Sunday 9 October 2011

மேடையேறிய இரண்டு சிறுகதைகள்

கன்னியாகுமரியின் விவேகானந்த கேந்திர வளாக அரங்கில் சு.ரா நினைவு விழாவினையொட்டிக் கூத்துப்பட்டறை நடிகர்கள் நடித்த ‘அக்கரை சீமையிலே’ ‘பிரசாதம்’ என்ற இரு நாடகங்களையும் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு சற்றே வித்தியாசமானது. விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் தொடங்கும் காலை வேளையில், சரியாக காலை 9.30 மணிக்கு இந்நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. வழக்கமாக மாலை வேளை மயக்கங்களுடனேயே நாடகம் சம்பந்தப்பட்டிருப்பது உண்டு. ஆனால் இவ்விழாவில் காலை, மதியம், மாலை என்று முக்காலத்திலும் நாடகங்கள் திட்டமிடப்பட்டுச் செவ்வனே நிகழ்ந்தேறின. எனவே நாளின் தொடக்கத்தில் நிகழ்த்தப்பட்ட இவ்விரு நாடகங்களும் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தை வழங்கியிருக்கக் கூடும்.
முதல் நாடகமான அக்கரை சீமையிலே ஒரு தனி நபர் நாடகமாகும். சுந்தர ராமசாமி 1953இல் எழுதி சாந்தி இதழில் வெளிவந்த சிறுகதை அதே பெயரில் நாடகமாகியிருக்கிறது.
ஆப்பிரிக்காவின் தென் ரொடீஷ்யாவின் தலைநகரத்திற்கு அருகாமையில் உள்ள புலுவாயோறாவுக்கு இரயில் செல்லுகிறான் கதைசொல்லி. இனவெறி தலைவிரித்தாடும் அவ்விடத்தில் அறிமுகமாகிறான் இருபத்தைந்து வருடங்களாக அந்நிய மண்ணில் உழைக்கும் ராஜூ நாயுடு என்ற தமிழன். அவன் ஒரு ரயில்வே போர்ட்டர். ஒரு ஆப்பிரிக்க பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்பவன். அதைக் கதைசொல்லியே தானாகத் தெரிந்து கொள்ள நேரிட்டபோது மிகுந்த குற்ற உணர்ச்சியுடன் ஒப்புக்கொண்டு, இந்தியாவுக்கு வந்துவிடும் ஆவலை வெளிப்படுத்துகிறான். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டதாமே? இப்போது நம் ஆட்கள்தானே ஆட்சி செய்கிறார்கள்? எனவே வேலை உடனே கிடைத்துவிடும் அல்லவா என்று அப்பாவித் தனமாகக் கேள்வி எழுப்புகிறான். சுதந்திரப் போராட்டக் காலத்தில் தீரர் சத்தியமூர்த்தியின் ஆவேச வார்த்தைகளுக்குச் செவி கொடுத்தவன் அவன். ஆப்பிரிக்கப் புகையிலைத் தோட்டத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு இப்பொழுதாவது இந்தியாவுக்குத் திரும்பி, தனது சொந்த நதியான தாமிரபரணியில் முழுக்குப்போட விரும்புபவன். தனக்கு ஒரு வேலை பார்த்துத் தர முடியுமா என்று கதைசொல்லியைக் கேட்கிறான். இந்தியாவில் வேலையின்மை தலைவிரித்தாடுவதையும் அவர்களில் ஆயிரம் பேர் இங்கு வேலைதேடி வரத் தயாராக இருக்கும் உண்மையையும் எடுத்துக்காட்டுகிறான் அங்கு தேநீர் கடை வைத்திருக்கும் நாயர். கதைசொல்லி ஊர் திரும்ப இரயில் ஏறும் கடைசித் தருணத்தில் கூட, ‘சொல்லுங்க சார்! வேலை பார்த்து எழுதுவீங்களா சார்? எழுதுவீங்களா சார்?’ என்று இரயிலோடேயே ஓடி வருகிறான். கண்களில் நீர் நிறைய முகத்தை மூடிக் கொள்ளுகிறான் கதைசொல்லி. இதுதான் நாடகத்தின் கருப்பொருள்.
கதைசொல்லியின் பாத்திரமேற்றுத் தனிநபராக மேடையில் நின்று ஆப்பிரிக்கப் பயண அனுபவத்தைப் பார்வையாளர்கள் கண்முன் விரித்தார் கூத்துப்பட்டறை நடிகர் பாபு (எ) கணபதி ஹரிகரன். நறுக்கு மீசை, மிடுக்கு நடை, ஒல்லியான உடல், அறுபதுகளின் இளைஞர்களுக்கான தோற்றம் என மேடையை வித்தியாசமாய் அலங்கரித்தார் அவர்.
தனிநபர் நாடகங்களில் நடிகன் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் அதிகம். கதைசொல்லி, நாயுடு, நாயர், முலைகள் வெளித்தெரிய நடமாடும் நாயுடுவின் மனைவியாகிய கருப்பரின காப்பிரிப் பெண் என பல பாத்திரங்களைப் பிரதிபலிக்க வேண்டிய கடப்பாடு நடிகருக்கு இருந்தது. ஆனால் அப்பாத்திரங்களுக்கிடையிலான முகபாவனை, மொழி வெளிப்பாடு, உடல்மொழி என மிக நுட்பமாக வேறுபாடுகளைக் கணகச்சிதமாகவே வெளிப்படுத்தினார் நடிகர் பாபு. மிக எளிய அசைவுகள், நாடக மேடைப் பயன்படுத்தம் என்றிருந்த போதிலும் காட்சியைக் கண்முன் எழுப்புவதில் வெற்றிபெற்றிருந்தார் நடிகர் பாபு.
இந்திய விடுதலையின் மீதான தேசிய இயக்கத் தலைவர்களின் கற்பிதம், விடுதலைக்குப் பிந்தைய யதார்த்த நிலை என அவலத்தைக் காட்சிப்படுத்திய சுந்தர ராமசாமியின் சிறுகதையினை அட்சரம் பிசகாமல் அப்படியே வெளிப்படுத்தியிருந்தார் பாபு. ஒரு நடிகன் தன்னைத் தானே இயக்கிக் கொள்வது என்பது மிகுந்த சவாலுக்குரிய பணி. அதைச் சிறப்புறவே செய்திருந்தார் அவர்.
அக்கரை சீமையில் நாடகத்தைத் தொடர்ந்து நடத்தப்பெற்ற நாடகம் ‘பிரசாதம்’. சுந்தரராமசாமியால்1958 இல் எழுதப்பட்டு, சரஸ்வதி இதழில் வெளிவந்த சிறுகதையின் நாடக வடிவம் இது. பார்வையாளர்களால் மிகவும் இரசித்துப் பார்க்கப்பட்ட நாடகத்தில் இதுவும் ஒன்று என்பதனை அடித்துச் சொல்லலாம். கூத்துப்பட்டறையின் நிறுவனர் ந.முத்துசாமி இந்நாடகத்தை இயக்கியிருந்தார்.
எழுபத்து மூன்று நாற்பது(7340- அடையாள எண்) ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். தன் பதினொரு வருட தாம்பத்ய வாழ்க்கைக்குப் பிறகு பிறக்கும் பெண் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடத் தன் மனைவி கேட்ட ஐந்து ரூபாய்க்காக கேஸ் பிடிக்கக் காத்திருக்கிறான். வேறு யாரும் அகப்படாத நிலையில், தபால் பெட்டியிலிருந்து தவறுதலாகக் கைக்கு வந்த கடிதத்துடன் அகப்படும் கிருஷ்ணன் கோயில் அர்ச்சகரை மடக்குகிறான். அவருடைய தண்டனைக்குரிய குற்றத்தை விளக்கப்படுத்திய கான்ஸ்டபிள், அவரை மேலதிகாரியிடம் சொல்லி விடுவிக்க ரூபாய் ஐந்து லஞ்சம் கேட்கிறான். தரவில்லையானால் இன்ஸ்பெக்டரிடம் அழைத்துச் சென்று தண்டனை வாங்கித் தர வேண்டியிருக்கும் என்கிறான். ஐந்து ரூபாய் இல்லையென மறுக்கும் அர்ச்சகர், கான்ஸ்டபிளுடன் போலீஸ் ஸ்டேசன் வர ஒப்புக் கொண்டு புறப்படுகிறார். கான்ஸ்டபிள், இனிமேல் பணம் பேராது என்பது உறுதியாகத் தெரிந்தவுடன் பாதியில் அர்ச்சகரைக் கழற்றிவிடப் பார்க்கிறான். அர்ச்சகர்’ வாடா போகலாம்’ என்கிற ரீதியில் பேசுகிறார். இறுதியில் எல்லாம் தன் குழந்தையின் பிறந்தநாளுக்குத் தேவைப்படும் ஐந்து ரூபாய்தான் காரணம் என்கிறார் கான்ஸ்டபிள். குழந்தை பிறந்தநாள் அன்று கோவிலுக்கு அழைத்துவரச் சொல்லி ஐந்து ரூபாயும் கொடுக்கிறார் அர்ச்சகர் என்று முடிகிறது சிறுகதை.
அர்ச்சகராக பாபுவும் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக சாந்த குமாரும் பிற சில்லறை வேடங்களில் வருபவராக சோமசுந்தரமும் நடித்தார்கள். கூத்துப்பட்டறையின் மூன்றாம் கட்ட நடிகர்கள் இவர்கள். கூத்துப்பட்டறையின் பல்வேறு நாடகத் தயாரிப்புகளில் பங்கேற்ற அனுபவம் மிக்கவர்கள்.
கருத்தரங்க அரங்கின் இரு தளங்களையும் நாடகத்திற்கு மிகச் சரியாகவே பயன்படுத்திக் கொண்டார்கள் நடிகர்கள். அரங்கப் பொருட்கள், மேடை அமைப்பு என்று எவ்விதமான மாற்றங்களும் செய்யாமல் முழுக்க முழுக்கத் தங்களின் உடல்மொழியால் அரங்கை மாற்றினார்கள்.
கிருஷ்ணன் கோயில் அரச்சகராக நடித்த பாபுவின் உடல் மொழி அபாரமானது. கான்ஸ்பிளைக் கண்டு அஞ்சுவதும், பிறகு தனது செயல்களுக்கெனக் குமைவதும், அப்பால் தன் நேர்மையை நிரூபிக்கக் கான்ஸ்டபிளையும் வலுக்கட்டாயமாக இழுப்பதும், கான்ஸ்டபிளின் கள்ளத்தனத்தை அறிந்து எள்ளி நகையாடுவதும், இறுதியில் இரக்கப்பட்டுக் கான்ஸ்டபிளுக்கு ஐந்து ரூபாய் அளித்து, அதைக் கடனாகத்தான் அளித்துள்ளேன் எனப் பகடி செய்வதுமாகப் பல்வேறு உணர்வுத் தளங்களில் இயங்குபவர் அர்ச்சகர். இப்பாத்திரத்தினை நிறைவாகவே செய்தார் பாபு.
கான்ஸ்டபிள்-7340, தன் குழந்தையின் பிறந்தநாளுக்காக ஏதாவது சிறிதளவு பணம் சேர்த்து விடத் தவியாய்த் தவிப்பவன். யாராவது அகப்பட மாட்டார்களா என ஏங்குகிறவன். அகப்பட்ட அப்பாவியிடம் தன் காவல்துறை அதிகாரத்தைக் காட்ட முயற்சிப்பவன். எப்படி உருட்டி மிரட்டியாகிலும் ஐந்துரூபாயாவது பெற்றிடப் பகீரதப் பிரயத்தனம் செய்பவன். ஒரு சல்லிக்காசு கூடப் பெறாது என்பது உறுதியான அந்த கணத்திலேயே தன் கைதியை நடுத்தெருவில் கைவிட்டுவிடத் துணிபவன் என ஏராளமான நடிப்பு வேண்டும் பாத்திரம் இது. வசந்தகுமார் இப்பாத்திரத்தை மிகவும் சரியாகவே செய்தார்.
பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பும் சிறுகதையினை ஏற்கனவே படித்திருந்தோர் அக்கூட்டத்தில் அதிகம் என்பதனால் எழுந்த ஆஹா ஆஹாரங்களும் நாடகத்தை இன்னும் உயரத்திற்கு எடுத்துச் சென்றன என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.
கூத்துப்பட்டறை அமைப்பும் நடிப்பு முறைமையும் நடிகர்களும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்கொண்ட விமர்சனங்களைச் சற்றே நினைவுபடுத்திக் கொள்வோம். கூத்துப்பட்டறை நடிகர்கள் நேராக நின்று இயல்பாகப் பேசுதல் என்பது கற்புக் குறைபாடுடைய செயலாகவே கருதினர். உடலை வளைத்து, நாணிக் கோணி, உடலை முறுக்கிப் பேசுவதே கூத்துப்பட்டறை பாணி என்றிருந்தது. ந.முத்துசாமியின் நவீன நாடக நடிகன் உருவாக்கம் அவ்வாறே தமிழ் அரங்க உலகில் பதிந்து போயிருந்தது. அவர் உருவாக்கிய மிகச் சிறந்த நடிகர்கள் –பசுபதி, கலைராணி தவிர ஏனையோர் – தமிழ்த் திரை உலகின் எதார்த்த நடிப்புலகிற்குள் ஒட்டமுடியாத அந்நிய மன, உடல் இயல்பைப் பெற்றிருந்தார்கள். எதார்த்த நடிப்பில் ந.முத்துசாமியின் நடிகர்கள் தோல்வியையே தழுவினார்கள். இதுவும் கூட எதார்த்த நடிப்புமுறைமை குறித்த பரிசீலனை ஏற்படவும் அதில் சோதனை செய்து பார்க்கவும் பட்டறைக்கு வழி திறந்திருக்கும் எனலாம். பிற்காலத்தில் ந.முத்துசாமியும் அவருடைய நடிகர்களும் எதார்த்த நடிப்புமுறைமைக்குள் வரத் தொடங்கினர். நாடக மேடைகளில் உச்சம் தொட்டவர்களும் திரை உலகில் மின்னியவர்களும் மின்னி மறைந்தவர்களும் எனக் கூத்துப்பட்டறையின் உலகம் வித்தியாசமாக விரிந்து கிடக்கிறது.
பாபுவும் வசந்தகுமாரும் சோமசுந்தரமும் கூத்துப்பட்டறையின் எதார்த்த நடிப்பு முறைமையின் அடையாளக் கண்ணிகள். அந்த அடிப்படையில் தங்கள் பணியை நிறைவாகவும் திருப்தியுடனும் செவ்வனே நிறைவேற்றிப் பார்வையாளர்களின் ஏகோபித்த கரவொலியை அள்ளிச் சென்றனர் எனலாம். அக்கரை சீமையிலே, பிரசாதம் என்ற இவ்விரு சிறுகதையின் அமைப்பு, சொல் முறைமை, காட்சிச் சித்தரிப்பு என எதனையும் நாடக வடிவத்திற்காகச் சிறிதளவுகூட மாற்றவில்லை நாடக இயக்குநர்கள். ஒருவகையில் சிறுகதை முன்வைக்க விரும்பும் உணர்வொழுங்கை எவ்விதக் கேள்விக்கும் உட்படுத்தாமல் அப்படியே காட்சியாக்கித் தருவது முக்கியமானதுதான். அதனாலேயே இந்த இரு சிறுகதை-நாடக ஆக்கங்களும் வெற்றிபெற்றிருக்கின்றன என்று சொல்ல வேண்டும்.
சுந்தரராமசாமி தனது முப்பது வயதுகளில் எழுதிய இவ்விரு சிறுகதைகளும் சிந்தனைகளைக் கிளறுவன. பிற்காலத்தில் சுந்தரராமசாமியின் சிறுகதைகள் மேற்குறித்த சிறுகதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திசைவழிகளில் நடைபயின்றன. எனினும் அவரது சாந்தி, சரஸ்வதி காலக் கதைகள், மனித மனத்தின் நுட்பங்களையும் அது திசை மாறும் தருணங்களையும் வாழ்க்கைச் சூக்குமங்களையும் ஆழமாகப் பதிவுசெய்தன. சுந்தரராமசாமியின் கதாவிலாசத்தை மேற்குறித்த ‘அக்கரை சீமையிலே’; ‘பிரசாதம்’ ஆகிய சிறுகதைகளும் நாடக ஆக்கங்களும் மேடையேற்றங்களும் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.

No comments: