
எப்புடியும் வேலை கெடச்சிடுது...
பெண்
3 : எதுக்குத்தான்
இப்புடி மாடி மேல மாடி... ஊடு மேல ஊடுன்னு கட்டிக்கிட்டுப் போறாங்களோ...
பெண் 4: ம்...
காசுக்காரன் எதுவேணும்னாலும் செய்வான்... கஞ்சிக்கு வழியில்லாம இருக்க நமக்கு எதுக்கு
அதப்பத்திப் பேச்சு...?
பெண்5: எல்லோரும்
அவங்கவங்க பிரச்சனையைப் பேசிட்டு வர்றீங்களே… இன்னிக்கு அவசர ஊர்க்கூட்டம் னு காலையிலேயே
தண்டோரா போட்டுச் சொன்னாங்களே… மறந்து போச்சா…
பெண்6: எட்டி
நடையைப் போடுங்க… ஊர் மந்தையில எல்லோரும் கூடியிருப்பாங்க… நாம மட்டும் தாமதமா போனா
நல்லாவா இருக்கும்?
பெண்7: சும்மா வளவளன்னு பேசாம நடையைக் கட்டுங்க…
காட்சி:4
(ஊர்க்கூட்டத்தில்
அனைவரும் வந்து அமர்கின்றனர். சில பெண்கள் ஆங்காங்கே நிற்கிறார்கள்)
நபர்
1 : என்னப்பா
எல்லோரும் மசமசன்னு இருந்தா எப்படி? யாராவது ஒருத்தவங்க ஆரம்பிங்க…
நபர்
2 : ஊர்த்தலைவரு
என்ன வாயில் கொழுக்கட்டையை வச்சிருக்காரு… அவர பேச சொல்லுங்கப்பா…
நபர் 1: அவரு
ஒன்னும் வாயில கொழுக்கட்டையை வச்சிருக்கலடா… நீதான் வாயில வூடு கட்டி, முப்பத்திரண்டு
பல்லையும் வேலியாப் போட்டு… ஏழரைநாட்டுச் சனியனை நெரந்தரமா குடிவச்சிருக்க.
நபர்3 : ஏ…
என்னப்பா… ஆளாளுக்குப் பேசிக்கிட்டு. ஊர்த்தலைவரே… வெசயம் என்னன்னு சொல்லுங்க…
ஊர்த்தலை: வெசயம்
இதுதானப்பா… நம்மூருக்கு ஒரு மாசத்துக்கு முந்தி வெளிநாட்டுக்காரகளும் டவுன்காரகளும்
வந்தாகளே… அவுங்க பெரிய தொழிற்சாலை ஒன்னு கட்டுறதுக்கு நம்மூர்ல எடம்பாத்துட்டுப் போயிருக்காங்க…
ஐநூறு ஏக்கரா நெலம் கேக்குறாங்க… ஏக்கருக்கு 5 லட்சம் தர்றேன்னு சொல்றாங்க…
நபர்4: ஐநூறு
ஏக்கராவா… நம்மூர்ல எங்கப்பா ஐநூறு ஏக்கர் நெலம் இருக்கு… குடியிருக்க வீடுகளை விட்டுட்டா…
மீதம் எல்லாமே வெவசாய நெலம்தானேப்பா?
ஊர்த்தலை: ஆமாப்பா… விவசாய நெலத்தைத்தான் கேக்குறாங்க…
நபர்5: என்ன
விவசாய நெலமா? என்னய்யா இது? இதைப்பத்தி பேசுறதுக்கு எதுக்குய்யா ஊர்க்கூட்டம் வேற?
வெவசாய நெலத்தைத் தரமுடியாது…ன்னு சொல்ல வேண்டியதுதானேய்யா…
ஊர்த்தலை: ஏக்கருக்கு 4 லட்சம்பா… அழுத்திக் கேட்டா…
5 லட்சம் வரை பேசி முடிக்கலாம்…
நபர்5: அஞ்சு
லட்சம் இல்லைய்யா… 50 லட்ச ரூபா கொடுத்தாலும் யாராவது வெவசாயம் பண்ணிக்கிட்டு இருக்க
நெலத்தை விப்பானாய்யா…
நபர்1: யோவ்..
சின்னான்… என்னப்பா… பெரிய்ய விவசாய நெலம்… நம்ம வெவசாயத்தப் பத்தி நாமதான் பெருமை
பீத்திக்கணும்… அடப்போப்பா… வெவசாயமாம் பெரிய்ய வெவசாயம்… வெங்காயம்…
நபர்5: ஆறுமுகம்…
வெவசாயம் இன்னிக்கு லாபம் தர்ற தொழிலா இல்லாம இருக்கலாம்… ஆனா வெவசாயம் ஊருக்குச் சோறு
போடுற தொழிலய்யா… அத மறந்துடாதீங்க…
நபர்3: ஆமா…
ஊறுக்குச் சோறு போடுறேன்னு… பொறப்பட்ட விவசாயி கடன்னலயும் கண்ணீர்லயும்தான் மிதக்குறான்….
நபர்5: இல்லப்பா…
நான் என்ன சொல்ல வர்றேன்னா…
நபர்5: நீங்க
ஒன்னும் சொல்ல வேண்டாம். விவசாயம் இன்னிக்கு லாபகரமான தொழிலா இல்லை… விவசாயிக்கு இந்தச்
சமூகத்தில மரியாதையும் இல்ல… எல்லோருக்கும் உள்ளது நமக்கும்… நாம மட்டும் ஏய்யா கஷ்டப்படணும்…
நபர்3: கஷ்டம்
மட்டுமில்லப்பா… நம்ம ஊர்ல மட்டுமே நாலுபேரு விவசாயிங்க தற்கொலை பண்ணிகிட்டு செத்துப்போனாங்க…
அவங்க எதுக்கு செத்தாங்க? எப்படிச் செத்தாங்க? ஞாபகமிருக்காப்பா உங்களுக்கு…
(பஞ்சாயத்திலிருப்பவர்கள்
உறைநிலையிலிருக்கிறார்கள்)
காட்சி:5
(வீடு
போன்ற அமைப்பில் பெண்கள் நிற்கிறார்கள். கதைசொல்லி பின்வரும் சம்பவத்தைச் சொல்லச் சொல்ல,
அவர்களின் மூச்சு இரைகிறது. பதற்றமும் நடுக்கமுமாகக் குழுவினர் நிற்கின்றனர். அவர்களுக்கு
முன்பாக விவசாயி செல்லய்யா வந்து நிற்கிறான். பின்வரும் விவரணைகளுக்குத் தக முகபாவத்தை
வெளிப்படுத்துகிறான்)
செல்லய்யா…
கொழந்தை மனசுக்காரன்… ஆருக்கிட்டயும் அதிர்ந்துகூட பேசமாட்டான்… அன்னிக்கு பயிருக்கு
தெளிக்கிறதுக்கு பூச்சி மருந்து வாங்கிக்கிட்டு வயலுக்குப் போனான்… 15 நாளா தண்ணியில்லாம
பயிரு வாடிக் கெடக்கு… அணையில இருந்து இந்தா தண்ணி வரும் அந்தா தண்ணி வரும்னு காத்துக்
கெடந்தவங்களுக்கு ஏமாத்தம்தான். வயல்ல… பயிருங்க.. கருக ஆரம்பிச்சது… ‘அய்யோ… எம்புள்ளங்க
மாதிரி வளத்தேனே… அம்புட்டும் கருகி நிக்குதே… வெதை, உரம், பூச்சிமருந்து, நடவு, களையெடுப்புன்னு
அம்புட்டுக் காசையும் செலவு பண்ணிட்டேனே… இவ்வளவுக்குப் பெறகும் தண்ணியில்லாம காஞ்சுபோறத
பாக்க சகிக்கலயே… அய்யோ கடவுளே… உனக்கு கண்ணவிஞ்சு போச்சா… அய்யோ… மாட்டேன்… நான் பார்க்க
மாட்டேன்…’
(வீட்டின்
உள்ளே போய் பூச்சி மருந்தை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறான். மிகப்பெரிய மனப்போராட்டத்தை
அவனது முகபாவம் சித்தரிக்கிறது. மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு….
மயங்கிச் சரிகிறான். அவனது உயிர்ப்போராட்டத்தைப் பின் பகுதியில் படிமங்களாக நிற்கும்
பெண்களின் உடல்மொழி வெளிப்படுத்துகிறது)
காட்சி:6
(கதைசொல்லி
குமாரசாமியின் கதையைச் சொல்லும்போது, பின் பகுதியில் பெண்கள் கிணறு போன்ற படிமமாக நிற்கின்றார்கள்.
கதையைச் சொல்லும்போது அவர்களின் உடல்அசைவுகள் துயரத்தை வெளிப்படுத்துகிறது)
விவசாய
கடனுக்கு லோன் கேட்கப் போயிருந்தான் குமாரசாமி. காரு லோனு… கட்டட லோனுன்னு போறவங்கள
மரியாதையா நடத்துற அதிகாரிமாருங்க… வெவசாய லோனு கேட்ட நம்ம கொமாரசாமிய மானக்கேடா பேசிப்புட்டாங்க…
செறகு ஒடிஞ்ச சிட்டுக்குருவி மாதிரி மனசொடிஞ்சு வந்தானப்பா வீட்டுக்கு.. கடன் கெடக்கலன்னா
என்னா… கைகாலு இருக்கே ஒழைக்க? கவலைப்படாதய்யா னு ஆறுதல் சொன்னா அவன் பொஞ்சாதி செண்பகம்…
ஆனா படுபாவி…
(குமாரசாமி
கிணற்றுக்கு அருகாமையில் வந்து… யோசித்து… பின் படியேறித் தாவிக் கிணற்றுக்குள் குதிக்கிறான்.
அவன் உள்ளே குதித்த தருணத்தில் கிணறு படிமத்திலிருந்த பெண்கள் சட்டெனக் கரங்களை உயர்த்தி
விரல்களைப் பரப்பி வானோக்கி நிற்கிறார்கள். பின்னணியில் துயரக் குரல் ஒலிக்க, மெதுவாய்
கால்மடித்துக் குனிகிறார்கள். ஒருவர் தோளை மற்றொருவர் தழுவியபடி தோளில் ஆறுதலாகச் சாய்கிறார்கள்.)
காட்சி:7
(கதைசொல்லி
சின்னச்சாமியின் கதையைச் சொல்லும்போது பின்னணியில் பெண்களின் முகங்கள் அடுக்கடுக்காய்
அமைந்திருக்கின்றன. சாவைக் கண்ணில் பார்க்கும் பதற்றமும் தவிப்பும் தெரிகின்றது முகங்களில்.)
சின்னச்சாமி
ஒரு குறுவிவசாயி. தன்கிட்ட இருந்த ரெண்டேக்கரா நெலத்துல மாடுமாதிரி வேலை செய்வான்.
அவனோட சொத்து, நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம் அந்த ரெண்டேக்கரா மண்ணுதான். அறுவடை முடிஞ்ச
பின்னால கூட, நாளைக்கொருதடவை அந்த வயல்ல கால் வைக்கலன்னா அன்னிக்கு அவனுக்குத் தூக்கம்
வராது. அந்த வருச வெவசாயத்துக்கு கந்துவட்டிக்காரன் கிட்ட கடனை வாங்கினான்… உரம், பூச்சிமருந்துன்னு
ஏகப்பட்ட செலவு. ஆனா விவசாயம் ஏமாத்திடுச்சு… கந்துவட்டிக்காரன் கழுத்தில துண்டைப்
போட்டுட்டான். ‘ஏ… வாங்குன கடனக் கொடுக்க வக்கில்ல… எதுக்குடா உனக்கெல்லாம் ஒரு வேட்டி…
துண்டு… இப்டி வாங்கின கடனக் கொடுக்க வக்கில்லாம வாழுறதவிட நாண்டுக்கிட்டுச் சாகலாமே’னு
கேட்டான் கந்துக்காரன். சின்னச்சாமி… ரோசக்காரன்.
(மரத்தில்
தூக்குக் கயிற்றை மாட்டித் தூக்குப் போட முயற்சிக்கிறான். பெண்கள் அழுது அழுது வேண்டாம்
என்று மௌனத்தில் கதறுகிறார்கள்)
காட்சி:8
(பெண்கள்
வெளிப்பக்கமாய்ப் பார்த்தபடி முழங்தாளிட்டிருக்கிறார்கள். வெள்ளையம்மாவின் கதை சொல்லப்படும்போது
வாய்பொத்தி அழுகிறார்கள்)
வெள்ளையம்மா
கதையோ வேற விதமானது. புருஷன் செத்தபிறகு ஒத்த மனுசியா நின்னு குடும்பத்தை நிமிர்த்தியவ.
அந்தவருஷம் அவ பாடுபட்ட நெலத்துல அமோக வெளைச்சல். மனசு கொள்ளாத மகிழ்ச்சி அவளுக்கு…
வெளச்சலை வெளைக்குப் போடப்போன போதுதான் வெபரீதம் புரிஞ்சது வெள்ளையம்மாவுக்கு. நெல்லுவெல
வறுமைக்கோட்டைவிட கீழ எறங்கிக் கெடந்துச்சு… ‘இன்னிக்கு மார்க்கெட்டு ரேட்டு இதுதான்…
இன்னும் ஆறுமாசத்துக்கு இப்டிதான் இருக்கும்’னு சொன்னான் கடைக்காரன். பக்கத்து சூப்பர்
மார்க்கெட்டுல அரிசி கிலோ 65 ரூபா. ஆனா நெல்லுக்கு இவளோட நெல்லுக்கு வெல கிடைக்கல.
வெள்ளயம்மாவுக்கு வெபரம் புரியல. நெல்ல வித்து காச கையில் வாங்கினா…
இந்த
சொற்ப பணம் எதுக்கும் உதவாதே… வாங்குன கடன அடைக்கப் போதாது. அடமானம் நகையைத் திருப்பப்
போதாது… சமஞ்சு பல வருஷங்களாகியும் கல்யாணத்துக்குக் காத்துக்கிட்டு நிற்குற தன் மகளுக்குக்
கால்பவுன் நகை வாங்கக்கூடப் போதாது… அய்யோ… அய்யோ… என்ன செய்வா வெள்ளயம்மா…
(மண்ணெண்ணையைத்
தலையில் ஊற்றிக் கொண்டு தீயைப் பற்றவைக்கிறாள். வேண்டாம் வேண்டாம் என்று கெஞ்சுவதாய்ப்
பாவனை செய்கிறார்கள் பெண்கள். வெள்ளையம்மாள் தீயிட்டுக் கொள்ளும்போது வெப்பத்தில் முகம்
சுளிக்கிறார்கள் பெண்கள். கண்களில் நீர் தளும்புகின்றது. வெள்ளையம்மாள் தீப்பற்றிக்
கருகிச் சாகிறாள்.)
காட்சி:9
(பஞ்சாயத்து. காட்சி நான்கில் இருந்த நிலையில் இருக்கிறார்கள்.
மேடையில் ஒளி பரவுகிறது.)
நபர்1: இப்படி
இந்தியா முழுக்க செத்துப்போன 2 லட்சத்து 66 ஆயிரம் விவசாயிகளோட கதை இருக்கு நம்மகிட்ட.இவங்க
நாலுபேரும் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப்போகலைய்யா… நடந்தது அப்பட்டமான கொலை…
நபர்2: கொலையா?
நபர்3: ஆமா..
கொலைதான்… படிச்சவங்க… பணக்காரங்க… அரிசியை பாக்கெட்ல வாங்கிச் சாப்பிடுற புண்ணியவாங்க
மனசாட்சி இல்லாமச் செய்த கொலை… போகட்டும்… வெவசாயம் பண்றவன் மட்டும் காலத்துக்கும்
பாடுபட்டு கடனாளியாகணுமா… அவன் கட்டுன பொஞ்சாதியியும் புள்ளைங்களும் பட்டினி கெடக்கணுமா…
கூட்டுத்தற்கொலை… குடும்பத்தோடு தற்கொலைன்னு செத்து மடியணுமா…
பெண்1: போதும்யா…
நாம வர்ற 4 லட்சத்துக்கோ 5 லட்சத்துக்கோ நெலத்தை வித்துடலாம்… டவுனுக்குப்போயி ஊருக்குப்
பொறம்பா துளியூண்டு எடம் வாங்கி குடிசையைப் போட்டுக்கலாம். பொழப்புக்கு ஏதோ கூலி வேலை
பாத்து காலத்தைத் தள்ளிடலாம். வேணாம்யா இந்த நாய்ப்பொழப்பு. வாழ்ந்தா… எல்லோரும் வாழுவோம்…
செத்தா எல்லோரும் சாவோம்யா…
பெண்2: அந்த
பேக்டரிகாரங்கள கூப்பிட்டு நெலத்த எழுதிக் கொடுத்து… பணத்தை வாங்குங்க… டவுனுப்பக்கமா
போயிடுவோம்… கொறஞ்சது உசுராவது மிஞ்சும்…
(தொழிற்சாலை
அதிபர்களிடம் கையெழுத்துக் கை நாட்டுப் போட்டுப் பணம் பெறுகிறார்கள். சிலர் கையெழுத்துப்
போடும்போதும் சிலர் பணம் வாங்கும்போதும் அழுகிறார்கள். மற்றவர்கள் ஆறுதலாக அணைத்துக்
கொள்கிறார்கள். பிறகு மூட்டை முடிச்சுகளுடன் பயணமாகிறார்கள்)
காட்சி:10
(குரலிசை
எழும்பித் தேய்கிறது. சிக்னலில் நிற்கிறார்கள். வாகனங்களின் இரைச்சல். நடைபாதையைக்
கடக்கப் பச்சை விளக்குக்காகக் காத்து நிற்கிறார்கள். பச்சை விளக்கு ஒளிர்கிறது. சாலையைக்
கடக்க எத்தனிக்கிறார்கள். உறைநிலை.)
குரல்1: இவங்களுக்கு ரோடு கிராஸ்பண்ண க்ரீன் சிக்னல் கெடச்சிடுச்சு.
உங்க சைட்ல இப்போ ரெட் சிக்னல்.
குரல்2: அய்யா…படிச்சவங்களே… நாட்டை தொழில்நுட்பப் புரட்சியில
கைபிடிச்சு அழைச்சிட்டுப் போகும் படிச்ச மேதைகளே…
குரல்3: நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை புள்ளிவிவரக் கணக்குல
கேட்டே புளகாகிதம் அடையும் புண்ணியவான்களே… கொஞ்சம் கேளுங்க…
குரல்4: ஒரு விவசாயியோட தற்கொலை இந்த நாட்டினோட அவமானம்…
குரல்5: காவிரியில தண்ணிவிடலைன்னு விவசாயி கத்துனா… ‘நாய்ஸ்
பொல்லூஷன்’ னு சலிச்சுக்கிற உங்களுக்கு…
குரல்6: வெளயவச்ச பொருளுக்கு வெல கிடைக்கன்னு ரோட்டை வழிமறிச்சா…
‘பப்ளிக் நியுசென்ஸ்’னு கொறப்பட்டுக்கிற உங்களுக்கு…
குரல்7: கந்துவட்டிக்குக் கடன் வாங்கிட்டு கட்டமுடியாம தவிக்கிறாங்க
விவசாயிங்கன்னா… ‘வர்ற வருமானத்துக்குள்ள குடும்பம் நடத்த பிளான் பண்ணனும்’னு அட்வைஸ்யை
அள்ளித் தர்ற உங்களுக்கு…
குரல்8: தற்கொலை பண்ணிக்கிட்டான் விவசாயின்னா… ‘காரணம் கள்ளக்காதலோ…
என்ன கருமாந்திரமோ…’ன்னு கதையைத் திரிக்கிற உங்களுக்கு…
குரல்9: இன்னிக்கு விவசாயி தன் நெலத்தைவிட்டு வெளியில போறது
உங்களுக்குச் சாதாரணமா தோணலாம்… நாளைக்கு விவசாயம் இன்னும் நெருக்கடியை எதிர்கொள்ற
போது… ஒரு மனுசன் இன்னொரு மனுசன அடிச்சுச் சாப்பிடுற நெலம வரும்…
குரல்10: அப்போ தெரியும்யா…. கம்ப்யூட்டரையும் சி.டியையும்
சிப்பையும் மெமரிகார்டையும் சாப்பிட முடியாதுன்னு.
குரல்11: அரிசியும் கோதுமையும் காய்கறியும் விளையவச்ச வெவசாயியோட
அருமை அப்பத் தெரியும்யா உங்களுக்கு…
குரல்12: காலம்தான்யா பாடம் சொல்லித் தரும். பசி… அது கற்றுத்தரும்
வாழ்க்கைப் பாடம்.
குரல்13: நாங்க ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்’ங்கிற பாரதி வாக்கினை மதிக்கிறவங்க.
நாங்க விவசாயத்தை மதிக்கிறோம்… விவசாயியை மதிக்கிறோம்…
குரல்14: நாங்க கையில வச்சிருக்க எழுத்தாணிக்கு எந்த வகையிலும்
கொறைச்சல் இல்ல அவங்க கையில் வச்சிருக்க மண்வெட்டியும் கருக்கரிவாளும்… இந்திய விவசாயிகளோட
உணர்வுப் பூர்வமான நாங்க இணைஞ்சு நிற்கிறோம்… நீங்க?
(அனைவரும் உறைநிலையிலிருக்கிறார்கள். ஒளி மங்குகிறது)
No comments:
Post a Comment