Sunday 9 October 2011

மு.வரதராசனார் நூற்றாண்டு:

எனது பள்ளிப்பருவத்தில் படிக்கக் கிடைத்த நூல்களில் ஒன்று மு.வரதராசனாரின் ‘கரித்துண்டு’ நாவல். தமிழ்ப் பாடநூல்களிலும் துணைப்பாடக் கதைகளை மட்டும் உடனே வாசித்துவிடுகிற கதைப்பித்து அப்போதே இருந்தது எனக்கு. எனது மூத்த சகோதரி பி.லிட் படிப்பில் சேர்ந்திருந்தார். அவருக்குப் பாடமாக வைக்கப்பட்ட தற்கால இலக்கியங்கள் பகுதியில் மு.வ.வின் ‘கரித்துண்டு’ இடம்பெற்றிருந்தது. அப்படித்தான் அந்த நூல் எனக்குப் படிக்கக் கிடைத்தது. பள்ளிப்பருவ நாட்களில் நான் படித்திருந்த ராஜேஷ்குமார், ராஜேந்திர குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் வகையறாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நாவலாதலால் என்னை மிகவும் வசீகரித்திருந்தது அந்த நாவல். பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு, மு.வ.வின் பிற நாவல்களைப் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் ‘கரித்துண்டு’ மனதின் ஓரத்தில் மீண்டும் வாசிக்க வேண்டிய ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டே இருந்தது.
மு.வரதராசனார் பேராசிரியராக இருந்து அலங்கரித்த சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் முதுகலை பயில விண்ணப்பித்து, துறைத் தலைவர் அறையில் நேர்முகத் தேர்வை எதிர்கொண்ட போது, தலைவரின் தலைக்குப் பின்புறமாகப் புகைப்படத்தில் சிரித்தபடி இருந்தார் மு.வ.
சென்னைப் பல்கலையில் முனைவர் பட்டம் முடிக்கும் தறுவாயில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறையில் விரிவுரையாளர் பணியில் சேர வாய்ப்புக் கிடைத்தபோது, ‘எந்தத் திருப்பத்தூரு? மு.வ இருந்தாரே… அந்தத் திருப்பத்தூரா?’ என்று எனது பேராசிரியர் கேட்டார். பணி கிடைத்து பத்தாண்டு நெருங்கும் இந்த வேளை வரையிலும் திருப்பத்தூர் மு.வ பற்றி தகவல்கள் அவ்வப்போது காதில் வந்து சேர்வதுண்டு.
எப்படியோ, பள்ளிப்பருவத்திலிருந்து நாம் மு.வ வைத் தொடருகிறோம் அல்லது மு.வ நம்மைத் தொடருகிறார் என்று எனக்குத் தோன்றுவது உண்டு.
தமிழில் மு.வ யுகம், ஜெயகாந்தன் யுகம் இதெல்லாம் முடிவுற்ற ஒரு பிந்தைய காலப்பொழுதில் தமிழ்ப் புனைகதை வாசிப்புக்கு வந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். எனவே இவர்களைக் கொண்டாடிய காலம் முடிந்துவிட்டிருந்தது. ஆஹாஹாரங்கள், ஓஹோஹாரங்கள் மங்கி மறைந்து போய்விட்ட காலத்தில் இந்நாவல்களைப் படிக்கும் பாக்கியம் பெற்றிருந்தோம் யாம். ஒரு வகையில் விமர்சனத்துடன் படிப்பதற்கான சூழல் அமைந்து விட்டிருந்தது.
இந்த ஆண்டு பேராசிரியர், நாவலாசிரியர் எனப் பன்முக ஆளுமை பெற்றிருந்த மு.வரதராசனாரின் நூற்றாண்டு. இவ்வேளையில் அவருடைய எழுத்துப்பரப்பினூடாக அவரை நினைவுபடுத்திக் கொள்ளுவது அவசியமான செயல்பாடாகும்.
மு.வ. அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில், வாலஜா சாலை புகைவண்டி நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ‘வேலம்’ என்றும் சிற்றூரில் 02.04.1902 இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியினை வாலாஜா பேட்டையிலும், உயர்நிலைக் கல்வியினைத் திருப்பத்தூர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
பள்ளிப்படிப்பைத் தொடர முடியா நிலையில் வட ஆற்காடு வட்டார அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். 1932 இல் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தான் பயின்ற திருப்பத்தூர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியேற்றார். ஆசிரியப் பணிக்கிடையே தொடர்ந்து பல்கலைக் கழகப் பட்டப்படிப்பையும் படித்து வந்தார். 1935 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் நடத்தி வந்த வித்துவான் தேர்வில் பங்கேற்று மாகாணத்தின் முதல் மாணவராகத் தேர்வு செய்யப்பட்டார். அக்காலத்தில் மாகாணத்தின் முதல் மாணவராகத் தேர்வு பெறும் மாணவருக்குத் திருப்பனந்தாள் மடம் ஆண்டு தோறும் ரூபாய் ஆயிரம் பரிசாக வழங்கும். அந்தப் பரிசுத் தொகையினைப் பெற்றார் மு.வ.
திருப்பத்தூரில் இருந்த புலவர் முருகைய முதலியார் என்பவரிடம் மு.வ. இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பள்ளியில் தமிழாசிரியப் பணி புரிந்த அதே காலகட்டத்தில் ஏராளமான தேர்வுகளை எழுதிப் பட்டங்களைப் பெற மு.வ மறக்கவில்லை. 1939 இல் பி.ஓ.எல் பட்டத்தையும், 1944 இல் எம்.ஓ.எல் பட்டத்தையும்1948 இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
பி.ஓ.எல் பட்டப்படிப்பை முடித்த கையோடு 1939 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக அமைந்தார். கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே தொடர்ந்து பட்டமேற்படிப்புக்கெனப் படித்து வந்தார். ‘தமிழில் வினைச் சொற்கள்’ என்ற பொருண்மையில் ஆராய்ச்சி செய்து எம்.ஓ.எல் பட்டம் பெற்றார். ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றது குறிப்பிடத்தக்கது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் ஆராய்ச்சி செய்து முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பெருமை மு.வ.வையே சாரும்.
பச்சையப்பன் கல்லூரியில் மோசூர் கந்தசாமி முதலியார் என்ற புகழ்பெற்ற தமிழ்ப்பேராசிரியருக்குப் பின், துறைத்தலைவர் பொறுப்பினை ஏற்றார் மு.வ. 1961முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். பத்தாண்டுகளுக்குப் பிறகு 1971 முதல் 1974 வரை மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.
மு.வ.வின் வரலாறு, பள்ளி ஆசிரியர் ஒருவர் படிப்படியாகத் பயின்று படியேறி ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான உழைப்பின் வரலாறு. துணைவேந்தர் பதவிகள் பெரும் முதலீட்டைக் கோரி நிற்கும் விற்பனைச் சரக்காக இல்லாத காலத்தில் ஒரு தமிழ்ப்பேராசிரியருக்குக் கிடைத்த அங்கீகாரமென தேடிவந்த துணைவேந்தர் பதவியை ஏற்றார் அவர்.
மு.வ. எழுதிக் குவித்த நூல்கள் பல. தமிழ்ப்பேராசிரியர் என்ற முறையில் அவர் இலக்கியப் பரப்பு குறித்தும் செல்நெறிகள் குறித்தும் தொடர்ச்சியாக ஏராளமாக எழுதி வந்தார். 1939 இல் அவருடைய முதல் நூல் வெளிவந்தது. ‘குழந்தைப் பாட்டுக்கள்’ என்பது அந்நூலின் தலைப்பாகும். குழந்தைகளுக்காகவும் தமிழ் இலக்கணத்தை எளிதாக அறிமுகப்படுத்தும் வகையிலும் தனது எழுத்துப்பணியைத் தொடங்கிய மு.வ, 1944 இல் ‘பாவை’ என்ற தன் முதல் நாவலுடன் புனைகதைப் பரப்பிற்குள் காலடி எடுத்து வைத்தார். இந்நாவலுக்கு மு.வ.வின் ‘முதல் நாவல்’ என்னும் தகுதி உண்டே ஒழிய வேறு பெருஞ்சிறப்பு ஒன்றுமில்லை என்று விமர்சகர்கள் பின்னாளில் எழுதினார்கள். ஆனால் அவ்வாறு பயணத்தைத் தொடங்கிய மு.வ.தான் அடுத்த பல பத்தாண்டுகளில் தமிழ் புனைகதைப் பரப்பின் குறிப்பிடத்தக்க செல்நெறியின் முதன்மை எழுத்தாளராகத் திகழ்ந்தார்.
உரைகள், இலக்கிய விளக்கங்கள், அறிவுரைக் கதைகள், தமிழியல் ஆய்வுப் புலம் சார்ந்த அக்கறைகள் என அவருடைய எழுத்துப் பரப்பு விரிந்து பரந்ததாக இருந்தது. ஆனாலும் தமிழ் நாவல் பரப்பில் ‘இலட்சியவாத நாவல்’ போக்கின் முதன்மையராக மு.வ. தொழிற்பட்டார்.
1.பாவை, 2.கள்ளோ காவியமோ, 3.கி.பி.2000, 4.செந்தாமரை, 5.கரித்துண்டு, 6.மலர்விழி, 7.அந்தநாள், 8.அகல்விளக்கு, 9. நெஞ்சில் ஒரு முள், 10.வாடாமலர், 11.மண்குடிசை, 12.கயமை, 13.அல்லி, 14.பெற்றமனம் என நாவல்களைப் படைத்தார் மு.வ.
‘தமிழ்ப் பேராசிரியர்களும் நல்ல நாவல் எழுத இயலும் என்று காட்டியவர் மு.வ.தான். நாவல் இலக்கியத்தில் சில புதிய மரபுகளை உண்டாக்கியவர்’(டாக்டர் ஈ.ச.விசுவநாதன்;மு.வ. கடிதங்கள்;1976) என்பர்.
மு.வ. நாவல் எழுத வந்த காலகட்டம் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான காலகட்டம் ஆகும். அதாவது அக்காலகட்டத்திலேதான் தனித்தமிழ் இயக்கத்தின் செல்வாக்கினாலும் திராவிட இயக்க எழுத்தாளர்களின் பாதிப்பினாலும் தமிழார்வம் கொண்ட ஒரு புதிய இளம் வாசகர் வட்டம் உருவாகியிருந்தது. தமிழிலக்கியத்தின் பல்வேறு போக்குகளுக்கும் வாய்ப்பிருந்த காலம் அது. இதனை நன்கு பயன்படுத்தியவர் மு.வ.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் இருந்த ஈடுபாடும் பயிற்சியும் மு.வ.வுக்கு நல்ல பின்புலமாக அமைந்தது. அவருடைய தனித்தமிழ் ஈடுபாடு அன்றைய நாவலாசிரியர்களிடமிருந்து அவரை குறித்த அளவில் வேறுபடுத்தியது. எனவே அவருக்கு முந்தைய நாவலாசிரியர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில் நாவலின் தலைப்பு, பாத்திரங்களின் பெயர்கள், உரையாடல் ஆகியவற்றில் தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினார்.
‘சென்னையில் வாழும் ரிக்ஷாகாரன் பேசுவதாக இருந்தால் கூடத் தனித் தமிழையே மு.வ. பயன்படுத்தினார். இருப்பினும் மொழிக் கலப்புடன், மயக்கந்தரும் நீண்ட சொற்றொடர்கள் இடம்பெற்ற பழைய நடையைவிட மு.வ.வின் நடை இனிய தமிழில் எளிய நடையாக அமைந்தமையால் வாசகர்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது. திராவிட இயக்க மீட்சிவாதப் போக்கால் உந்தப்பட்டு, விழிப்புணர்ச்சி பெற்ற தமிழ் அன்பர்கள் மு.வ.வின் எளிய தனித்தமிழ் நடையை மிகவும் விரும்பினர்’ என்பார் மெ.செ.இரபீசிங் (தமிழ் இலக்கியத் தடங்கள்;2008;89). பண்டிதர்கள் எழுதும் நடையிலிருந்த இறுக்கத்தைத் தளர்த்தினார் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வ. நாவல்களில் மொழி அமைப்பு முறையின் தனித்த கூறுகள் உண்டு என்கிறார் கோ.வே.கீதா. ‘டாக்டர் மு.வ. மட்டுமே கையாளும் முறை ஒன்றுண்டு. ‘ஆமாம் அப்பா’ எனச் சொல்வதை இவர் ‘ஆமாம்’பா’ என்றே எழுதுகிறார். எ.டு. ஏன்’பா? எங்கே’மா? போதாதப்பா, ஆமாம்மா, இல்லைமா இவைபோன்று அமைபவை’ (தமிழ் நாவல்கள் ஓர் அறிமுகம்;1979;179) என்கிறார் அவர்.
பாத்திரங்கள் அல்லது கதை மாந்தர்களின் பெயர்களை நல்ல தமிழில் இடுவார் மு.வ. அப்பெயர்களே குறித்த அப்பாத்திரங்களின் பண்பை உணர்த்திவிடும் தன்மையில் அமைப்பது மு.வ.வின் சிறப்பு. அறவாழி, குணமாலை, மென்மொழி, தேமொழி, மான்விழி, அருளப்பன், கமலக்கண்ணன் என்பன போன்ற பெயர்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தீயவர்களைச் சுட்டவும் இம்முறையையே மு.வ. பின்பற்றுவார். ஆணவர், அகோர், கேசவராயன், வசீகரம், கச்சம்பாள் என்பன போன்ற பாத்திரப் பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டு. பாத்திரங்கள் நல்லவரா தீயரா என்பதை எடுத்த எடுப்பிலேயே உணர்த்திவிடும் பாங்கை மு.வ.வின் அனைத்து நாவல்களிலுமே காணலாம்.
மு.வ.வின் நாவல்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் வகை மாதிரிகள். இயல்பானவர்கள் அல்லர். குறிப்பாக அவர்கள் இலட்சிய நோக்குடையவர்கள். எதிர்நிலைப் பாத்திரங்கள் மோசமானவர்கள். இலட்சிய நோக்குக்கு எதிரானவர்கள். குறுகிய உள்ளம் படைத்தவர்கள். இந்த வகை மாதிரியினைக் கொண்டே மு.வ.வின் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. மு.வ.வின் நாவல்கள் மேலே விவரித்துப் பேசிய அக்காலகட்டத்தைத் தாண்டி நிற்காமைக்குக் காரணம் இந்த வகை மாதிரிப் போக்கேயாகும்.
‘வரதராசனாரின் நாவல்களிலே பாத்திரங்கள் எலும்பும் தசையும் கொண்டு ஆக்கப்படுவன அல்ல. மனித சிந்தனையில் பிரதிநிதிகளாகவே உள்ளனர்’ (தமிழ் நாவல் இலக்கியம்) என்பர்.
இவ்வாறு நாவல் பாத்திரங்கள் அல்லது கதையின் போக்கு விதிக்கப்பட்ட விதிகளுக்குள் இயங்குவதற்கு என்ன காரணம்? மு.வ.வே பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
‘வாழ்க்கையை வெறும் பொழுது போக்காகப் பார்க்கக் கூடாது என்பது போலவேதான் கலைகளிலே கதைகளிலே காட்டப்படும் வாழ்க்கையும் வெறும் பொழுது போக்குக்காக அமைந்திருக்கக் கூடாது. கலையை விரும்புவோர் இருவகை. பொழுதுபோக்குக்காகச் சிலர் விரும்புவார்கள். சலர் கலை தங்களை உயர்த்துவதற்கும், வாழ்க்கையில் புதுவழிகளைக் காண்பதற்கும் உதவும் கருவியாகப் பயன்படுத்த எண்ணுவார்கள். கலையை, வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான். ஆகையினாலே தான் என் கதைகளில் கருத்தையும் சேர்த்து வருகிறேன்’ (இரா.தண்டாயுதம்; ஓர் இலக்கிய ஆய்வு-தற்காலம்;1985;44)
-மு.வ.வின் இலட்சியவாதம் முழுமையாக அவருடைய நாவல்களில் பிரதிபலிப்பதைக் காணமுடியும். ‘இல்லற வாழ்வையும் அதில் ஏற்படும் பால் உறவுக் கலக்கங்களையும் அறவழி நின்று, தொண்டு மனப்பான்மையில் செவ்வழியில் பாய்ச்சப் பெறும் பகுதி நாவல்களை எழுதியவர் மு.வ.’ என்று மதிப்பிடுவார் தா.வே.வீராசாமி (தமிழில் சமூக நாவல்கள்;1987:107). நாவல்களில் ஏற்படும் சிக்கல்கள், பாத்திரங்களில் குணாம்சங்களால் விளையும் இன்னல்கள் அனைத்தையும் மேற்குறித்தபடி அறவழி நின்று விளக்கும் ‘அற நாவல்கள்’ மு.வ.வுடையவை.
கரித்துண்டு, கயமை முதலான நாவல்களில் திருக்குறள் ஈடிணை இல்லாத தத்துவ நூலாகக் காட்டப்படுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டே வாழ்க்கைச் சிக்கல்களுக்கு அமைதி கூறப்பட்டுள்ளது. மு.வ.வின் நாவல்களில் வள்ளுவமும் தமிழ் ஆன்மீக நிலைப்பட்ட தத்துவங்களும் முந்திக் கொண்டு முகங்காட்டி நிற்பதை உணரலாம்.
மு.வ.வின் பாத்திரங்களிலே சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட நாவல்களில் வருகிறார்கள். ‘செந்தாமரை’ நாவலில் வரும் இளங்கோ-செந்தாமரை இணையரைக் ‘கரித்துண்டு’ நாவலிலும் காணமுடியும். மோகனின் முன்னாள் மனைவி நிர்மலாவுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்திப் பண்படுத்தும் பாத்திரமாக வருகிறாள் செந்தாமரை. ‘அல்லி’யில் வரும் அறவாழி, ‘நெஞ்சில் ஒரு முள்’ளில் வயதான பெரியவராக வருகிறார். ‘கள்ளோ காவியமோ’ நாவலில் வரும் அருளப்பர், ‘அகல்விளக்’கிலும் ‘பெற்ற மனத்’திலும் வருகிறார். ‘சிந்தனை ஒளியும், அறத் தென்றலும், மனப் பண்பாடும் சிறப்பூட்டுகின்ற அந்த நல்லுலகத்தில், மு.வ. உலவவிட்டுள்ள பாத்திரங்களின் எண்ணிக்கை 278’என்று எண்ணிச் சொல்வார் ம.ரா.போ.குருசாமி (மு.வ. முப்பால்;1977;221).
வகை மாதிரிகளுக்குள் சிக்கிக் கொண்ட நாவல்களாக இவற்றைப் பார்க்கும் தன்மையிலிருந்து மாறுபடும் கல்விப் புலத்தினரும் உண்டு. ‘அவர் (மு.வ) சமுதாயத்தைத் திருத்தி அமைப்பதற்கு எண்ணுகின்றார்; சமுதாயத்தைச் சீராக அமைப்பதற்கு உரிய வழிவகைகளைச் சிந்திக்கின்றார்; அதைக் கடமையாகக் கொண்டு, ஒவ்வொரு நாவலிலும் இயன்றது செய்கின்றார். இந்த நல்ல நோக்கம் மு.வ.வின் நாவல்களுக்கு அமைந்த தனிச்சிறப்பு’ (இரா.மோகன்; டாக்டர் மு.வ.வின் நாவல்களில் சமுதாய நோக்கு;1973) என்று மதிப்பிடுவோரும் உள்ளனர்.
நாவல் எடுத்துரைப்பு முறைமையில் பல்வேறு சோதனை முயற்சிகளைச் செய்து பார்த்தவர் மு.வ. அவர் கையாண்ட நோக்கு நிலைகள் என்று சிலவற்றைப் பட்டியலிட்டுக்காட்டுவார் மா.இராமலிங்கம். அவை:
1. கதைத் தலைவியரே தங்கள் வாழ்க்கையைக் கூறுவது போல் அமைந்த நாவல்கள்: அல்லி, நெஞ்சில் ஒரு முள்.
2. கதைத் தலைவனும் தலைவியும் மாறி மாறிக் கூறுவது போல் அமைந்த நாவல்: கள்ளோ? காவியமோ?
3. கதை மாந்தர் பலரும் மாறி மாறிப் பேசுவது போல் அமைந்த நாவல்கள்: செந்தாமரை, அந்தநாள்.
4. கதைத் துணை மாந்தரில் கதைத் தலைவனுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் கூறுவது போல் அமைந்தவை: அகல்விளக்கு, வாடாமலர்.
5. கதைத் தலைவருடன் நேரடித் தொடர்பில்லாத- அல்லது நெருங்கிய தொடர்பில்லாத துணைக்கதை மாந்தர் கூறுவது போல் அமைந்தவை: மலர்விழி, கரித்துண்டு.
6. ஆசிரியரே படர்க்கையில் நின்று கதையைச் சொல்வது போல் அமைந்தவை: பாவை, பெற்றமனம், கயமை. (நாவல் இலக்கியம்;1975)
மு.வ. தன் நாவல்களை மிகுந்த திட்டத் தயாரிப்புச் செய்தே எழுதுவார் என்பார்கள். எடுத்துரைப்பு உத்தி முறைகளையும் கூடச் செவ்வனே வகுத்துக் கொண்டு எழுதியவர் என்பது மேற்குறித்த கருத்தில் புலப்படுகிறது.
எவ்வாறாயினும் தமிழ் நாவல் வரலாற்றில் மு.வ.வின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அன்றைய காலகட்டத்தில் மு.வ.வின் நாவல்களை வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்ட தலைமுறை இருந்தது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.
தமிழ் இலக்கிய ஆராய்ச்சி, இலக்கணம், மொழியியல், மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, கடிதங்கள், சிறுகதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறுகள் என்று விரிந்து வானை அளந்து பறந்து திரிந்த வானம்பாடி மு.வ.
கல்வியாளராகவும் நிர்வாகியாகவும் மட்டுமின்றி ஏராளமான மாணவர்களுக்கு உத்வேகமளித்த ஆசிரியராகவும் திகழ்ந்தவர் மு.வ.
பல்வேறு முரண்பட்ட நிலவியல், பண்பாடு, மொழிச் சூழல் கொண்ட வட ஆற்காடுப் பகுதியின் மிக முக்கியமான இலக்கிய அடையாளம் அவர். நூற்றாண்டுக் காணும் இவ்வேளையில் அவருடைய பல்துறைப் பங்களிப்பைக் குறித்த ஏராளமான ஆய்வுகள், ஆக்கங்கள் வெளிவருவது அவசியமாகும். அதுவே, அவர் மறைந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகும் அவருடைய வரலாற்று வகிபாகத்தை அடையாளப்படுத்துவதாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: