Friday 25 July 2014

அற்புத சேவகர்கள் (நாடகம்) - கி.பார்த்திபராஜா


(அரங்கில் ஒளி பரவும் போது, விளையாட்டுக்கெனச் சிறுவர்கள் கூடித் தமக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர். என்ன விளையாட்டு விளையாடலாம் என்ற விவாதம் அவர்களுக்குள் நிகழ்கிறது.)
ஒருவன்:           டேய்கண்ணாமூச்சி விளையாடலாம் டா.
மற்றொருவன்:     வேணாம் போடா
வேறொருவன்:     கபடி விளையாடலாம்டா
பெண்:        பொம்பளப்பிள்ளைங்கள்ளாம் சேர்ந்து விளையாடுறமாதிரி ஒரு விளையாட்டைச் சொல்லுங்கப்பா
பெண் 2:      … ‘ஒரு குடம் தண்ணி ஊத்திவிளையாடலாமாப்பா?
எல்லோரும்: ரொம்ப நல்ல விளையாட்டுப்பாஜாலியா இருக்கும். விளையாடலாம்பா
(சாட் பூட் த்ரீ போடுகிறார்கள். இறுதியில் இருவர் கரம் உயர்த்தி நிற்க, பாடிக்கொண்டே விளையாடுகிறார்கள்)
பாடல்: ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூவும் பூக்கல
        ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூவும் பூக்கல
        மூணு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூவும் பூக்கல
        நாலு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூவும் பூக்கல
(ஒரு சிறுவன் அகப்படுகிறார். எல்லோரும் அகப்பட்டவரைக் கேலி செய்கிறார்கள். அவன் சிணுங்கியபடி அழுகிறான். அனைவரும் அருகாமையில் வந்து…)
அனைவரும்: ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூவும் பூக்கலயா?
ஒருவர்: என்னாச்சு? ஏன் பூக்கல?
இரண்டாமவர்: விதை சரியா இல்லையா?
மூன்றாமவர்: நிலம் நல்லா இல்லையா?
நான்காமவர்: சூழல் ஏற்றதா இல்லையா?
ஐந்தாமவர்: விதைக்கான சத்து இல்லையா?
அனைவரும்: ஏன் பூக்கல? ஏன் பூக்கல?
வெளியிலிருந்து இருவர் வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே இருப்பவர்களோடு விவாதிக்கின்றனர்.
வெளி 1: நிறுத்துங்கய்யா? ஏன் பூக்கல ஏன் பூக்கலன்னு கேட்கறீங்களே? நான் ஒரு கேள்வி கேட்கிறேன்…. ஏன்யா பூக்கணும்?
முதலாமவர்: அடஇதென்னப்பா இது? பூக்கலன்னா செடிக்கு மரியாதை இல்லை.
இரண்டாமவர்: பூக்குறதுங்கிறது வெறும் பூவுக்கு மட்டுமில்லப்பா. அது வளமையோட அடையாளம்.
மூன்றாமவர்: மறுஉற்பத்திக்கான அடையாளம்.
நான்காமவர்: மனுச இனமோ, மரஞ்செடி கொடியோபூக்கணும். பூத்தாதான் மரியாதை.
வெளி2: பூக்கல.. பூக்கலன்னு புலம்புறீங்களேபூக்காததுக்கு காரணம் என்னன்னு கண்டுபிடிக்கய்யா
ஐந்தாமவர்: அதாப்பாகண்டுபிடிக்க முயற்சி செய்யிறோம்.
வெளி1: நான் சொல்றய்யா. இந்தச் செடி ஏன் பூக்கலன்னா
இந்தச் செடியோட விதைபொய்யில ஊறிக் கிடந்தது.
இந்தச் செடியோட விதைஅவநம்பிக்கையை அணிகலனா பூட்டிக்கிட்டிருக்கு.
இந்தச் செடியோட விதைதனக்காக யாராவது பூத்துத் தருவாங்கன்னு தவறுதலா நம்பிக்கிட்டிருக்கு.
இந்தச் செடியோட விதைமதிப்பீடுகளைத் தொலைச்சிட்டு மறந்திட்டு நின்னிட்டிருக்கு.
இந்த விதைக்கு முகமில்லைமுகவரியில்லைஇந்த நிலப்பரப்பெங்கும் விதைக்கப்பட்டிருக்கிற விதைகளோட ஒரு துளி இது.
இதோ.. இந்த விதை….
காட்சி 2
(மகன் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறான். மகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அம்மா மகளோடு அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அப்பா வேகமாக வீட்டுக்குள் நுழைகிறார்.)
அப்பா:  அடடடாஇந்த இன்கம் சர்ட்டிபிகேட் வாங்குறதுக்குள்ள தாவு தீந்து போச்சு. அடச்சே.. ஐயாயிரம் ரூபா மொய்ப்பணம் அழுத பெறகு கூடஆயிரம் தடவ அலைய வச்ச பெறகுதான் சர்ட்டிபிகேட் குடுக்குறான்.
அம்மா: (தண்ணீர் கொண்டாந்து கொடுத்தபடி) ஐயாயிரம் ரூபாயா? இன்கம் சர்ட்டிபிகேட் வாங்கவா? என்னங்க அநியாயம்?
அப்பா: ஆமா. வருட வருமானம் அம்பதாயிரம்னு சர்ட்டிபிகேட் வாங்க வேணாமா?
மகன்: ஏப்பாஉன் பிஸினஸ்ல மாசம் ஒருலட்சரூபா வரும்ன்னு அன்னிக்கு உன் பிரெண்ட்ஸ்கிட்ட பீத்திக்கிட்டிருந்த. அம்பதாயிரம்னு சர்ட்டிபிகேட் வாங்கியிருக்க. ஏன்பா பிராடுத்தனம் பண்ற.
அப்பா: அடியேஇவனே போயி தாசில்தார்கிட்ட புகார் மனு குடுத்துட்டு வந்திருவான் போலருக்கே. அடேய்உன்னை அடுத்த வருஷம் எஞ்சினியரிங் சேக்கணும். ஸ்காலர்ஷிப் வாங்கணும். பாப்பாக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்துல உதவி வாங்கணும். இதெல்லாம் வாங்கணும்னாஇன்கம்ம கொறச்சுப் போட்டு வாங்கினாத்தான் முடியும்.
(அம்மா காபி கொண்டு வருகிறார். போன் மணி ஒலிக்கிறது. அப்பா எடுத்துப்பார்த்துவிட்டு, அம்மாவிடம் கொடுத்து சைகை செய்கிறார். அம்மா போனை வாங்கி)
அம்மா: ஹலோயாருங்க. சிதம்பரம் அண்ணனா? சொல்லுங்க அண்ணா. ரமேஷ் அப்பாவா? அவரு வெளியில போயிருக்காரு. போன வீட்ல மறந்து விட்டுட்டுப் போயிட்டாரு. பணமா? வந்தவுடனே சொல்றேன்ணா.. அவரும் பாவம்,,, பணத்த குடுத்துடனும் குடுத்துடனும்னுதான் பிரயாசைப் படுறாருஆனா ஆறுமாசமா பிசினஸ் டல். ஆமாஅதனாலதான்
(அப்பாவைப் பார்த்து பெண்டாடி…’ என்று ஓடி வருகிறாள். அவர்சனியனேஎன்று திட்டுகிறார்)
அம்மா: .. அதுவா.. அது.. எம் பையனும் பொண்ணும். சும்மா சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. நாளைக்குத்தான் வருவாருண்ணா.. வந்தா சொல்றேன்.
(போனை வைக்கிறாள். அப்பா அருகில் வந்து கேட்கிறார்)
அப்பா: அந்தக் கடன்காரன் என்னடி சொன்னான்?
மகன்: கடன் கொடுத்தவனையும் கடன்காரன்னு சொல்ற ஒரே மொழி, தமிழ்மொழிதான். வாழ்க! அப்பாகிட்ட பணம் கேட்கணும்.. அவரு கோபமா இருக்காரு போல இருக்கே. (அம்மாவிடம்) அம்மாஎனக்கு ரெண்டாயிரம் ரூபா வேணும்மா. தஞ்சாவூர் பிக்னிக் கூட்டிட்டுப் போறாங்க ஸ்கூல்ல.
அம்மா: இருடா.. அப்பாகிட்ட ஐநூறு ரூபா சேர்த்துக் கேட்போம். எனக்கும் புடவைச்சீட்டு கட்ட பணம் வேணும்.
பெண்: அம்மாஎன் மொபைல்ல பேலன்ஸ் தீர்ந்துபோச்சும்மாபிரென்ஸ் கிட்ட சப்ஜக்ட் டவுட்கூட அவசரத்துக்கு கேட்க முடியலம்மா
பையன்: சப்ஜக்ட் டவுட்டாடி கேட்கிறகாதுல ஹெட்போன மாட்டிக்கிட்டு ராத்திரியெல்லாம் எவன்கூடயோ குசுகுசுன்னு இளிச்சுக்கிட்டு பேசுறாம்மாஇன்னும் கொஞ்சநாள்ள எவனையோ இழுத்துக்கிட்டு ஓடப்போறா பாரு.
பெண்: நானா ஓடப்போறேன்நீதான் தெருவுல போற எந்தப் பொண்ணயாவது கையப்பிடிச்சி இழுத்துட்டு அறை வாங்கப்போற. அம்மாஇவன் ராத்திரியெல்லாம்.. கம்ப்யூட்டர்ல கெட்ட கெட்ட வைப்சைட்லாம் பாக்குறாம்மா.
பையனும் பெண்ணும் அடித்துக் கொள்கிறார்கள். அப்பா வரவே, அமைதியாகிறார்கள்.
அப்பா: என்ன விஷயம்?
அம்மா: ஒன்னுமில்ல. ரமேஷ் ஸ்கூல்ல பிக்னிக் அழைச்சிட்டுப்போறாங்களாம். மூவாயிரம் ரூபா ஆகுமாம்.
அப்பா: போனமாசம்தானேடா டூர்னு ஐயாயிரம் ரூபா வாங்கின?
பையன்: ஐயோடூர் வேற; பிக்னிக் வேற. இதுகூடத் தெரியாம ஏன் உயிர எடுக்கிறீங்க? எதுக்கெடுத்தாலும் ஆயிரம் கேள்வி. இதுக்குத்தான் நான் படிக்கப் போகல. செல்போன் கடை வச்சுக்குடுன்னு அப்பவே கேட்டேன். சித்தார்த் வீட்டுல அவங்க அப்பா அவனுக்கு பைக் வாங்கிக் கொடுத்திருக்கார். இங்க ஒரு பிக்னிக் போகப் பணங்கேட்டா
(அப்பா வேகமாகப் பணத்தை எண்ணி அவன் கையில் வைக்கிறார்)
இத மொதல்லயே தர வேண்டியதுதானே?
(அப்பா வெளியேறுகிறார். அம்மாவும் தங்கையும் பங்கு கேட்க கொடுக்கிறான்)
பொய்யும் மெய் ஆகுதுங்க
பொய் புரட்டே வாழுதுங்க
நெய்விட்ட பந்தம் போலே எரியுதுங்கபுரட்டு
புடம் போட்ட தங்கம் போல மின்னுதுங்க… (பொய்)
நஞ்சாம் பொய்யினிலே
நனைஞ்சிருக்கு விதைகளெல்லாம்
துளிர் கூட விஷமாகும் கொடுமையேஎதிர்காலத்
தலைமுறை நாசமாகும் வேதனையே….(பொய்)
(பொம்மைகளைப் பொன்று அந்தப் பையனும் பெண்ணும் வந்து வரிசையில் நிற்கிறார்கள்)

காட்சி – 3
(அரசியல்வாதி ஒருவர் வருகிறார் அவருடன் இரண்டு மூன்று எடுபிடிகள்)
அரசியல்: என்னப்பா தலைவர் கூட்டத்துக்கு ஆள் ஏற்பாடு பண்ணியாச்சா?
எடுபிடி1: பண்ணியாச்சு அண்ணேதலைக்கு நூறு ரூபா, ஒரு குவாட்டர், பிராயாணி பொட்டலம்எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு அண்ணே
அரசியல்: தலைவர் வந்துட்டுப் போறவரைக்கும் அப்டியே கூட்டம் கெட்டியா நிக்கணும்.
எடுபிடி 1: அதெல்லாம் சொல்லித்தான் கூட்டிகிட்டு வர்றோம் அண்ணேஎல்லாம் பக்காவா இருக்கும் அண்ணே
எடுபிடி 2: அண்ணேஓட்டுக்கு இந்தமுறை பணம் கூடுதலா கேட்குறானுங்க அண்ணேபோன தேர்தல்ல ஓட்டுக்கு ஐநூறு ரூவா கொடுத்தோம். இப்போ ஓட்டுக்கு ஆயிரம் ரூவா கேட்குறானுங்க.
அரசியல்: ஆமாடா.. வெலவாசியும் ஏறிப்போச்சுல்லபாவம்.. ஜனங்களும் என்ன பண்ணுவாங்க. நாமளும் ஒரு தர்ம நியாயம் பார்க்க வேணாமா? முன்னாடில்லாம் லட்சக்கணக்குல ஊழல் பண்ணோம். அதிகமா வெளியில தெரியாது. ஜனங்களும் நாம கொடுக்குறத வாங்கிக்கிட்டாங்க. இப்போ அப்டியா? நம்ம ஆளுங்க எல்லாமே ஐநூறு கோடி, ஆயிரம் கோடின்னு எங்கேயோ போயிட்டாங்க. பத்திரிக்கைக்காரனுங்கவேற சும்மா இல்லாம எல்லாத்தையும் நியூசா போட்டு பரபரப்பாக்கிவுட்டுர்றானுங்க. அதனால ஜனங்க… ‘இவ்ளோ அடிக்கிறானுங்களேநமக்கு ஓட்டுக்கு ஆயிரம் ரூவா குடுத்தா என்ன?’ன்னு நினைக்குது.
எடுபிடி1: இப்போ கொடுப்போம்ணேஎலெக்ஷன்ல நாம ஜெயிச்ச பிறகு அடுத்த அஞ்சு வருஷத்துக்கு ஜனங்களை தூக்கிப் போட்டு மிதிப்போம்ணே
எடுபிடி 3: அண்ணேஅரசியல் கெட்டுப்போய்க்கிடக்கு, மாணவர்கள் அரசியலுக்கு வந்து அதைச் சுத்தப்படுத்தணும்னு ஒரு தலைவர் பேசியிருக்காருன்னே.
அரசியல்: அப்டியா? ஆஹா.. அதை நாம விடக்கூடாதே. தம்பி, பத்திரிக்கைக்கு என்னோட அறிக்கை கொடுக்கணும். எழுதிக்க.
எடுபிடி1: சரிண்ணே
அரசியல்: மாணவர்களேநீங்கள் அரசியலுக்கு வராதீர்கள்! நாங்கள் என்றைக்காவது படிக்க வந்திருக்கிறோமா? அவரவர்கள் அவரவர்கள் தொழிலைச் செய்ய வேண்டும். உங்களுக்கு அனாவசிய வேலை எதற்கு?
பாடல்: வெள்ளை வெள்ளை காக்கைகளாவெகுநாளாய் இங்கிருந்து
        கொள்ளையடித்தீர்களோ ஆலோலங்கடிச் சோ
        கோபம் வரும் போய்விடுங்கே ஆலோலங்கடிச் சோ
        ஏழைகளின் கண்ணேரே கதிராய் விளைந்து கிடக்குது
        குந்தித் தின்ன வந்தீர்களோ.. ஆலோலங்கடிச் சோ
        கோபம் வரும் போய்விடுங்கோ ஆலோலங்கடிச் சோ

        காக்கை கொத்திச் சிதைச்சுதம்மா
        குலமழிஞ்சு போச்சுதம்மா..
        குக்கூவெனக் கூவும் குயிலோ
        தூரதேசம் போச்சுதம்மா
       
காட்சி 4

(மூன்று மாணவர்கள் வந்து நிற்கிறார்கள். ஒருவர் கையில் செல்ஃபோன், மற்றொருவர் கையில் லேப்டாப், மூன்றாமவர் கையில் டி.வி ரிமோட். அவரவர்கள் அதில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.)
ஒருவர்: மாணவர்கள், இளைஞர்களுக்கு செல்ஃபோன் இன்னிக்கு மூன்றாவது கையா மாறிடுச்சு. இனி பரிணாம வளர்ச்சியில குழந்தையும் கையில செல்ஃபோனோடவே பிறக்கப்போகுது.
மற்றவர்: இணையம் அறிவின் உச்சம். உலகத்தை இணைக்கிற அற்புதம். ஆனா இளையோருக்கு அது பொழுதுபோக்கு சாதனமா மாறிடுச்சு. கட்டுப்பாடற்ற இணையப்பயன்பாடு நம்ம குழந்தைகளுக்கு பல் முளைக்கும் முன்னரேயே மீசை முளைக்க வைச்சிடுச்சு.
ஒருவர்: விளையாட்டை விளையாடுறதுதான் சந்தோஷம். ஆனா டி.வி.யில பார்த்தே சந்தோஷப்படுறவங்களா இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் மாறிட்டாங்க.
மற்றவர்: இப்படிப்பட்ட விதைகள்தான் பள்ளிக்கூடத்துக்கு வருது. இந்த விதைகளைத்தான் நாம விதைச்சிருக்கோம்.

(இரு குழுவினர் விளையாடுகிறார்கள்)
பூப்பறிக்க வருகிறோம்பூப்பறிக்க வருகிறோம்
எந்த மாசம் வருகிறீர் எந்த மாசம் வருகிறீர்
தை மாசம் வருகிறோம் தை மாசம் வருகிறோம்
எந்தப் பூவைப் பறிக்கிறர் எந்தப்பூவைப் பறிக்கிறீர்
இந்தப்பூ முள் முள்ளா இருக்கு
இந்தப்பூ பூச்சி அரிச்சிருக்கு
இந்தப்பூ கசங்கி வாடி வதங்கியிருக்கு
இந்தப்பூ அவலட்சணமா இருக்கு
இந்தப்பூ காகிதப் பூ வாசனையே இருக்காது
( மீண்டும் விளையாட்டு)
பூப்பறிக்க வரவில்லை பூப்பறிக்க வரவில்லை
ஏன் நீங்க வரவில்லை ஏன் நீங்க வரவில்லை?
பூவெதுவும் பிடிக்கவில்லை பூவெதுவும் பிடிக்கவில்லை
(அதே வசனத்தை உச்சரிக்கிறார்கள்)
(பூக்களாக நடித்தவர்கள் வாடிப்போய் உட்காருகிறார்கள்)
பாடல்: பூவிலே.. நானும் ஒரு பூவாகப் பிறப்பெடுத்தேன்
        பூவாகப் பிறப்பெடுத்தேன் பொன்விரல்கள் தீண்டலையே
        பொன் விரல்கள் தீண்டலையே நான் பூமாலையாகலேயே

காட்சி 5
மாணவர்கள் உறைநிலையிலிருக்கிறார்கள்.
இந்த விதைகள் பூக்கல
இந்த பூக்கள் பூவுக்கான தகுதி பெறல
முளைப்பதற்காக கல்விநிலையத்துக்கு வரும் விதைகளை
சமூகத்தின் கசடு பதிந்த விதைகளை
குடும்பத்தின் போலிமை பொதிந்த விதைகளை
அரசியலின் சீரழிவு அணைச்சிக்கிட்ட விதைகளை
விளையாட்டு கபளீகரம் பண்ணிட்ட விதைகளை
ஊடகம் தின்று செரித்து விட்ட விதைகளை
அற்புதமான பூப்பூத்துத்தர வைக்கிற வேலைகளை கல்வி நிறுவனம் எப்படிச் செய்ய முடியும்?
ஆசிரியர்கள் எப்படிச் செய்ய முடியும்?
ஆசிரியர்கள் என்ன மந்திரவாதிகளா?
அப்போ நாடகத்தை இப்படி முடிச்சிடலாமா?
நாடகத்தை இப்படி முடிக்கிறோமோ இல்லையோவாழ்க்கை இப்படி முடியக்கூடாது.
நாடகம் முடியிற மாதிரித்தானப்பா வாழ்க்கை முடியும்
வாழ்க்கை முடியிற மாதிரித்தானப்பா நாடகம் முடியும்
என்ன குழப்புற?
குழப்பலே.. தெளிவு தேடுறேன்.
ஆசிரியர்கள் மந்திரவாதிகளான்னு கேட்டீங்களே
மந்திரவாதிகளாவா? மந்திரவாதிகள்தான்.
எப்படி? எப்படி?
-   மாணவர்கள், ஆசிரியர்களோட எந்த அறிவுரையையும் நம்பறதுல்ல; ஏத்துக்கிறதில்லை. மாணவர்களை நம்பவைக்கும் ஆசிரியர்களோட அறிவுரை எது தெரியுமா?
-   ஆசிரியர்களின் வாழ்க்கை.
-   மாணவர்கள்கிட்ட இருக்கிற உதிரி மனோபாவத்தைப் போக்கறது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. அதனால எப்போது அவங்களோட நெருக்கமா இருக்கணும்.. நெருக்கம் மன ரீதியிலான மாற்றத்தைக் கொடுக்கும்.
-   உற்சாகமா ஆசிரியப் பணியைத் தொடங்குறோம்ஆனா அப்படியே தொடருகிறோமா? தோல்வியில துவண்டுவிடாதேன்னு மாணவருக்கு அட்வைஸ் பண்றோமேநல்ல மாணவரை உருவாக்குறதுல நாம தோல்வி அடைஞ்சிட்டாபுதிய வழிமுறையில மீண்டும் முயற்சிக்காமஅந்த முயற்சியவே கைகழுவிடுறோமேஏன்?
-   எதையுமே மாத்த முடியாதுன்னு அவநம்பிக்கைப் பட வேண்டாம். ஆசிரியன் எல்லாத்தையும் மாத்தமுடியும்னு நம்பிக்கை நெம்புகோல் எடுக்கணும்..
-   ஒரு ஆசிரியன் எப்போ ஆசிரியனாக இருக்கணும்…? பள்ளி வளாகத்துக்குள்ள நுழையும்போதா? அட்டனென்ஸ்ல கையெழுத்துப் போடுறப்பவா? வகுப்பறைக்குள்ள நுழையும்போதா?
-   ஆசிரியன் ஆசிரியப்பணியை மேற்கொண்ட கணத்திலிருந்து இருபத்திநாலு மணி நேரமும் எந்த நாளும் ஆசிரியனாகவே இருக்கான். ஏன் 58 வயசாகி ஓய்வுபெற்ற பிறகும்கூட ஆசிரியன் ஆசிரியனாகவே இருக்கான்
-   மாணவர்களுடனான நெருக்கமும் பிணைப்பும் அன்பும் அக்கறையும் நிச்சயமாக வகுப்பில் புதிய பூக்களை மலர்விக்கும்.
-   அந்த மந்திரவாதிகளா நிச்சயமா ஆசிரியர்கள் இருப்பாங்க.
-   அந்த மந்திரக்கோல்கள்தான் பேனாவும் சாக்பீசும்.
-   மந்திரவாதிகளே…. எழுக!


No comments: