Thursday 9 September 2010

அம்ஷன் குமாருக்கு எதிர் வினை

உயிர்மை செப்டம்பர் 2010 இதழில் அம்ஷன் குமார் எழுதிய 'தமிழர் வாழ தமிழ் போதுமா?' என்ற கட்டுரைக்கான எதிர்வினை.
கி.பார்த்திபராஜா
தமிழ்த்துறை,
தூய நெஞ்சக் கல்லூரி,
திருப்பத்தூர் – 635601
வேலூர் மாவட்டம்.
அலைபேசி: 9094107737
தமிழர் வாழத் தமிழ் போதுமா? என்ற அம்ஷன் குமாரின் கட்டுரை வரலாற்றுப் புரிதலின்றி, தெளிவின்றி பொத்தாம் பொதுவாகச் சில செய்திகளை அள்ளித் தெளித்திருக்கிறது. மொழி வெறிக்கும் மொழிப் பற்றுக்கும் அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமலேயே அம்ஷன் குமார் தனது வாதங்களை அடுக்கிச் செல்கிறார்.
தனித்தமிழ் இயக்கத்தினரின் வடமொழி வெறுப்பையும் ஆங்கில விருப்பையும் மிகச்சரியாகவே சுட்டிக்காட்டும் அம்ஷன் குமார், ‘வடமொழிச் சொற்களைத் தமிழில் கலக்கக்கூடாது என்பது பலரின் வேண்டுகோள்’ என்கிறார். தமிழகத்தில் மிக முக்கியமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு மொழி இயக்கத்தின் செயல்பாட்டை, ‘வேண்டுகோள்’ என்று மொன்னைப்படுத்திப் பார்க்கிறார் அம்ஷன். அவர் குறிப்பிடுவது போல, வடமொழிக் கலப்பினை மறுத்தெழுந்த செயல்பாடு, வேண்டுகோள் அல்ல; அது ஒரு செயலூக்கம் பெற்ற எழுச்சி மிக்க இயக்கம் ஆகும்.
வடமொழியின் செல்லக் குழந்தையாகிய இந்தித் திணிப்பைத் தமிழகம் வீரஞ் செறிந்த போராட்டத்தின் மூலம் முறியடித்த நிகழ்வைப் பேச அம்ஷன் ஏனோ தவிர்த்துவிட்டார். எழுச்சி மிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பிந்தைய நாட்களின் விளைவுகளை, போக்குகளை, காட்டிக் கொடுத்தல்களையும் திராவிடக் கட்சிகளின் இரட்டை வேடங்களையும் இணைத்துப் பேசுவதில் ஒன்றும் தவறில்லை.
வடமொழியினால் தமிழுக்கு அபாயம் எதுவும் இல்லை என்று நல்லிணக்கச் சான்றிதழ் வழங்குகிறார் அம்ஷன். வடமொழியினால் மட்டுமல்ல, எந்த ஒரு மொழியினாலும் தமிழுக்கு அபாயம் இல்லை. இங்கு மொழி ஒரு பிரச்சினையே அல்ல. பிரச்சினை மொழியைக் கையாளுவோரின் ஆதிக்க மனோபாவம் தான். வடமொழியின் தமிழுடனான உறவு என்பது 2500 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆனால் அது தமிழில் புகுந்து தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்துப் பெற்ற வெற்றியின் அடையாளமே, கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளின் உருவாக்கம். எனவே தமிழும் வடமொழியும் எய்தியிருக்கும் பகைப்புலன் ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது. இதை மறைத்துவிட்டு ‘சிவாயநம என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை’ என்று வேதாந்தம் பேசுவது சரியன்று.
தமிழர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கட்டுரை நெடுக நியாயப்படுத்துகிறார் அம்ஷன். ஒரு மொழியைக் கற்றுப் புலமையடைவது வேறு; அம்மொழியைத் தனது வீட்டுமொழியாக, புழங்குமொழியாக, சிந்தனை மொழியாக ஆக்கிக் கொள்வது என்பது வேறு. தமிழர்கள் உலகின் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கட்டும்; பயன்படுத்தட்டும்; புலமை காட்டட்டும். ஆனால் தமிழ்நாட்டில் பேசுமொழியாகவும் கல்விமொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் தமிழே இருக்க வேண்டும். இதிலிருந்து தமிழ் விடுவிக்கப்பட்டால் தமிழ், எப்படி வாழும்?
ஒரு மொழி வாழும்மொழி, இறந்தமொழி என்று எதை அடிப்படையாக வைத்துப் பகுக்கப்படுகிறது? எந்தமொழி மக்களின் பேச்சு வழக்கில் இருக்கிறதோ, அம்மொழியே வாழும்மொழி; பேச்சு வழக்கற்ற மொழி இறந்தமொழி. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், ‘ஆங்கிலத்தில் உரையாடினால் தமிழ் மெல்லச் சாகும் என்று சொல்லுமளவுக்குத் தமிழ் பலவீனமான மொழி அல்ல’ என்று அப்பாவித்தனமாகக் கருத்துரைக்கிறார் அம்ஷன்.
‘நீ அம்மா அப்பா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று அன்பாகக் கூறினால் அக்குழந்தை ஒரே நொடியில் தன்னை மாற்றிக் கொள்ளும்’ என்கிறார் அம்ஷன். மம்மி டாடி என்று அழைப்பது ஏதோ குழந்தையின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்று குருட்டுத் தனமாக எண்ணுகிறார் அம்ஷன். இப்படியே போனால் குழந்தைகளிடம் போய் தமிழில் பேசச் சொல்லிப் பரப்புரை செய்வார் போலிருக்கிறது. குழந்தை ஆங்கிலத்தில் தன் தந்தை தாயை விளிப்பது என்பது, குழந்தையின் விருப்பம் சார்ந்த விடயம் அல்ல. அது சமூகத்தின் போக்கு. சட்டம், ஆட்சி, பொதுப்புத்தி என்ற காரணிகளைத் தப்ப விட்டுவிட்டு, குழந்தைகளின் மேல் பழிபோடுவது அபத்தத்திலும் அபத்தம்.
காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் ஆகியோரது ஆங்கில ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துக்காட்டி, பாரதிக்கு ஏனோ அந்தச் ‘சிறப்பு மிக்க கண்ணோட்டம்’ வாய்க்கவில்லை என்று வருத்தப்படுகிறார் அம்ஷன். தமிழனான பாரதியிடம் தமிழில் பேசாத தமிழர்களைச் சினந்தான் பாரதி. இதிலென்ன தவறு? அதுதானே சரி! எதன்பொருட்டு மகாகவி பாரதியைப் போற்ற வேண்டுமோ, அதன்பொருட்டுச் சினக்கிறார் அம்ஷன். நல்ல வேடிக்கை!
‘ஆங்கிலத்திற்கு எதிராகப் பொதுவெளிகளில் பேசுகிற அனைவரும் ஆங்கிலம் மீது விருப்புக் கொண்டவர்கள்’ என்று குறிப்பிட்டு அந்தப் பட்டியலில் பாரதியையும் இணைக்கிறார் அம்ஷன். பாவம் பாரதி! ‘எழுதுகோலும் தெய்வம்; எழுத்தும் தெய்வம்’ என்று சொன்ன பாரதிக்கு, எண்ணியதையே எழுதிய, எழுதியதையே வாழ்ந்த பாரதிக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.
கண்டுபிடிப்புகள், அதற்கான கலைச் சொற்கள் ஆகியவற்றின் வறுமை தமிழில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அம்ஷன். சிந்தனை வளர்ச்சிக்கும் கண்டுபிடிப்புகளுக்குமான உறவை ஏற்கனவே நிரூபித்திருக்கின்றனர் அறிஞர்கள். தாய்மொழி வழிக் கல்வி, சிந்தனை என்பதற்கும் அறிவியல் கண்டுபிடிப்பு வீச்சுக்கும் தொடர்பு உண்டு என்பதை மிக வசதியாக மறந்துவிட்டு, தலையைச் சுற்றிக் காது தொடச் சொல்கிறார் அம்ஷன். தமிழ்வழிக் கல்வி இல்லாமலேயே சுயமான கண்டுபிடிப்புகளும் கருத்தாக்கங்களும் தமிழர்களால் செய்யப்பட வேண்டும் என்று அம்ஷன் விருப்பம் தெரிவிக்கிறார். மந்திரத்தில் மாங்காய் காய்க்க வேண்டும் என்று நினைக்கிறார் அம்ஷன்.
வெறுங்கையில் திருநீற்றையும் லிங்கத்தையும் எடுக்கும் சாமியார்களைப் பார்த்து வியந்து பரவசப்படும் அதை உண்மை என்று நம்பும் சராசரிகளுக்கும் அம்ஷன் குமார்களுக்கும் வேறுபாடிருப்பதாகத் தோன்றவில்லை.

No comments: