Thursday, 24 July 2014

புதிய ஒளி (நாடகம்) கி.பார்த்திபராஜா



சிறுமிகள் பாடியபடி வருகிறார்கள்.
‘மழைவருது மழை வருது நெல் அள்ளுங்க…
முக்காப்படி அரிசி போட்டு முறுக்குச் சுடுங்க…
ஏர் ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்க…
சும்மா இருக்க மாமனுக்குச் சூடு வையுங்க….’
(சிரித்துக் கலைந்து)
ஏ… சுந்தரவள்ளி… அதோ பாருடி பட்டாம் பூச்சி…
ஆமாப்பா… என்ன அழகா இருக்குல்ல?
ஏய்… அதைப் பிடிக்கலாமா?
பிடிப்பா… பிடிப்பா…
(பிடிக்கிறார்கள்)
மாணவர்கள் வருகிறார்கள்.
ஒருவன்: ஏ… பட்டாம்பூச்சி, தும்பி, புழு, பூச்சிகளைப் பிடிச்சு விளையாடுதுங்க… ஏ… போங்க அந்தப்பக்கம்…(விரட்டுகிறார்கள்)
மற்றவன்:       மச்சான் பர்ஸ்ட் பீரியட் யாரு மச்சான்?
இன்னொருவன்:  ராமச்சந்திரன் டா.
மற்றவன்:       அதுயாரு மச்சான் ராமச்சந்திரன்?
பிறிதொருவன்:  டே… அவன் ‘ஆப்பிரிக்க மண்டையனை’ச் சொல்றான்டா?
மற்றவன்:       டே… எவ்வளவு கஷ்டப்பட்டு அந்தக் குழந்தைக்கு ‘ஆப்பிரிக்க மண்டையன்’னு அழகான பேரு வச்சிருக்கோம். அந்தப் பேரைச் சொல்லுடா…
பிறிதொருவன்:  ஆப்பிரிக்க மண்டையனா? அய்யோ… கிளாஸ்ல உயிரை எடுப்பானேடா?
மற்றவன்:       மச்சான்… எவன்டா இந்த ‘படிப்பை’க் கண்டுபிடிச்சான்?
இன்னொருவன்:  ஏன் மச்சான்?
மற்றவன்:       ‘படிப்பை’க் கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில கெடைச்சான்…
இன்னொருவன்:  என்னடா பண்ணுவ?
மற்றவன்:       நடுமண்டையில ஆணி அடிச்சு…. மாடுகட்டிப் போட்டுடுவேன் டா.
இன்னொருவன்:  நான் நடுரோட்டுல நிக்க வைச்சு சுடுவேன்டா…
பிறிதொருவன்:  இல்ல மச்சான்… நடுரோட்டுல ஓட வைச்சுச் சுடணும் டா…
(மணி ஒலிக்கிறது)
அனைவரும்:    குட்மானிங் சார்….
மாணவன் 1:     ப்பா… மச்சான்… ஆப்பிரிக்கா மூச்சியப் பாரேன்… பவுடரை அள்ளிப் பூசிக்கிட்டு வந்திருக்குடா… பயமா இருக்குடா மச்சான்…!
மாணவன் 2:     பயப்படாத மச்சான்…
ஆசிரியர்:        ‘மாங்காய்குக்கு மீறின ஊறுகாயுமில்ல… மச்சானுக்கு மிஞ்சிய உறவுமில்ல…’ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அப்படிப்பட்ட மச்சான் உறவை இப்படி கண்ட இடத்திலயும் பயன்படுத்தி கேவலப்படுத்தாதீங்க பா.
சரி… இன்னிக்கு ‘நான் பிரதமரானால்…’ என்ற தலைப்பில ஒரு கட்டுரை எழுதணும்… எங்கே நோட்டை எடுங்க.
(மாணவன் ஒருவன் ஓங்கரித்தபடி வாந்தி எடுக்கிறான்.)
ஆசிரியர்:        என்னடா… நோட்டை எடுக்கச் சொன்னா… வாந்தி எடுக்கிறான்?
அனைவரும்:    சார்… வேணாம் சார்…
ஆசிரியர்:        வேணாமா… ‘சரி நான் முதலமைச்சர் ஆனால்’…
அனைவரும்:    அதுவும் வேணாம் சார்…
ஆசிரியர்:        என்னப்பா… நான் பிரதமரானாலும் வேணாம்… நான் முதலமைச்சர் ஆனாலும் வேண்டாம்…. வேற என்ன செய்றது? சரிப்பா. ‘நான் ஆசிரியரானால்…’ அப்படிங்கிற தலைப்பில் எழுதுங்களேன்…
மாணவி 1:      அய்யோ… சார்… வேண்டவே வேண்டாம் சார்… அப்படி மட்டும் என் வாழ்க்கையில் நடந்துட்டா.. நான் தற்கொலையே பண்ணிக்குவேன் சார்…
ஆசிரியர்:        பெரியவங்க என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா? ஆசிரியப்பணி அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி….
மாணவன் 3:     ஏன் கடுப்பக் கெளப்புற நீ… (மூடி)க்கிட்டு உட்காருநீ.
ஆசிரியர்:        என்னது?
மாணவன் 4:     சார்… எங்கப்பா…. 25 இலட்ச ரூபா கொடுத்து எனக்கு இன்ஜினியரிங் சீட் புக் பண்ணியிருக்காரு சார்… நான் பிளஸ்டூ எக்ஸாம் எழுத வேண்டியதுதான் பாக்கி. நான் இன்ஜினியரா தான் சார் ஆவேன்…
மாணவி 2:      சார்… எங்கப்பா… 70 லாக்ஸ் கொடுத்து மெடிக்கல் சீட் புக் பண்ணிருக்கார். நான் ஏன் சார்… ‘நான் ஆசிரியரானால்…’ னு கட்டுரை எழுதணும்…?
ஆசிரியர்:        அப்படியா? சரிப்பா… அப்போ வேற பயிற்சி வைச்சுக்கலாம். அதாவது… நீங்கள் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் நபர்… பற்றிச் சொல்லணும்… நீங்க சந்திக்க விரும்பும் நபர் உலகத்தின் எந்த மூலையில் வசிப்பவராக வேண்டுமானாலும் இருக்கலாம்… நல்லா யோசிச்சுச் சொல்லுங்க….
மாணவன் 1:     சார்.. நான் யாரைச் சந்திக்க விரும்புறேன்னா… சச்சின் டெண்டுல்கர்…
மாணவன் 2:     சார்… நான் சந்திக்க விரும்புறது… அமலா பால்… சார்….!
மாணவி 3:      சார்… நான் சந்திக்க விரும்பும் நபர்… சிவகார்த்திகேயன் சார்…
ஆசிரியர்:        (இடைமறித்து) இருங்க.. இருங்க… சச்சின் டெண்டுல்கர் எனக்குத் தெரியும்… அது யாருப்பா அமலா பால்…? அதுயாருப்பா சிவகார்த்திகேயன்? இவங்கள்ளாம்… ஸ்ரீஹரிகோட்டா விஞ்ஞானிகளா?
மாணவி3:       சார்… அமலா பால்… சிவகார்த்திகேயன் தெரியாதா சார்… நீங்க வேஸ்டு சார்…
மாணவன் 3:     ஜென்ரல் நாலெட்ஜ் ல அநியாயத்துக்கு வீக்கா இருக்கீங்களே சார்?
மாணவி4:       உங்களுக்கெல்லாம் யாருசார் டீச்சர் வேலை கொடுத்தா?
மாணவன்4:      சார்… இவங்கள்ளாம்… சினிமா ஆக்ட்ரஸ் அண்ட ஆக்டர் சார்…
ஆசிரியர்:        ஏம்பா… வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் முக்கியமான பெர்சனாலிட்டியா இவங்கள்ளாம்? சென்னை கோடம்பாக்கம் போனா அவங்களப் பாத்துடலாம்… அவங்களையா பார்க்கணும் னு விரும்புறீங்க? ஏன் உங்க சிந்தனை இப்படிப் போகுது? நீங்கள்ளாம் இந்தியாவின் வருங்காலத் தூண்கள்…
மாணவி1:       அய்யோ… ஆப்ரிக்கா ஆரம்பிச்சிடுச்சுடி… நாமதான் இந்தியாவின் தூண்கள்… இரும்புக்கம்பி, ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு…ன்னு… அய்யோ… அய்யோ….
மாணவி2:       சார்…. ஏன்சார் உயிரை எடுக்குறீங்க? சிந்தனை மந்தனைன்னு ஏன் சார் பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டுப் பயமுறுத்துறீங்க…
மாணவர்கள்:    (அனைவரும்) எங்க தாட்ஸ்சே வேறசார்…
மாணவர்கள்:    கொஞ்சமா படிக்கணும்…
மாணவிகள்:     நிறைய மார்க் வாங்கணும்….
மாணவர்கள்:    ஈஸியா ஜாப் கெடைக்கணும்…
மாணவிகள்:     சம்பளம் நிறையக் கெடைக்கணும்…
(பின்னணியில் பாடல். மாணவர்கள் அனைவரும் துள்ளலுடன் ஆடுகிறார்கள்)
‘பள்ளிக்கூடம் போகாமலே பாசு பண்ணனும்
எந்தக் கல்லூரிலும் சேராமலே பட்டம் வாங்கணும்
சிரமமேதும் இல்லாமலே வேலை கெடைக்கணும்…
அந்த வேலையையும் செய்யாமலே புவா கிடைக்கணும்…
மாசம் முப்பது தேதியான சம்பளம் கிடைக்கணும் – அட
அதுக்கிடையில் அனுதினமும் கிம்பளம் கிடைக்கணும்
போதாதுன்னா போராடவும் கொடியும் பிடிக்கணும் – வேற
பொறுப்பு எதிலும் மாட்டிக்காம ஒதுங்கி இருக்கணும்….
(மணி ஒலிக்கிறது)
காட்சி:2
மேடையில் மேடையில் ஒருவன் வந்து மொபைல் போனில் பேசுகிறான். வேறு வேறு வேலைகளைச் செய்தபடி ஒருவர் குரலுக்கு மேல் ஒருவராகப் பேசுகிறார்கள்…. ஒரே சத்தம்…
(அனைவரும் சிலையாகிறார்கள்)
(பாடல்)
என்னங்கடா எழவு இங்கே ஒரே இரைச்சலு…
அங்கபோனாலும் இங்கபோனாலும் காட்டுக்கூச்சலு… (என்னங்கடா)
ஆடை இல்லாதவன் அரைமனிதன் என்போமே…
போனே இல்லாதவன் மனிதனில்லை என்றானே…
பேச்சு ஒன்னுதான் மிஞ்சுதுங்க நாட்டுல
நாலைஞ்சு வெடிகுண்டு ஒன்னாருக்கு வீட்டுல… (என்னங்கடா)
குரல்1:     செல்போனை காதுல வச்சுகிட்டே… இப்போ எல்லாம்… பல்லுத் தேய்க்கிறதுல இருந்து பாத்ரூம் போற வரைக்கும் எல்லாம் நடக்குது.
குரல்2:     அன்னிக்கு அப்டித்தான்… ஒரு பொண்ணு… செல்போன்ல பேசிக்கிட்டே போயி… குழிக்குள்ள விழுந்துட்டா…
(ஒரு பெண் போனில் பேசிக் கொண்டே போய்க் குழிக்குள் விழும் காட்சி. ஓடிவந்து அப்பெண்ணைத் தூக்கி விடுகிறார்கள். அவள் தொடர்ந்து பேசியபடி நடக்கிறாள். உறை காட்சி)
குரல்2:     முந்தாநாள் ஒருத்தன்…. காதுல செல்போனை இடுக்கி வச்சுகிட்டு பைக் ஓட்டிட்டுப் போயி… ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டான்…
(பைக் ஓட்டிக் கொண்டே வந்து ஒரு பெண் மீது மோதிவிடுகிறான். விழுந்த அவனையும் அடிபட்ட பெண்ணையும் தூக்கிவிடுகிறார்கள்.)

(டாக்டரைப் பார்க்க ஒருவர் வயிற்றைப் பிடித்தபடி வருகிறார். டாக்டர் செல்போனைக் காதில் இடுக்கியபடிப் பேசும் தோரணையிலேயே இக்காட்சி முழுவதும் உரையாடுகிறார்)
நோயாளி:  டாக்டர்… டாக்டர்…
டாக்டர்:    (தலையைச் சாய்த்தபடி) என்னங்க பண்ணுது?
நோயாளி:  வயித்துவலி டாக்டர்…. (டாக்டரை நிமிர்ந்து பார்த்து) அய்யோ… உங்களுக்கு என்ன ஆச்சு டாக்டர்?
டாக்டர்:    போனவாரம்… நிறைய ஆபரேஷன்யா. காதுல போன இடுக்கிட்டே பேசினேனா… தலை இப்படியே நின்னு போச்சு.
நோயாளி:  அடடா… டாக்டர்… புத்தூருக்குப் போனீங்கன்னா… கழுத்தை ஒடிச்சுக் கட்டுப்போட்டுச் சரிபண்ணிடுவாங்க டாக்டர். போங்க டாக்டர்...
டாக்டர்:    சரிய்யா… சரி உங்க வைத்தியம்?
நோயாளி:  என் வைத்தியம் இருக்கட்டும். உங்க வைத்தியத்தைப் பாருங்க டாக்டர்….
(நோயாளி போகிறார்)
டாக்டர்:    ஏய்யா…
நோயாளி:  அட போய்யா…
(போகிறார்)
குரல்1:     பொதுவா இப்போ செல்போன் பேய் எல்லோரையுமே பிடிச்சு ஆட்டுது. அதிலும் இளைஞர்கள்… மாணவர்களோட நிலமை ரொம்ப மோசம்.
குரல்2:     மெசேஜ் ஐ டொக்கு டொக்குன்னு தட்டி… நகம் தேய்ஞ்சா பரவாயில்லை… விரலே தேஞ்சு போகும்போல…
குரல்3:     அம்மா அப்பா தொலைஞ்சா கூட கவலைப்பட மாட்டான் போல… செல்போன் தொலைஞ்சா வாழ்க்கையையே தொலைச்சிட்ட மாதிரி கவலைப்படுறாங்க இன்றைய இளைஞர்கள்.

(பாடல்)
சம்மதமா… உனக்குச் சம்மதமா?
சரணடைந்து கிடக்கிறாயே சம்மதமா?
உன்னதமா வாழ்க்கை உன்னதமா?
உன்னைத்தொலைத்தாயே சம்மதமா?
கருவிகள் வாழ்க்கையை எளிதாக்கனும்…
கவலைகளை அவை விலக்கிவைக்கணும்
கையாக அவை மாறு அவலம் ஏனய்யா?
மெய்யாக இந்தப்போக்கு கேவலமய்யா…(சம்மதமா)

காட்சி 3

(மேடையில் நான்கு இடத்தில் குழந்தைகளும் பெற்றோரும் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் மீது ஒளிபடும்போதும் அவர்கள் உயிர்பெற்றுப் பேசுவர்)
மகன்:     அப்பா… அப்பா… என் பிரெண்ஸ்லாம் ஐபேட் வச்சிருக்காங்கப்பா… எனக்கும் வாங்கிக் கொடுங்கப்பா….
மகள்:     அப்பா…  ஆப்பிள் ஐ போன்… எனக்கும் வாங்கிக் கொடுங்கப்பா…
அப்பா:     இதோ பாரு… நீ ஹாஃப் இயர்லி எக்ஸாம்ல ரேங்க் வாங்கினா… உனக்கு ஐபேட் வாங்கித் தருவேன். ஓ.கே யா?
மகன்:     என்னால ரேங்க் எல்லாம் வாங்க முடியாது. எனக்கு இப்பவே… உடனே.. ஐபேட் வாங்கித் தரணும்… இல்லாட்டா… நாளையில இருந்து ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.
(அடம்பிடிக்கிறான். காட்சி உறைகிறது. ஒளி இப்போது வேறொரு குடும்பத்தின் மீது)

மகன்:     அம்மா… எனக்கு அப்பாச்சி பைக் வேணும்… என் பைக் வச்சிருக்கானுங்க தெரியுமா? அந்த பைக்கோட காஸ்ட் ஒன் அண்ட் ஆஃப் டூ லாக்ஸ் . எனக்கு அப்பாச்சியாவது வாங்கித் தாங்கப்பா.
அப்பா:     அம்மாச்சி, அப்பச்சின்னு என்ன சொல்றான் இவன்?
மகன்:     அய்யோ… இது பைக் பா. உனக்கு அதுலாம் புரியாது. நீ ஒன்னும் செய்ய வேணாம்…. ஒன் லாக் செக் குடு. நானே வாங்கிக்கிறேன்…
(உறைகிறார்கள். ஒளி இப்போது இன்னொரு குடும்பத்தில்)
அம்மா:    உன் பர்த் டேக்கு என்னமா கிப்ட் வேணும்?
மகள்:     எனக்கு டிவெண்ட்டி தவுஸன் குடுத்திடுங்க மம்மி. வேணுங்கிறத நானே வாங்கிக்கிறேன். டென் தவுஸன் குடுங்க. என் பிரெண்ட்ஸ்கெல்லாம் பார்ட்டி வைக்கனும்… சௌமி அவ பர்த் டேக்கு பிஃப்டி தவுசண்ட் செலவு பண்ணா. நான் ஜஸ்ட் டென் தவுசண்ட் தான் கேட்கிறேன்…
அம்மா:    (வாயில் அடித்துக்கொண்டு) ஜஸ்ட் டென் தவுசண்டா?
(உறைகிறார்கள். ஒளி இப்போது இன்னொரு குடும்பத்தில்)
மகன்:     பைக்ல போகமாட்டேன். கார் வாங்கிக் கொடுக்கச்சொல்லு மம்மி. சம்பாதிக்கிறார்  இல்ல? சேர்த்துவச்சு சேர்த்துவச்சு என்ன பண்ணப்போற? அப்பா செத்தபிறகு சொத்து எல்லாம் எனக்குத்தானே வரப்போகுது?
அம்மா:    ஏண்டா… இப்பிடியெல்லாம் பேசுற?
மகன்:     ஒழுங்கா இப்போவே தேவையானதை வாங்கிக் கொடுக்கச் சொல்லு.
(அப்பா… அம்மா… கொஞ்சம் கொஞ்சமாக ஏடிஎம் மெசினாக மாறுகிறார்கள்)
(பாடல்)
ஏடிஎம்மா மாறிட்டாங்க அம்மா அப்பா…
பணம்கொட்ட இனி தப்பாதப்பா…
இப்படிப்போகுது உறவே தப்பா..தப்பா…
இந்த நிலை மாறுவது எப்போதப்பா…?

(மாலை நேரம்: பார்க் குழந்தைகள் விளையாடுகிறார்கள். பெரியவர்கள் வாக்கிங் போகிறார்கள். சில பெரியவர்கள் கணவனும் மனைவியுமாய் பூங்கா இருக்கைகளில் வந்து உட்காருகிறார்கள்.)
(வயதான இரு ஆண்கள் பேசிக் கொள்ளுகிறார்கள்)
ஒருவர்:    குட் ஈவினிங் ஈஸ்வரன் சார்… எப்படி இருக்கீங்க?
மற்றவர்:   நல்லா இருக்கேன் சார்… நீங்க எப்படி இருக்கீங்க?
ஒருவர்:    நல்லா இருக்கேன் சார்… ரிடையர்ட் லைஃப் எப்படிப் போகுது?
மற்றவர்:   பொழுதுபோகமாட்டேன்ங்கிறது சார்… பொண்ணை எம்.பி.பி.எஸ் படிக்க வைச்சேன்… மாப்பிள்ளையோட லண்டன்ல செட்டிலாகியிருக்கா. பையன் எம்.பி.பி.எஸ், எம்.எஸ் படிச்சான். இப்போ நியூயார்க் ல இருக்கான். நானும் என் மனைவியும் இங்க வீட்டுல தனியா இருக்கோம்.
ஒருவர்:    என் பையன் ஆஸ்ட்ரேலியா ல இருக்கான். மாசம் 8 லாக்ஸ் சம்பாதிக்கிறான். அங்கேயே செட்டில் ஆயிட்டாங்க. என் பையனுக்காக பெரிய வீடாக் கட்டினேன். இப்போ அவ்வளவு பெரிய வீட்டுல நானும் என் மனைவியும் கூட ஒரு நாயும்தான் இருக்கோம். உங்க பசங்க பேசுறாங்களா?
மற்றவர்:   வீக்லி ஒன்ஸ்… சண்டேல ஆன்லைன்ல வருவான். வீடியோ கால் பேசுவோம். எங்க… மத்த ஆறுநாட்கள் நம்ம ஆஃப்லைன்ல வச்சிடுறான். கேட்டா ஒர்க்ல பிஸிப்பா… ஊர்க்கதை பேசுறதுக்கு நேரமில்லைன்னு கடுப்படிக்கிறான். பேரன் பேத்திகளோட பேசலாம்னு பார்த்தா… தாத்தா…யு ஆர் வெரி போரிங்…ன்னு விலகிப் போயிடுதுங்க. ம்…….. பேச்சுத்துணைக்கும் இப்போ ஆளில்லை… என் மனைவி முகத்தை நானும்… என் முகத்தை அவளும் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கோம்.
(உறைகிறார்கள். மறுபக்கத்தில் வயதான பெண்கள் இருவர்)
பெண்மணி1:     அவருக்கு ஸூகர். எப்போ என்ன நடக்குமோன்னு பயமா இருக்கு. போன வாரம்.. திடீர்னு சரியா கண் தெரியமாட்டேங்குதுன்னு கலங்கடிச்சுட்டாரு. ரொம்ப பயமா போச்சு… என் பையன்கிட்ட பேசினேன்… ‘டாக்டர்கிட்ட கொண்டுபோய் காட்டுமா… எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. பணம் அனுப்புறேன்…’ங்கிறான். ஆஸ்பிடல்க்கு கூட்டிட்டுப் போகக் கூட துணைக்கு ஆளில்லை. ஆபரேஷன் பண்ணச் சொல்லுவாங்க போல…ன்னு மகன் கிட்ட சொன்னேன்.
பெண்மணி2:     செலவு பத்திக் கவலைப்படாதே……டாக்டர்கிட்ட பேசி அறுக்கிறதுன்னா… அறுத்துடுங்கன்னு சொல்லியிருப்பானே…
பெண்மணி1:     ஆமா… அப்டிதான் சொல்லிட்டான். வரமுடியாதாம். ஆபரேஷன் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டான்.
பெண்மணி2:     நம்ம குழந்தைகளுக்குப் பார்த்துப் பார்த்துச் செஞ்சோம். இப்போ அனாதைகள் மாதிரி நிற்கிறோம்….
(உறைநிலையில் நிற்கிறார்கள்.மூன்று பெண்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.)
பெண்1:    என் மகளோட குழந்தை பிறப்புக்காக நானும் என் கணவரும் ஆறுமாசம் அமெரிக்கா போயிருந்தோம். குழந்தை பிறந்த பிறகு நாலுமாசம் கூடவே இருந்தோம். போனவாரம்தான் வந்தோம்.
பெண்2:    அப்படியா? வெளிநாட்டுல செட்டில் ஆன நம்ப பிள்ளைகளுக்கு… குழந்தை பிறக்கும்போதுதான் நம்ம நினைப்பே வருது. எடுபிடி வேலைகளுக்குச் சம்பளமில்லாத வேலைக்காரங்க… குழந்தைகளைப் பார்த்துக்க ‘பேபி சிட்டர்’… இப்படியாயிடுச்சு நம்ம நிலைமை…
பெண்3:    உறவுகள் உபயோகிச்சுட்டுத் தூக்கி எறியிறதா மாறிடுச்சுங்கிறது கசப்பான உண்மைதான். என்ன பண்றது? இது கன்ஸ்யூமர் வேர்ல்ட்… யூஸ் அன் த்ரோ கல்ச்சர். பொருள்.. அதன் மதிப்பு… அந்தப் பொருளுக்குப்பின்னால் இருக்கும் உழைப்பு எதுவே தெரியறதில்லை இப்போதைய இளைஞர்களுக்கு…
(உறைகிறார்கள். இன்னொரு பக்கத்தில் வயதான இரு ஆண்கள்)
ஒருவர்:    கேள்விப்பட்டேன் சங்கரன் சார்… உங்க மனைவி இறப்புச் செய்தி நான் அமெரிக்கால இருக்கும்போது கிடைச்சது. அதுசரி… உங்க மனைவியோட ஈமக்காரியங்களைச் செய்ய எப்படி வந்தான் மகன்? உடனே பிளைட் கிடைச்சுதா?
சங்கர்:     (கசப்பாகப் புன்னகைத்தபடி) எப்படி வந்தானா? ஹா… ஹா… அடப்போங்க சார்?
ஒருவர்:    ஏன் சார்… என்ன ஆச்சு?
சங்கர்:     வீட்டுல மனைவியோட பிணத்தை வச்சிகிட்டு மகனுக்குத் தகவல் சொன்னேன் சார்… ‘முக்கியமான புராஜெக்ட் மீட்டிங்… என்னால அவாய்ட் பண்ண முடியாது. அதனால் வரமுடியாது…சாரிப்பா…ன்னுட்டான்.
ஒருவர்:    அய்யயோ… அப்புறம்?
சங்கர்:     நான் வரமுடியலையே தவிர அம்மாவோட ஈமச்சடங்க ரொம்ப கிராண்டா நடத்தணும்பா. பணம் அனுப்புறேன். நல்லா செலவு பண்ணி எடுத்திடுங்க’ன்னு சொன்னான். அதுமட்டுமில்ல… ‘ரியலி ஐ மிஸ் திஸ் ஈவெண்ட்… ஸோ… நல்ல வீடியோ கிராபர் கிட்ட சொல்லி…. அம்மாவோட ஈமச்சடங்கை வீடியோ பண்ணி… ஈமெயில்ல அனுப்புங்க’…ன்னுச சொல்லிட்டான் சார்….
(குலுங்கிக் குலுங்கி அழுகிறார்)
குரல்1:     அடச்சே… அழுகிறத நிறுத்துங்க சார்… சட்டியில இருந்தாதானே சார் அகப்பையில வரும்? சட்டி முழுக்க பணத்தால நிறைக்கணும்னுதானே சார் பெற்றோர் நீங்க ஆசைப்படுறீங்க? அப்புறம் பசங்ககிட்ட ‘பண்பு… பாசம்… உறவு… அன்பு…’ன்னு அவங்களுக்குப் பழக்கமில்லாத விஷயங்களை எதிர்பார்த்தா எப்படி?
குரல்2:     அம்மா, அப்பா கிட்ட அன்பு காட்டல… பாசம் காட்டலன்னு பரிதவிக்கிறீங்களே… தாத்தாகிட்ட, பாட்டிகிட்ட பாசம் காட்டாமப் போனாங்களே… மரியாதை காட்டாமப் போனாங்களே அப்போ ஏன்சார் நீங்க கவனிக்கல?
குரல்3:     பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, அத்தை, மாமா, அவங்க பசங்கன்னு… உறவுகளோட பின்னலை எத்தனை பசங்களுக்கு சார் நீங்க அறிமுகப்படுத்தி இருக்கீங்க?
குரல்4:     கல்யாணம், சடங்கு, திருவிழா இதுக்கெல்லாம் உங்க பிள்ளைகளை அழைச்சிட்டுப்போனா… அவங்க படிப்புக் கெட்டுப்போயிடும்னு விட்டுட்டுப் போவீங்க…
குரல்5:     தூரத்து உறவுக்காரங்க சாவுக்கு அழைச்சிட்டுப் போயிருக்கீங்களாம்மா? மரணம், அதன் வலி, உறவுகளின் தவிப்பு, உணர்ச்சி இதையெல்லாம் அறிமுகப்படுத்தி இருக்கீங்களா உங்க குழந்தைகளுக்கு?
குரல்6:     ரொம்ப நெருங்கின சொந்தங்களோட மரணத்துக்கே ‘ஹாஃப் டே துக்கம்’ தான் அனுஷ்டிக்கிறோம். படிப்பு ஸ்பாயில் ஆயிடும்… படிப்பு ஸ்பாயில் ஆயிடும் னு மார்க்குக்குப் பின்னால ஓட வைக்கணும்னு நினைக்கிறீங்களே? உறவுகளில் ஒட்டனும்னு நினைச்சீங்களா?
குரல்7:   உங்களுக்குப் படிப்புங்கிறது கூட, வேலை, சம்பாத்தியத்துக்குத்தானே? அறிவு, பண்பு, ஒழுக்கம் இதையெல்லாம் கல்வி தரணும்ங்கிறது உங்க எதிர்பார்ப்பில் இல்லையே?
குரல்8:   டாக்டராக்கனும் என்ஜினியராக்கனும் னு நினைக்கிறோமே தவிர மனுசங்களாக்கனும்னு நெனைக்க மாட்டோங்கிறோமே?
குரல்9:   கல்வியில் சிறந்த தமிழ்நாடு… நம் சமூகத்தில் எல்லோரையும் கற்றோர்களாக்கியிருக்கோம்… மனிதர்களாக்கியிருக்கிறோமா?
குரல்10:    மாற்றங்களை நம் வீட்டிலிருந்து தொடங்குவோம்…
ஆசிரியர்கள் வகுப்பறைகளில் தொடங்கட்டும்…
சமூகம் பொதுவெளிகளில் தொடங்கட்டும்….
வறண்டு கிடக்கும் இதயங்களில் ஈரம் சுரக்கட்டும்!
புதிய ஒளியைப் பாய்ச்சுவோம்…!

(பாடல் ஒலிக்கிறது. அனைவரும் தீபம் ஏந்தி வந்து வரிசையில் நிற்கிறார்கள்)
எண்ணையும் எழுத்தையும் இரண்டையும் கற்கின்ற
இளைய தலைமுறையே வருக! – உன்
இயல்பான துடிப்பேந்தி வருக!!
கல்லையும் பிளக்கின்ற மகத்தான விதையே நீ
மங்கல ஒலிமுழங்க வருக! – உன்
மானுட நேயத்தைத் தருக!!

அவலங்கள் அகலட்டும் அநீதிகள் சாயட்டும்
கேட்கட்டும் போர்ப்பாட்டுச் சத்தம்! – அவை
முழங்கட்டும் தெருவெங்கும் நித்தம்!!
கமலங்கள் பூக்கட்டும் கசடுகள் தொலையட்டும்
முகிழ்க்கட்டும் அன்பெனும் முத்தம்! – தெளி
விக்கட்டும் நூற்றாண்டுப் பித்தம்!     (தனதான..)
(மேடையில் ஒளி பரவ… நாடகம் நிறைவுறுகிறது)

No comments: