Friday 25 July 2014

நாடகக் காவலர் ஔவை தி.க.சண்முகம் முனைவர் கி.பார்த்திபராஜா




‘மந்திரமோ தந்திரமோ மாயமோ சண்முகத்தின்
விந்தை நடிப்பு விசித்திரமோ? – செந்தமிழ்நாடு
அன்றுகண்டு போற்றி அடிபணிந்த ஔவையைநாம்
இன்று கண்ட காட்சி இது
                                  -கவிமணி தேசிக விநாயகம்.
தமிழ் நாடக உலகின் விடிவெள்ளி:
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமும் தமிழ் நாடக அரங்கின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான நிகழத்துக்கலைப் பாரம்பரியம் மிக்க தமிழ் மண்ணில் நாடகம் என்பது பலகீனமாக இருந்த காலம் 19 ஆம் நூற்றாண்டு. நாடக உலகில் இருபெரும் துருவநட்சத்திரங்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றின. அவை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளும் பம்மல் சம்பந்தனாரும். தனது வாழ்நாளை தமிழ் நாடகத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அவர்கள் ஈடுகொடுத்த காரணத்தால் புதிய பரிமாணங்கள் நாடகத்துறையில் ஏற்பட்டன.
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் இசைநாடகம் என்ற புதிய போக்கின் தந்தை ஆவார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, பயிற்றுவித்து மேடையேறச் செய்த பெருமைக்குரியவர். சங்கரதாஸ் சுவாமிகளின் கலையுலக வாரிசாகத் தோன்றியவர் நாடக க் காவலர் என்று அனைவராலும் போற்றப்படும் தி.க.சண்முகம் அவர்கள்.
நாடக நால்வர்:
 டி.எஸ்.கண்ணுசாமிப்பிள்ளை-சீதையம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தி.க.சண்முகம். நாடக நால்வர் என்று அழைக்கப்படும் டி.கே.சங்கரன், டி.கே.முத்துசாமி, டி.கே.சண்முகம், டி.கே.பகவதி ஆகிய நால்வரும் நாடக உலகிற்குள் சங்கரதாஸ் சுவாமிகளின் விரல்பிடித்து நுழைந்தபோது பள்ளிச்சிறுவர்கள். சங்கரன் ஆறாவது வகுப்பிலும், முத்துசாமி நான்காவது வகுப்பிலும், சண்முகம் இரண்டாவது வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். பகவதி அப்போது கைக்குழந்தை. சங்கரதாஸ் சுவாமிகளை ஆசிரியராகக் கொண்ட ‘மதுரை த்தஃதுவ மீனலோசனி வித்துவ பாலசபையில் நடிகர்களாகச் சேர்ந்தனர் சகோதரர்கள்.


சங்கரதாசரின் அன்பு மாணவர்:
தி.க.சண்முகம் இளைமையிலேயே துடிப்பும் ஆர்வமும் சிந்தனைக் கூர்மையும் உடையவராக விளங்கினார். அவரது நடிப்புத் திறமையைக் கண்ட சுவாமிகள், ஒரே இரவில் எவ்விதமான அடித்தல் திருத்தலும் இன்றி ‘அபிமன்யு சுந்தரி என்னும் நாடகத்தை எழுதி முடித்து, ‘அடே... சின்னப்பயலே! இந்த நாடகம் உனக்காகவே எழுதப்பட்டது என்று சொன்னார். அந்த நாடகத்தில் அபிமன்யுவாக நடித்துப் புகழ் பெற்றார் சண்முகம்.
பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் சகோதரர் சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், எம்.கந்தசாமி முதலியார் ஆகிய சிறந்த நாடக ஆசிரியர்களிடமும் சண்முகம் நடிப்புப் பயின்றார்.
நாடகப் பணிகள்:
1925 மார்ச் 31 ஆம் நாள் டி.கே.எஸ் சகோதரர்களின் ‘ஸ்ரீ பால சண்முகானந்த சபா என்னும் நாடக்க் குழு தொடங்கப்பட்டது. 1950 வரையிலும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகள் பலவற்றிலும் தொழில்முறை நாடக க் குழுவாக ஏராளமான நாடகங்களை நிகழ்த்தி, நாடக உலகுக்கு மறுமலர்ச்சி அளித்தது அக்குழு. 1950 இல் குழுவுக்கு மூடுவிழா நடத்தினாலும் பிறகு ‘டி.கே.எஸ் நாடகக் குழு என்ற  பெயரில் புதிய நாடகங்களைத் தயாரித்தும் மேடையேற்றியும் நடித்தார் சண்முகம்.
தி.க.சண்முகம் குழுவினர் நடத்திய நாடகங்கள் மனதுக்கு இன்பமளிப்பவை மட்டுமல்ல; மாறாக அறிவுக்கு வேலை கொடுப்பனவாகவும் உணர்வுகளுக்கு வழிகாட்டுவனவாகவும் தமிழுணர்வை எழுச்சிபெற வைப்பனவாகவும் இருந்தன. சுதந்திர உணர்வைத் தூண்டிய நாடகங்களின் பங்களிப்பில் டி.கே.எஸ்ஸின் ‘தேசபக்தி நாடகத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. தி.க.சண்முகம் நாடக உலகில் கொடிகட்டிப் பறந்த காலம் திராவிட இயக்கத்தின் எழுச்சிக்காலகட்டம் ஆகும். எனவே சமுதாய மறுமலர்ச்சியை அவருடைய நாடகங்கள் பிரதிபலித்ததில் வியப்பில்லை. தந்தை பெரியாரும் அண்ணாவும் பலமுறை அவருடைய நாடங்களைப் பாராட்டியுள்ளனர். ‘குமாஸ்தாவின் பெண், ‘அந்தமான் கைதி, ‘உயிரோவியம், ‘முள்ளில் ரோஜா, ‘மனிதன், ‘உயிர்ப்பலி முதலான நாடகங்கள் மேடையில் சீர்திருத்தக் கருத்துக்களை முழங்கியவை. தி.க.சண்முகம் குழுவினர் நடத்திய தேசபக்தி, கதரின் வெற்றி ஆகிய நாடகங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பெருமைக்குரியவை.
பாத்திரங்களில் மிளிர்ந்தவர்:
நாடகப் பாத்திரங்களை ஏற்று நடிப்பதிலும் தனித்துவம் காட்டியவர் தி.க.சண்முகம். சிறுவயதில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் மிகவும் கனதி மிக்கவை. பிரகலாதன், அபிமன்யு, நாரதர், மனோகரன் ஆகிய பாத்திரங்களை ஏற்று அப்பாத்திரங்களுக்குச் சிறப்புப் பெற்றுத் தந்தவர் சண்முகம். மனோகரன் நாடகத்தைச் சிறப்புற நடத்திப் பாராட்டுப்பெற்ற நாடகத் தந்தை பம்மல் சம்பந்தனார், சண்முகத்தின் நடிப்பைப் பார்த்துவிட்டு, “our manohara has no equal” என்று பாராட்டியிருக்கிறார். அதையே நாடக விளம்பரமாகப் பயன்படுத்தினார்கள் குழுவினர். சம்பந்தனார் பாராட்டும் மனோகரா பாத்திரத்தை ஏற்று சண்முகம் நடித்தபோது பத்தே வயது என்பது குறிப்பிடத்தக்கது.
துடிப்புமிக்க தமிழ் மன்னர்களின் பாத்திரத்திலும் மிளிர்ந்திருக்கிறார் சண்முகம். இராசேந்திரன், மாமல்லன் போன்ற பாத்திரங்களை ஏற்று அவர் மேடையில் தோன்றும் மிடுக்கே தனி. வசன உச்சரிப்பும் தோற்றப்பொலிவும் மறைந்த நம் மன்னர்களை நம்முன் நிறுத்தும். வயது முதிர்ந்த பாத்திரங்களிலும் தனது நடிப்புத் திறத்தை வெளிக்காட்டியவர் சண்முகம். சித்தர், மதுரகவி, ஔவையார் ஆகிய பாத்திரங்களில் அவருடைய நடிப்பே தனி இலக்கண மெருகு பெரும்.
ஔவையார் நாடகத்தில்...:
கவிமணி தேசிக விநாயகம் அவர்கள் சண்முகத்தின் ‘ஔவையார் நாடக நடிப்பைப் பார்த்துப் பாராட்டிக் கவிபுனைந்தார். அக்கவியே இக்கட்டுரையின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ளது. இசை, நாடகம், திரைப்படங்கள் ஆகியவற்றின் நவீன நக்கீரராய் விமர்சித்த கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி, ஔவையாரில் தி.க.சண்முகத்தின் நடிப்பைப் பார்த்துவிட்டு, ‘நடிப்புத் திறமையைப் பொறுத்தவரையில் இந்த நாடகத்தில் ஔவைப்ப ஆட்டியாக நடிக்கும் ஸ்ரீ டி.கே.ஷண்முகம் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்று சிபார்சு செய்கிறேன். வேஷம், பேச்சு, நடைசுடை, பாவனை எல்லாம் அவ்வளவு பொருத்தம். நடிப்போ அபாரம் (கல்கி.03.06.1942) என்று எழுதிப்பாராட்டினார்.
‘மேனகா முதல் ‘கப்பலோட்டிய தமிழன் வரையிலான பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் டி.கே.சண்முகம். 1953 இல் மனிதன் என்ற திரைப்படத்தில் சிறப்புற நடித்தமைக்காகத் தமிழகத்தின் சிறந்த திரைப்பட நடிகர் என்ற பட்டத்தையும் இவர் பெற்றார்.
பொறுப்புக்கள்:
1950 இல் ‘நாடகக் கழகம் இவருடைய பெருமுயற்சியால் தொடங்கப்பட்டது. அக்கழகத்தின் முதல் தலைவராகவும் இரண்டாண்டுகள் சிறப்புறப் பணிபுரிந்தார். நாடகத்திற்குக் கேளிக்கை வரி விலக்கு அக்காலத்தில் பெரும் சுமையாக இருந்தது. அதிலிருந்து விலக்குப் பெற்றுத் தந்தவர் தி.க.சண்முகம். தென்னிந்திய நடிகர் சங்கம் ‘நடிகன் குரல் என்ற மாத ஏட்டினை வெளியிட்டு வந்த து. அவ்வேட்டின் பொறுப்பாசிரியராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்தார். தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், தில்லி சங்கீத நாடக அகாதெமி ஆகியவற்றில் செயற்குழு உறுப்பினராகச் சிறப்பாகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் தி.க.சண்முகம்.
அக்கால நடிகர்கள் த த்தமது குழுக்களில் சங்கீத்தையும் தமிழையும் முறையாகப் படித்தார்கள். அவ்வகையில் சங்கீத அறிவு பெற்றுப் பல மேடைகளில் சுவாமிகளின் கீர்த்தனைகளைப் பாடிய நாடகக் காவலர், மகாகவி பாரதியாரின் பாடல்களை மேடைதோறும் முழங்கும் வழக்கமுடையவர். பாரதியின் மீது அளவற்ற பற்றும் மதிப்பும் மிக்க தி.க.சண்முகம், பொதுவுடைமைத் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் உற்ற நண்பராவார். பாரதி பாடல்களை நாட்டுடைமையாக்கியதில் தோழர் ப.ஜீவானந்த்த்துடன் இணைந்து உழைத்தவர் நாடகக் காவலர்.
நடிப்புக்கான விருதுகள்:
1941 இல் மதுரைத் தமிழ்ச்சங்கம் தி.க.சண்முகத்திற்கு ‘முத்மிழ்க் கலாவித்துவ ரத்தினம் என்ற பட்டத்தை வழங்கியது. 1944 இல் ஈரோட்டில் நடைபெற்ற முதல் நாடக க் கலை மாநாட்டில் இவருக்கு, ‘அவ்வை என்ற பட்டம் வழங்கப்பட்டது. புதுவை இராமகிருஷ்ண பாடசாலை நடத்திய பாராட்டுவிழாவில், ‘நாடக வேந்தர் பட்டம் பெற்றார். தவத்திரு.குன்றக்குடி அடிகளார் நடத்திய பாரி விழாவில் இவருக்கு, ‘நடிகர் கோ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
1960 இல் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் தி.க.சண்முகத்திற்குச் சிறந்த தமிழ்நாடக நடிகர் என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்தது. 1962 இல் புதுதில்லியில் உள்ள சங்கீத நாடக அகாதெமி, ‘சிறந்த நாடக நடிகர் என்ற விருதினை வழங்கிப் பாராட்டியது.
1966 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் மாநாட்டில் பிரதிநிதியாக க் கலந்து கொண்டார். அம்மாநாட்டில், தமிழ் நாடக வரலாறு என்னும் தலைப்பில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையும் வழங்கினார்.
அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதலைச்சரானபோது 1968 இல் தி.க.சண்முகம் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
1971 இல் இந்தியக் குடியரசுத்தலைவர் இவருக்கு ‘பத்மஸ்ரீ என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கிப் பாராட்டினார்.
எழுத்தாளர்:
நாடகம், திரைப்படம் தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை எழுதி வெளியிட்டவர் தி.க.சண்முகம். தனது நாடக சபையிலேயே ‘அறிவு அபிவிருத்தி சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்துக் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினார். ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், ‘நாடக்க் கலை, ‘நெஞ்சு மறக்குதில்லையே ‘எனது நாடக வாழ்க்கை முதலான நூல்களை எழுதியுள்ளார். ‘புகழ் பாடச் சொன்ன புலவர்என்ற இவரது ஓரங்க நாடகம் மிகவும் குறிப்பிடத் தக்கது.
முடிவாக...:
நாடகத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் தலைமாணாக்கனாக வளர்ச்சி பெற்று நாடக க் காவலராக உயர்ந்த தி.க.சண்முகம் 1973 பிப்ரவரி 15 இல் மறைந்தார். வாழும் காலத்தில் அனைவராலும் போற்றிப் புகழப்பட்ட கலைக்களஞ்சியம் ஆவார். நாடக க் காவலரின் நூற்றாண்டு முடிவுற்ற தருவாயில் அவரை நினைவுகூர்தலும் முத்தமிழில் முத்தாய்ப்பாய்த் திகழும் நாடகத் தமிழுக்கு ஏற்றம் தரும் வகையில் உழைத்தலும் காலத்தின் அவசியம் ஆகும்.

No comments: