Sunday, 9 October 2011

குதிரை முட்டை

இத்தாலி நாட்டில் பிறந்து சமயப் பணிக்காகத் தமிழ்நாட்டுக்கு வந்து, பணிநிமித்தம் தமிழ் கற்றுத் தமிழிலேயே தன்னைக் கரைத்துக்கொண்ட வீரமாமுனிவர் என்னும் ஜோசப் பெஸ்கி எழுதிய ‘பரமார்த்த குரு கதைகள்’ குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாகும். அக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன நாடகச் செயல்பாட்டாளர்களான அனீசும் சண்முகராஜாவும் இணைந்து உருவாக்கிய நாடகப் பிரதி ‘குதிரை முட்டை’.
‘பரமார்த்த குரு கதைகள்’ வீரமாமுனிவரால் தமிழில் எழுதப்பட்டுப் பிறகு இலத்தீனில் அவராலேயே மொழி பெயர்க்கப்பட்டது. இக்கதைகளைத் தனது ‘தமிழ்-இலத்தீன் அகராதி’யின் இரண்டாம் பின்னிணைப்பாகவே முனிவர் முதலில் வெளியிட்டுள்ளார். தமிழக மக்களுக்கு அறிமுகமான கதைகளுடன் தாம் ஒருசில கதைகளைச் சேர்த்து வழங்குவதாகவும் நகைச்சுவை கலந்த இக்கதைகளைப் படிப்பதன் மூலம் பேச்சுத் தமிழைக் களைப்பின்றிக் கற்கலாம் என்று தாம் நம்புவதாகவும் பின்னிணைப்பின் முன்னுரையில் முனிவர் கூறுகின்றார்.
1822 மற்றும் 1861 இல் இலண்டனிலும் 1845,1851, 1859, 1865 ஆகிய ஆண்டுகளில் புதுச்சேரியிலும் 1871 இல் சென்னையிலும் 1877 இல் பங்களூருவிலும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. பிரெஞ்சு, ஜெர்மன், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்நூல் அப்போதே பெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘முனிவரின் நூல்களுள் மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற நூல் இதுவே என்பதில் ஐயமில்லை’ என்பார் அமுதன் அடிகள் (இத்தாலி நாட்டு வித்தகத் தமிழர்;1995:160).
வீரமாமுனிவர் தம் காலத்தில் வாழ்ந்த வைதீக சமயத் துறவிகளை இகழ்வதற்காகவே இந்நூலை எழுதினார் எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். அன்றைய மடத்தலைவர்களின் மடத்தனம் இந்தியத் துணைக்கண்டம் மட்டுமல்லாது வெளிநாட்டுக்காரர்கள் மத்தியிலும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. ‘பிச்சைக்காரர்களும் பாம்புகளும் சாமியார்களும் மண்டிக்கிடப்பதே இந்தியத் துணைக்கண்டம்’ என்பதான பார்வை மேலை நாட்டினருக்கு இருந்தது. பிச்சை எடுத்துண்ணும் சாமியாரிலிருந்து வலுவான மடத்தை அமைத்துக் கொண்டு கோடிக்கணக்கான சொத்துக்களை நிர்வகித்துக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்த சாமியார்கள் வரை யாவரும் இந்நிலப்பரப்பில் ‘சாமி’யாக அறியப்பட்டனர். காவியுடுத்திய சாமிமார்கள் அனைவருமே மடம் கட்டி நிலைபேறுடைய வாழ்க்கை வாழுவதைக் கனவு கண்டனர். தம்மைச் சுற்றிலும் சிஷ்டகோடிகளைச் சம்பாதித்துக் கொண்டு, அருள் பாலித்துக் கொண்டு இருக்கவே விரும்பினர். அத்தகைய சாமிகள், தங்களைக் குருவாக உருமாற்றிக் கொண்டதையும் அவர்கள் தம் சீடர் பரம்பரையையும் இகழ்வதற்கே வீரமாமுனிவர் ‘பரமார்த்த குரு கதைகள்’ எழுதினார் என்போருளர்.
இன்னும் சிலர், முனிவர் தம் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்த சபைக் குருக்களை இகழ்வதற்காகவே எழுதினார் என்பர். குருவின் குணாம்சங்கள், சீடர்களின் தன்மை அனைத்தும் அவர்களையே குறிப்பன என்பர்.
எப்படியோ, வீரமாமுனிவர் தமிழ் மண்ணில் வழங்கப்பட்டு வந்த சில கதைகளைத் தாமே கையில் எடுத்துச் சிற்சில மாற்றங்களைச் செய்து நல்லதொரு நகைச்சுவை நூலாக்கியிருக்கிறார்.
பரமார்த்த குருவும் அவருடைய சீடர்கள் மட்டி, மடையன், மூடன், பேதை, மிலேச்சன் ஐவரும் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட சம்பவங்களை மிகவும் நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார் முனிவர். ஆற்றைக்கடக்கப் பட்ட பாடு, குதிரை முட்டை வாங்கிய கதை, வாடகைக்கு மாடு பிடித்த கதை, தூண்டில் போட்டுக் குதிரை பிடித்த கதை, குரு குதிரைச் சவாரி செய்த கதை, குதிரைக்கு வரி கேட்ட கதை, அந்தணன் காலக்கணிதம் கூறிய கதை, குதிரை மேலிருந்து விழுந்த கதை, குருவைப் புதைத்த கதை என பல்வேறு துண்டுகளாக நகைச்சுவைக் கதைகளை வீரமாமுனிவர் படைத்துள்ளார்.
வீரமாமுனிவரின் கதைப் பிரதியினை இணைப்பிரதியாகக் கொண்டு, தமிழக நாட்டார் கதைகள் சிலவற்றையும் பொருத்தி நாடகப் பிரதியை உருவாக்கியிருக்கின்றனர் ஆசிரியர்கள். நவீன குறிப்பாக, பரமார்த்த குரு தனது மடத்தில் பணியாற்றுவதற்கான சீடர்களைத் தேடிச் சென்று கண்டடையும் பகுதி மிகவும் குறிப்பிட்டுப் பேசத் தகுந்தது. கதை நெடுகிலும் வரும் மட்டி, மடையன், மூடன், பேதை, மிலேச்சன் ஆகியோரது பாத்திரத் தன்மைக்கேற்ற நாட்டார் நகைச்சுவைக் கதைகள் மிகச் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை போன்ற இணைப்புகள் இப்பிரதியை முற்றுமுழுதான தமிழ் நாட்டார் பிரதியாக உருவாகிட பெரும் கையளிப்புச் செய்துள்ளன.
நாடக மேடையாக்கத்திலும் குறிப்பிட்டுப் பேசத்தக்க பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன. நாடகத்தின் முதற்காட்சியான பரமார்த்த குரு கனவுக்காட்சி வருவதுரைக்கும் உத்தியைக் கொண்டிருக்கிறது. இந்திய புராண, இதிகாச, இலக்கிய வெளிப்பாடுகளில் வருவதுரைக்கும் உத்தி, மிக முக்கியமான வெளிப்பாட்டு முறைமை ஆகும். இது இலக்கியப்பிரதியின் சுவை கூட்டுவதற்குப் பயன்படுவது உண்டு. அச்சுவை நகைச்சுவையாகவோ, அவலச்சுவையாகவோ அமையலாம்; அதுவேறு. அதேபோன்ற வருவதுரைப்பது, பரமார்த்த குருவின் கனவினூடாக நாடகத்தில் முன்வைக்கப்படுகிறது.
நாடகத்தில் பயன்படுத்தப் பட்டிருந்த நிழல்காட்சிகள் நாடக ஆக்கத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றன. அரங்கிற்கு முன் நிற்கும் நடிகன் காட்சி ரூபமாக வெளிப்படுகிறான். அவனே அரங்கில் பார்வையாளர் பகுதியிலிருந்து மறையும் போது நிழல் ரூபமாக வெளிப்படுகிறான். இந்த மாற்றங்களும் அசைவுகளும் பார்வையாளனின் விழிப்புலனுக்கு விருந்தளிப்பதாக – அதன் காரணமாகவே சோர்வு தட்டாததாக- அமைந்திருந்தன. மராட்டிய மரபிலிருந்து வந்தவர்களே தமிழகத்தின் பாவைக்கூத்து, தோற்பாவைக்கூத்து ஆகிய நிகழ்த்து கலைகளைத் தமிழக நாட்டார் பார்வையாளர்களிடம் சேர்த்தவர்கள். அவர்களின் பாவை உருவாக்கத்திலும் அசைவுகளிலும் குரலிலும் இருக்கும் சத்தான பகுதிகளை நாடகம் அப்படியே உட்கிரகித்துக் கொண்டு பலகீனப்படுத்தாமல் சத்துடனேயே வெளிப்படுத்தியது.
நாடகத்தின் இசை தனித்துப் பேசத் தக்கது. தெம்மாங்குக் குரலிசை, தவில், நாயனம் உள்ளிட்ட நையாண்டி இசை நாடகத்திற்கு ஒரு தெக்கத்தித் தன்மையை அளிக்கின்றன. நாட்டார் பாடல்களும் சொற்கட்டுகளும் நாடகத்தின் இணைப்பிரதிகளாக அமைந்திருக்கின்றன. நாடகம் முழுவதும் தனித்து ஒலிக்கும் பாடகரின் குரலைப் பின்தொடரும் இசை வலு நாடக நடிகர்களிடம் குறைவாகவே காணப்பட்டது. இது இக்குழுவினரின் பிரச்சினை மட்டுமன்று. தமிழகத்தில் மரபிலிருந்து தாக்கம் பெற்று வரும் நாடக வெளிப்பாடுகள் அனைத்துமே- நடிகர்கள் அனைவருமே எதிர்நோக்கும் பிரச்சினைப்பாடேயாம்.
மேற்கத்திய நடிப்பு முறைமை அல்லது பயிற்சியினூடாக மேடையேறும் தமிழ்நடிகன் உடலைத் தயாரித்திருக்கும் முறைமை அலாதியானது. குரல் பயிற்சியும் கூட வியப்பளிக்க வைப்பதே. ஆனால் இசைக்குக் குறிப்பிடத்தக்க இடமளித்திருக்கும் தமிழ்மரபில் நவீன நாடக நடிகன் பெற்றிருக்கும் இலயம் தொடர்பான பயிற்சிகள் கேள்விக்குரியனவே. உடலில் வெளிப்படும் அபாரமான இலயம் குரலில் வெளிப்படாமல் போவது பல நாடக ஆக்கங்களில் உறுத்தலாக அமைவது உண்டு. குதிரை முட்டை நாடக நடிகர்களும் இச்சிக்கலில் ஆட்பட்டிருந்தமை கண்கூடு.
குதிரை முட்டை நாடகத்தில் பங்கேற்ற நடிகர்களின் உடல்மொழி அலாதியானது; தனித்துக் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியது. மெய்ப்பாடு என்பதன் முழுமையான பொருளை இந்நடிகர்களின் வெளிப்பாடு உணர்த்தியது. இன்னொசென்ஸ் என்பதனை முகபாவனைகளில் மட்டுமின்றி உடல்மொழியிலும் நிலைகளிலும் அசைவுகளிலும் நடிகர்கள் வெளிப்படுத்தியவிதம் சிறப்பானது.
இந்த நாடக அரங்காற்றுகையை இரு இடங்களில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முதல் அரங்காற்றுகை புரிசை கண்ணப்பத் தம்பிரான் நினைவு விழாவில். இரண்டாம் அரங்காற்றுகை காலச்சுவடு ஒருங்கிணைத்த சு.ரா 80 நிகழ்வு கன்னியாகுமரியில். இரு அரங்காற்றுகையிலும் இரு வேறு நடிகர்கள் பரமார்த்த குரு பாத்திரத்தினை ஏற்றிருந்தனர். முதல் அரங்காற்றுகையில் குருவாகப் பங்கேற்றிருந்த முருகனின் நடிப்பும் லாவகமும் நன்றாகவே இருந்தது. ஆனால் இரண்டாம் ஆற்றுகையில் பங்கேற்ற நெய்தல் கிருஷ்ணன் உடல்மொழி முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. முன்னவர் நடிப்பை முறையாகக் கற்றுக்கொண்டு மேடையேறிய நவீன நாடக நடிகர். அதனால் நடிப்பு முறைமைகள் உத்திகள் நுட்பங்கள் ஆகியன அவருடைய நடிப்பில் வெளிப்பட்டன. அவர் மேடையில் பரமார்த்த குருவாக நடித்தார். ஆனால் பின்னவர் நடிப்பை முறையாகக் கற்றவரல்லர். அனேகமாக நெய்தல் கிருஷ்ணன் பங்கேற்கும் முதல் முழுநீள நாடகமாக இந்நாடகமே இருக்கும் என்று நினைக்கிறேன். அவருடைய உருவப் பொருத்தம் மிகச் சரியாகப் பாத்திரத்திற்குப் பொருந்தியது என்பது குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டியது. அதிலும் பார்க்க அவரிடமிருந்த நடிப்பைக் கற்றுக்கொள்ளாத இன்னொசன்ஸ் பாத்திரத்தின் இன்னொசன்ஸ்டன் இயல்பாக ஒன்றிக் கரைந்து பாத்திரத்திற்குப் புதுவிதமான சோபையைத் தந்தது. எனவே அவருடைய நடிப்பு வலிந்து பெறப்படாதாக இருந்தது. முறையான நடிப்புப் பயிற்சியினைப் பெற்றிராத நெய்தல் கிருஷ்ணனிடமிருந்து அற்புதமான நடிப்பை வெளிக்கொண்டு வந்த நாடக நெறியாளுனர் சண்முகராஜாவை இதற்காகப் பாராட்டியேயாக வேண்டும்.
அரங்க அமைப்பும் அரங்கப் பொருட்களும் அர்த்தச் செறிவுள்ளதாக இருந்தன. நாடகத்தில் பயன்படுத்தப்படும் சின்னச் சின்ன பொருட்களும் நாடகத்தின் பிரதிக்கும் வெளிப்பாட்டு முறைமைக்கும் அது உருவாக்க முனையும் கொண்டாட்ட மனநிலைக்கும் வலுச்சேர்ப்பனவாக இருந்தன.
தமிழகக் கல்வி முறைகுறித்தும் இன்றைய அறிவார்ந்த விழிப்புக் குறித்தும் வெளிப்படையாகப் பேசாமலேயே பல்வேறு சமகால அர்த்தங்களைக் கற்பிக்கிறது இந்நாடகம். வீரமாமுனிவர் காலத்திய கல்வி முறையிலிருந்து தமிழ்நாடு முற்றிலுமாக மாறிவிடவில்லை என்பது நாடகத்திற்கான அழுத்தமான சமகாலத் தன்மையை அளிக்கிறது.
புதிதாக நாடகம் பார்க்க வரும் தமிழ்ப் பார்வையாளனை வசீகரிக்கும் நாடகத் தயாரிப்புகள் தமிழ்நாட்டில் அருகிவிட்டன. நவீன நாடகங்கள் என்றாலே ‘மண்டை வீங்கிகள்’ பார்ப்பது என்று சராசரியான பார்வையாளன் ஒதுங்கி விடுகிறான். நாடகம் பார்க்க வரும் பார்வையாளனை விரட்டியடிப்பது நவீன நாடகத்தில் தொடர்ந்து வருகிறது. பார்வையாளனைத் தக்க வைக்க எந்த முயற்சியும் செய்யப்படுவதில்லை. அதனாலேயே நவீன நாடகம் குறுங்குழுவுக்கானதாகத் தன் எல்லையைச் சுருக்கிக் கொண்டு விட்டது.
ஆனால் ‘குதிரை முட்டை’ மேற்குறித்த தன்மையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. புதிதாய் நாடகம் பார்க்க வரும் பார்வையாளனுக்குத் தாராளமாக ‘குதிரை முட்டை’யைப் பரிந்துரை செய்யலாம். பார்வையாளனை அடுத்த நாடகத்தையும் பார்க்கத் தூண்டும் ஈர்ப்பு இந்நாடகத்தில் இருக்கிறது. அது பாராட்டப்பட வேண்டியது. பார்வையாளர்களை நவீன நாடகம் தேடிச் செல்லவேண்டும் என்பதைத் தனது அரங்கக் கோட்பாடாகவும் செயல்பாடாகவும் கொண்டிருக்கிற சண்முகராஜா, தனது பரிசோதனையில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இறுதியாய் ஒன்று. தமிழ்ச்சூழலில் கொண்டாட்ட மன நிலையில் நாடகம் பார்த்து வெகுநாளாயிற்று. ‘குதிரை முட்டை’ நாடகம் முடிவுற்றபோது மனதில் தங்கிய மகிழ்ச்சி வெகுநேரம் வரை அப்படியே தங்கியிருந்தது. அவலம் நிறைந்த வாழ்வில் எப்போதாவது தானே மகிழ்ச்சி பூக்கிறது. அப்படியான அரிதானதொரு தருணத்தை இறுகப் பொத்திய கைகளிலிருந்து நம் கைகளில் நேயத்துடன் அளித்துச் செல்கிறது ‘குதிரை முட்டை’.

மு.வரதராசனார் நூற்றாண்டு:

எனது பள்ளிப்பருவத்தில் படிக்கக் கிடைத்த நூல்களில் ஒன்று மு.வரதராசனாரின் ‘கரித்துண்டு’ நாவல். தமிழ்ப் பாடநூல்களிலும் துணைப்பாடக் கதைகளை மட்டும் உடனே வாசித்துவிடுகிற கதைப்பித்து அப்போதே இருந்தது எனக்கு. எனது மூத்த சகோதரி பி.லிட் படிப்பில் சேர்ந்திருந்தார். அவருக்குப் பாடமாக வைக்கப்பட்ட தற்கால இலக்கியங்கள் பகுதியில் மு.வ.வின் ‘கரித்துண்டு’ இடம்பெற்றிருந்தது. அப்படித்தான் அந்த நூல் எனக்குப் படிக்கக் கிடைத்தது. பள்ளிப்பருவ நாட்களில் நான் படித்திருந்த ராஜேஷ்குமார், ராஜேந்திர குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் வகையறாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நாவலாதலால் என்னை மிகவும் வசீகரித்திருந்தது அந்த நாவல். பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு, மு.வ.வின் பிற நாவல்களைப் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் ‘கரித்துண்டு’ மனதின் ஓரத்தில் மீண்டும் வாசிக்க வேண்டிய ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டே இருந்தது.
மு.வரதராசனார் பேராசிரியராக இருந்து அலங்கரித்த சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் முதுகலை பயில விண்ணப்பித்து, துறைத் தலைவர் அறையில் நேர்முகத் தேர்வை எதிர்கொண்ட போது, தலைவரின் தலைக்குப் பின்புறமாகப் புகைப்படத்தில் சிரித்தபடி இருந்தார் மு.வ.
சென்னைப் பல்கலையில் முனைவர் பட்டம் முடிக்கும் தறுவாயில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறையில் விரிவுரையாளர் பணியில் சேர வாய்ப்புக் கிடைத்தபோது, ‘எந்தத் திருப்பத்தூரு? மு.வ இருந்தாரே… அந்தத் திருப்பத்தூரா?’ என்று எனது பேராசிரியர் கேட்டார். பணி கிடைத்து பத்தாண்டு நெருங்கும் இந்த வேளை வரையிலும் திருப்பத்தூர் மு.வ பற்றி தகவல்கள் அவ்வப்போது காதில் வந்து சேர்வதுண்டு.
எப்படியோ, பள்ளிப்பருவத்திலிருந்து நாம் மு.வ வைத் தொடருகிறோம் அல்லது மு.வ நம்மைத் தொடருகிறார் என்று எனக்குத் தோன்றுவது உண்டு.
தமிழில் மு.வ யுகம், ஜெயகாந்தன் யுகம் இதெல்லாம் முடிவுற்ற ஒரு பிந்தைய காலப்பொழுதில் தமிழ்ப் புனைகதை வாசிப்புக்கு வந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். எனவே இவர்களைக் கொண்டாடிய காலம் முடிந்துவிட்டிருந்தது. ஆஹாஹாரங்கள், ஓஹோஹாரங்கள் மங்கி மறைந்து போய்விட்ட காலத்தில் இந்நாவல்களைப் படிக்கும் பாக்கியம் பெற்றிருந்தோம் யாம். ஒரு வகையில் விமர்சனத்துடன் படிப்பதற்கான சூழல் அமைந்து விட்டிருந்தது.
இந்த ஆண்டு பேராசிரியர், நாவலாசிரியர் எனப் பன்முக ஆளுமை பெற்றிருந்த மு.வரதராசனாரின் நூற்றாண்டு. இவ்வேளையில் அவருடைய எழுத்துப்பரப்பினூடாக அவரை நினைவுபடுத்திக் கொள்ளுவது அவசியமான செயல்பாடாகும்.
மு.வ. அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில், வாலஜா சாலை புகைவண்டி நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ‘வேலம்’ என்றும் சிற்றூரில் 02.04.1902 இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியினை வாலாஜா பேட்டையிலும், உயர்நிலைக் கல்வியினைத் திருப்பத்தூர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
பள்ளிப்படிப்பைத் தொடர முடியா நிலையில் வட ஆற்காடு வட்டார அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். 1932 இல் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தான் பயின்ற திருப்பத்தூர் நகராண்மை உயர்நிலைப் பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியேற்றார். ஆசிரியப் பணிக்கிடையே தொடர்ந்து பல்கலைக் கழகப் பட்டப்படிப்பையும் படித்து வந்தார். 1935 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகம் நடத்தி வந்த வித்துவான் தேர்வில் பங்கேற்று மாகாணத்தின் முதல் மாணவராகத் தேர்வு செய்யப்பட்டார். அக்காலத்தில் மாகாணத்தின் முதல் மாணவராகத் தேர்வு பெறும் மாணவருக்குத் திருப்பனந்தாள் மடம் ஆண்டு தோறும் ரூபாய் ஆயிரம் பரிசாக வழங்கும். அந்தப் பரிசுத் தொகையினைப் பெற்றார் மு.வ.
திருப்பத்தூரில் இருந்த புலவர் முருகைய முதலியார் என்பவரிடம் மு.வ. இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பள்ளியில் தமிழாசிரியப் பணி புரிந்த அதே காலகட்டத்தில் ஏராளமான தேர்வுகளை எழுதிப் பட்டங்களைப் பெற மு.வ மறக்கவில்லை. 1939 இல் பி.ஓ.எல் பட்டத்தையும், 1944 இல் எம்.ஓ.எல் பட்டத்தையும்1948 இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
பி.ஓ.எல் பட்டப்படிப்பை முடித்த கையோடு 1939 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக அமைந்தார். கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே தொடர்ந்து பட்டமேற்படிப்புக்கெனப் படித்து வந்தார். ‘தமிழில் வினைச் சொற்கள்’ என்ற பொருண்மையில் ஆராய்ச்சி செய்து எம்.ஓ.எல் பட்டம் பெற்றார். ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றது குறிப்பிடத்தக்கது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் ஆராய்ச்சி செய்து முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பெருமை மு.வ.வையே சாரும்.
பச்சையப்பன் கல்லூரியில் மோசூர் கந்தசாமி முதலியார் என்ற புகழ்பெற்ற தமிழ்ப்பேராசிரியருக்குப் பின், துறைத்தலைவர் பொறுப்பினை ஏற்றார் மு.வ. 1961முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். பத்தாண்டுகளுக்குப் பிறகு 1971 முதல் 1974 வரை மதுரைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.
மு.வ.வின் வரலாறு, பள்ளி ஆசிரியர் ஒருவர் படிப்படியாகத் பயின்று படியேறி ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான உழைப்பின் வரலாறு. துணைவேந்தர் பதவிகள் பெரும் முதலீட்டைக் கோரி நிற்கும் விற்பனைச் சரக்காக இல்லாத காலத்தில் ஒரு தமிழ்ப்பேராசிரியருக்குக் கிடைத்த அங்கீகாரமென தேடிவந்த துணைவேந்தர் பதவியை ஏற்றார் அவர்.
மு.வ. எழுதிக் குவித்த நூல்கள் பல. தமிழ்ப்பேராசிரியர் என்ற முறையில் அவர் இலக்கியப் பரப்பு குறித்தும் செல்நெறிகள் குறித்தும் தொடர்ச்சியாக ஏராளமாக எழுதி வந்தார். 1939 இல் அவருடைய முதல் நூல் வெளிவந்தது. ‘குழந்தைப் பாட்டுக்கள்’ என்பது அந்நூலின் தலைப்பாகும். குழந்தைகளுக்காகவும் தமிழ் இலக்கணத்தை எளிதாக அறிமுகப்படுத்தும் வகையிலும் தனது எழுத்துப்பணியைத் தொடங்கிய மு.வ, 1944 இல் ‘பாவை’ என்ற தன் முதல் நாவலுடன் புனைகதைப் பரப்பிற்குள் காலடி எடுத்து வைத்தார். இந்நாவலுக்கு மு.வ.வின் ‘முதல் நாவல்’ என்னும் தகுதி உண்டே ஒழிய வேறு பெருஞ்சிறப்பு ஒன்றுமில்லை என்று விமர்சகர்கள் பின்னாளில் எழுதினார்கள். ஆனால் அவ்வாறு பயணத்தைத் தொடங்கிய மு.வ.தான் அடுத்த பல பத்தாண்டுகளில் தமிழ் புனைகதைப் பரப்பின் குறிப்பிடத்தக்க செல்நெறியின் முதன்மை எழுத்தாளராகத் திகழ்ந்தார்.
உரைகள், இலக்கிய விளக்கங்கள், அறிவுரைக் கதைகள், தமிழியல் ஆய்வுப் புலம் சார்ந்த அக்கறைகள் என அவருடைய எழுத்துப் பரப்பு விரிந்து பரந்ததாக இருந்தது. ஆனாலும் தமிழ் நாவல் பரப்பில் ‘இலட்சியவாத நாவல்’ போக்கின் முதன்மையராக மு.வ. தொழிற்பட்டார்.
1.பாவை, 2.கள்ளோ காவியமோ, 3.கி.பி.2000, 4.செந்தாமரை, 5.கரித்துண்டு, 6.மலர்விழி, 7.அந்தநாள், 8.அகல்விளக்கு, 9. நெஞ்சில் ஒரு முள், 10.வாடாமலர், 11.மண்குடிசை, 12.கயமை, 13.அல்லி, 14.பெற்றமனம் என நாவல்களைப் படைத்தார் மு.வ.
‘தமிழ்ப் பேராசிரியர்களும் நல்ல நாவல் எழுத இயலும் என்று காட்டியவர் மு.வ.தான். நாவல் இலக்கியத்தில் சில புதிய மரபுகளை உண்டாக்கியவர்’(டாக்டர் ஈ.ச.விசுவநாதன்;மு.வ. கடிதங்கள்;1976) என்பர்.
மு.வ. நாவல் எழுத வந்த காலகட்டம் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான காலகட்டம் ஆகும். அதாவது அக்காலகட்டத்திலேதான் தனித்தமிழ் இயக்கத்தின் செல்வாக்கினாலும் திராவிட இயக்க எழுத்தாளர்களின் பாதிப்பினாலும் தமிழார்வம் கொண்ட ஒரு புதிய இளம் வாசகர் வட்டம் உருவாகியிருந்தது. தமிழிலக்கியத்தின் பல்வேறு போக்குகளுக்கும் வாய்ப்பிருந்த காலம் அது. இதனை நன்கு பயன்படுத்தியவர் மு.வ.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் இருந்த ஈடுபாடும் பயிற்சியும் மு.வ.வுக்கு நல்ல பின்புலமாக அமைந்தது. அவருடைய தனித்தமிழ் ஈடுபாடு அன்றைய நாவலாசிரியர்களிடமிருந்து அவரை குறித்த அளவில் வேறுபடுத்தியது. எனவே அவருக்கு முந்தைய நாவலாசிரியர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில் நாவலின் தலைப்பு, பாத்திரங்களின் பெயர்கள், உரையாடல் ஆகியவற்றில் தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினார்.
‘சென்னையில் வாழும் ரிக்ஷாகாரன் பேசுவதாக இருந்தால் கூடத் தனித் தமிழையே மு.வ. பயன்படுத்தினார். இருப்பினும் மொழிக் கலப்புடன், மயக்கந்தரும் நீண்ட சொற்றொடர்கள் இடம்பெற்ற பழைய நடையைவிட மு.வ.வின் நடை இனிய தமிழில் எளிய நடையாக அமைந்தமையால் வாசகர்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது. திராவிட இயக்க மீட்சிவாதப் போக்கால் உந்தப்பட்டு, விழிப்புணர்ச்சி பெற்ற தமிழ் அன்பர்கள் மு.வ.வின் எளிய தனித்தமிழ் நடையை மிகவும் விரும்பினர்’ என்பார் மெ.செ.இரபீசிங் (தமிழ் இலக்கியத் தடங்கள்;2008;89). பண்டிதர்கள் எழுதும் நடையிலிருந்த இறுக்கத்தைத் தளர்த்தினார் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வ. நாவல்களில் மொழி அமைப்பு முறையின் தனித்த கூறுகள் உண்டு என்கிறார் கோ.வே.கீதா. ‘டாக்டர் மு.வ. மட்டுமே கையாளும் முறை ஒன்றுண்டு. ‘ஆமாம் அப்பா’ எனச் சொல்வதை இவர் ‘ஆமாம்’பா’ என்றே எழுதுகிறார். எ.டு. ஏன்’பா? எங்கே’மா? போதாதப்பா, ஆமாம்மா, இல்லைமா இவைபோன்று அமைபவை’ (தமிழ் நாவல்கள் ஓர் அறிமுகம்;1979;179) என்கிறார் அவர்.
பாத்திரங்கள் அல்லது கதை மாந்தர்களின் பெயர்களை நல்ல தமிழில் இடுவார் மு.வ. அப்பெயர்களே குறித்த அப்பாத்திரங்களின் பண்பை உணர்த்திவிடும் தன்மையில் அமைப்பது மு.வ.வின் சிறப்பு. அறவாழி, குணமாலை, மென்மொழி, தேமொழி, மான்விழி, அருளப்பன், கமலக்கண்ணன் என்பன போன்ற பெயர்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தீயவர்களைச் சுட்டவும் இம்முறையையே மு.வ. பின்பற்றுவார். ஆணவர், அகோர், கேசவராயன், வசீகரம், கச்சம்பாள் என்பன போன்ற பாத்திரப் பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டு. பாத்திரங்கள் நல்லவரா தீயரா என்பதை எடுத்த எடுப்பிலேயே உணர்த்திவிடும் பாங்கை மு.வ.வின் அனைத்து நாவல்களிலுமே காணலாம்.
மு.வ.வின் நாவல்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் வகை மாதிரிகள். இயல்பானவர்கள் அல்லர். குறிப்பாக அவர்கள் இலட்சிய நோக்குடையவர்கள். எதிர்நிலைப் பாத்திரங்கள் மோசமானவர்கள். இலட்சிய நோக்குக்கு எதிரானவர்கள். குறுகிய உள்ளம் படைத்தவர்கள். இந்த வகை மாதிரியினைக் கொண்டே மு.வ.வின் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. மு.வ.வின் நாவல்கள் மேலே விவரித்துப் பேசிய அக்காலகட்டத்தைத் தாண்டி நிற்காமைக்குக் காரணம் இந்த வகை மாதிரிப் போக்கேயாகும்.
‘வரதராசனாரின் நாவல்களிலே பாத்திரங்கள் எலும்பும் தசையும் கொண்டு ஆக்கப்படுவன அல்ல. மனித சிந்தனையில் பிரதிநிதிகளாகவே உள்ளனர்’ (தமிழ் நாவல் இலக்கியம்) என்பர்.
இவ்வாறு நாவல் பாத்திரங்கள் அல்லது கதையின் போக்கு விதிக்கப்பட்ட விதிகளுக்குள் இயங்குவதற்கு என்ன காரணம்? மு.வ.வே பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
‘வாழ்க்கையை வெறும் பொழுது போக்காகப் பார்க்கக் கூடாது என்பது போலவேதான் கலைகளிலே கதைகளிலே காட்டப்படும் வாழ்க்கையும் வெறும் பொழுது போக்குக்காக அமைந்திருக்கக் கூடாது. கலையை விரும்புவோர் இருவகை. பொழுதுபோக்குக்காகச் சிலர் விரும்புவார்கள். சலர் கலை தங்களை உயர்த்துவதற்கும், வாழ்க்கையில் புதுவழிகளைக் காண்பதற்கும் உதவும் கருவியாகப் பயன்படுத்த எண்ணுவார்கள். கலையை, வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான். ஆகையினாலே தான் என் கதைகளில் கருத்தையும் சேர்த்து வருகிறேன்’ (இரா.தண்டாயுதம்; ஓர் இலக்கிய ஆய்வு-தற்காலம்;1985;44)
-மு.வ.வின் இலட்சியவாதம் முழுமையாக அவருடைய நாவல்களில் பிரதிபலிப்பதைக் காணமுடியும். ‘இல்லற வாழ்வையும் அதில் ஏற்படும் பால் உறவுக் கலக்கங்களையும் அறவழி நின்று, தொண்டு மனப்பான்மையில் செவ்வழியில் பாய்ச்சப் பெறும் பகுதி நாவல்களை எழுதியவர் மு.வ.’ என்று மதிப்பிடுவார் தா.வே.வீராசாமி (தமிழில் சமூக நாவல்கள்;1987:107). நாவல்களில் ஏற்படும் சிக்கல்கள், பாத்திரங்களில் குணாம்சங்களால் விளையும் இன்னல்கள் அனைத்தையும் மேற்குறித்தபடி அறவழி நின்று விளக்கும் ‘அற நாவல்கள்’ மு.வ.வுடையவை.
கரித்துண்டு, கயமை முதலான நாவல்களில் திருக்குறள் ஈடிணை இல்லாத தத்துவ நூலாகக் காட்டப்படுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டே வாழ்க்கைச் சிக்கல்களுக்கு அமைதி கூறப்பட்டுள்ளது. மு.வ.வின் நாவல்களில் வள்ளுவமும் தமிழ் ஆன்மீக நிலைப்பட்ட தத்துவங்களும் முந்திக் கொண்டு முகங்காட்டி நிற்பதை உணரலாம்.
மு.வ.வின் பாத்திரங்களிலே சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட நாவல்களில் வருகிறார்கள். ‘செந்தாமரை’ நாவலில் வரும் இளங்கோ-செந்தாமரை இணையரைக் ‘கரித்துண்டு’ நாவலிலும் காணமுடியும். மோகனின் முன்னாள் மனைவி நிர்மலாவுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்திப் பண்படுத்தும் பாத்திரமாக வருகிறாள் செந்தாமரை. ‘அல்லி’யில் வரும் அறவாழி, ‘நெஞ்சில் ஒரு முள்’ளில் வயதான பெரியவராக வருகிறார். ‘கள்ளோ காவியமோ’ நாவலில் வரும் அருளப்பர், ‘அகல்விளக்’கிலும் ‘பெற்ற மனத்’திலும் வருகிறார். ‘சிந்தனை ஒளியும், அறத் தென்றலும், மனப் பண்பாடும் சிறப்பூட்டுகின்ற அந்த நல்லுலகத்தில், மு.வ. உலவவிட்டுள்ள பாத்திரங்களின் எண்ணிக்கை 278’என்று எண்ணிச் சொல்வார் ம.ரா.போ.குருசாமி (மு.வ. முப்பால்;1977;221).
வகை மாதிரிகளுக்குள் சிக்கிக் கொண்ட நாவல்களாக இவற்றைப் பார்க்கும் தன்மையிலிருந்து மாறுபடும் கல்விப் புலத்தினரும் உண்டு. ‘அவர் (மு.வ) சமுதாயத்தைத் திருத்தி அமைப்பதற்கு எண்ணுகின்றார்; சமுதாயத்தைச் சீராக அமைப்பதற்கு உரிய வழிவகைகளைச் சிந்திக்கின்றார்; அதைக் கடமையாகக் கொண்டு, ஒவ்வொரு நாவலிலும் இயன்றது செய்கின்றார். இந்த நல்ல நோக்கம் மு.வ.வின் நாவல்களுக்கு அமைந்த தனிச்சிறப்பு’ (இரா.மோகன்; டாக்டர் மு.வ.வின் நாவல்களில் சமுதாய நோக்கு;1973) என்று மதிப்பிடுவோரும் உள்ளனர்.
நாவல் எடுத்துரைப்பு முறைமையில் பல்வேறு சோதனை முயற்சிகளைச் செய்து பார்த்தவர் மு.வ. அவர் கையாண்ட நோக்கு நிலைகள் என்று சிலவற்றைப் பட்டியலிட்டுக்காட்டுவார் மா.இராமலிங்கம். அவை:
1. கதைத் தலைவியரே தங்கள் வாழ்க்கையைக் கூறுவது போல் அமைந்த நாவல்கள்: அல்லி, நெஞ்சில் ஒரு முள்.
2. கதைத் தலைவனும் தலைவியும் மாறி மாறிக் கூறுவது போல் அமைந்த நாவல்: கள்ளோ? காவியமோ?
3. கதை மாந்தர் பலரும் மாறி மாறிப் பேசுவது போல் அமைந்த நாவல்கள்: செந்தாமரை, அந்தநாள்.
4. கதைத் துணை மாந்தரில் கதைத் தலைவனுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் கூறுவது போல் அமைந்தவை: அகல்விளக்கு, வாடாமலர்.
5. கதைத் தலைவருடன் நேரடித் தொடர்பில்லாத- அல்லது நெருங்கிய தொடர்பில்லாத துணைக்கதை மாந்தர் கூறுவது போல் அமைந்தவை: மலர்விழி, கரித்துண்டு.
6. ஆசிரியரே படர்க்கையில் நின்று கதையைச் சொல்வது போல் அமைந்தவை: பாவை, பெற்றமனம், கயமை. (நாவல் இலக்கியம்;1975)
மு.வ. தன் நாவல்களை மிகுந்த திட்டத் தயாரிப்புச் செய்தே எழுதுவார் என்பார்கள். எடுத்துரைப்பு உத்தி முறைகளையும் கூடச் செவ்வனே வகுத்துக் கொண்டு எழுதியவர் என்பது மேற்குறித்த கருத்தில் புலப்படுகிறது.
எவ்வாறாயினும் தமிழ் நாவல் வரலாற்றில் மு.வ.வின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அன்றைய காலகட்டத்தில் மு.வ.வின் நாவல்களை வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்ட தலைமுறை இருந்தது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.
தமிழ் இலக்கிய ஆராய்ச்சி, இலக்கணம், மொழியியல், மொழி வரலாறு, இலக்கிய வரலாறு, கடிதங்கள், சிறுகதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறுகள் என்று விரிந்து வானை அளந்து பறந்து திரிந்த வானம்பாடி மு.வ.
கல்வியாளராகவும் நிர்வாகியாகவும் மட்டுமின்றி ஏராளமான மாணவர்களுக்கு உத்வேகமளித்த ஆசிரியராகவும் திகழ்ந்தவர் மு.வ.
பல்வேறு முரண்பட்ட நிலவியல், பண்பாடு, மொழிச் சூழல் கொண்ட வட ஆற்காடுப் பகுதியின் மிக முக்கியமான இலக்கிய அடையாளம் அவர். நூற்றாண்டுக் காணும் இவ்வேளையில் அவருடைய பல்துறைப் பங்களிப்பைக் குறித்த ஏராளமான ஆய்வுகள், ஆக்கங்கள் வெளிவருவது அவசியமாகும். அதுவே, அவர் மறைந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகும் அவருடைய வரலாற்று வகிபாகத்தை அடையாளப்படுத்துவதாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------------------------------

மரண தண்டனை: சில சிந்தனைகள்

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனையை 2011 செப்டம்பர் 9 ஆம் தேதி நிறைவேற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவு வெளியிடப்பட்டது.
அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தின் மீதான ஊடகங்களின் கவனக்குவிப்பில் துண்டுச் செய்தியாய் இருந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றச் செய்தியினைத் தங்களின் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள், தீக்குளிப்புகள் ஆகியவற்றால் தமிழகத்தின் எரியும் பிரச்சினையாக ஆக்க படாத பாடுபட்டுள்ளனர் தமிழ் உணர்வாளர்கள்.
தூக்குத் தண்டனையை நிறுத்திடச் செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கைவிரித்த தமிழக முதல்வர், மறுநாளே (ஆக.30) ‘தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில்’ மேற்குறித்த தூக்குத் தண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரை வலியுறுத்தித் தமிழகச் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.
ராம் ஜேத்மலானி, காலின்ஸ் கன்சால்வஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழாம் சென்னை உயர்நீதி மன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் சார்பில் வாதாடி, தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வாங்கியுள்ளனர். இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவோடு, தண்டனைக்கு உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தியாவின் குடியரசுத் தலைவர் மூன்று தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை நிராகரித்ததைத் தொடர்ந்து தமிழக அளவிலும் இந்திய அளவிலும் குறிப்பிடத் தக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்ய வேண்டும் என்பதிலிருந்து, ஒட்டுமொத்தமாகத் தூக்குத் தண்டனையை இந்திய அரசு கைவிட வேண்டும் என்பது வரை ஏராளமான விவாதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தூக்கு நிறைவேற்றப்பட வேண்டும் என்று கண்ணீரோடு அரசை மன்றாடுகிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் திரு.தங்கபாலு. தூக்கில் போடத்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார் வீரத்துறவி (?) இராமகோபாலன். சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று கைகட்டி, வாய்மட்டும் திறந்து அருளுகிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் தம்பதியர். இப்படி எத்தனை எத்தனையோ குரல்கள்.
தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி, ராஜீவ் காந்தியுடன் குண்டு வெடிப்பில் பலியான 15 பேரின் குடும்பத்தினரைத் திரட்டித் தன் தொண்டரடிப்பொடிகளுடன் சென்னையில் (செப்.09) உண்ணாவிரதம் இருந்தார் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அக்கூட்டத்தில், ‘ராஜீவ் கொலையாளிகள் மூவரையும் சிறைக்குள் சென்று கொன்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் இன்று விடுதலை செய்ய வேண்டும் என்கிற அளவுக்குப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்’ என்று பேசியிருக்கிறார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நிறைவடைந்ததையொட்டி இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று அறிவித்தார் காந்தி. நேரு, பட்டேல் போன்றோர் அதற்கு உடன்படவில்லை. உழைப்பின் பயனை அறுவடை செய்ய வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். அதற்குக் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்பது அவர்களின் கணக்கு. நேருவுக்குப் பிறகு இந்திரா காந்தி காங்கிரஸ், ராஜீவ் காந்தி காங்கிரஸ் பிறகு, சோனியா காந்தி காங்கிரஸ் அடுத்த நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் ஆகிறது. இந்தப் பரிணாம வளர்ச்சியில் அது காந்தி காங்கிரஸ் என்பதிலிருந்து மாறி, கோட்ஷே காங்கிரசாக உருமாற்றம் அடைந்திருக்கிறது.
இனி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ்காரர்கள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கேட்டுப் போராட்டங்கள் நடத்துவர் என்பது வெளிப்படை.
தமிழக வெகுமக்கள் மத்தியிலும் தூக்குத் தண்டனை குறித்த பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. தமிழ் உணர்வாளர்களின் துண்டறிக்கைகளைக் கையில் வாங்கும் வெகுமக்களில் ஒவ்வொருவரும் தம் அரசியல் புரிதலுக்கேற்ப ஒரு நிலைபாட்டுக்கு வருகிறார்கள்.
இவர்களில் ஒரு சாரார், ‘இராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைத் தூக்கிலே போடப்படுவதுதானே நியாயம்? குற்றவாளிகளை விட்டுவிடுவது எப்படிச் சரி?’ என்று பேசுவோர். இவர்களுக்கு எல்லாம் ‘சட்டப்படி’ நடந்தால் சரி. இப்படிச் சட்டம் பேசும் இவர்கள், இராஜீவ்காந்தி தன் பாவத்தின் சம்பளத்தை மரணமாகப் பெற்றார் என்பதை உணராதவர்கள். இராஜீவ் காந்தியின் சவப்பெட்டியின் கடைசி ஆணி, ஸ்ரீபெரும்புதூரில் அறையப்பட்டது என்பதை அறியாதவர்கள்.
இராஜீவ் காந்தி கொலை வழக்கின் தன்மையில் ஏராளமான குழறுபடிகள் உள்ளன என்பதைப் பலர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். சிறைத் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், ‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ என்ற தனது நூலில் பல வினாக்களை எழுப்பியுள்ளார். இவ்வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுள்ள இராபர்ட் பயஸ், தான் எழுதிய ஒரு நூலிலும் இவ்வழக்கு ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு என்பதை விளக்குகிறார். வழக்கின் விசாரணைக் குழுவில் இருந்த ரகோத்தமன் எழுதிய நூல், ராஜீவ் சர்மா என்பவர் எழுதி, அண்மையில் தமிழில் வெளிவந்துள்ள ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ என்ற நூல் ஆகியவை ராஜீவ் கொலையில் உள்ள சர்வதேச சதியை அம்பலப்படுத்துகின்றன.
உலக அளவில் மட்டுமல்ல, உட்கட்சியிலும் எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்ட இராஜீவ்காந்தி இந்திய அரசியல் அரங்கின் மிக முதன்மையான தலைவர். அவருடைய கொலைத் திட்டம் மிக இரகசியமாகத்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் படுகொலைத் திட்டம், விடுதலைப் புலிகளின் தலைமைக்குத் தவிர, தனு, சிவராசன், சுபா ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும் என்பது சி.பி.ஐ யின் குற்றப்பத்திரிக்கையில் உள்ளது. எனில், சதிச் செயல் தெரியாத பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட் பயஸ் உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள் அல்லர்.
இராஜீவ்காந்தி கொலையில் கொலையாளிகளுக்குத் தங்க இடம் கொடுத்தோர், ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் ஏற்பாடு செய்தோர், கொலையாளி பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, இராஜீவை நெருங்க உதவியோர், கொலைக்குப் பிறகு கொலையாளிகள் தப்பிச் செல்ல உதவியோர், பங்களூருவில் தங்க ஏற்பாடு செய்தோர், தமது அகில இந்தியத் தலைவரைத் தனியே அனாதை போல் பொதுக்கூட்ட மேடைக்கு நடந்து செல்ல விட்டுவிட்டுப் பாதுகாப்பாக மகிழ்வுந்தில் அமர்ந்திருந்த காங்கிரஸ் பெருந்தலைவர்கள் என ஒருநூறு காங்கிரஸ்காரர்கள் விசாரிக்கப்படவில்லை.
இவ்வாறு ஆயிரம் சந்தேக வினாக்கள் வழக்கில் தொக்கி நிற்கும் போது, அவசரம் அவசரமாக 26 பேருக்குத் தூக்கு. பிறகு, 19 பேர் விடுதலை. 4 பேருக்குத் தூக்கு. நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட சூழலில் மூவருக்குத் தூக்கு. அதை 21 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றத் துடிப்பது என செயல்பாடுகள் உள்ளன.
‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால் ஒரு நிரபராதி கூடத் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்ற இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கருணை முகம்(!) என்னவாயிற்று? பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கில் எப்படி இவ்வாசகம் நினைவுக்கு வராமல் போயிற்று? இந்த செலக்டிவ் அம்னீஷியா (தேர்ந்தெடுத்த மறதி அல்லது திட்டமிட்ட மறதி) பொதுமக்களைப் பீடித்திருப்பதற்கு என்ன காரணம்?
‘இராஜீவ்காந்தி கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை இரத்து செய்வது என்று கோருவது கூட ஒருவகையில் சரி. அப்படியானால் அப்சல் குருவையும் விடுவிக்கச் சொல்லிச் சொல்லுவீர்களா?’ என்று வினா எழுப்பும் தேசபக்தர்களும் உள்ளனர். இவர்கள் இந்தியக் குற்றவியல் சட்டங்களிலும் இந்திய நீதி மன்றத்தின் நடைமுறைகளிலும் வழக்கினைப் பதியும் காவல்துறையினரின் செயல்பாடுகளிலும் மிகுந்த நம்பிக்கையும் திருப்தியும் கொண்ட வெகுமக்கள் பிரிவினர். இவர்கள்தான், ‘பேப்பர்லயே போட்டுட்டான்’ என்று சொல்லி அச்சில் வந்தாலே அதுதான் உண்மை என்று வாதிடும் வகையினர். இவ்வகையினர்தான் இந்தியப் பொதுப்புத்தியினரின் பெரும்பகுதியினர்.
மும்பையில் காகிதங்கள் பொறுக்கி விற்று வயிறு பிழைத்து வந்த ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மீது ஒரு இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இவருக்கு நீதிமன்றத்தின் ஆங்கிலமும் மராத்தியும் புரியாத சூழலில் ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனைக் காலத்தை அனுபவித்து விடுதலையாகித் தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகிறார். அதற்கும் சில ஆண்டுகள் கழித்து, வழக்கைத் தயாரித்த மும்பை காவலர்களில் ஒருவர் ‘கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாத சூழலில், தெருவில் பேப்பர் பொறுக்கி வாழ்ந்த ஒரு தமிழ்நாட்டுக்காரனைப் பிடித்துப் பொய்க்குற்றம் சுமத்தித் தண்டனை வாங்கித் தந்தோம். அந்த பாதகச் செயல் இறக்கும் தருவாயில் என்னைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகிறது’ என்று எழுதி வைத்துச் செத்தார். அக்கடிதம் வெளிவந்த பிறகு, மனித உரிமையாளர்கள் செய்யாத கொலைக்குத் தண்டனை அனுபவித்த அந்த அப்பாவிக்கு இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் இராச்சமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்தவர் அவர். அவருடைய இருப்பை உறுதிசெய்யும்படி சோளகர் தொட்டி ச.பாலமுருகன் தொலைபேசியில் கேட்க, மேற்குறித்த செய்யாத குற்றத்திற்காக முழுத் தண்டனையையும் அனுபவித்துப் பிறகு விடுதலையான அந்த அப்பாவியைச் சந்தித்து பேசும் வாய்ப்பு இக்கட்டுரையாளராகிய எனக்குக் கிடைத்தது. அந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே அந்த அப்பாவி இறந்தும் போனார்.
மேலே குறிப்பிட்டது ஒருபானைச் சோற்றிலிருந்து ஒருசோற்றுப் பதம். இந்திய நீதி மன்றங்களை உண்மை மன்றங்களாக- அற மன்றங்களாகக் கருதும் அப்பாவி வெகுமக்கள் இந்த முகத்தினைத் தரிசிக்காதவர்கள்.
எனவே இந்தியாவில் குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்றத் தாக்குதல் குழுவினர் ஆனாலும், மும்பைத் தாக்குதல் குழுவினர் ஆனாலும் மறு மறு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே வேண்டுவது.
‘மனித உயிர்’ என்ற அடிப்படையில் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வகையினரும் உள்ளனர். இவர்கள் ‘மறப்போம்; மன்னிப்போம்’ கோட்பாட்டினர். ‘இறைவன் கொடுத்ததை மனிதன் எடுக்காதிருக்கட்டும்’ என்பவர்கள். மானுட நேயத்தின் உயர்தளத்தில் சஞ்சரிப்பவர்கள் இவர்கள்.
பணவெறிக்காக ஏராளமான மனித உயிர்களைப் பலிவாங்கிய போபால் விஷவாயு புகழ் யூனியன் கார்பைட் குழுமத்தின் முதலாளியை, குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை நரவேட்டையைத் திட்டமிட்டுக் கொடுத்து ஊக்குவித்த நரேந்திரமோடியை, இன அழித்தொழிப்பைத் திட்டமிட்டுச் செய்து முடித்த சிங்களப் பௌத்த இனவெறியன் இராஜபக்ஷேவை மன்னிக்கச் சொல்லும் மெல்லிய மனமுடையவர்கள் இவர்கள்.
ஆனால் வரலாறு இந்த விருப்பங்களுக்கு மாறாக நகர்ந்து செல்லுகிறது. ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரைக் குடித்த வெள்ளை இன வெறியன் ஜெனரல் டயரின் குற்றத்திற்கு இங்கிலாந்தில் கணக்குத் தீர்த்தான் சீக்கிய இளைஞன் உத்தம் சிங். 44 தலித் பெண்களையும் குழந்தைகளையும் குடிசையிலிட்டுத் தீயிட்டுக் கொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடுவைக் காத்திருந்து பழிதீர்த்தார்கள் நக்சல்பாரிகள். இவை குற்றச் செயல்கள் ஆகுமா? மனிதத் தன்மையற்ற செயல்கள் ஆகுமா? வர்க்க எதிரிகளைத் தண்டித்தலின் உச்சமாக மரணதண்டனை இருக்கிறது என்கிறது புரட்சிகரத் தத்துவம். உலகப் புரட்சி வரலாற்றில் இவ்வகையான பதிவுகள் இரத்தக்கறை படிந்தே கிடக்கின்றன என்பதை மறந்துவிட முடியாது. மரண தண்டனையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடமே இருக்கிறது. மன்னிப்பதையும் மறப்பதையும் மரணம் அளிப்பதையும் மக்கள் மன்றமே தீர்மானிக்க வேண்டும்.
எதைக் காரணம் காட்டியும் மரண தண்டனையை விதிக்கும் அருகதை இந்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் இல்லை என்பதே நினைவில் கொள்ள வேண்டியது.
உலக அரங்கில் ட்ராஸ்கிய கம்யூனிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக மரண தண்டனைக்கு எதிரான தீர்மானங்களை மொழிந்து, அங்கீகரித்திருப்பது விவாதத்துக்கு உரியது. குறிப்பான தேசங்களுக்கேயுரிய புரட்சிக்கான செயலுத்தி, மூலவுத்தி ஆகியவற்றில் பாரிய விவாதங்களை உலகப் பொதுவுடமையாளர்கள் காத்திரமாக ஆலோசிக்கும் காலமிது. எனவே மரண தண்டனை குறித்த விவாதங்களும் மேற்கிளம்புவதில் வியப்பில்லை.
இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியும் செய்யாத குற்றத்திற்காக 21 ஆண்டுகளாய் தனிமைச் சிறையில் சொல்லொண்ணாத் துயரை அனுபவிக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் மட்டுமல்ல, ஆயுள்தண்டனைக் காலம் முடிந்தும் அநியாயமாகச் சிறைவைக்கப்பட்டிருக்கும் நளினி உட்பட்ட பிறரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியதன் ஒரு எதிர்விளைவே இராஜீவ் கொலை. மேற்குறித்த மூவரின் மரண தண்டனை நிறைவேற்றம் என்பது தமிழ்தேசியத்தின் மீதான இந்திய தேசியத்தின் அப்பட்டமான ஒடுக்குமுறைச் செயல்பாடே. இனவுரிமை, மொழியுரிமை, வாழ்வுரிமை, இறையாண்மை எனப் பல்வேறு நிலைகளில் போராடும் உணர்வுள்ளோரை அச்சுறுத்தும் முயற்சியே இது.
ஆங்கில ஏகாதிபத்தியம் கயத்தாறு புளியமரத்தில் பொது மக்கள் முன்னிலையில் கட்டபொம்மனைத் தூக்கிலிட்டது போராடும் வலிமை மிக்க மக்கள் திரளை அச்சுறுத்தவேயாம். சதாம் உசேனைத் தூக்கிலிட்டது உலக அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்க்கும் தேசத்திற்கும் தேசியத் தலைவர்களுக்கும் என்ன கதி கிடைக்கும் என்பதை அச்சுறுத்தி அறிவிப்பதற்காகவேயாம். அவ்வாறே இம்மூவர் தூக்குத் தண்டனையும் குற்றவியல் சட்ட நடைமுறைகளையும் தாண்டி, வல்லாதிக்க முகத்தைக் காட்டும் நோக்கம் கொண்டது.
21 ஆண்டுகளாகத் தன் மகனுடைய விடுதலைக்காகப் போராடும் இலட்சியத் தாய் அற்புதம் அம்மாள் சிந்திய கண்ணீர் ஏராளம். 26 தூக்குத் தண்டனைக் கைதிகளில் 19 பேரைக் குற்றமற்றவர்கள் என்று உச்சநீதிமன்றம் விடுவிக்க நடந்த சட்டரீதியான மற்றும் வெகுமக்கள் போராட்டத்தில் அற்புதம் அம்மாளுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. வழக்கு தொடர்பான ஆவணங்களை, கோப்புகளைச் சுமந்து கொண்டு சிறை வாயில்களில் காத்துக்கிடந்த, நீதி மன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிச் சலித்த, தமிழக மக்களின் பாராமுகத்தையும் உணர்வாளர்களின் கொந்தளிப்பையும் மாறி மாறித் தரிசித்துக் குழம்பிய அந்த வெள்ளித் தலை மனுசி இனியேனும் ஒரு துளிக் கண்ணீர் கூடச் சிந்தக் கூடாது. குயில்தாசன்-அற்புதம் அம்மாள் தம்பதியினர் தன் மகனின் விடுதலைக்குப் பிறகு, அவருடன் நிம்மதியான வாழ்க்கை வாழ இந்தப் புவி இடம் தர வேண்டும்.
‘எனக்கல்ல
என் சந்ததிக்கேனும்
-தப்பித்தல் அல்லாமல்-
விடுதலை எப்போது பூக்கும்?’
-நூற்றாண்டுத் தலைமுறைக்கேள்வி மனதைக் குடைகிறது.

மேடையேறிய இரண்டு சிறுகதைகள்

கன்னியாகுமரியின் விவேகானந்த கேந்திர வளாக அரங்கில் சு.ரா நினைவு விழாவினையொட்டிக் கூத்துப்பட்டறை நடிகர்கள் நடித்த ‘அக்கரை சீமையிலே’ ‘பிரசாதம்’ என்ற இரு நாடகங்களையும் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு சற்றே வித்தியாசமானது. விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் தொடங்கும் காலை வேளையில், சரியாக காலை 9.30 மணிக்கு இந்நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. வழக்கமாக மாலை வேளை மயக்கங்களுடனேயே நாடகம் சம்பந்தப்பட்டிருப்பது உண்டு. ஆனால் இவ்விழாவில் காலை, மதியம், மாலை என்று முக்காலத்திலும் நாடகங்கள் திட்டமிடப்பட்டுச் செவ்வனே நிகழ்ந்தேறின. எனவே நாளின் தொடக்கத்தில் நிகழ்த்தப்பட்ட இவ்விரு நாடகங்களும் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தை வழங்கியிருக்கக் கூடும்.
முதல் நாடகமான அக்கரை சீமையிலே ஒரு தனி நபர் நாடகமாகும். சுந்தர ராமசாமி 1953இல் எழுதி சாந்தி இதழில் வெளிவந்த சிறுகதை அதே பெயரில் நாடகமாகியிருக்கிறது.
ஆப்பிரிக்காவின் தென் ரொடீஷ்யாவின் தலைநகரத்திற்கு அருகாமையில் உள்ள புலுவாயோறாவுக்கு இரயில் செல்லுகிறான் கதைசொல்லி. இனவெறி தலைவிரித்தாடும் அவ்விடத்தில் அறிமுகமாகிறான் இருபத்தைந்து வருடங்களாக அந்நிய மண்ணில் உழைக்கும் ராஜூ நாயுடு என்ற தமிழன். அவன் ஒரு ரயில்வே போர்ட்டர். ஒரு ஆப்பிரிக்க பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்பவன். அதைக் கதைசொல்லியே தானாகத் தெரிந்து கொள்ள நேரிட்டபோது மிகுந்த குற்ற உணர்ச்சியுடன் ஒப்புக்கொண்டு, இந்தியாவுக்கு வந்துவிடும் ஆவலை வெளிப்படுத்துகிறான். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டதாமே? இப்போது நம் ஆட்கள்தானே ஆட்சி செய்கிறார்கள்? எனவே வேலை உடனே கிடைத்துவிடும் அல்லவா என்று அப்பாவித் தனமாகக் கேள்வி எழுப்புகிறான். சுதந்திரப் போராட்டக் காலத்தில் தீரர் சத்தியமூர்த்தியின் ஆவேச வார்த்தைகளுக்குச் செவி கொடுத்தவன் அவன். ஆப்பிரிக்கப் புகையிலைத் தோட்டத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு இப்பொழுதாவது இந்தியாவுக்குத் திரும்பி, தனது சொந்த நதியான தாமிரபரணியில் முழுக்குப்போட விரும்புபவன். தனக்கு ஒரு வேலை பார்த்துத் தர முடியுமா என்று கதைசொல்லியைக் கேட்கிறான். இந்தியாவில் வேலையின்மை தலைவிரித்தாடுவதையும் அவர்களில் ஆயிரம் பேர் இங்கு வேலைதேடி வரத் தயாராக இருக்கும் உண்மையையும் எடுத்துக்காட்டுகிறான் அங்கு தேநீர் கடை வைத்திருக்கும் நாயர். கதைசொல்லி ஊர் திரும்ப இரயில் ஏறும் கடைசித் தருணத்தில் கூட, ‘சொல்லுங்க சார்! வேலை பார்த்து எழுதுவீங்களா சார்? எழுதுவீங்களா சார்?’ என்று இரயிலோடேயே ஓடி வருகிறான். கண்களில் நீர் நிறைய முகத்தை மூடிக் கொள்ளுகிறான் கதைசொல்லி. இதுதான் நாடகத்தின் கருப்பொருள்.
கதைசொல்லியின் பாத்திரமேற்றுத் தனிநபராக மேடையில் நின்று ஆப்பிரிக்கப் பயண அனுபவத்தைப் பார்வையாளர்கள் கண்முன் விரித்தார் கூத்துப்பட்டறை நடிகர் பாபு (எ) கணபதி ஹரிகரன். நறுக்கு மீசை, மிடுக்கு நடை, ஒல்லியான உடல், அறுபதுகளின் இளைஞர்களுக்கான தோற்றம் என மேடையை வித்தியாசமாய் அலங்கரித்தார் அவர்.
தனிநபர் நாடகங்களில் நடிகன் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் அதிகம். கதைசொல்லி, நாயுடு, நாயர், முலைகள் வெளித்தெரிய நடமாடும் நாயுடுவின் மனைவியாகிய கருப்பரின காப்பிரிப் பெண் என பல பாத்திரங்களைப் பிரதிபலிக்க வேண்டிய கடப்பாடு நடிகருக்கு இருந்தது. ஆனால் அப்பாத்திரங்களுக்கிடையிலான முகபாவனை, மொழி வெளிப்பாடு, உடல்மொழி என மிக நுட்பமாக வேறுபாடுகளைக் கணகச்சிதமாகவே வெளிப்படுத்தினார் நடிகர் பாபு. மிக எளிய அசைவுகள், நாடக மேடைப் பயன்படுத்தம் என்றிருந்த போதிலும் காட்சியைக் கண்முன் எழுப்புவதில் வெற்றிபெற்றிருந்தார் நடிகர் பாபு.
இந்திய விடுதலையின் மீதான தேசிய இயக்கத் தலைவர்களின் கற்பிதம், விடுதலைக்குப் பிந்தைய யதார்த்த நிலை என அவலத்தைக் காட்சிப்படுத்திய சுந்தர ராமசாமியின் சிறுகதையினை அட்சரம் பிசகாமல் அப்படியே வெளிப்படுத்தியிருந்தார் பாபு. ஒரு நடிகன் தன்னைத் தானே இயக்கிக் கொள்வது என்பது மிகுந்த சவாலுக்குரிய பணி. அதைச் சிறப்புறவே செய்திருந்தார் அவர்.
அக்கரை சீமையில் நாடகத்தைத் தொடர்ந்து நடத்தப்பெற்ற நாடகம் ‘பிரசாதம்’. சுந்தரராமசாமியால்1958 இல் எழுதப்பட்டு, சரஸ்வதி இதழில் வெளிவந்த சிறுகதையின் நாடக வடிவம் இது. பார்வையாளர்களால் மிகவும் இரசித்துப் பார்க்கப்பட்ட நாடகத்தில் இதுவும் ஒன்று என்பதனை அடித்துச் சொல்லலாம். கூத்துப்பட்டறையின் நிறுவனர் ந.முத்துசாமி இந்நாடகத்தை இயக்கியிருந்தார்.
எழுபத்து மூன்று நாற்பது(7340- அடையாள எண்) ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். தன் பதினொரு வருட தாம்பத்ய வாழ்க்கைக்குப் பிறகு பிறக்கும் பெண் குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடத் தன் மனைவி கேட்ட ஐந்து ரூபாய்க்காக கேஸ் பிடிக்கக் காத்திருக்கிறான். வேறு யாரும் அகப்படாத நிலையில், தபால் பெட்டியிலிருந்து தவறுதலாகக் கைக்கு வந்த கடிதத்துடன் அகப்படும் கிருஷ்ணன் கோயில் அர்ச்சகரை மடக்குகிறான். அவருடைய தண்டனைக்குரிய குற்றத்தை விளக்கப்படுத்திய கான்ஸ்டபிள், அவரை மேலதிகாரியிடம் சொல்லி விடுவிக்க ரூபாய் ஐந்து லஞ்சம் கேட்கிறான். தரவில்லையானால் இன்ஸ்பெக்டரிடம் அழைத்துச் சென்று தண்டனை வாங்கித் தர வேண்டியிருக்கும் என்கிறான். ஐந்து ரூபாய் இல்லையென மறுக்கும் அர்ச்சகர், கான்ஸ்டபிளுடன் போலீஸ் ஸ்டேசன் வர ஒப்புக் கொண்டு புறப்படுகிறார். கான்ஸ்டபிள், இனிமேல் பணம் பேராது என்பது உறுதியாகத் தெரிந்தவுடன் பாதியில் அர்ச்சகரைக் கழற்றிவிடப் பார்க்கிறான். அர்ச்சகர்’ வாடா போகலாம்’ என்கிற ரீதியில் பேசுகிறார். இறுதியில் எல்லாம் தன் குழந்தையின் பிறந்தநாளுக்குத் தேவைப்படும் ஐந்து ரூபாய்தான் காரணம் என்கிறார் கான்ஸ்டபிள். குழந்தை பிறந்தநாள் அன்று கோவிலுக்கு அழைத்துவரச் சொல்லி ஐந்து ரூபாயும் கொடுக்கிறார் அர்ச்சகர் என்று முடிகிறது சிறுகதை.
அர்ச்சகராக பாபுவும் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக சாந்த குமாரும் பிற சில்லறை வேடங்களில் வருபவராக சோமசுந்தரமும் நடித்தார்கள். கூத்துப்பட்டறையின் மூன்றாம் கட்ட நடிகர்கள் இவர்கள். கூத்துப்பட்டறையின் பல்வேறு நாடகத் தயாரிப்புகளில் பங்கேற்ற அனுபவம் மிக்கவர்கள்.
கருத்தரங்க அரங்கின் இரு தளங்களையும் நாடகத்திற்கு மிகச் சரியாகவே பயன்படுத்திக் கொண்டார்கள் நடிகர்கள். அரங்கப் பொருட்கள், மேடை அமைப்பு என்று எவ்விதமான மாற்றங்களும் செய்யாமல் முழுக்க முழுக்கத் தங்களின் உடல்மொழியால் அரங்கை மாற்றினார்கள்.
கிருஷ்ணன் கோயில் அரச்சகராக நடித்த பாபுவின் உடல் மொழி அபாரமானது. கான்ஸ்பிளைக் கண்டு அஞ்சுவதும், பிறகு தனது செயல்களுக்கெனக் குமைவதும், அப்பால் தன் நேர்மையை நிரூபிக்கக் கான்ஸ்டபிளையும் வலுக்கட்டாயமாக இழுப்பதும், கான்ஸ்டபிளின் கள்ளத்தனத்தை அறிந்து எள்ளி நகையாடுவதும், இறுதியில் இரக்கப்பட்டுக் கான்ஸ்டபிளுக்கு ஐந்து ரூபாய் அளித்து, அதைக் கடனாகத்தான் அளித்துள்ளேன் எனப் பகடி செய்வதுமாகப் பல்வேறு உணர்வுத் தளங்களில் இயங்குபவர் அர்ச்சகர். இப்பாத்திரத்தினை நிறைவாகவே செய்தார் பாபு.
கான்ஸ்டபிள்-7340, தன் குழந்தையின் பிறந்தநாளுக்காக ஏதாவது சிறிதளவு பணம் சேர்த்து விடத் தவியாய்த் தவிப்பவன். யாராவது அகப்பட மாட்டார்களா என ஏங்குகிறவன். அகப்பட்ட அப்பாவியிடம் தன் காவல்துறை அதிகாரத்தைக் காட்ட முயற்சிப்பவன். எப்படி உருட்டி மிரட்டியாகிலும் ஐந்துரூபாயாவது பெற்றிடப் பகீரதப் பிரயத்தனம் செய்பவன். ஒரு சல்லிக்காசு கூடப் பெறாது என்பது உறுதியான அந்த கணத்திலேயே தன் கைதியை நடுத்தெருவில் கைவிட்டுவிடத் துணிபவன் என ஏராளமான நடிப்பு வேண்டும் பாத்திரம் இது. வசந்தகுமார் இப்பாத்திரத்தை மிகவும் சரியாகவே செய்தார்.
பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பும் சிறுகதையினை ஏற்கனவே படித்திருந்தோர் அக்கூட்டத்தில் அதிகம் என்பதனால் எழுந்த ஆஹா ஆஹாரங்களும் நாடகத்தை இன்னும் உயரத்திற்கு எடுத்துச் சென்றன என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.
கூத்துப்பட்டறை அமைப்பும் நடிப்பு முறைமையும் நடிகர்களும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்கொண்ட விமர்சனங்களைச் சற்றே நினைவுபடுத்திக் கொள்வோம். கூத்துப்பட்டறை நடிகர்கள் நேராக நின்று இயல்பாகப் பேசுதல் என்பது கற்புக் குறைபாடுடைய செயலாகவே கருதினர். உடலை வளைத்து, நாணிக் கோணி, உடலை முறுக்கிப் பேசுவதே கூத்துப்பட்டறை பாணி என்றிருந்தது. ந.முத்துசாமியின் நவீன நாடக நடிகன் உருவாக்கம் அவ்வாறே தமிழ் அரங்க உலகில் பதிந்து போயிருந்தது. அவர் உருவாக்கிய மிகச் சிறந்த நடிகர்கள் –பசுபதி, கலைராணி தவிர ஏனையோர் – தமிழ்த் திரை உலகின் எதார்த்த நடிப்புலகிற்குள் ஒட்டமுடியாத அந்நிய மன, உடல் இயல்பைப் பெற்றிருந்தார்கள். எதார்த்த நடிப்பில் ந.முத்துசாமியின் நடிகர்கள் தோல்வியையே தழுவினார்கள். இதுவும் கூட எதார்த்த நடிப்புமுறைமை குறித்த பரிசீலனை ஏற்படவும் அதில் சோதனை செய்து பார்க்கவும் பட்டறைக்கு வழி திறந்திருக்கும் எனலாம். பிற்காலத்தில் ந.முத்துசாமியும் அவருடைய நடிகர்களும் எதார்த்த நடிப்புமுறைமைக்குள் வரத் தொடங்கினர். நாடக மேடைகளில் உச்சம் தொட்டவர்களும் திரை உலகில் மின்னியவர்களும் மின்னி மறைந்தவர்களும் எனக் கூத்துப்பட்டறையின் உலகம் வித்தியாசமாக விரிந்து கிடக்கிறது.
பாபுவும் வசந்தகுமாரும் சோமசுந்தரமும் கூத்துப்பட்டறையின் எதார்த்த நடிப்பு முறைமையின் அடையாளக் கண்ணிகள். அந்த அடிப்படையில் தங்கள் பணியை நிறைவாகவும் திருப்தியுடனும் செவ்வனே நிறைவேற்றிப் பார்வையாளர்களின் ஏகோபித்த கரவொலியை அள்ளிச் சென்றனர் எனலாம். அக்கரை சீமையிலே, பிரசாதம் என்ற இவ்விரு சிறுகதையின் அமைப்பு, சொல் முறைமை, காட்சிச் சித்தரிப்பு என எதனையும் நாடக வடிவத்திற்காகச் சிறிதளவுகூட மாற்றவில்லை நாடக இயக்குநர்கள். ஒருவகையில் சிறுகதை முன்வைக்க விரும்பும் உணர்வொழுங்கை எவ்விதக் கேள்விக்கும் உட்படுத்தாமல் அப்படியே காட்சியாக்கித் தருவது முக்கியமானதுதான். அதனாலேயே இந்த இரு சிறுகதை-நாடக ஆக்கங்களும் வெற்றிபெற்றிருக்கின்றன என்று சொல்ல வேண்டும்.
சுந்தரராமசாமி தனது முப்பது வயதுகளில் எழுதிய இவ்விரு சிறுகதைகளும் சிந்தனைகளைக் கிளறுவன. பிற்காலத்தில் சுந்தரராமசாமியின் சிறுகதைகள் மேற்குறித்த சிறுகதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திசைவழிகளில் நடைபயின்றன. எனினும் அவரது சாந்தி, சரஸ்வதி காலக் கதைகள், மனித மனத்தின் நுட்பங்களையும் அது திசை மாறும் தருணங்களையும் வாழ்க்கைச் சூக்குமங்களையும் ஆழமாகப் பதிவுசெய்தன. சுந்தரராமசாமியின் கதாவிலாசத்தை மேற்குறித்த ‘அக்கரை சீமையிலே’; ‘பிரசாதம்’ ஆகிய சிறுகதைகளும் நாடக ஆக்கங்களும் மேடையேற்றங்களும் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.

அறப்போர் – கையெழுத்து இயக்கம்.

இனியும் ஒரு உயிர் பறிபோவது உமக்குச் சம்மதமா?
மூன்று தமிழர்களையும் விடுதலை செய்யக் கோரி
மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி
அறப்போர் – கையெழுத்து இயக்கம்.
---------------------------------------------------------------------------------------------------
நாள்: 14.09.2011 புதன்கிழமை நண்பகல் 12 மணி
இடம்: தூய நெஞ்சக் கல்லூரி அருகில், திருப்பத்தூர், வே.மா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித நேயம் கொண்டோரே…
இராஜீவ்காந்தி கொலை வழக்கில் அற்பமான குற்றச்சாட்டில் 21 ஆண்டுகளாகச் சாவை எதிர்நோக்கியிருக்கிறார்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன்!
‘மனசாட்சியின் கண்ணீர் குரலாகச் சொல்லுகிறேன்… எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை!’ என்று கதறும் பேரறிவாளனின் கண்ணீர்க்குரல் உங்கள் மனதைப் பிசையவில்லையா?
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், உயிருக்கு உயிர் என்று அப்பாவிகள் பலியிடப்படுவதில் உங்களுக்குச் சம்மதமா?
குற்றவாளிகள் எல்லோரும் தண்டனை பெறுவதில்லை; தண்டனை பெற்றோர் எல்லோரும் குற்றவாளிகள் இல்லை! பேரறிவாளன், சாந்தன், முருகன் – மூவரும் 21 ஆண்டுகள் கொடிய சிறையில் வேதனை அனுபவித்த பிறகும் கொலை புரியத் துடிக்கும் அரசாங்கத்திற்கு உங்களின் மவுனம் ‘சம்மதம்’ அல்லவா?
“மத்திய மாநில அரசுகளே! மூன்று தமிழ்களையும் விடுதலை செய்!” - -எனக் கேட்டு நீங்கள் போடும் ஒரு கையொப்பம் மூவரின் உயிரையும் காப்பதற்கு உதவும். மனித நேய வரலாறு படைக்க உங்கள் கையெழுத்து உதவட்டும்!
மாணவ மாணவிகளே! பொதுமக்களே! மனித நேயம் கொண்டோரே…
வாருங்கள்! மரண தண்டனைக்கு எதிராகக் கையொப்பமிட!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித நேயப் பற்றாளர்கள் கூட்டமைப்பு, திருப்பத்தூர், வே.மா.
தொடர்புக்கு: 9094107737, 9443221399, 9345011588, 9366655399