Friday, 25 July 2014

நெய்தல்திணை: கூற்றும் துறையும் முனைவர் கி.பார்த்திபராஜா



உதவிப்பேராசிரியர்
தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை
தூய நெஞ்சக் கல்லூரி
திருப்பத்தூர் – 635601
வேலூர் மாவட்டம்.
அறிமுகம்:
வேந்தன் மேய பெருமணல் உலகம் என்று நெய்தல் நிலத்தையும் நிலக்கடவுளையும் சுட்டுகிறார் தொல்காப்பியர். பெரும்பொழுது அறுபருவமும் என்பர்.
காரே கூதிர் முன்பனி பின்பனி
சீரிள வேனில், வேனில் என்றாங்கு
இருமூன்று திறத்த (நம்பி.அகப்.3) என்று நம்பியகப்பொருள் குறிப்பிடுகிறது. நெய்தலுக்குரிய சிறுபொழுதைக் குறிப்பிடும் தொல்காப்பியர், ‘எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும் (தொல்.பொருள.அகத்.17) என்கிறார். ‘வெய்யோன் பாடு நெய்தற்கு உரித்தே (நம்பி.அகப்.8) என்று பிற்கால அகப்பொருள் இலக்கணம் குறிப்பிடும். கருப்பொருட்கள் கடலும் கடல்சார்ந்த இடமுமாகிய பெருமணற்பரப்பில் இருப்பவை.  உரிப்பொருள், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆகும்.
‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலைத் திணைக்குரிப் பொருளே (தொல்.பொருள்.அகத்.14) என உரிப்பொருள்களை வரிசைப்படுத்திக் கூறுகிறது தொல்காப்பியம்.

உரிப்பொருட் பொருத்தம்:
தமிழ்ச்சான்றோர், அன்பின் ஐந்திணை என்று அழைக்கப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்தனுள் நெய்தலை, தலைவனைப் பிரிந்து தலைவி ஆறாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவலப் பேரிடமாகவே வகுத்துள்ளனர். கடற்கரைச் சூழல் என்பது நெய்தல் திணைக்குரிய உரிப்பொருளாகிய இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்பதற்கு மிகச் சரியான அளவில் பொருந்துகிறது என்பது இலக்கிய ஆய்வாளர்கள் கருத்தாகும். அதாவது இரங்கல் என்னும் பொருண்மைக்குக் கடற்கரை மிகச்சிறந்த களமாகிறது என்பதாம்.
‘வைகறை தொடங்கிப் பகல் முழுவதும் மக்களும், கடற்காகம் நாரை கொக்கு அன்றில் போன்ற புள்ளினங்களும் மல்கி இயங்குவதால், கடல், கழி, கரை, கானல் ஆகிய நெய்தற்பகுதிகள் நெடுகிலும் பேராரவாரம் பெருகிக் காணும். ஞாயிறு சாயுங்காலம் (எற்பாடு) வந்துற்றதும், அப்புள்ளினங்கள் யாவும், தம் புகலிடம் திரும்பிச் சென்றுவிட, நெய்தற் பகுதி வெறிச்செனத் தோன்றும். கடல் அலை மட்டுமே புலம்பொலி எழுப்பிக் கொண்டிருக்க, பிற ஒலிகள் அனைத்தும் அடங்கி அவலமிகும் மரண அமைதிச் சூழ்நிலையே அங்கு நிலவிநிற்கும். தலைவனைப் பிரிந்து தவிக்கும் தலைவிக்கு, அவ்விடமும் சூழலும் காலமும் ஆற்றாமை கைம்மிக்கு, இரங்கல் நிகழ்வதற்கு ஏற்றவையாய்த் தோற்றும். தலைவியின் கண்ணெதிரே காணும் அலைகள் அடுத்தடுத்து உயர்ந்தும் தாழ்ந்தும் தோன்றுவதும் அவளது பிரிவுத் துன்ப்ப் பெருமூச்சைப் பெருக்கத் தூண்டுவதாகவே அமையும். (முத்துக்கண்ணப்பன்.சி:`1978:7) என்பர்.
இரங்குதல் என்னும் உணர்வு, பகற்பொழுதினும் இரவுப்பொழுதிலேயே மிகும். எனவே இரவுப்பொழுது வருவதற்கு ஏதுவாகிய எற்பாடு, கண்டார் இனி வருவது மாலையென வருத்தத்தை ஏற்படுத்துமாகையால் அது சிறந்த து என்பார் இளம்பூரணர். ‘கடலும் கானலும் கழியும் காணும்தொறும் இரங்கலும், தலைவன் எதிர்ப்பட்டு நீங்கியவழி இரங்கலும், பொழுதும் புணர்துணைப் புள்ளும் கண்டு இரங்கலும் போல்வன இரங்கல். அக்கடல் முதலியனவும் தலைவன் நீங்குவனவும் எல்லாம் நிமித்தமாம் என்பார் நச்சினார்க்கினியர்.
எனவே நெய்தலுக்குரிய இரங்கல் என்னும் உரிப்பொருட்பொருண்மை மிகச் சரியாகப் பொருந்தும் களமாக க் கடலும் கடல்சார்ந்த இடம் உள்ளது எனலாம். அவ்வாறே அவ்வுணர்வு மிகச் சரியாகச் சிறக்கும் சிறுபொழுதாக எற்பாடு அமைந்துள்ளது எனலாம்.
கூற்று:
சங்க இலக்கியத் தொகுதியில் உள்ள பாடல்கள் அனைத்துமே கூற்றுக்களாகவே அமைகின்றன. கலித்தொகைப் பாடல்கள் போன்ற சில அமைப்புகளைத் தவிர்த்துப் பிற அனைத்துப் பாடல்களுமே தனிநபர் கூற்றுக்களாகவே அமைகின்றன. பல அகத்திணைப் பாடல்களில் கூற்றுநரின் கூற்றிலேயே கேட்போர் விளிக்கப்படுவது உண்டு. (எ.கா: அம்ம வாழி தோழி!, அன்னாய் வாழி!) மற்றும் பல பாடல்களில் கேட்போர் விளிக்கப்படாமலிருப்பினும், கூற்று யாருக்குரியது அல்லது யாவருக்குரியது என்பதனைப் பாடலடிகள் தெளிவாக்கிவிடுவதுண்டு.
பல சமயங்களில் முன்னர் விளிக்கப்பட்டுக் கூறப்படும் கூற்று, முன்னிலையில் இருப்பவருக்கானதாக அமைவதில்லை. அதாவது கூற்று, முன்னிலையில் இருப்போருக்குக் கூறப்பட்டாலும் அது முன்னிலையோரைச் சாக்கிட்டுப் படர்க்கையில் இருக்கும் பிறிதொருவருக்கானது ஆகும். இவ்வகைமையிலான பல பாடல்கள் சங்க அக இலக்கியங்களில் இருப்பதைக் காணமுடியும். ‘தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி தோழிக்குக் கூறலும் ‘தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவிக்குக் கூறலும் எனப் பாடல்கள் அமைவதைக் காணலாம். கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்த முடியாத, கூற முடியாத படிநிலை உறவு அமைப்பு இதன்வழியாகப் புலனாகிறது. ஆனாலும் இப்படிநிலை அமைப்பு என்பது அக இலக்கியங்களைப் பொறுத்தவரை கறாரான ஒன்றல்ல; மாறாக நெகிழ்வுத்தன்மை உடையதாகும். சூழலும் அமைப்பும் பொருந்தும் இடங்களில் கூற்று வெளிப்படையாகவே வரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூற்றுக்குரியோர் கேட்போர் பற்றிய மரபுகளில் அக இலக்கியக் கோட்பாடுகள் சில பொதிந்து கிடப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எடுத்துக்காட்டாகத் ‘தோழி கூற்றைக் கேட்போராகப் பாங்கனோ, பாகனோ இடம்பெறுவதில்லை. தலைவன் கூற்றைக் கேட்போராகச் செவிலியைப் புலனெறிப்படுத்தும் மரபு இல்லை. இங்ஙனம் கூற்றுக்குரியார் வழிக்கேட்போரையும், கேட்போர் மூலம் கூற்றுக்குரியாரையும் சில சூழல்கள் தீர்மானிக்கின்றன (வசந்தாள்.த:1990:257) என்பர்.
தனிநபர் கூற்றுக்களே சங்க இலக்கியப் பாடல்கள் என்ற நிலையிலிருந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட கூற்றுக்கள் என்ற அமைப்பு, சங்க இலக்கிய காலத்தின் பிற்கால வளர்ச்சி நிலையெனக் கொள்ளுதல் பொருத்தமேயாகும். தனிநிலைச் செய்யுளில் இருந்து தொடர்நிலைச் செய்யுள் வளர்ந்து செல்லும் இலக்கியவியல் வரலாற்றுப் போக்கினையும் ஒப்புநோக்கலாம்.
கூற்றுக்குரியோர்:
அகத்திணை மரபில் களவுக்கும் கற்பிக்கும் உரியர் என்று 1.பார்ப்பான், 2.பாங்கன், 3.தோழி, 4.செவிலி, 5.கிழவன், 6.கிழத்தி ஆகியோரும் கற்புக்கு மட்டும் உரியர் என்று, 7.பாணன், 8.கூத்தன், 9.விறலி, 10.பரத்தை, 11.அறிவர், 12.கண்டோர் ஆகியோரைக் குறிப்பிடுவார் தொல்காப்பியர் (செய்யுள்:490,491).
கூற்றுக்கு உரியவர்கள் மட்டும் அகப்பொருளில் பயின்று வருவதில்லை; நில மாந்தர்கள் அனைவருமே வருவர். அகப்பொருள் மாந்தர்களென இலக்கியத்தில் இடம்பெறும் அனைவரும் கூற்றுக்கு உரிமை உடையவரும் அல்லர்.
‘ஊரும் அயலுஞ் சேரியோரும்
நோய்மருங் கறிநருந் தந்தையுந் தன்ஐயும்
கொண்டெடுத்து மொழியப் படுத லல்லது
கூற்றவண் இன்மை யாப்புறத் தோன்றும் (தொல்.பொருள்.492) என்று விளக்குவார் தொல்காப்பியர்.

நெய்தல் அகப்பாடல்கள்:
சங்க அக நூல்களில் இடம்பெற்றுள்ள நெய்தல் திணைப்பாடல்களின் எண்ணிக்கை பின்வருமாறு: நற்றிணை:102, குறுந்தொகை:72, ஐங்குறுநூறு:100, கலித்தொகை:33, அகநானூறு:40. மொத்த நெய்தல்திணைப்பாடல்கள்: 347.
நெய்தல்திணைப் பாடல்களில் கூற்றுகள்:
நெய்தல்திணைப் பாடல்களில் அதிகமான கூற்றுகள் பெற்றுள்ள அகநிலைப் பாத்திரம் தோழியாவாள். தோழிகூற்றுப்பாடல்களாக அமைவன மொத்தம் 171 பாடல்கள் ஆகும்.(தோழி கூற்றுப்பாடல்கள் ஐந்து திணைகளிலும் மொத்தம் 777 ஆகும்). தோழிக்கு அடுத்தநிலையில் அதிகமான கூற்றுகள் பெற்றுள்ள அகநிலைப்பாத்திரம் தலைவியாவாள். 127 பாடல்கள் தலைவி கூற்றுகளாக அமைவன. (ஐந்து திணைகளிலும் தலைவி கூற்றுப் பாடல்கள்:548). தலைவன் 22 கூற்றுகளும் (ஐந்து திணைகளிலும் தலைவன் கூற்றுப்பாடல்கள்:351) , கண்டோர் (ஐந்திணைகளில் 21 பாடல்கள்), செவிலி (ஐந்திணைகளில் 35), பரத்தை ஆகியோர் கூற்றுகள் தலா ஒருபாடலும் உள்ளன. தோழி கூற்றாகவும் தலைவியின் கூற்றாகவும் கருதத்தக்க பாடல்கள் இரண்டு உள்ளன. அகநானூறு.180, நற்றிணை.272 ஆகிய இரு பாடல்களும் இருவர் கூற்றுக்கும் பொருந்துவதாகின்றன. தலைவன், தலைவி ஆகிய இரண்டுபேர் கூற்றாகவும் கொள்ளத்தக்க பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது. அப்பாடல் நற்றிணை.388 ஆம் பாடல் ஆகும். இவை தவிரக் கலித்தொகையில் கண்டோர் மற்றும் தலைவி கூற்றாக – அதாவது இரு கூற்றும் கலந்த நிலையில் வரும் பாடல்கள் 5 ஆகும். கலித்தொகையில் வாயில்களின் பாடல்களாக இரண்டும் கண்டோர் பாடல்களாக இரண்டும் காணக்கிடைக்கின்றன.
அன்பின் ஐந்திணைகளில் 36 பாடல்கள் நற்றாய் கூற்றாக உள்ளன. ஆனால் நெய்தல் திணையில் நற்றாய் கூற்றாக அமையும் பாடல்கள் ஏதுமில்லை என்பது கருதத்தக்கது.
தோழி கூற்று:
அகமாந்தர்களின் உளவியல் வெளிப்பாட்டுக்கருவியாக அமையும் பாத்திரம் தோழியே ஆவாள். தலைவன், தலைவி ஆகியோரின் பண்புச்சித்திரத்தை மெருகூட்டும் இன்றியமையாத பாத்திரமாகவும் தோழி விளங்குகிறாள். நேரடியாகப் பாத்திரங்கள் உரையாடுவதைக் காட்டிலும் அவர்கள் சார்பாகத் தோழி கூற்று நிகழ்த்துவதாக வருவது இலக்கியச் சுவையை மேலும் மிகுவிக்கும் என்று பண்டைத்தமிழ் இலக்கிய முன்னோடிகள் கருதியிருக்க்க் கூடும். தோழி கூற்றுப் பாடல்களின் மிகு எண்ணிக்கை இச்செய்தியைத்தான் எடுத்தியம்புகின்றது. ஐந்திணைகள் அனைத்திலுமே தோழி கூற்றுப்பாடல்களே எண்ணிக்கையில் மிகுதி என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். தோழி கற்பனையான இலக்கியப்படைப்பு என்று கொள்ளப்பட்டாலும் கூட, அகமாந்தர்களின் உளவியல் நுட்பத்தை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த பாத்திரமாகத் தோழி விளங்குகிறாள் என்பது மிகைக்கூற்றல்ல. நெய்தல் பாடல்களில் தோழியின் கூற்றுப்பாடல்களும் பலநிலைகளில் அமைகின்றன. அவற்றின் விரிவினை இக்கட்டுரையின் துறை விளக்கங்களில் காணலாம்.
தலைவி கூற்று:
சங்க அக இலக்கியத்தில் தோழிக்கு அடுத்து தலைவி கூற்றுப்பாடல்களே மிகுதியாக உள்ளன. நெய்தல் திணைப்பாடல்களும் அதற்கு விதிவிலக்கன்று. தலைவி கூற்று நிகழ்த்துவது தோழி, தலைவன் ஆகிய அகத்திணை மாந்தர்களிடம் மட்டுமன்று. காம மிக்க கழிபடர் கிளவியில் அவள் ஆறு, நாரை, பொழுது, கடல், கிளி, நெஞ்சு என மாந்தரல்லனவற்றையும் விளித்துப் பேசுவது உண்டு.
தலைவன் கூற்று:
சங்க இலக்கியத்தின் அகத்திணை மாந்தர்களுள் குறிப்பிடத்தக்க பாத்திரமாகிய தலைவன் கூற்று நெய்தல் திணையில் மட்டும் 22 பாடல்கள் உள்ளன. சங்க அக இலக்கியங்களில் துறைக்குறிப்புகள் குறிக்கப்படாத பாடல்களை விடுத்து, துறைக்குறிப்புகள் உள்ள 1848 பாடல்களில் தலைவன் கூற்றுக்குரியவை 351 பாடல்கள் ஆகும். தலைவனுடைய கூற்றினைக் கேட்போராக அமைவன கருத்திற்குரியன. நெஞ்சு (119 பாடல்கள்), தலைவி(56), தேர்ப்பாகன்(49), தோழி(27), பாங்கன்(26), பாணன்(5), தன்னுள்(14), உழையர்(2), கண்டோர்(2), கனா(1) சான்றோர்(1), புறா(1), மழை(1), முல்லை(1), வாடை(1), கேட்போரில்லாமை(35) ஆகியவாகும்.
துறை:
தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகவே துறையைக் குறிப்பிடுகிறார்.
‘அவ்வ வ மாக்களும் விலங்கும் அன்றிப்
பிற அவண் வரினும் திறவதின் நாடித்
தத்தம் இயலான் மரபொடு முடியின்
அத்திறத்தானே துறை எனப் படுமே (தொல்.செய்யுளியல்:1465) என்பது அவரது கருத்து.
திணைக்குரிய உரிப்பொருளை எடுத்தியம்பும் விரிவான சட்டகமே துறை எனலாம். திணைக்குரிய ஒழுக்கத்தின் அமைவு, அதன் பிரிவுகள், நுட்பங்கள், உளவியல் விகசிப்புகள் என்று விரிந்த தளத்தில் துறை என்பது இயங்குகிறது.
நெய்தல் திணையில் துறைகள்:
நெய்தல் திணைக்குரிய உரிப்பொருளாகிய ‘இரங்கல் மற்றும் இரங்கல் நிமித்தம் என்பதை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-          பகற்குறி மறுத்தல்
-          இரவுக்குறி மறுத்தல்
-          இற்செறிப்பை உணர்த்தல்
-          பிரிவிடை ஆற்றைமையை உணர்த்தல்
-          வரைவு மலிந்து கூறல்
-          வரைவு கடாயது
-          அறத்தொடு நிற்றல்
-          வரைவு நிகழுமா என்ற ஐயம் நீக்கல்
-          காமம் மிக்க கழிபடர் கிளவி
-          குறை நயப்பக் கூறல்
-          நெஞ்சொடு புலம்பல்
முதலான துறைகளும் அவற்றோடு தொடர்புடைய ஏராளமான துறைகளுமாகத் திணைக்குரிய உரிப்பொருளைச் சிறப்பிக்கும் வகையில் அமைகின்றன. ஆற்றாமை என்பது நெய்தல் உரிப்பொருளைச் சிறப்பிக்கிறது. எனவே அதனோடு தொடர்புடையதாக நெய்தல் திணையின் துறைகள் அமைகின்றன.
துறையும் கூற்றும்:
திணைக்குரிய உரிப்பொருளை விவரிப்பது துறையெனின், துறையின் நுண்ணிய விளக்கமாக க் கூற்று அமைகின்றது எனலாம். கூற்று நுட்பங்களே உரிப்பொருளை வாசிப்பாளருக்கு நெருக்கமாக்குகின்றது.
குறி மறுத்தல்:
குறி, குறியிடம், குறியிடம் சுட்டுதல், குறியிடத்து எல்லை ஆகியனபற்றித் தொல்காப்பியம் பேசுகிறது.
குறியெனப்படுவது இரவினும் பகலினும்
அறியத்தோன்றும் ஆற்றது என்ப’ (தொல்.பொருள்.களவு.1076),
‘இரவுக்குறியே இல்லகத் துள்ளும்
மனையோர் கிளவி கேட்கும் வழி அதுவே
மனையகம் புகாக் காலை யான (1077)
பகற்புணர் களனே புறன் என மொழிப
அவள் அறிவுணர வருவழியான (1078) என்பன குறியிடம் பற்றித் தொல்காப்பியர் குறிப்பன.
குறியிடத்தில் வந்து தலைவியைக் கூடிச் செல்லும் தலைவன் களவு ஒழுக்கத்தில் கிடைக்கும் புணர்ச்சி இன்பமே போதும் என்று நிறைவுற்றிருப்பான். அவன் விரைந்து தலைவியை வரைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு தலைவி, தோழி ஆகியோர் குறி மறுப்பார்கள். அகநானூறு 10 ஆம் பாடல் தோழி கூற்றில் அமைகின்றது. இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது என்னும் கூற்றுக் குறிப்புடையது அப்பாடல். களவொழுக்கத்தின் கண் அலர் எழுந்த து. அதனையறிந்த தலைஃவன் ஒருவழித் தணந்து உறையக் கருதினான். அதனைக் குறிப்பால் உணர்ந்த தோழி, தலைவன் இரவுக்குறியிடத்து வந்து மீளும் பொழுது, அவன் எதிர் சென்று தலைவி இனிச் சிறிதும் நின்னைப் பிரிந்து உயிர் வாழாள். ஆதலால், நின் ஊரிடத்து அவளை மணந்து கொண்டு போதல் வேண்டும் என அறிவுறுத்தியது அப்பாடலாகும்.
‘வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை
புள் இறை கூரும் மெல்லம் புலம்ப!
நெய்தல் உண்கண் பைதல கலுழ
பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும்
அரிது உற்றனையால் – பெரும! உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும் – கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
மோட்டு மணல் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே (அகம்:10)
-அம்மூவனார்.
பகற்குறி வந்த தலைமகனுக்குத் தோழி அறிவுறுத்தியது (அகம்:30), இரவுக்குறி வந்த தலைவனை எதிர்ப்பட்டுச் சொல்லியது (அகம்:220), இரவுக்குறி மறுத்துப் பகலில் வந்து சந்திக்க என்றது (அகம்:80, 240) எனப் பல நிலைகளில் கூற்றுக்கள் அமைவதைக் காணமுடிகிறது.
இற்செறிப்பு:
தலைவன் தலைவி களவொழுக்கத்தால் எழுந்த அலர் காரணமாக இல்லத்தார் தலைவியை இற்செறித்தனர். இவ்வாறு நிகழக்கூடும் என்று தோழி முன்னரேயே தலைவனை எச்சரித்தல் நெய்தல் திணையில் கூற்றாக வெளிப்படுகிறது. அகநானூற்றின் 60 ஆம் பாடல் தோழியின் எச்சரிக்கையைப் புலப்படுத்துகிறது. காவற்படுத்தியமையை உணர்த்துகிறது அகம்:20 மற்றும் அகம்:90 ஆம் பாடல்கள். தலைவியின் இல்லத்தாரது காப்பின் மிகுதியை உணர்த்துகிறது குறுந்தொகை 57 ஆம் பாடல்.
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர்உறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவுஅரிது ஆகிய தண்டாக் காம மொடு
உடன்உயிர் போகுகதில்ல – கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – சிறைக்குடி ஆந்தையார்.
காப்புக் கைம்மிக்கவழி, ஆற்றாமையால் வருந்தும் தலைவி, தோழிக்கு உரைப்பதாக இப்பாடல் அமைகின்றது. தலைவனைப் பிரிந்து உயிர் வாழ்தலைவிடச் சாதலே தக்கது எனத் தலைவி கருதினாள் என்கிறது இப்பாடல்.
தலைவியை இல்லத்தார் இற்செறித்த பின்னும் தலைவன் களவொழுக்கத்திலேயே நீடிக்க விரும்பினான். இதையறிந்த தோழி, அவனை வரைவு கடாயது ஐங்குறுநூற்று 115 ஆம் பாடல்.

பிரிவில் ஆற்றாமை:
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குக் கூறும் கூற்றுப்பாடல்களும் ஆற்றாமையை வெளிப்படுத்துவதாக அமைகின்றன (அகம்:40). தலைவன் பரத்தையிற் பிரிந்தமையால் தலைவியின் நிலையைத் தோழி பாணனுக்கு எடுத்துரைக்கும் கூற்றும் குறிப்பிடத்தக்கது (அகம்:50).
வரைவு கடாதல்:
களவு ஒழுக்கம் கற்பொழுக்கத்திலேயே நிறைவு பெற வேண்டும் என்பது பண்டைத் தமிழரின் ஒழுக்கவியற் கோட்பாடு ஆகும். எனவே நெய்தல் திணைப் பாடல்கள் வரைவு கடாதல் குறித்த பாடல்கள் எண்ணிக்கை அளவில் கணிசமாக உள்ளன. அகம்:100, அகம்:150 முதலான பாடல்கள் அதற்குக் காட்டு. வரைவு கடாதல் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் தலைவன் வரைந்துகொள்ள வருகிறான். அந்நிகழ்வு தெரியாமல் தலைவி ஆற்றாமை கொள்கிறாள். அவளது ஆற்றாமையை அழிக்கும் வண்ணம், தோழி செய்தி உரைக்கிறாள். அகம்:70, அகம்:160 ஆகிய பாடல்கள் மேற்குறித்த கூற்றுக்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
அறத்தொடு நிற்றல்:
தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல் குறித்த பல பாடல்கள் நெய்தல் திணையில் உள்ளன.
‘அன்னை வாழி! வேண்டன்னை என் தோழி
சுடர் நுதல் பசப்பச் சாஅய், படர் மெலிந்து
தண்கடற் படுதிரை கேட்டொறும்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே (ஐங்குறு:107)
தலைவியின் மேனி மாறுபாடு கண்டு செவிலி வருந்தி, அது தீர்க்கும் வழிகளை ஆராய்ந்து இடர்ப்படுவது கண்டு, அவள் நோய்க்கு ஒரு கடற்றுறைத் தலைவன்மேல் அவள் கொண்ட காதலே காரணம் என உண்மையை வெளிப்படுத்தியது இப்பாடல் ஆகும். அகம்:110, அகம்:190முதலான பாடல்களும் நெய்தல் திணையில் அறத்தொடு நிற்றல் துறைக்கூற்றுக்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். அறத்தொடு நிலை பிறந்த பின்னும் வரைவு நீடிப்பதும் உண்டு. அந்நிலையில் செவிலி ‘மற்றொரு குலமகளை வரையும் கொல்?’ என்று தலைவனை ஐயுறுதலும் உண்டு. அவ்வையத்தை நீக்கும் வகையிலும் தோழி கூற்று அமைவது உண்டு.
‘அன்னை வாழி வேண்டன்னை! கழிய
முண்டகம் மலரும் தண்கடற் சேர்ப்பன்
எம்தோள் துறந்தன ன் ஆயின்
எவன்கொல் மற்றவன் அவன் நயந்த தோளே?' (ஐங்குறு:108)
என்று விடையிறுப்பதும் உண்டு.

காமம் மிக்க கழிபடர் கிளவி:

ஆற்றாமை மிகுந்தவிடத்து காம ம் மிகுந்து தலைவி பலவாறாகப் புலம்புதல் உண்டு. அகநானூற்றுப் பாடல் 170-இன் கூற்று விளக்கம் பின்வருமாறு அமைகின்றது.
‘தலைவனது பிரிவாற்றாது தலைவி வருந்தினாள். தனது வேட்கை மிகுதியாலே பிரிவாற்றாது தலைவி வருந்தினாள். தனது வேட்கை மிகுதியாலே கேளாதனவற்றைக் கேட்பனவாக விளித்து, தலைவனிடத்துச் சென்று தன் துன்பமிகுதியினை எடுத்துக் கூறுமாறு சொல்லியது
-மேற்குறித்த பாடல் தலைவி வண்டை விளித்துப் பேசுவதாக அமைகின்றது. காம ம் மிக்க கழிபடர் கிளவியால், பொழுது கண்டு சொல்லிய பாடல்களும் உள்ளன.
‘ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளியதாமே கொடுஞ்சிறைப் பறவை
இறைஉற ஓங்கிய நெறிஅயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின் விரையுமால் செலவே (குறுந்:92)
கதிரவன் மறைந்த, அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில் வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், தாம் தங்குவதற்கு ஏற்ப உயர்ந்து அமைக்கப்பட்டுள்ள கூட்டினுள் இருக்கும் தம் குஞ்சுகளின், வாயின் உட்பகுதியில் செருகுவதற்காக, இரையைத் தம் அலகினால் எடுத்துக் கொண்டமையால் விரைந்து செல்லும். இப்பறவைகளிடம் இயற்கையாக இவ்வன்பு உடைமையால், அவை இரங்கத்தக்கன என்பது இதன் பொருளாம். நெய்தல் திணைக்குரிப்பொருளைச் சிறப்பிக்கும் இப்பாடல் எற்பாடு என்ற அதன் சிறுபொழுதினைச் சிறப்பிப்பதையும் காணலாம்.
பிற கூற்றுக்கள்:
தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது(அகம்:250), தோழி சொல் எடுப்பத் தலைமகள் சொல்லியது(அகம்:260), வரைவான் எனத் தலைவி கூறல்(ஐங்குறு:112), வரையப் போகிறான் வருத்தம் ஏன் என்று தோழி கூறல்(ஐங்குறு:141), கண் துயிலவில்லை போலிருக்கிறதே? ஏன்? என்ற பாங்கனின் கேள்விக்குத் தலைவன் விடையிறுத்த து(ஐங்குறு:172), தலைவன் சிறைப்புறமாகத் தலைவியின் நிலை கூறியது(அகம்:210, ஐங்குறு:114), தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியது(அகம்:230, 280), வாயில் நேர்ந்த து(குறுந்:9), தலைவி பாணனிடம் வாயில் மறுத்த து(ஐங்குறு:131, 132) தலைவி தோழியிடம் வாயில் மறுத்த து(ஐங்குறு:151), தோழி தலைவன் பெருமைகளைத் தாய்க்குக் கூறியது(ஐங்குறு:101-104), மகவு ஈன்ற தலைவியைக் காணச் சென்ற செவிலிக்குத் தோழி கூறியது(ஐங்குறு:104), பிரிவிடை ஆற்றாமை(குறுந்:4,5) பிரிவிடை ஆற்றாமலிருந்தமையைக் கூடியபோது சுட்டிது(குறுந்:49), தலைவிதம் இல்லத்தில் நிகழ்ந்த து(ஐங்குறு:113), பரத்தை பற்றி (ஐங்குறு:121-130) எனப் பலவாறாக நெய்தல் திணைக் கூற்றுக்கள் அமைகின்றன.
ஒரே பாடல் இருவர் கூற்றாகவும் அமைகின்றது. அதாவது இரு அகமாந்தருக்கும் பொருத்தமாக அமைகின்றனது. அகம்:180 இதற்கு எடுத்துக்காட்டு. ‘இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறைநயப்பக் கூறியது எனவும் ‘தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியது எனவும் இருநிலையில் அமைகின்றது. இவ்வாறான பாடல்களும் நெய்தல் திணையில் பயின்று வந்துள்ளன.
கேட்பது ஒருவராகவே இருந்தபோதிலும் இரு சூழல்களுக்குப் பொருந்தும் பாடல் கூற்றும் அமைகின்றன. ‘தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம் என்று அகம்:280 ஆம் பாடல் குறிப்பிடப்படுகிறது.
தொகுப்பாக:
அகத்திணை துறைகள் கூற்றுக்கள் என்று நோக்கும் பொருண்மையில் திணை அடிப்படையில் அவற்றைப் பகுத்து நோக்குதல் கூற்று வகைப்பாட்டை நுட்பமாகப் புரிந்து கொள்ள உதவும் எனலாம்.
கூற்றுக்களில் ஏனைய திணைகளைப் போலவே தோழி முதலிடம் பெறுவதும் அவளைத் தலைவியும் தலைவனும் தொடர்வதும் நெய்தல் திணையிலும் காணக்கிடைக்கிறது.
திணைக்கு உரிய உரிப்பொருளைச் சிறப்பிக்கத் துறை அமைகின்றது. துறையின் நுட்பங்களை வாசிப்பாளனுக்குக் கடத்த கூற்றுக்கள் பக்கபலமாக அமைகின்றன.
துறை மற்றும் கூற்று என்பவை பொதுச்சட்டகத்திலிருந்து புலவர்களின் கற்பனைக்கு ஏற்ப, விசாலித்துக் கிளைபரப்புவதை நெய்தல் பாடல்கள் சுட்டுகின்றன.
குறிப்பிட்ட துறை சார்ந்த பாடல்கள் அத்துறையைக் குறுக்கும் நெடுக்குமாய்க் கடப்பனவாக, மேலும் கற்பனைக்கு இடமளிக்கும் தன்மையனவாக அமைகின்றன.
 கருவி நூல்கள்:
1.        ------------ சங்க இலக்கியங்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை.
2.        சுப்பிரமணியன்.ச.வே, ‘தொல்காப்பியம்:தெளிவுரை மணிவாசகர் பதிப்பகம், சென்னை:1998.
3.        முத்துகண்ணப்பன்.தி, ‘சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் அதிபத்தர் பதிப்பகம், சென்னை:1978.
4.        வசந்தாள்.த, ‘தமிழிலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள்-ஒரு வரலாற்றுப் பார்வை’ , சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை:1990.

மாற்று நாடக இயக்கம்: கல்விசார் நாடக அரங்கு முனைவர் அ.மரியசூசை முதல்வர் / தமிழ்த்துறைத் தலைவர் தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்.




முதலாக
நாடக வரலாற்றில் கல்விசார் நாடகங்கள் நவீன காலத்தின் புதுவரவு ஆகும். கல்வி நிறுவனங்களின் கலைசார் நடவடிக்கைகளில் நாடகங்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றே வந்திருக்கின்றன. பெரும்பாலும் பள்ளி கல்லூரி ஆண்டுவிழாக்கள், முத்தமிழ் விழாக்கள் என்று நாடகங்கள் காலங்காலமாக அரங்கேறி வருகின்றன. இந்த நாடகங்களின் நாடகக் கதை அல்லது கரு போதனாமுறையிலேயே அமைந்திருப்பதைக் காணலாம். பெரும்பாலும் நீதிக் கதைகளும் வரலாற்றுச் சம்பவங்களும் இவ்வாறான நாடக நிகழ்வுகளில் இடம்பிடித்துக் கொள்வது உண்டு. இந்நிகழ்வுகளில் பல நேரங்களில் உள்ளடக்கம்கூடப் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுவது உண்டு. நாடகத்தில் பங்கேற்கும் குழந்தைகள் அல்லது மாணவர்களின் ஈடுபாடும் பங்கேற்பும் மகிழ்ச்சியுமே முக்கியமானவையாகும்.
அண்மைக்கால மாற்றங்கள்:
மகிழ்வித்தல் (Entertainment) என்ற படிநிலையிலிருந்து சற்றே முன்னேறி, நாடக அரங்கம் (Theatre) என்ற அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன என்பது அண்மைக்கால நிகழ்வு. அதாவது கலைநிகழ்ச்சிகளில் ஒன்றாக இடம்பெற்றிருந்த நாடகங்கள், கோட்பாட்டுப் புரிதல்களோடு இப்போது தனித்த செயல்பாடுகளாகச் சில கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பயிற்சி அக்கறைகள்:
நாடகம் என்பது பொழுதுபோக்கு அல்லது மகிழ்ச்சியளிப்பது என்பதிலிருந்து வளர்ந்து பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக மாறிய காலகட்டம் இது எனலாம். நாடகத்துறையின் செயல்பாடுகள், பயிற்சிகள் தனிமனிதனை நடிகனாக உருவாக்குவன. இந்தப் பயிற்சிகளின் தனித்துவம் அல்லது முக்கியத்துவம் முற்காலத்தில் உணரப்படவில்லை. அவை ஒரு நடிகனை அல்லது நடிப்புத் திறமையை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. கற்பித்தலுக்கும் முறையான பாடத்திட்டங்கள் இல்லை.
ஆனால் நாடகப் பயிற்சிகள் என்பது நடிப்புத்திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகள் என்பதையும் தாண்டி, அவை பயிற்சி பெறும் நடிகனின் அகத்தைக் கட்டமைப்பவை என்ற புரிதல் நவீன நாடகக் கோட்பாடுகளினூடாக வருகிறது.
கூட்டுச் செயல்பாடு:
நாடக உருவாக்கத்தில் நடிகர்கள் ஒன்றிணைந்து வேலை செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கூட்டுச் செயல்பாடு என்பதில் பங்கேற்பாளர்கள் பல்வேறு நிலையில் பல்வேறுவிதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். குழு உறுப்பினர்களுக்கிடையிலான இணக்கமும் முரண்களும் பல்வேறு படிப்பினைகளைத் தருபவை. சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் முடிவெடுக்கவும் துணிந்து நிற்கவும் இவ்வனுபங்கள் உதவிகரமாக இருக்கின்றன.
நடிகனுக்கான பயிற்சி என்பது அடிப்படையில் உடல்-மனம்-குரல் என்ற மூன்று அம்சங்களில் கவனத்தைக் கொண்டுள்ளது. எனவே அவை ஆளுமைத் திறன் பயிற்சிகளாகவும் அமைவது இயற்கையே.
மேற்குறித்த பயிற்சிகள் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படுவதன் மூலமாகப் புதிய வாசல்களைத் திறக்க முடியும் என்பது நாடகவியலாளர்களின் நம்பிக்கை.

மாற்று நாடக இயக்கம்:
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின்மாற்று நாடக இயக்கம்இத்தகைய பணிகளை முன்னெடுத்த நாடக அமைப்பாகும்.
2003 ஆம் ஆண்டு இவ்வியக்கம் தோற்றுவிக்கப்பட்டது. ‘மாற்று ரசனையைஉருவாக்குவதே இதன் இலக்கு என்ற அறிவிப்புடன் இவ்வமைப்புத் தோற்றம் பெற்றது. கடந்த பத்தாண்டுகளில் (2003-2012) எட்டு நாடகத் தயாரிப்புகளை மாற்று நாடக இயக்கம் செய்துள்ளது.
நாடகங்கள்:
பிரபஞ்சன் எழுதியமுட்டை’, எஸ்.எம்..ராம் எழுதியஆபுத்திரனின் கதை’, ஸீக் ஃபிரீட் லென்சின்நிரபராதிகளின் காலம்’, யூஜின் ஐனெஸ்கோவின்பாடம்’, சுஜாதாவின்கடவுள் வந்திருந்தார்’, பெர்டோல்ட் பிரெக்டின், ‘தி காகேசியன் சாக் சர்க்கிள்’, ஜே.பி.பிரீட்ஸ்லி எழுதியதி இன்ஸ்பெக்டர் கால்ஸ்’, ஹபீப் தன்வீரின்சரண்தாஸ் சோர்ஆகிய எட்டு நாடகங்கள் மாற்று நாடக இயக்கத்தின் தயாரிப்புகள் ஆகும்.
இந்நாடகங்கள் கல்லூரி வளாகத்திலேயே தொடர்ச்சியாக நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடகங்கள் மாணவர்களுக்காக இரண்டு காட்சிகளும் பொதுமக்களுக்காக ஒரு காட்சியுமாக நடத்தப்பெற்றுள்ளன. கல்லூரி வளாகத்திலேயே அதிகபட்சமாக ஆறு காட்சிகள் அரங்கேற்றப்பட்ட நாடகம், ‘சரண்தாஸ் சோர்ஆகும்.
பங்கேற்பு:
நாடகத்தில் நடிப்பு, இசை, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒளி வடிவமைப்பு, மேடை நிர்வாகம், நெறியாளுகை எனப் பல நிலைகளில் மாணவர்களோடு ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளனர். இது புதிய கூட்டுறவையும் பலத்தையும் நாடக இயக்கத்திற்குச் சேர்த்துள்ளது எனலாம்.
பயிற்சிப் பட்டறைகள்:
மாற்று நாடக இயக்கத்தின் பயிற்சிப் பட்டறைகள் இருநிலைகளில் அமைகின்றன எனலாம். முதலாவதாக, பொதுநிலையில் நாடகப் பயிற்சி பெறுவோர்குறிப்பாக ஆளுமைத் திறன் பயிற்சிபங்கேற்கும் வகையில் ஆண்டுதோறும் பத்துநாட்கள் பயிற்சிப்பட்டறை நடைபெறுகின்றது.
இரண்டாவதாக, நாடகத் தயாரிப்புக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் அந்த ஆண்டு தயாரிக்கப்படப்போகும் நாடகத்திற்குத் தேவையான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சி பொதுநிலையிலன்றி, நாடகத்தில் பங்கேற்கப் போகும் நடிகர்களுக்கானதாகும்.

பின்னூட்டம்:
நாடகப் பயிற்சி முகாம்களில் பங்கேற்றோரின் பின்னூட்டங்கள், நாடகங்களில் பங்கேற்றோரின் பின்னூட்டங்கள் இப்பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அறிவிப்பதாக உள்ளன. மாணவர்களிடையே இப்பயிற்சிகளுக்குச் சிறப்பான வரவேற்பு இருப்பதை உணர முடிகிறது.
முடிவாக
-   கல்விசார் அரங்கு என்பது நவீன யுகத்தின் புது வரவாகும். இது நீதிபோதனை அரங்கு அல்லது பொழுதுபோக்கு அரங்கிலிருந்து முற்றிலும் வேறுபட்ட புதிய வகையிலான அரங்காகும்.
-   மகிழ்வித்தல் என்னும் நிலையிலிருந்து அரங்கம் என்பது புதிய நோக்கில் பயணப்படத் தொடங்கியது இன்றியமையாத நிகழ்வு ஆகும்.
-   நவீன காலத்துக்கு முந்தைய நாடகப் பயிற்சிகள், நடிப்பைக் கற்பிப்பதையே முழு நோக்கமாகக் கொண்டிருந்தன. அண்மைக்காலப் பயிற்சிகள் நடிகனின் அகத்தைக் கருத்திலெடுத்துக் கொண்டு செயல்படுகின்றன எனலாம்.
-   குழுவாகச் செயல்படுதலில் உள்ள இணக்கமும் முரணும் நடிகர்களுக்குப் பல்வேறு படிப்பினைகளை வழங்குவனவாக உள்ளன. அவை அவர்கள் சார்ந்த சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவிகரமாக உள்ளன.
-   தற்கால நடிப்புப் பயிற்சிகள் உடல்-மனம்-குரல் ஆகிய மூன்று தளங்களை மையம் கொண்டதாக அமைகின்றன. எனவே இவை சாராம்சத்தில் ஆளுமைத் திறன் பயிற்சிகளாகவும் அமைகின்றன.
-   அண்மைக்காலத்தில் கல்வி நிறுவனங்கள் நாடகப் பயிற்சிகளில் அக்கறை செலுத்தி வருகின்றன.
-   திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் மாற்று நாடக இயக்கம், கல்விசார் நாடக இயக்கமாக உருவாகிக் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
-   எட்டு நாடகத் தயாரிப்புகள், பார்வையாளர்கள், பயிற்சிகள், உத்வேகமளிக்கும் பின்னூட்டம் என்று விரிந்த தளத்தில் நம்பிக்கையுடன் பயணப்படுவது குறிப்பிடத் தக்கது.
--------------------------------------------------------------------------------------------------------------------