Sunday, 13 July 2008

'கிறிக்கி' கூத்து தொடர்பான கட்டுரைகள்

கிறிக்கி
கூத்து தொடர்பான கட்டுரைகள்

பதிப்பாசிரியர் : கோ.பழனி
வெளியீடு : மாற்று, எண்:176, கியூ பிளாக், தொல்காப்பியர் தெரு, எம்.எம்.டி.ஏ.காலனி சென்னை - 106.

நூலில் 10 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அறிமுகமாகிப் பல ஆண்டுகள் ஆன ஒரு துறை பற்றிய போதுமான ஆய்வுகள் நிகழாமை என்பது அநேகமாகத் தமிழ்மொழியில் மட்டுமே இருக்க முடியும். ஏனெனில் மேற்கில் ஒரு கருத்துருவம் முன்வைக்கப்பட்டு விட்டால் அதனை முன்னிறுத்திக் கடந்த கால வரலாறு, அரசியல், பண்பாடு, இலக்கியம் என எல்லாவற்றையும் பற்றிய ஆய்வுகள் வந்து குவிந்து விடுகின்றன. பின்னவீனத்துவப் பார்வை அறிமுகமான பிறகு அந்த நோக்கிலான நிறைய ஆய்வு நூல்கள் வெளிவருவதை இணையத்தில் நாம் காண முடிகிறது. ஆனால் தமிழில்? மார்க்சிய அணுகுமுறை ஆய்வு உலகிற்குள் புகுந்து பன்னெடுங்காலம் ஆகிய பின்னரும் கூட, நாம் ஒட்டுமொத்தத் தமிழ்ப்பரப்பை ஆய்வு செய்துவிடவில்லை எனில், பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளைச் சொல்லவே வேண்டாம்.

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் பல்கலைக்கழகங்களின் படிக்கட்டுகளில் ஏறிப் பலகாலமாகிவிட்டபோதும். தெருக்கூத்துப் பற்றிய பல ஐயங்கள் இன்னும் விடுவிக்கப்படாமலேயே இருக்கின்றன என்பது மிகப்பெரும் வரலாற்று சோகம். தமிழகத்தில் தெருக்கூத்து என்ற அறிவுடைநம்பியின் ஆய்வு வெளிவந்தவுடனேயே அக்களத்தைப் பற்றிக் கொண்டு, மளமளவென ஆய்வுகள் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, தெருக்கூத்து பற்றிய முழுமையான ஆய்வு வெளிவரவில்லை என்ற ஆதங்கம் மட்டுமே மிஞ்சுகிறது. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழக நிகழ்த்துக் கலைகள் பற்றிய ஆய்வேடுகளைத் திரட்டினால் வண்டி தேறும். ஆனால் அந்தத் தலையணை அளவிலான ஆய்வேடுகளின் விடய கனம் மயிலிறகு எடை பெறுமா என்பது ஐயமே.
பல்கலைக் கழகப் புலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அல்லது ஆய்வு முடிவுகளை வெளிக் கொணர்வதிலும் அதை விவாதத்திற்குட்படுத்துவதிலும் அதிலிருந்து கருத்தை உருவாக்குதலும் அதைச் செயல்திட்டமாகக் கொண்டு மறுபடி இறங்கி வேலை செய்வதும் தெருக்கூத்துக்கு நிகழவில்லை. தெருக்கூத்துக்கு மட்டுமல்ல, அவ்வாறு பல்கலைக் கழக ஆய்வுகள் வளாகத்தையும் தாண்டிக்கொண்டு வெளிவரும் தன்மை அல்லது வழமை பெரும்பாலுமில்லை. பட்டமளிக்கப்பட்ட ஆய்வேடுகளின் எண்ணிக்கையோடு நூலாக்கம் பெற்ற ஆய்வேடுகளின் எண்ணிக்கையை ஒப்புநோக்கினால், எமது கூற்று மிகையில்லை என்பது புலப்படும். அவ்வாறு நூலுருவாக்கம் பெறாமலேயே மிகப்பல ஆய்வேடுகள் தேங்கிவிடுவதால் வளாக ஆய்வுகளில் என்னதான் முன்வைக்கப்படுகிறது, என்னதான் நடந்திருக்கிறது. என்பதை அறிவது மிகவும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.

சமீப சில ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு அவர்களின் வழிகாட்டுதலில் பார்க்கர் நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வேடுகள் பலவற்றை நூலாக்கி வருவது பாராட்டுக்குரிய பணியாகும்.

இந்த நிறைஞர், முனைவர் பட்டங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமலேயே தமிழாய்வுப் புலம் இயங்கி வருகிறது. அவ்வடிப்படையில் நோக்கும்போது, தெருக்கூத்து அறிமுகம் என்பது 1930களிலேயே நிகழ்ந்து விடுகிறது. ஆய்வுகளும் நடைபெறத் தொடங்குகின்றன. ஆனாலும் மிகப்பெரும் வெற்றிடம் நிலைத்து நிற்கிறது. வெற்றிடம் என்பது கூத்துப் பரப்பின் அகற்சியை ஒட்டுமொத்தமாக நோக்கும் போதுதான். ஆனால் அதற்குள்ளும் சிறிது சிறிதாகப் பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுத்தான் வந்திருக்கின்றன. ஈ.கிருஷ்ணய்யர், வெங்கட்சாமிநாதன், ந.முத்துசாமி, செ.இரவீந்திரன், ரிச்சர்ட் பிராஸ்கா, ஹென்னா டி புரூயின் போன்று எண்ணற்றோர் கூத்து மற்றும் கூத்துப் பற்றிய ஆய்வுக்குப் பங்களிப்பைச் செய்து வந்துள்ளனர். கூத்து ஒட்டுமொத்தத் தமிழரின் தேசிய அரங்கா என்பது குறித்தி விவாதங்களும் நடைபெற்றுள்ளன. ந.முத்துசாமியின் ′அன்று பூட்டிய வண்டி′, மு.ராமசாமியின் ′திரௌபதி பாளையங்கோட்டையில் மானபங்கப்படுத்தப்பட்டபோது′ என விவாதம் குறிப்பிட்ட பாதையில் நகர்ந்தே வந்திருக்கின்றது. தெருக்கூத்தை நவீன அரங்கில் கொணர்ந்து இணைத்துப் பார்த்த ந.முத்துசாமி, வ.ஆறுமுகம், இளையபத்மநாதன், அ.மங்கை ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

இத்தகைய பின்புலத்தில்தான் பேராசிரியர் கோ.பழனி அவர்களின் பதிப்பில் தெருக்கூத்து பற்றிய 10 கட்டுரைகள் தொகுப்பு மிக முக்கியமான பதிவாகின்றது. தெருக்கூத்து மரபின் வேர்களைத் தேடி... என்ற பேராசிரியர் செ.ரவீந்திரன் கட்டுரை மிகவும் குறிப்பிடத்தக்க கட்டுரையாக அமைகின்றது. தமிழ்ச்சமூகத்தில் கூத்து- நாடகம் ஒரு தொடர் விவாதத்தை நோக்கி... என்பது பேராசிரியர் மு.ராமசாமி அவர்களின் கட்டுரை. தெருக்கூத்து - கலைவரலாறு- தமிழ்ச்சமூகம் உரையாடலுக்கான குறிப்புகள் என்ற கட்டுரையைப் பேராசிரியர் வீ.அரசு எழுதியுள்ளார். தெருக்கூத்து நிகழ்த்தும் பாலினக் கட்டமைப்பு என்பது அ.மங்கை அவர்களின் கட்டுரை. ந.முத்துசாமி, கோ.பழனி, இரா.சீனிவாசன், ஏ.கே.செல்வதுரை, சி.ஜெயசங்கர் ஆகியோருடைய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

கட்டுரைகளைக் குறித்த விரிவான விமர்சனங்களை விரைவில் இணைத்துத் தரவுள்ளேன்.

No comments: