Sunday 9 October 2011

மரண தண்டனை: சில சிந்தனைகள்

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனையை 2011 செப்டம்பர் 9 ஆம் தேதி நிறைவேற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவு வெளியிடப்பட்டது.
அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தின் மீதான ஊடகங்களின் கவனக்குவிப்பில் துண்டுச் செய்தியாய் இருந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றச் செய்தியினைத் தங்களின் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள், தீக்குளிப்புகள் ஆகியவற்றால் தமிழகத்தின் எரியும் பிரச்சினையாக ஆக்க படாத பாடுபட்டுள்ளனர் தமிழ் உணர்வாளர்கள்.
தூக்குத் தண்டனையை நிறுத்திடச் செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கைவிரித்த தமிழக முதல்வர், மறுநாளே (ஆக.30) ‘தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில்’ மேற்குறித்த தூக்குத் தண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரை வலியுறுத்தித் தமிழகச் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.
ராம் ஜேத்மலானி, காலின்ஸ் கன்சால்வஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழாம் சென்னை உயர்நீதி மன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் சார்பில் வாதாடி, தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வாங்கியுள்ளனர். இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவோடு, தண்டனைக்கு உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தியாவின் குடியரசுத் தலைவர் மூன்று தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை நிராகரித்ததைத் தொடர்ந்து தமிழக அளவிலும் இந்திய அளவிலும் குறிப்பிடத் தக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்ய வேண்டும் என்பதிலிருந்து, ஒட்டுமொத்தமாகத் தூக்குத் தண்டனையை இந்திய அரசு கைவிட வேண்டும் என்பது வரை ஏராளமான விவாதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தூக்கு நிறைவேற்றப்பட வேண்டும் என்று கண்ணீரோடு அரசை மன்றாடுகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் திரு.தங்கபாலு. தூக்கில் போடத்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார் வீரத்துறவி (?) இராமகோபாலன். சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று கைகட்டி, வாய்மட்டும் திறந்து அருளுகிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் தம்பதியர். இப்படி எத்தனை எத்தனையோ குரல்கள்.
தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி, ராஜீவ் காந்தியுடன் குண்டு வெடிப்பில் பலியான 15 பேரின் குடும்பத்தினரைத் திரட்டித் தன் தொண்டரடிப்பொடிகளுடன் சென்னையில் (செப்.09) உண்ணாவிரதம் இருந்தார் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அக்கூட்டத்தில், ‘ராஜீவ் கொலையாளிகள் மூவரையும் சிறைக்குள் சென்று கொன்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் இன்று விடுதலை செய்ய வேண்டும் என்கிற அளவுக்குப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்’ என்று பேசியிருக்கிறார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நிறைவடைந்ததையொட்டி இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று அறிவித்தார் காந்தி. நேரு, பட்டேல் போன்றோர் அதற்கு உடன்படவில்லை. உழைப்பின் பயனை அறுவடை செய்ய வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். அதற்குக் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்பது அவர்களின் கணக்கு. நேருவுக்குப் பிறகு இந்திரா காந்தி காங்கிரஸ், ராஜீவ் காந்தி காங்கிரஸ் பிறகு, சோனியா காந்தி காங்கிரஸ் அடுத்த நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் ஆகிறது. இந்தப் பரிணாம வளர்ச்சியில் அது காந்தி காங்கிரஸ் என்பதிலிருந்து மாறி, கோட்ஷே காங்கிரசாக உருமாற்றம் அடைந்திருக்கிறது.
இனி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ்காரர்கள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கேட்டுப் போராட்டங்கள் நடத்துவர் என்பது வெளிப்படை.
தமிழக வெகுமக்கள் மத்தியிலும் தூக்குத் தண்டனை குறித்த பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. தமிழ் உணர்வாளர்களின் துண்டறிக்கைகளைக் கையில் வாங்கும் வெகுமக்களில் ஒவ்வொருவரும் தம் அரசியல் புரிதலுக்கேற்ப ஒரு நிலைபாட்டுக்கு வருகிறார்கள்.
இவர்களில் ஒரு சாரார், ‘இராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைத் தூக்கிலே போடப்படுவதுதானே நியாயம்? குற்றவாளிகளை விட்டுவிடுவது எப்படிச் சரி?’ என்று பேசுவோர். இவர்களுக்கு எல்லாம் ‘சட்டப்படி’ நடந்தால் சரி. இப்படிச் சட்டம் பேசும் இவர்கள், இராஜீவ்காந்தி தன் பாவத்தின் சம்பளத்தை மரணமாகப் பெற்றார் என்பதை உணராதவர்கள். இராஜீவ் காந்தியின் சவப்பெட்டியின் கடைசி ஆணி, ஸ்ரீபெரும்புதூரில் அறையப்பட்டது என்பதை அறியாதவர்கள்.
இராஜீவ் காந்தி கொலை வழக்கின் தன்மையில் ஏராளமான குழறுபடிகள் உள்ளன என்பதைப் பலர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். சிறைத் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், ‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ என்ற தனது நூலில் பல வினாக்களை எழுப்பியுள்ளார். இவ்வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுள்ள இராபர்ட் பயஸ், தான் எழுதிய ஒரு நூலிலும் இவ்வழக்கு ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு என்பதை விளக்குகிறார். வழக்கின் விசாரணைக் குழுவில் இருந்த ரகோத்தமன் எழுதிய நூல், ராஜீவ் சர்மா என்பவர் எழுதி, அண்மையில் தமிழில் வெளிவந்துள்ள ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ என்ற நூல் ஆகியவை ராஜீவ் கொலையில் உள்ள சர்வதேச சதியை அம்பலப்படுத்துகின்றன.
உலக அளவில் மட்டுமல்ல, உட்கட்சியிலும் எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்ட இராஜீவ்காந்தி இந்திய அரசியல் அரங்கின் மிக முதன்மையான தலைவர். அவருடைய கொலைத் திட்டம் மிக இரகசியமாகத்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் படுகொலைத் திட்டம், விடுதலைப் புலிகளின் தலைமைக்குத் தவிர, தனு, சிவராசன், சுபா ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும் என்பது சி.பி.ஐ யின் குற்றப்பத்திரிக்கையில் உள்ளது. எனில், சதிச் செயல் தெரியாத பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட் பயஸ் உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள் அல்லர்.
இராஜீவ்காந்தி கொலையில் கொலையாளிகளுக்குத் தங்க இடம் கொடுத்தோர், ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் ஏற்பாடு செய்தோர், கொலையாளி பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, இராஜீவை நெருங்க உதவியோர், கொலைக்குப் பிறகு கொலையாளிகள் தப்பிச் செல்ல உதவியோர், பங்களூருவில் தங்க ஏற்பாடு செய்தோர், தமது அகில இந்தியத் தலைவரைத் தனியே அனாதை போல் பொதுக்கூட்ட மேடைக்கு நடந்து செல்ல விட்டுவிட்டுப் பாதுகாப்பாக மகிழ்வுந்தில் அமர்ந்திருந்த காங்கிரஸ் பெருந்தலைவர்கள் என ஒருநூறு காங்கிரஸ்காரர்கள் விசாரிக்கப்படவில்லை.
இவ்வாறு ஆயிரம் சந்தேக வினாக்கள் வழக்கில் தொக்கி நிற்கும் போது, அவசரம் அவசரமாக 26 பேருக்குத் தூக்கு. பிறகு, 19 பேர் விடுதலை. 4 பேருக்குத் தூக்கு. நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட சூழலில் மூவருக்குத் தூக்கு. அதை 21 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றத் துடிப்பது என செயல்பாடுகள் உள்ளன.
‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால் ஒரு நிரபராதி கூடத் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்ற இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கருணை முகம்(!) என்னவாயிற்று? பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கில் எப்படி இவ்வாசகம் நினைவுக்கு வராமல் போயிற்று? இந்த செலக்டிவ் அம்னீஷியா (தேர்ந்தெடுத்த மறதி அல்லது திட்டமிட்ட மறதி) பொதுமக்களைப் பீடித்திருப்பதற்கு என்ன காரணம்?
‘இராஜீவ்காந்தி கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை இரத்து செய்வது என்று கோருவது கூட ஒருவகையில் சரி. அப்படியானால் அப்சல் குருவையும் விடுவிக்கச் சொல்லிச் சொல்லுவீர்களா?’ என்று வினா எழுப்பும் தேசபக்தர்களும் உள்ளனர். இவர்கள் இந்தியக் குற்றவியல் சட்டங்களிலும் இந்திய நீதி மன்றத்தின் நடைமுறைகளிலும் வழக்கினைப் பதியும் காவல்துறையினரின் செயல்பாடுகளிலும் மிகுந்த நம்பிக்கையும் திருப்தியும் கொண்ட வெகுமக்கள் பிரிவினர். இவர்கள்தான், ‘பேப்பர்லயே போட்டுட்டான்’ என்று சொல்லி அச்சில் வந்தாலே அதுதான் உண்மை என்று வாதிடும் வகையினர். இவ்வகையினர்தான் இந்தியப் பொதுப்புத்தியினரின் பெரும்பகுதியினர்.
மும்பையில் காகிதங்கள் பொறுக்கி விற்று வயிறு பிழைத்து வந்த ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மீது ஒரு இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இவருக்கு நீதிமன்றத்தின் ஆங்கிலமும் மராத்தியும் புரியாத சூழலில் ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனைக் காலத்தை அனுபவித்து விடுதலையாகித் தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகிறார். அதற்கும் சில ஆண்டுகள் கழித்து, வழக்கைத் தயாரித்த மும்பை காவலர்களில் ஒருவர் ‘கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாத சூழலில், தெருவில் பேப்பர் பொறுக்கி வாழ்ந்த ஒரு தமிழ்நாட்டுக்காரனைப் பிடித்துப் பொய்க்குற்றம் சுமத்தித் தண்டனை வாங்கித் தந்தோம். அந்த பாதகச் செயல் இறக்கும் தருவாயில் என்னைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகிறது’ என்று எழுதி வைத்துச் செத்தார். அக்கடிதம் வெளிவந்த பிறகு, மனித உரிமையாளர்கள் செய்யாத கொலைக்குத் தண்டனை அனுபவித்த அந்த அப்பாவிக்கு இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் இராச்சமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்தவர் அவர். அவருடைய இருப்பை உறுதிசெய்யும்படி சோளகர் தொட்டி ச.பாலமுருகன் தொலைபேசியில் கேட்க, மேற்குறித்த செய்யாத குற்றத்திற்காக முழுத் தண்டனையையும் அனுபவித்துப் பிறகு விடுதலையான அந்த அப்பாவியைச் சந்தித்து பேசும் வாய்ப்பு இக்கட்டுரையாளராகிய எனக்குக் கிடைத்தது. அந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே அந்த அப்பாவி இறந்தும் போனார்.
மேலே குறிப்பிட்டது ஒருபானைச் சோற்றிலிருந்து ஒருசோற்றுப் பதம். இந்திய நீதி மன்றங்களை உண்மை மன்றங்களாக- அற மன்றங்களாகக் கருதும் அப்பாவி வெகுமக்கள் இந்த முகத்தினைத் தரிசிக்காதவர்கள்.
எனவே இந்தியாவில் குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்றத் தாக்குதல் குழுவினர் ஆனாலும், மும்பைத் தாக்குதல் குழுவினர் ஆனாலும் மறு மறு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே வேண்டுவது.
‘மனித உயிர்’ என்ற அடிப்படையில் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வகையினரும் உள்ளனர். இவர்கள் ‘மறப்போம்; மன்னிப்போம்’ கோட்பாட்டினர். ‘இறைவன் கொடுத்ததை மனிதன் எடுக்காதிருக்கட்டும்’ என்பவர்கள். மானுட நேயத்தின் உயர்தளத்தில் சஞ்சரிப்பவர்கள் இவர்கள்.
பணவெறிக்காக ஏராளமான மனித உயிர்களைப் பலிவாங்கிய போபால் விஷவாயு புகழ் யூனியன் கார்பைட் குழுமத்தின் முதலாளியை, குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை நரவேட்டையைத் திட்டமிட்டுக் கொடுத்து ஊக்குவித்த நரேந்திரமோடியை, இன அழித்தொழிப்பைத் திட்டமிட்டுச் செய்து முடித்த சிங்களப் பௌத்த இனவெறியன் இராஜபக்ஷேவை மன்னிக்கச் சொல்லும் மெல்லிய மனமுடையவர்கள் இவர்கள்.
ஆனால் வரலாறு இந்த விருப்பங்களுக்கு மாறாக நகர்ந்து செல்லுகிறது. ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரைக் குடித்த வெள்ளை இன வெறியன் ஜெனரல் டயரின் குற்றத்திற்கு இங்கிலாந்தில் கணக்குத் தீர்த்தான் சீக்கிய இளைஞன் உத்தம் சிங். 44 தலித் பெண்களையும் குழந்தைகளையும் குடிசையிலிட்டுத் தீயிட்டுக் கொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடுவைக் காத்திருந்து பழிதீர்த்தார்கள் நக்சல்பாரிகள். இவை குற்றச் செயல்கள் ஆகுமா? மனிதத் தன்மையற்ற செயல்கள் ஆகுமா? வர்க்க எதிரிகளைத் தண்டித்தலின் உச்சமாக மரணதண்டனை இருக்கிறது என்கிறது புரட்சிகரத் தத்துவம். உலகப் புரட்சி வரலாற்றில் இவ்வகையான பதிவுகள் இரத்தக்கறை படிந்தே கிடக்கின்றன என்பதை மறந்துவிட முடியாது. மரண தண்டனையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடமே இருக்கிறது. மன்னிப்பதையும் மறப்பதையும் மரணம் அளிப்பதையும் மக்கள் மன்றமே தீர்மானிக்க வேண்டும்.
எதைக் காரணம் காட்டியும் மரண தண்டனையை விதிக்கும் அருகதை இந்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் இல்லை என்பதே நினைவில் கொள்ள வேண்டியது.
உலக அரங்கில் ட்ராஸ்கிய கம்யூனிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக மரண தண்டனைக்கு எதிரான தீர்மானங்களை மொழிந்து, அங்கீகரித்திருப்பது விவாதத்துக்கு உரியது. குறிப்பான தேசங்களுக்கேயுரிய புரட்சிக்கான செயலுத்தி, மூலவுத்தி ஆகியவற்றில் பாரிய விவாதங்களை உலகப் பொதுவுடமையாளர்கள் காத்திரமாக ஆலோசிக்கும் காலமிது. எனவே மரண தண்டனை குறித்த விவாதங்களும் மேற்கிளம்புவதில் வியப்பில்லை.
இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியும் செய்யாத குற்றத்திற்காக 21 ஆண்டுகளாய் தனிமைச் சிறையில் சொல்லொண்ணாத் துயரை அனுபவிக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் மட்டுமல்ல, ஆயுள்தண்டனைக் காலம் முடிந்தும் அநியாயமாகச் சிறைவைக்கப்பட்டிருக்கும் நளினி உட்பட்ட பிறரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியதன் ஒரு எதிர்விளைவே இராஜீவ் கொலை. மேற்குறித்த மூவரின் மரண தண்டனை நிறைவேற்றம் என்பது தமிழ்தேசியத்தின் மீதான இந்திய தேசியத்தின் அப்பட்டமான ஒடுக்குமுறைச் செயல்பாடே. இனவுரிமை, மொழியுரிமை, வாழ்வுரிமை, இறையாண்மை எனப் பல்வேறு நிலைகளில் போராடும் உணர்வுள்ளோரை அச்சுறுத்தும் முயற்சியே இது.
ஆங்கில ஏகாதிபத்தியம் கயத்தாறு புளியமரத்தில் பொது மக்கள் முன்னிலையில் கட்டபொம்மனைத் தூக்கிலிட்டது போராடும் வலிமை மிக்க மக்கள் திரளை அச்சுறுத்தவேயாம். சதாம் உசேனைத் தூக்கிலிட்டது உலக அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்க்கும் தேசத்திற்கும் தேசியத் தலைவர்களுக்கும் என்ன கதி கிடைக்கும் என்பதை அச்சுறுத்தி அறிவிப்பதற்காகவேயாம். அவ்வாறே இம்மூவர் தூக்குத் தண்டனையும் குற்றவியல் சட்ட நடைமுறைகளையும் தாண்டி, வல்லாதிக்க முகத்தைக் காட்டும் நோக்கம் கொண்டது.
21 ஆண்டுகளாகத் தன் மகனுடைய விடுதலைக்காகப் போராடும் இலட்சியத் தாய் அற்புதம் அம்மாள் சிந்திய கண்ணீர் ஏராளம். 26 தூக்குத் தண்டனைக் கைதிகளில் 19 பேரைக் குற்றமற்றவர்கள் என்று உச்சநீதிமன்றம் விடுவிக்க நடந்த சட்டரீதியான மற்றும் வெகுமக்கள் போராட்டத்தில் அற்புதம் அம்மாளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. வழக்கு தொடர்பான ஆவணங்களை, கோப்புகளைச் சுமந்து கொண்டு சிறை வாயில்களில் காத்துக்கிடந்த, நீதி மன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிச் சலித்த, தமிழக மக்களின் பாராமுகத்தையும் உணர்வாளர்களின் கொந்தளிப்பையும் மாறி மாறித் தரிசித்துக் குழம்பிய அந்த வெள்ளித் தலை மனுசி இனியேனும் ஒரு துளிக் கண்ணீர் கூடச் சிந்தக் கூடாது. குயில்தாசன்-அற்புதம் அம்மாள் தம்பதியினர் தன் மகனின் விடுதலைக்குப் பிறகு, அவருடன் நிம்மதியான வாழ்க்கை வாழ இந்தப் புவி இடம் தர வேண்டும்.
‘எனக்கல்ல
என் சந்ததிக்கேனும்
-தப்பித்தல் அல்லாமல்-
விடுதலை எப்போது பூக்கும்?’
-நூற்றாண்டுத் தலைமுறைக்கேள்வி மனதைக் குடைகிறது.

No comments: