ரோமானியப் பேரரசின் பெருமை மிக்க ஆட்சிக் காலத்தில் விலங்குகளினும் கேவலமாக நடத்தப்பட்ட அடிமைகளிலிருந்து முளைத்து எழுந்தவன் ஸ்பார்டகஸ். கிறித்து பிறப்பதற்கு முந்தைய எழுபத்தோராம் ஆண்டில் ரோமானிய அடிமைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக முதன் முதலில் தலைநிமிர்த்தி, கரம் உயர்த்திக் குரல் கொடுத்தவன் அவன். வாய்திறக்கவும் உரிமையற்றிருந்த அடிமைகளைத் திரட்டிய எழுச்சியின் நாயகனாக வரலாறு அவனை வரவு வைத்திருக்கிறது.
சந்தையில் ஆடு மாடுகளைப் போல விலைக்கு வாங்கப்பட்டு உயிர் போகும் வரை முரட்டுத்தனமாக உழைக்க நிர்பந்திக்கப்பட்ட அடிமைகள் கலகம் செய்த வரலாற்றுக் காலப்பகுதியின் உணர்ச்சிகரமான உந்துசக்தியாக அமைந்த ஸ்பார்டகஸ், ஒரு அடிமை கிளாடியேட்டர். பிரபுக் குலத்தினர், உயர்குடியினர் கூடியுள்ள அரங்கில் ஒரு அடிமை மற்றொரு அடிமையோடு விலங்குகளைப் போல மோதிச் சண்டையிட வேண்டும். தன்னால் அடித்து வீழ்த்தப்பட்ட சக அடிமையைக் குத்திக் கொன்று, தன் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மனிதன், தன் சக மனிதனோடு மோதிச் சண்டையிட்டு மடியும் நிகழ்வைக் குதூகலத்துடன் கரவொலி எழுப்பி மகிழ்ந்தது அன்றைய ரோமானிய பிரபுக் குலம். அப்படிச் சண்டையிடும் அடிமைக்கு கிளாடியேட்டர் என்று பெயர். ஸ்பார்டகஸ் புகழ்பெற்ற கிளாடியேட்டராக இருந்தவன். ஹோவர்ட் ஃபாஸ்ட் ‘ஸ்பார்டகஸ்’ என்ற பெயரில் நாவல் ஒன்றினை எழுதினார்.
இந்நாவலை நாடகமாக்கும் எண்ணம் கொண்டிருந்த வங்க நாடகவியலாளர் பாதல் சர்க்கார் 1972 இல் அப்பணியைச் செய்து முடித்தார். ‘இந்நாவலை நாடகமாக்கும் எண்ணம் பலமுறை வந்ததுண்டு. ஆனால் துணிச்சல் பிறக்கவில்லை’ என்று நாடக நூலின் முன்னுரையில் குறிப்பிட்டெழுதினார் சர்க்கார். படச்சட்ட நாடக மேடையை விட்டு வெளியே வந்து, ‘முற்ற மேடை’ அமைப்பைக் கைக்கொண்டபோது இதற்கான துணிச்சலைப் பெற்றார். பார்வையாளனையும் நிகழ்த்துபவனையும் மிக அருகில் கொண்டு வரும் முற்ற மேடை அமைப்பிலேயே தனது ‘சதாப்தி’ குழுவினரோடு இந்நாடகத்தைத் தயாரித்தார். இருநூறு முறைக்கும் மேலாக இந்நாடகம் அரங்கேறியது. எழுபது பேர் மத்தியிலும் இந்நாடகம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது; ஏழாயிரம் பேர் காணவும் நடிக்கப்பட்டிருக்கிறது.
1989 செப்டம்பரில் திருச்சியில் நடந்த பாதல் சர்க்கார் நாடகவிழாவில் நடத்துவதற்காக பேராசிரியர் மு.ராமசாமியின் வேண்டுகோளின்படி இந்நாடகத்தைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்தார் கோ.ராஜாராம். இந்த இருபத்திரண்டு ஆண்டுகளில் இருமுறை இந்நாடகத்தைத் தயாரித்து நிகழ்த்தியிருக்கிறார் மு.ராமசாமி. அண்மையில் பாதல் சர்க்காரின் மறைவையொட்டி, சென்னை மூன்றாம் அரங்கு நாடகக் குழுவினரின் வேண்டுகோளின்படி மூன்றாவது முறையாகப் புதிய நடிகர்களைக் கொண்டு இந்நாடகத்தை நெறியாளுகை செய்திருக்கிறார் அவர்.
ரோம் சாம்ராஜ்யத்தில் நிகழ்வதாய் இருந்தாலும் நாடகத்தின் தொடக்கத்தில் இந்திய தேசத்தோடும் கதையைத் தொடர்புபடுத்துவான் கதைசொல்லி. அடிமைகளைத் தூண்டிவிட்ட கலகக்காரனான ஸ்பார்டகஸ் கொல்லப்பட்ட பிறகு, அவனைக் குறித்து பிரபுக்குலத்தினர் பேசுவதாக, நினைவு கூர்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது நாடகம்.
‘இந்தப் போராட்டம் எப்ப முடியும் ஸ்பார்டகஸ்?’ என்ற வாரினியாவின் கேள்விக்கு, ‘எல்லா மனிதரும் விடுதலை அடையும் போது. சமத்துவம் அடையும் போது’ என்று விடையிறுக்கிறார்கள் அடிமைகள். கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய அடிமைத் தலைவர்கள் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார்கள். சிலுவையில் அறையப்பட்ட ஃபேர்டாக்ஸ் வலியோடு முணுமுணுத்த கடைசி வார்த்தைகளையே இந்நாடகத்தின் கடைசி வார்த்தைகளாக அமைக்கிறோம் என்பான் நாடகத்தின் கதைசொல்லி. ‘திரும்பி வருவேன். லட்ச லட்சமாய், கோடி கோடியாய்த் திரும்பி வருவேன்’ என்று அடிமைகள் கூறுவதாக நாடகம் முடியும்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட அண்மைய நாடகத் தயாரிப்பு, ‘முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் பின் இந்த நாடகம், இன்னமும் பேசாப்பொருளாய் புதுப்பொருள் கூறுகிறது’ என்கிறார் மு.ராமசாமி. இந்த நாடகம் இப்படி முடிகிறது: ‘மண்ணிலிருந்து வந்தான் ஸ்பார்டகஸ். அந்த மண் இப்பவும் இருக்கு’. ஈழ விடுதலைப் போரின் பின்னடைவுக்குப் பின், பாரிய அழிவுக்குப் பின் இந்நாடகம் புதிய அர்த்தத்தைக் கற்பிக்கிறது.
‘கதையின் நாயகன் ஸ்பார்டகஸ் அல்ல; அடிமைகள்தான் என்பார் பாதல் சர்க்கார். அதை மிகச் சரியாக உள்வாங்கி, நாடகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் மு.ராமசாமி. இளஞ்சிவப்பு நெற்றிப்பட்டையை அணிந்தவனாக நாடகத்தின் போக்கில் அறிமுகமாகிறான் ஸ்பார்டகஸ். நெற்றிப்பட்டை நடிகர்களிடம் கைமாறி வேறு வேறு ஆட்களிடம் சென்று சேர்கிறது. நடிகர் கூட்டத்தில் வேறு வேறு ஸ்பார்டகஸ்கள் உருவாகிறார்கள்.
கருணாபிரசாத் போன்ற ஓரிரு நடிகர்களைத் தவிர, ஏனைய நடிகர்கள் முற்றிலும் நாடகத்திற்குப் புதியவர்கள். ஆனாலும் உணர்வுப்பூர்வமான வெளிப்பாட்டை நாடகம் கொண்டிருந்தது. நடிகர்களின் உடல்மொழி உருவாக்கத்திலும் காட்சிப்படுத்தலிலும் மு.ராமசாமி தன் ஆளுமையை நிரூபித்திருக்கிறார்.
உணர்வுப்பூர்வமான உள்ளடக்கம், துடிப்புள்ள பிரதி, உயிர்ப்புள்ள நடிகன், வாஞ்சையை அடைகாத்துள்ள வெளிப்பாடு எல்லாமுமாகச் சேர்ந்து அதிர்வைப் பார்வையாளனுக்குக் கடத்த முடியும் என்பதற்கு இந்நாடக நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.
No comments:
Post a Comment